Thursday, 10 December 2015

வான் மழை பொய்ப்பினும்


சென்னையில் வெள்ளம். ஆனால் பாரதத்தில் வரட்சி. பிகார் தேர்தல், பசு வதை, ஆமிர் கான், டிப்பு சுல்தான் நாடக அவலங்களில் இது செய்தி இல்லைதான். ஆனால் ஏன் செய்தி இல்லை? டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை விளக்குகிறது. நல்ல செய்தி என்றாலே அலறி ஓடுவோர் படிக்கவேண்டாம். இது என் மொழிபெயர்ப்பு

-------கட்டுரை மொழிபெயர்ப்பு ஆரம்பம்-----
பருப்பு விலை இப்படி அபாரமாக ஏறிவிட்டதே,” என்று என்னை கேட்கும்போது எனக்கு ஆச்சரியம் பொங்குகிறது. மழையின்றி இரண்டு வருடங்கள் வரண்டு வாடியுள்ளது பாரதம். வரட்சி இருந்தும் ஏன் உணவு விலை ஏன் மலை ஏறவில்லை என்றல்லவா மக்கள் கேட்கவேண்டும்!

1965 நான் பத்திரிகை நிருபரானேன். அன்றும் பாரதம் இரண்டாண்டு தொடர்ந்து மழையின்றி வரண்டது. தானிய உற்பத்தி இருபது சதவிகிதம் குறைந்தது; பஞ்சம் பட்டினி நாட்டை வாட்டியது; விலைவாசி விண்ணை முட்டியது. வெட்கக்கேடாக, இந்தியா பரிதாபமாக அமெரிக்காவிடம் உணவுக்கு கெஞ்சியது. “கையிலிருந்து வாய்” வருமை போல் “கப்பலிலிருந்து வாய்” வருமை என்று பேசப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் – இரண்டு தொடர் வரட்சிகளின் பாதிப்பே தெரியாமல், பஞ்சம் பட்டினியில் வாடாமல், பருப்பு விலை ஏறியுள்ளதே என்று கேட்கும் நிலைமைக்கு பிரம்மாண்டமாக முன்னேறியுள்ளோம். 2014-15 புள்ளிவிவரப்படி, 12% குறைந்த மழை பெய்தாலும், வரட்சி இருந்தும், அதை மீறி விவசாய விளைச்சல் சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 14.3% குறைந்த மழை பெய்தாலும் ஆறு மாதங்களில் விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது. தொலைகாட்சி நிருபர் நாடெங்கும் தேடியும் பட்டினியில் வாடும் கிராமவாசிகள் யாருமில்லை. வரட்சி செய்தியே இல்லை!

மழை பொய்ப்பின், விவசாயம் மட்டும் அல்ல, மற்ற உற்பத்தியும் சேவைகளும் அடிபடுவது வழக்கம். நெசவு, சணல், சக்கரை, சமையல் எண்ணை இவை யாவும் விவசாயத்தை நம்பும் துறைகள். விதைத்தல், அருவடை, சாகுபடி, போக்குவரத்து, செக்கு, பொட்டலம், போன்றதொழில்கள் விவசாயம் சார்ந்தவை. பாரதம் சுதந்திரம் வாங்கிய முதல் ஐம்பது ஆண்டில் 45% ஜிடிபி மாற்றம் மழையால் பாதிக்கபட்டது என்று பொருளியலாளர் அரவிந்த வீர்மணி காட்டியுள்ளார்.

1965, 1966 ஆண்டு வரட்சிகளும் பஞ்சமும் கண்ட மேலை நாட்டு நிபுணர்கள், இந்தியா என்றுமே சோற்றுக்கு கையேந்தி வாடும் என்று ஆரூடம் சொன்னார்கள். வில்லியம் பேட்டாக்கும் பால் பேட்டாக்கும் எழுதிய “பஞ்சம் 1975” அந்த வருடம் (எழுதிய பத்து ஆண்டுகளுக்கு பின்) உலகமே பஞ்சத்தில்  வாடும் என்றனர். மேலை நாடுகளின் தானியங்கள் காப்பாற்ற முடிந்த நாடுகளுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும், இந்தியாவை போன்ற காப்பாற்ற முடியாத நாடுகள், அவர்களின் விதிக்கு விடப்படவேண்டும் என்று கூறினர். இந்தியர்கள் கொதித்து குமைந்தாலும், மேற்கத்திய சமூகங்களில் பலர் இக்கருத்தை பாராட்டினர். ”ஜனத்தொகை வெடிகுண்டு” என்ற நூல் எழுதிய பசுமை போராளி பால் எர்லிக், இந்த பேட்டாக் சகோதரர்களை வானளாவி புகழ்ந்தார்.

இன்றோ! இரண்டு வரட்சிகளை அலட்சியமாக கையாளுகிறோம். இந்த மாற்றத்தின் காரணம் என்ன? பசுமை புரட்சியால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தானியங்கள் அதிகரித்தது என்று சிலர் கருதினாலும், உண்மையில் தனிநபர் தானிய அளவு1964 இல் உச்சத்தை எட்டியது; அதன் பின் சரிந்தது. உணவு வினியோகத்தை சரியாக செய்ததால் பஞ்சங்களை தவிர்த்தோம். பஞ்சம் நிலவிய மாவட்டங்களில் அரசின் கிராம வேலை வாய்ப்பு திட்டங்களால், உணவு பொருட்களை வாங்கும் அளவுக்காவது மக்களிடம் செல்வம் வளர்ந்தது. பசியிருந்தாலும் பட்டினியில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வருமானம் ஏறியது. தானியங்களை தாண்டி, மற்ற உணவுகள் புழக்கமாயின. தனி நபர் தானிய பருகல் குன்றி, எதிர்பாராமல் தானிய மிகுதி உண்டானது. 1990களில் இந்தியா தானியங்கள் வெளிநாடுகளுக்கு விற்கும் அளவு விவசாயம் செழுந்தது. அரிசி ஏற்றுமதியில் இன்று உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது! வரட்சி ஆண்டுகளிலும் உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. ஒரு கையேந்தி நாடு கண்ட மாபெரும் முன்னேற்றம் இது.

பசுமை புரட்சியால் வரப்புக்கு வரப்பு வயலுக்கு வயல் நெல் உயர்ந்தது. குழாய்க்கிணறுகளால் நீர்பாசன வசதி பெருகி, ராபி பயிர், கரிஃப் பயிருக்கு நிகராக விளைச்சல் தந்தது. பாசன நிலங்கள் அறுபது சதவிகிதம் பெருகின. வான் பொய்ப்பினும் பஞ்சம் தவிர்க்கும் திறன் பெற்றோம்!

முக்கியமாக, இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு லயமாக சரிந்தது. 1950இல் இந்திய பொருளாதாரத்தில் 52% நிலவிய விவசாயம், இன்று 2015இல் 14% ஆக சரிந்தது. சேவைத்தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில்  60% ஆக கோலோச்சுகின்றன. இத்தொழில்கள் பருவமழையை நம்பி செழிப்பவை அல்ல. தொழிற்சாலை உற்பத்தியும் நெசவு சக்கரை சணல் என்று விவசாயத்தை நம்பும் தொழிலாக இல்லாமல், பொறியியல் ரசாயனம் என்று அகலமாக பரவியுள்ளன.

1970களில் வருமானம் உயர, விவசாய முறைகள் மாறின. தனிநபர் நெல் உற்பத்தி சரிந்து, பால, பருப்பு, எண்ணைகள், சக்கரை, தேயிலை, முட்டை, காய், கனி போன்ற உணவுகளின் உற்பத்தி உயர்ந்தது. சமூகத்தின் அடுத்தக்கட்ட தேவைகளையும் பூர்த்தி செய்தன; உழவர்களின் வருமானத்தையு வளர்த்தன.

மூன்றில் இரண்டாக நிலவிய பாரம்பரிய பயிர்களின் உற்பத்தி பாதியாக சரிந்தது. கறும்பு, நாறு, எண்ணைவிதைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். காய் கனி கோழி மீன் கால்நடை போன்ற மற்ற பாதி, பயிரளவு மழையை நம்பி இல்லை. இதுவே வரட்சியிருந்தும் இவ்வாண்டு விவசாயம் வளர்ச்சி கண்டதன் ரகசியம்.

ஆனால் இதற்கு ஒரு விலை கொடுத்துள்ளோம் - சுற்றுசூழலின் சீரழிவு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து நிலத்தடி நீர் அபாயகரமாக குறைந்துள்ளது. அரசியல்வாதிகள் உழவருக்கு மின்சார கட்டணம் வசூலிக்க மறுக்கின்றனர். செய்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது அவர்களது கணிப்பு. சூரிய ஒளி பம்புகளை உழவருக்கு கொடுத்து, மற்ற மின் தேவைகளுக்கு வசூல் செய்தால் இந்த சீரழிப்பு  குறையலாம்.

-------கட்டுரை மொழிபெயர்ப்பு முற்றும்-----


பின்குறிப்பு

செவ்வாய் கிரகணத்திற்கு மங்கள்யான் ராக்கெட் விடுவதை விட, இந்தியர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் கோலோச்சுவதை விட, ஜனநாயகம் ஓங்கியதை விட, அணுகுண்டு ஏவுகணை சாதனைகளை விட, ஆஸ்கார் நோபல் கிரிக்கட் உலக கோப்பை வென்றதை விட, இது ஒரு மாபெரும் சாதனை.

உழவர் தற்கொலை, வெள்ளச் சேத உயிரிழப்பு, சாலை விபத்தில் உயிரிழப்பு எல்லாம் துன்பக்கேடுகள். ஆனால் கோடிக்கணக்கில் பஞ்சம் பலிவாங்கிய நாட்டில் இந்த முன்னேற்றம் ஈடு இணையற்ற இதிகாச தொடர்ச்சி.

ஜகத்தினில் பசியில்லை, களித்திடுவோம்.


உழவர் தற்கொலை - சுவாமிநாதன் ஐயர் கட்டுரை


பசுமை புரட்சி கட்டுரைகள்

முதல் பசுமை புரட்சி - செயற்கை எரு
இரண்டாம் பசுமை புரட்சி - டீசல் வண்டிகள்
நான்காம் பசுமை புரட்சி - வரப்புயர்த்திய வல்லவன் 

அணைகளும் நீர்பாசன முன்னேற்றங்களும் மூன்றாம் பசுமை புரட்சி என்பது என் கருத்து. அதை பற்றி நான் எழுதவில்லை

No comments:

Post a Comment