Monday 29 December 2014

போர்க்காலத்தில் சென்னை - பல்லவர் சோழர் காலம்


ஆகஸ்டு 22 ஆம் நாள் சென்னை தினமாக (Madras Day) சமீபத்தில் கொண்டாடியது வாசகர்களுக்கு நினைவரிக்கும். குறிப்பாக இந்த ஆண்டு சென்னைப்பட்டிணத்தின் 375ஆம் பிறந்தநாளாக, ஆகஸ்டு மாதம் முழுவதும் சொற்பொழிவகளும் வினாவிடைப்போட்டிகளும் கலை விழாக்களும் பாரம்பரிய யாத்திரைகளும் நாளொருமேனியும் நாளிதழ்களிலும் தொலைகாட்சிகளிலும் ஒரு திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்ததில், சென்னை நாடளாவிய பிரசித்தி மழையில் குளித்தது. 

சென்னை ஒரு நகரம், மதறாஸ் ஒரு உணர்ச்சி என்று, ஊரின் இரு பெயர்களையும் இணைத்து ஒரு முழக்கக்குறளும் பிறந்தது! 

ஒரு சிலர், ஆங்கிலேயர் கோட்டை கட்டியதை ஏன் இப்படி கொண்டாடுகிறோம் என்று வினவினர். ஏழாம் நூற்றண்டில் அப்பரும் சம்பந்தரும் திருவொற்றியூரையும் திருமயிலையையும் பாடியிருக்க, எட்டாம் நூற்றாண்டு பல்லவர் கல்வெட்டு திருவல்லிக்கேணியிலும் இருக்க, 17ஆம் நூற்றாண்டில் கட்டிய கோட்டைக்கு ஏன் கொண்டாட்டம் என்ற கேள்வியும் எழுந்தது.

பல்லவர் சோழர் காலத்து போர்

அந்த பல்லவர் காலத்தில் நம் போர் கதையை தொடங்குவோம். நரசிம்ம வர்ம பல்லவனுக்கும் சாளுக்கிய புலிகேசிக்கும் தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் என்ற ஊரில் போர் நடந்தது. அப்பொழுது காஞ்சிபுரமே தலைநகரம் – மயிலையும் திருவொற்றியூரும் திருவான்மியூரும் ஒரு நாள் பயண தூரத்து கிராமமோ சிற்றூரோ என்றிருந்தன. பண்டைக்காலத்தில் நதிகள் கடலில் கலக்கும் இடங்களே துறைமுகங்களாக இருந்தன (இத்தகவலை முதலில் எனக்கு ஒரிசா பாலு என்ற பாலசுப்ரமணியமும், பின்னர் இந்திய கப்பற்படையில் பணிசெய்து, “கடலோடி” “கடல்வழி வணிகம்”, “மதராசபட்டணம்” நூல்களை எழுதிய நரசையாவும் தெரிவித்தனர்). அடையாறு கடலில் சேர்ந்த மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்தது.

சென்னையில் பெரிதாக எந்தப் போரும் நடக்கவில்லை. காஞ்சி, வந்தவாசி, ஆற்காடு என்று சென்னை அருகிலும், மைசூர், பிளாசி, விஜயநகர் என்று தொலைவிலும், அமெரிக்க சுதந்திர போர், ஆங்கில ஃப்ரெஞ்சுப்போர், முதலாம் இரண்டாம் உலகப்போர் என்று வேறு நாடுகளிலும் நடந்த சில போர்கள் சென்னை மக்களை விதவிதமாக பாதித்தன. சமீப காலத்து போர்களின் விளைவுகளை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம், பண்டைக்காலத்து வரலாறை ஓரளவு யூகிக்கவே முடியும்.

பல்லவ சாளுக்கியப் போரினால் சென்னை மக்களுக்கு நேரடி பாதிப்பு இருந்ததாக ஆவணங்கள் ஏதும் இல்லை. அதற்கு முன் மகேந்திர பல்லவன் ஆட்சியில், புலிகேசி மன்னன் காஞ்சி நகரை பல மாதம் முற்றுகையிட்ட பொழுது, சாளுக்கிய படைகளின் உணவுக்காக பல ஊர்களின் பயிரும் மற்ற விளைச்சலும் சூரையாடப்பட்டிருக்கும் என்றும், அதில் சென்னை மக்களும் அவதிப்பட்டிருப்பார்கள் என்றும் யூகிக்கலாம். ஆனால் அன்றைய மன்னர்கள் போர்களங்களில் மட்டுமே சண்டைசெய்ததால் கிராம மக்களுக்கு நேரடி உயிர்சேதம் ஏதும் இருந்திருக்காது.

மணிமங்கலத்தில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது - இதில் மூலவராய் நிற்கும் விஷ்ணு வழக்கத்துக்கு மாறாக இடது கையில் சக்கரத்தையும் வலது கையில் சங்கையும் தரித்து காட்சி அளிக்கிறார். போருக்கு பிராயசித்தமாய் கட்டிய கோயில் என்று அர்ச்சகரும் ஊர் மக்களும் சொல்லுவர் - ஆனால் எந்த போர் என்று கேட்டால் சிலருக்கே தெரிந்திருக்கலாம்.

மணிமங்கலம் விஷ்ணு கோயில்
பின்னர் முதலாம் பராந்தகசோழன் காலத்தில் அரக்கோணம் அருகில்லுள்ள தக்கோலத்தில் ராஷ்டிரகூட்டருக்கும் சோழருக்கும் போர் நடந்தது. இந்த போரின் விளைவுகளை பற்றியும் தகவல் இல்லை. ஆனால் இந்த போர் நடக்குமுன் வீராணத்தில் முகாமிட்ட படைகள், அவர்களது தளபதியும் பராந்தகனின் மகனுமான ராஜாதித்யன் கட்டளையில் அங்கு ஒரு பெரிய ஏரியை வெட்டி, வீரநாராயணன் என்ற பராந்தகனின் இயற்பெயரை அவ்வேரிக்கு சூட்டினர். இது பின்னாளில் வீராணம் என்று பெயர் மருவி இன்றைய சென்னை மக்களுக்கு முக்கிய தண்ணீர் தடமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளைத்தாண்டி ஒரு போரின் விளைவு நீடிப்பது வரலாற்று விசித்திரம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூவம் நதி தொடங்கும் இடத்தில் ஆங்கிலேயர் ஒரு அணையை கட்டினர். இதனருகே உள்ள நிலத்தில் தக்கோலப் போர் நடந்திருக்கலாம் என்று   “காவிரி மைந்தன்” “Gods, Slaves and Kings” நூல்களின் நாவலாசிரியர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் கூறுகிறார். கூவம் நதியின் வரலாற்றை ஆராயும் முயற்சியில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.

தக்கோலத்தில் கூவம் நதியில் அணை

அச்சுறுத்தல்கள்

பதினேழாம் நூற்றாண்டு வரை சென்னை வரலாற்றில் முக்கியமில்லாத சின்ன ஊராகவே இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் சென்னைக்கு வந்து சாந்தோமில் ஒரு கோட்டையை அமைத்தனர். பாரதத்திற்கு கடல்வழி வந்த முதல் ஐரோப்பியர்கள் போர்த்துகீசியரே. பழவேற்காட்டில் டச்சு மக்களும், தரங்கம்பாடியில் டென்மார்க்கினரும் பின்பு ஜெர்மானியரும், பாண்டிச்சேரியில் ஃப்ரெஞ்சும் அடுத்தடுத்து வந்தனர். ஒரு நூற்றாண்டுக்கு நிலங்களை வாங்குவதும் கிராமங்களை வாடகைக்கு எடுப்பதுமே ஐரோப்பியரின் நடவடிக்கையாக இருந்தது. 1701 இல் தாவூத் கான் படையெடுப்பும் அச்சுறுத்தலாக தொடங்கி, போர் ஏதும் நடக்காமல், சமாதான வெறி வீசி, விருந்தில் முடிந்தது. 

சம்பந்தபட்ட பதிவுகள்


குறிப்பு இப்பதிவு, லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் தீபாவளி மலரில் வந்த ”போர்காலத்தில் சென்னை” என்ற என் கட்டுரையின் முதல் பகுதி.

No comments:

Post a Comment