Thursday 8 January 2015

போர்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் காலத்தில் மதறாஸ் ராஜதானியில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அவர் ஆட்சியில் மதுவிலக்கி சாராயக்கடைகளை மூடியிருந்தார். அப்பொழுது பல நாடகங்களிலும் சினிமாக்களிலும் நாளிதழ்களிலும் சுதந்திர வேட்கையும் தேச பக்தியும் காங்கிரஸ் ஆதரவும் பொங்கிவழிந்தன. ஆனந்தவிகடன், தினமணி, கலைமகள், தமிழ்நாடு, ஸ்வராஜ்யா போன்ற பத்திரிகைகள் வெளிவந்திருந்தன.

நேரு தலைமையிலிருந்த இந்திய அரசை ஆலோசிக்காமல் இந்தியாவை போரில் சேர்த்ததையும், போர் முடிந்தாலும் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடையாது என்று ஆங்கில அரசு மறுத்ததாலும், நாடு முழுதும் காங்கிரஸ் அரசுகள் ராஜினாமா செய்தன. மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, சாராய கடைகள் மீண்டும் திறந்தன.

காகித பற்றாக்குறையால் மேற்பட்ட பத்திரிகைகள் பாதிக்கப்பட்டன. நாளிதழ்கள் வார இதழ்களாவும், வார இதழ்கள் மாத இதழ்களாகவும் மாறின. தந்திகளை கூட துண்டுச்சீட்டுகளில் தரும் நிலை வந்தது. முதல் உலகப்போரின் போது காகித கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இந்தகாலத்தில் தான் “தமிழ் தாத்தா” உ.வெ.சாமிநாத ஐயரின் “என் சரித்திரம்” தொடர் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் கட்டுப்பாடும் வந்தது. நிலக்கரியில் எரிவாயு செய்து மோட்டர் கார் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சென்னையில் நிலக்கரிவாயு வண்டிகள் சிலகாலம் இயங்கின.
சிங்கப்பூர் நகரத்தை ஜப்பானியர் கைபிடித்தது ஆங்கிலேயருக்கு பெரும் தோல்வியாக நினைக்கப்பட்டது. விசாகப்பட்டினத்திலும் இலங்கையிலும் ஜப்பானிய விமானங்கள் தாக்கியதால், சென்னைவாசிகளுக்கு பெரும் பீதி ஏற்பட்டது. குண்டுவீச்சில் மிரண்டு கிண்டி புலி நரி ஆகிய காட்டு விலங்குகள் மக்களைத் தாக்கலாம் என்பதால், கவர்னரின் ஆணையில் பல நாட்கள் அவை வேட்டையாடப்பட்டன. இதே அச்சத்தினால் மூர்மார்கெட் அருகே  இருந்த உயிரியல் பூங்காவிலுள்ள விலங்குகளும் சுட்டு கொல்லப்பட்டன.

சிலர் ஆங்கில அரசு கவிழ்ந்து ஜப்பான் அல்லது ஜெர்மனி இந்தியாவை கைப்பற்றலாம் என்று எண்ணி, ஜப்பானிய ஜெர்மானிய மொழிகளை கற்றனர். அதுவரை ஆங்கில அரசை கண்டித்த சினிமாவிலும் நாடகத்திலும், ஜப்பானை எதிர்த்து குரல்கள் எழுப்பபட்டன. 

தெருப்பாடல்களிலும் இந்த குரல்கள் பெருகின. போருக்கு நடுவில் ”வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை காந்தி அறிவித்தார். இதை எதிர்த்ததால் ராஜாஜியின் மீது காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

பர்மாவிலிருந்த தமிழ் மக்கள், சிலர் கப்பல்களிலும் பெரும்பான்மையோர் தரை வழியே நடந்தும், மீண்டும் இந்தியாவுக்கு வந்தனர். பெரும் செல்வந்தர்கள் பலர் எல்லாம் இழந்து ஏழைகளாக சென்னை வந்து சேர்ந்தனர்.

“செய்து முடி அல்ல செத்து மடி” என்ற முழக்கத்தோடு நடந்த நாடு தழுவிய போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்கள் யாவரும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் (மதறாஸ் மாகாணத்தில்) திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதி கட்சியும், இந்திய அளவில் முகமது அலி ஜின்னா தலைமையில் செயல்பட்ட முஸ்லிம் லீகும், அரசியல் பலம் பெற்றன.

காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் சிறையிலிருக்க, ராஜாஜி காங்கிரஸில் இல்லாததால் அவரை அரசு கைது செய்யவில்லை. ஆங்கில அரசுக்கு எதிராகவும் முஸ்லிம் லீக் தூண்டிவிட்ட மதக்கலவரங்களுக்கும் எதிராக ஒரே தேசிய தலைவராக ராஜாஜி அன்று செயல்பட்டார்.

பொதுவாக சென்னையில் போரின் நேரடி தாக்கம் பெரிதும் இல்லை என்றும், உயிர்சேதத்தை விட பீதியும் பயமுமே இம்மாநகரை அவ்வப்போது கவ்வியது என்றும் வரலாற்றின் மூலம் காணலாம்.

ஆதார நூல்கள்

1.    மதராசபட்டினம் (நரசய்யா)
2.    ஹிந்து நாளிதழ் கட்டுரைகள் (எஸ். முத்தையா, வெ. ஸ்ரீராம்)
3.    South India Heritage (Prema Kasturi, Chitra Madhavan)
4.    ”போர்களுக்கு இடையே சென்னை”, மாநாடு, தியாகராயர் கல்லூரி, வண்ணாரப்பேட்டை, ஆகஸ்டு 2013
5.    A History of India, Burton Stein

சம்பந்தபட்ட பதிவுகள்

2. போர்க்காலத்தில் சென்னை - பல்லவர் சோழர் காலம்
3. போர்காலத்தில் சென்னை - முதல் உலகப்போர்
குறிப்பு இப்பதிவு, லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் 2014 தீபாவளி மலரில் வந்த ”போர்காலத்தில் சென்னை” என்ற என் கட்டுரையின் நான்காம் [கடைசி] பகுதி.

No comments:

Post a Comment