Sunday, 27 December 2015

தமிழ் நாடக இசை


டி.கே.எஸ் கலைவாணன்  இசைக்குழுவினருடன்
இன்றைய கர்நாடக சங்கீதம் ஒரு சில இடங்களில் கச்சேரிகள் என்ற மிக குறுகிய ரசிகர் சமூகம் கொண்ட கலையாக சுருங்கி உள்ளது. நூற்றில் ஒரு சினிமா பாடலிலும், தொலைகாட்சி போட்டிகளிலும், ஒலித்து, ராகத்திற்கும் மெட்டிற்கும் வேற்றுமை தெரியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
சினிமா யுகம் தொடங்கும்முன் தமிழகத்தில் மேடை நாடகங்களும் தெருக்கூத்துக்களும் வெகுஜன கலைகளாக கோலோச்சின. ஐரோப்பியரின் நாடகங்கள் இந்திய நாடகங்களில் ஒரு புது யுகத்தை தொடங்கின. பல ஆங்கிலேய நாடகங்கள் தமிழில் உருமாறி வந்தன. ஆனால் வள்ளித்திருமணம், ராமாயணம், மகாபாரத கதைகள், திருவிளையாடல், பழைய புராண கதைகள், காளிதாசன் தெனாலி ராமன் போன்ற கதைகளையே மக்கள் பெரிதும் வரவேற்றனர். முக்கியமாக பாடல்களின்றி நாடகமில்லை என்ற காலம் நிலவியது. 1960கள் வரை நிலவிய இச்சூழ்நிலை இன்று மிகவும் மாறிவிட்டது. தெருக்கூத்தில் தொடர்ந்து வரும் பாடல்கள், தமிழக நகரங்களில் மேடை நாடகங்களில் இருப்பதில்லை. இருபதாண்டுகளாக மெகா தொடர்களே கோலோச்சுகின்றன.

நாடக இசை பாடல்களில் கர்நாடக சங்கீதமும் பரவலாக இருந்தது. கேபி சுந்தராம்பாள், எம் கே தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் மேடை நாடக உலகிலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர்களே. பாகவதர் சின்னப்பா காலத்தில் படத்திற்கு நாற்பது பாட்டு சாதாரணம். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் வசனமும் சண்டைகாட்சிகளும் முன்னுக்கு வந்து பாட்டு பின்சென்றது. பின்னணி பாடகர் உதயமானார்.

பழைய சினிமாக்களில் நாம் கேட்கும் பாடல்களுக்கும் பழைய நாடகங்களில் பாடப்பட்ட ஒற்றுமையும் வேற்றுமையும் ஏராளம். சென்னை சங்கீத சபைகளில் மார்கழி மாதம் மேடை கச்சேரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து வரும் சூழ்நிலையில், இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி(Indian Fine Arts Society) பத்து வருடகங்களாக நாடக இசைக்கும் ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கிவருகிறது. புகழ்பெற்ற நாடக மேதை ஔவை சண்முகத்தின் மகன் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் வருடா வருடம் ஒரு நாள், அவர்களது அரங்கத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் முதல் ஔவை சண்முகம் வரை பாடப்பட்ட பல பாடல்களை பாடி காட்டி, அவற்றின் நுணுக்கங்கள், நாடக உலகிற்கு ஏற்ற விசித்திரங்கள், அவர்கள் பட்ட இன்ப துன்பங்கள், கலைஞர்களும் புலவர்களும் தங்களுக்கு அமைத்து கொண்ட பாணிகள், மக்களின் வரவேற்பு, எதிர்பார்ப்பு, போன்றவற்றை விளக்கி, தன் இசை குழுவுடன் பல பாடல்களை பாடி வருகிறார்.

ஒலிப்பெருக்கிகள் வருவதற்கு முன் பாடும் திறமையே நடிகருக்கு முக்கியமான தகுதி. அதுவும் ஆயிரம் பேர்கூடிய அரங்கில் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும் நாடகங்களில் அயராமல் பாடவேண்டும். பெண்குரல்களை போல் உச்சஸ்தாயியில் பாடும் ஆண்கள் தேவைபட்டனர். எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் இவற்றில் முக்கியமானவர்கள். பெண்கள் பலரும் ஆடவர் வேடத்தில் நடிப்பதும், ஆண்கள் பெண் வேடத்தில் நடிப்பதும் சகஜம். கேபி சுந்தராம்பாளின் குரலும் வீச்சும் அவர் செல்வத்தின் மூலதனம். கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் சேர்ந்து நடிக்க, ஒரே நாளில் மாலை நாடகத்தில் கிட்டப்பா முருகனாகவும் சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடிக்க, இரவு நாடகத்தில் சுந்தராம்பாள் முருகனாகவும் கிட்டப்பா வள்ளியாகவும் வேடமேற்ற நாட்களும் உண்டு!

புராண நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால், “காயாத கானகத்தே”, “தசரத ராஜ குமாரா” போன்ற சில பாடல்கள் மிக பிரபலமாயின.

மான் வேட்டை காட்சியில் மான் துள்ளும் வேகத்தில் பாடப்படும் பாடலை கலைவாணன் சொல்லி பாடி காட்ட எத்தனை முறைகேட்டாலும் சுவையும் சிரிப்பும் குறைவதில்லை.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை விட்டுவிடுவாரா கலைவாணன்? இதோ அவரை பற்றி.

நாடக கம்பெனிகள், நாடக சபைகள், போன்ற அமைப்புகள் முளைத்து வளர்ந்தன. இவைகளின் பெயர்கள் கூட சுவையானவ – கேளுங்கள்.

எல்லாம் இங்கே எழுதிவிட்டால் எப்படி?

டிசம்பர் 28 2015, திங்கள் காலை 10.30 மணிமுதல் 12.30 மணி வரை, டிடிகே சாலையிலுள்ள எத்திராஜ கல்யாண மண்டபத்தில் கலைவாணன் தமிழ் நாடக இசை பற்றி பேசி பாடுவார். வந்து ரசிக்கவும்.

பாடல்களின் சுட்டிகள்


போகுதுபார் அதிவேகமதாய் ஒரு மான்
அவ்வை சண்முகம்
எஸ் ஜி கிட்டப்பா
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்
நாடக சபைகளின் பெயர்கள்

தொடர்பான கட்டுரைகள்

No comments:

Post a Comment