Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Sunday, 16 May 2021

செவிலியர்க்கு பல்லாண்டு

மெய்யத்து மலையான் 
படம்: அஷோக் கிருஷ்ண்சாமி


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு  பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட நலிமேனி குணம்பேணும் தொண்டர்க்கு பல்லாண்டு பல்லாண்டு


படியாமல் நோய்பிரிய புண்ணார பணிவோர்க்கு பல்லாண்டு

வடிவாய் திருவாய் இருவிதழில் மலர்கின்ற புன்சிரிப்பும் பல்லாண்டு

பொடியாய் நோய் தீர்க்கும் வல்லாயுத  நல்லூசியும் பல்லாண்டு 

விடிவாய் எழும் பகலாய் சுகம்தரும் சேவையும் பல்லாண்டே



Wednesday, 18 March 2020

பாட்டியை மூஞ்சில் குத்து



ஹான்ஸ் ரோஸ்லிங் (Hans Rosling) எனும் பொருளியல் வல்லுனர் எழுதிய ஃபாக்ட்ஃபுல்நஸ் Factfulness (செழுந்தகவல்) நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். கற்றோரும், சான்றோரும், பொருளியல் வல்லுனரும், பலநாட்டு தலைவர்களும், ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், இன்றைய உலகை எவ்வளவு தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று பக்கம்பக்கமாக விவரிக்கிறார். 

வளர்ந்தநாடு வளரும்நாடு எனும் இருவகை பிரிவு 1940களில் உருவாகியது. அந்த நிலமை மாறி நாற்பது வருடங்களாகிவிட்டன. இன்று உலக நாடுகளை செல்வத்தாலும் வளர்ச்சியாலும் மக்கள் நலத்தாலும் நான்கு வகையாய் –இரண்டு வகையாக அல்ல - பிரிக்கவேண்டும் என்று 1999 முதல் உலகின் பல அரங்குகளில் சொல்லி வருகிறார். நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா கல்லூரிக்கே இதை புரியவைக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது.

நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தில், ஒர் சம்பவம் சொல்கிறார். இந்த அத்தியாயத்தின் பெயர் “பழி வீசும் இயல்பு”.

என் மொழியாக்கம் கீழே.

பழி வீசும் இயல்பு

நான் கரோலின்ஸ்கா கல்லூரியில் பந்நாட்டு மருந்து கம்பெனிகளை பற்றி பாடம் நடத்தி கொண்டிருந்தேன். வருமையான நாடுகளில் மட்டும் நிலவும் மலேரியா, உறக்கநோய் போன்ற நோய்களை ஒழிக்க, பணக்கார பந்நாட்டு கம்பெனிகளில்  ஆராய்ச்சி ஏதும் நடத்துவதில்லை என்று விளக்கினேன்.

முன் வரிசையிலுள்ள ஒரு மாணவன், “அவர்களை மூஞ்சிலேயே குத்தவேண்டும்” என்றான்.

“ஆகா”, என்றேன். “சில நாட்களில் நான் சுவிட்சர்லாண்டிலுள்ள நோவார்டிஸ் எனும் கம்பெனிக்கு உரையாற்ற செல்வேன். யாரை குத்த வேண்டும், குத்தி என்ன சாதிப்பேன் என்று விளக்கினால், நான் போய் குத்திவிட்டு வருகிறேன்.”

“இல்லை, இல்லை. அவர்கள முதலாளியை குத்தவேண்டும்.”

“சரி. கம்பெனி முதலாளி டேனியல் வசெல்லா. அவரை சந்திப்பேன். அவரை மூஞ்சில் குத்தவா? குத்தியதனால் மலேரியா ஆராய்ச்சி தொடங்க ஆணையிடுவாரா?”

பின்னிருக்கையிலிருந்து வேறொரு மாணவன் வாய்மலர்ந்தான். “கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் அனைவரையும், மூஞ்சில் குத்தவேண்டும்.”

“நிச்சயம் செய்யலாம். அன்று மதியம் நிர்வாக இயக்குனர்கள் சிலரை சந்திப்பேன். காலையில் டேனியல் தப்பித்தார். மதியம் ஒரு ரவுண்டு கட்டி மற்றவரை சுழட்டி சுழட்டி மூஞ்சில் குத்துகிறேன். அனைவரையும் குத்தும் வரை என் கூந்தலில் தேங்காய் எண்ணெய் தடவாதிருப்பேன், ரிப்பன் போடமாட்டேன், அன்னை பராசக்தி மேல் ஆணை. ஆனால் நான் வயதானவன், மல்லனோ சண்டியனோ அல்ல, நாலைந்து நபரை குத்தியபின் அங்குள்ள காவலர்கள் என்னை பின்னி பெடலெடுக்கலாம். சரி இதனால் என்ன மாறும்? நான் கொடுத்த குத்தில் தான் செய்த பாவம் அறிந்து, சித்தம் தெளிந்து, சிந்தை குளிர்ந்து, மெய்ஞ்ஞானம் பெற்ற கம்பெனி இயக்குனர்கள் மலேரிய ஆய்வை மேற்கொள்வாரா?”

“இல்லை இல்லை, நோவார்ட்டிஸ் ஒரு தனியார் கம்பெனியல்ல. பங்கு சந்தையில் அந்த கம்பெனி பங்குகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். பங்காளிகள் தான் அந்த கம்பெனியின் உண்மை முதலாளிகள்,” என்றான் ஒளிபடைத்த கண்ணனாம் மூன்றாம் மாணவன்.

“பலே பாண்டியா! சரியாக சொன்னாய். இந்த கம்பெனியின் பங்குதார்ரகளே மலேரிய ஆராய்ச்சியை விரும்பாமல் செல்வந்தர் நோய் மட்டுமே தீர்த்து பணம் சம்பாதிப்பதில் குறியாய் வெறியாய் நரியாய் அரியாய் உள்ளனர். யாரிந்த குறி வெறி நரிகள்?” என்றேன்.

“பணக்காரர்கள்.” என்றான் முன் வரிசை மைக் டைசன்.

“அது தானில்லை. மருந்து கம்பெனிகளின் வருமானம் கச்சா எண்ணெய் கம்பெனிகளின் வருமானம் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஊஞ்சலாடா. வருடாவருடம் பெரிதாக ஏறியிறங்காமல் நம்பகமாக லாபம் பெற்று, துல்லியமாக பங்குதாரர்களுக்கு பங்கு தருகின்றன. அதனால் இவற்றில் முதலீடு போடுவதும் சில நிதி நிறுவனங்களே. பங்குகளை வாங்கி பலவருடங்கள் விற்காமல் தக்கவைத்து கொள்ளும். அவை யார் யார் என்று தெரியுமா?” என்று கேட்டேன்.

மாணவர்களுக்கு இந்த பங்கு சந்தை விவரம் தெரிந்திருக்கவில்லை. சுட்ட நாவல் பழத்தை கேட்ட அவ்வையை போல் என்னை ஆவலுடன் நோக்கினர்.

“ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (Retirement funds)” என்றேன். மயான நிசப்தம்.

“அந்த மாதிரி நிதி நிறுவனங்களில் பங்கு வாங்கியுள்ள வயோதிகரை நான் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பாட்டியை வாராவாரம் சந்திப்பவராக இருந்தால் இந்த வாரம் உங்க பாட்டி மூஞ்சில் குத்தலாம். சுயநலாமாக தங்களுக்கு மாதாந்திர வருமானம் ஆடாமல் அசையாமல் அள்ளி வரவேண்டும் எனும் ஆர்வத்தில், பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டும் மருந்து தேடும் ஆராய்ச்சி கம்பெனிகளின் உண்மை முதலாளிகள் அவர்களே.

“மேலும். சமீபத்தில் நீங்கள் ஊர்சுற்றவோ விழா கொண்டாடவோ உங்களுக்கு உங்கள் பாட்டி ஏதேனும் அன்பளிப்பாக கொஞ்சம் பணம் குடுத்திருந்தால் உங்கள மூஞ்சையும் கொஞ்சம் குத்திக்கலாம்.”

மொழியாக்கம் முற்றும்.

என் குறிப்பு : ஓய்வுபெற்றவர்களின் நிதிகளை கையாண்டு, மாதாமாத ஓய்வு வருமானத்தை தவிற, கொஞ்சம் பங்கு சந்தையில் போட்டால் நல்ல வருமானம் கிடைக்கலாம் என்பதால் சில நிறுவனங்கள் அவர்கள் உபரி செல்வத்தில் இந்த மாதிரி கம்பெனிகளில் பங்கு வாங்கி, வருடத்திற்கு மூன்றுநான்கு முறை அவர்களுக்கு பணம்பெற்று தருகின்றன.

ஹான்ஸ் ரோஸ்லிங் பேசும் வீடியோ காட்சி

Thursday, 21 May 2015

உழவர் தற்கொலை

சுவாமிநாத ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பொருளியல் கட்டுரைகளை எழுதிவருபவர். இடதுசாரி எண்ணங்கள் பரவலாயுள்ள இந்திய நாளிதழ் சூழலில் தெளிவாக வலதுசாரி சிந்தனைகளை முன்வைப்பவர். பல வருடங்களாக இவரை படித்து வருகிறேன். பொருளியல் பார்வையில் சமூகத்தை அலசி, புதிதாக பல தகவல்களை சொல்வார். இந்தியாவில் இது செவிடன் காதில் சங்கு ஊதும் பிழைப்பு. இந்த கட்டுரை பிடித்ததாலும், உழவர் தற்கொலைகளை பற்றி புலம்பல்களே அதிகம் இருப்பதாலும், நான் இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பகிர்கிறேன். இதன் ஆங்கில மூலம் இங்கே