Monday, 30 September 2013

வண்ண வண்ணமாய் எண்ணவியலா எண்ணம் எண்ணிலா கன்னா பின்னா கட்டிடங்கள்

வளைந்த, நீண்ட, மூடிய, மூடா பால்கனிகள்
கட்டட கலை என்றாலே பல்லவரும் சோழரும் கட்டிய கோயில்களும், புத்த விகாரங்களும், கோட்டைகளும், முகலாய சமாதிகளும், கிரேக்க ரோமானிய ஆட்சி பீடங்களும் நம் நினைவிற்கு வரும். சம கால கட்டடங்கள் எனில் லீ கோர்பஸியே, ஃப்ராங்க் லாயிட் ரைட், ஐ.எம்.பெய், லுட்யென்ஸ் என்று வெள்ளையரையும், ஐரோப்பிய சிந்தனையாளர்களும் பேசப் படுவார்கள். 
சதுர முக்கோண வளைவுள்ள, கல் கம்பி பால்கனி

பேச்சு சுதந்திரமும் பொருளாதார சுதந்திரமும் தொழில் சுதந்திரமும் அலைமோதும் மேற்கத்திய நாடுகளில் கட்டட சுதந்திரம் மிகக்குறைவே. பாரதத்தில் சாதி கட்டுப்பாடு பலமாக இருப்பது போல், அங்கே நகர கட்டுப்பாட்டின் பலம் அதிகம். அமெரிக்காவில், நகரத்தின் ஒரு பகுதியில் என்ன அமைப்பு, எத்தனை மாடி, எத்தனை ஜன்னல், என்ன வித கூறை, வெளிச்சுவரின் நிறம், தோட்டத்திற்கு விட வேண்டிய குறைந்தளவு இடம், என்ன மரம் செடி நடலாம், எவ்வளவு செங்கல் எவ்வளவு மரம் வெளியே தெரியலாம், என்றெல்லாம் விதிகள் சட்டபூர்வமாக இருக்கும். இதை நிர்வகிக்கும் குழுக்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். பச்சை நிறத்தில் கதவு வைத்ததால் வழக்கு போட்டு நிறம் மாற்றிய கதை, புல் வெட்டாததால் அபராதம், விளக்கு எறியாததால் அபராதம், என்றெல்லாம் அவ்வூர் செய்திகளில் வரும்.
வானவில் ஒத்த கூறை
நம் நாட்டில் இப்படி சில கிராமங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. மன்னராட்சியாலும், ஜாதி குழுக்களாலும் மட்டுமே இந்த அளவு இந்தியாவில் கட்டுப்பாட்டுடன் நிர்வாகம் செய்ய முடியும். சுதந்திரமும் மலிவான் சிமெண்டும் வீடுகட்ட வங்கிக்கடனும் வந்ததால் பாரதத்தில் வீடு மனை  தொழில் மனோதர்ம புயல் வீச இண்டர்நெட் கம்பெனிகளை போல் எண்ணத்திலும் வண்ணத்திலும் உயரத்திலும் அகலத்திலும் அழகிலும் அழுக்கிலும் துடிப்பிலும் இடிப்பிலும் வடிவமைப்பிலும் செடியிழப்பிலும் பலவிதமாய் பரிணமித்து பரவியுள்ளது.
குடிசைகளும் ஓட்டுவீடுகளும் பங்களாக்களும் பணம் கிடைத்த மனம் படைத்த நேரத்தில் சிமெண்ட் வீடுகளாக நாடு முழுவதும் மாறி வருகின்றன. ’வாஸ்த்து கலர்’ என்ற பெயரில், சிலர் கண்ணை கவர்ந்தும் சிலர் கண்களுக்கு கேவலமாகவும், கடந்த பத்தாண்டில், பலவீடுகள் பூசப்பட்டுள்ளன. பாடபுத்தகத்தில் டோரிக் தூண், ஐயோனிக் தூண், சமமான கூறை, சாய்ந்த கூறை, வளைவு கூறை என்றெல்லாம் உண்டு. மேல்தட்டு மக்களுக்கு இவ்வித வீட்டமைப்புகளை சலிப்புடனும் ஏளனமாகவும் பார்க்கலாம். என் வீட்டில் இந்த நிறங்களையோ, அமைப்பையோ விரும்பாவிடினும், என் கண்ணிற்கும் எண்ணிற்கும் இவை ஏளனமாகவோ பாமரமாகவோ தெரியவில்லை. அவரவர் ரசனையும், தனி மனித அழகியலும், தெருவை மிளிரவைக்கும் செங்கல் வானவில்லும், செல்வப்பெருமையும், தன்னிறைவும், என் கண்ணிற்கு தெரிகின்றன. செடிகளும் மரங்களும் சேர்ந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.

மாமல்லபுரத்திலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், ராஜசிம்ம பல்லவனின் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் தன்னை அத்யந்தகாமன் (எல்லையில்லா எண்ணமுள்ளோன்) என்று அழைத்துகொள்கிறான். ஏழுவித அமைப்பில் ஒற்றைக்கல் கோவில்களை மல்லையில், பலவித அமைப்பில் அங்கும் காஞ்சியிலும் பனமலையிலும் கட்டிய இவன் கலையை ரசிக்க காஞ்சிபுரம் சென்ற போது, பாண்டவதூத பெருமாள் சன்னதி தெருவில் கண்டு நான் எடுத்த வீடுகளின் படங்களை இங்கு காட்டியுள்ளேன். இவற்றை கட்டியவர்களும் எல்லையில்லா எண்ணமுள்ளேரே. 
பால்கனியிலா வீடு - கொடிதவழ, மூடியும் மூடாமல் ஒரு பால்கனி - முக்கால் மூடி கோலமுடன் பால்கனி - வளைவு வாசலுடன் படிகள், மூடி சிமெண்ட் ஜன்னலுடன் படிகள்

No comments:

Post a Comment