Wednesday, 14 May 2014

ஒரு வரி கதை


“ஒட்டகம் பாலைவனத்து கப்பல்” என்று பள்ளி புத்தகத்தில் படித்த ஞாபகம் இருக்கலாம். சென்னையில், ஆங்கில மொழி பள்ளிகளில் கல்விகற்ற நான் “The camel is the ship of the desert” என்று படித்திருக்கிறேன். குஜரத் ராஜஸ்தான் வீதிகளில் ஒட்டக வண்டிகளை தொலை காட்சியில் பார்த்திருக்கிறேன். அரபு நாடுகளையும் வட ஆப்பிரிக்காவையும் பாலை நாடுகளாகவே நினைத்ததாலும் அங்கு ஒட்டக வண்டி உள்ளதா என்று யோசித்ததில்லை.


கணித இயற்பியல் விஞ்ஞானி ஃப்ரீமன் டைசனின் எழுதிய ‘Infinite in All Directions’ (’எத்திக்கும் ஈறில்லை’) என்ற நூலை 2005இல் வாசித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் அறிவியலையோ வரலாற்றையோ சமூகத்தையோ ஒரு அறிவியல் நோக்கத்தோடு, எளிய நடையில் அலசியதும், புதிய கருத்துக்களை அள்ளி வீசியதும், என் எண்ணத்தை இன்புருக்கியது. என் தம்பி ஜெயராமனுக்கு பிறந்தநாள் பரிசாய் அளித்தேன்; முதல் அத்தியாயம் மூன்று முறை படித்தும் புரியவில்லை என்று வருந்தி கைவிட்டான். ஓரிரு முறை டைசனின் சில கருத்திக்களை விளக்கிய போது, புரிதலின் ஆனந்தம் அவனுக்கும் கிடைத்தது. Alchemy of Air நூலை மிகவும் ரசித்து படித்தான். Newton and the Counterfeiter படித்துக்கொண்டிருக்கிறான். நிற்க.

ரோமப்பேரரசு சாலைகள் ரோம கல் சாலை கட்டுமானம்

ரோம நாகரீகத்தின் கல் சாலைகளை மாபெரும் சாதனையாகவும் ரோம பேரரசின் செல்வத்திற்கு முக்கிய காரணமாகவும் வரலாற்று அறிஞரும் பொருளியல் அறிஞரும் கருதுவர். அலெக்ஸாண்டர் காலத்தில் கிரேக்க ஆட்சிக்குட்பட்ட மேற்காசிய – சிரியா, ஈராக், ஈரான் - ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமாபுரியின் ஆட்சிக்குட்பட்டது. ரோமானிய மன்னர்கள் இந்த அரபு நாடுகளிலும் தங்கள் கல் சாலைகளை செய்தனர். 

அற்புத சாலைகள் – மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் ரதங்களும் வேகமாகவும், பாரமேந்தியும் சென்று, வணிகம் பெருக வழி வகுத்த சாலைகள். ஆனால் ஏதோ ஒரு காலத்தில் சாலைகள் பழுதாகி, சீராகாமல், மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் அரபு நாடுகளில் காணாமல் போயின. இது தொழில்நுட்ப பின்னேற்றம். வரலாற்றில் பொதுவாக முன்னேற்றங்களை தான் பார்க்க முடியும்; நோய்களாலும், போர்களாலும் அவ்வப்பொழுது பின்னேற்றம் அடையலாம். 

வணிகம், செல்வம், மதம், மொழி, விஞ்ஞானம், கல்வி, அமைதி, கலை, மனித வளம், இவை எல்லாம் பின்னேறினாலும், பொதுவாக சமூகங்கள் தொழில்நுட்பத்தில் பின்செல்வதில்லை. ஐந்தாம் நூற்றாண்டில் ரோம ராஜ்ஜியம் வீழ்ந்தபின் ஐரோப்பா 700 ஆண்டுகள் இருளில் சூழ்ந்தது என்மனார் வரலாற்றுரைஞர். அரபு நாடுகளில் சாலைகள் ஒழிந்து ஒட்டகம் மேலோங்கியது எப்படி? பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சியால் ரயிலும், இருபதாம் நூற்றாண்டில் கார்களும் பேருந்துகளும் லாரிகளும் வரும் வரை, அரபு நாடுகளிலும் ஈரானிலும் சக்கரம் போட்ட வண்டிகளே இல்லையாம். டூனிஸ் முதல் ஆஃப்கானிஸ்தான் வரையும், மங்கோலிய ஆட்சியில் சீனதேசம் முதல் பல்கேரியா வரையும், சாலைகளில் வண்டிப்போக்குவரத்தும் இருந்ததென்றும், பாரதத்தில் மாட்டு வண்டிகள் எக்காலத்திலும் இருந்தன என்பதும், மன்னன் ஷெர்ஷாசூரி பெஷாவர் முதல் வங்கதேசத்து டாக்கா வரை நெடுஞ்சாலை அமைத்தான் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

ஒரு வரியில் கதை எதிர்ப்பார்தவர்கள் ஏமாற வேண்டாம்.

The Camel and the Wheel  ‘ஒட்டகமும் சக்கரமும்’ என்று Richard Bulliet ரிச்சர்டு புல்லியே ஒரு நூல் எழுதியுள்ளார். இதை ஃப்ரீமன் டைசன் சுருக்கி சொல்கிறார்.

சிரியா நாட்டில் பல்மைரா நகரம், இன்றைய சிங்கப்பூர் போல் வர்த்தக மையமாய் திகழ்ந்து, வரலாற்று முக்கியம் பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டில் பல்மைராவில் ஒரு வரி பட்டியலை புல்லியே சோதித்தார்; மாட்டுவண்டியின் சரக்கு சுமை நான்கு ஒட்டகச் சுமைக்கு சமமாக இருந்தது. ஒட்டகம் சுமார் 300 கிலோ சுமையும் மாட்டு வண்டி 600 கிலோ சுமையும் தாங்குமாம். அதாவது, ஒரு மாட்டு வண்டி, இரண்டு ஒட்டகச் சுமையே தாங்கும். எடை கணக்கில் மாட்டுவண்டி சுமை இருமடங்கே இருந்திருக்க வேண்டும். ஏன் இந்த பாரபட்சம்?

ஒருகால், ஒட்டக வர்த்தகருக்கும் வரி அதிகாரிகளுக்கும் ஏதோ தொடர்புண்டோ என்று கேட்கிறார் டைசன். ஒட்டகங்களுக்கு சாலைகள் முக்கியமில்லை, எவ்வித பாதையிலும் செல்லும். ஆனால் மாட்டு வண்டிகளுக்கு தரமான சாலைகள் வேண்டும். வரிகளின் பாரபட்சத்தினால், காலப்போக்கில் ஒட்டக போக்குவரத்து மேலோங்கியது மாட்டுவண்டி போக்குவரத்து சரிந்தது. வரி குறைந்ததால் சாலைகளை பராமரிக்கும் தேவையான பணமும், அதனால் பணியும் குறைந்தது. சாலைகள் சீர்கெட்டன. மாட்டுவண்டி மட்டுமல்ல, சக்கரவண்டிகள் யாவும் சரிந்தன. ஆயிரம் ஆண்டு ஒட்டகங்கள் கோலோச்சின. 

“சக்கரவண்டி” என்ற சொல்லே அரபு மொழியின் புழக்கத்திலிருந்து மறைந்தது.

வணிகமும், தொழில்நுட்பமும், சாலைகளும், கப்பல்களும், வரிகளும் வரலாற்றை ஆட்டிப் படைக்கும் மாபெரும் சக்திகள். காதலும் வீரமும் சூழ்ச்சியும் யுத்தமும் ஆட்சியும் வீழ்ச்சியும் ததும்பி வழியும் வரலாற்று கதைகளில், வணிகமும் வரியும் புலவருக்கு புளிக்கும். ரசிகருக்கு கசக்கும். 

இது ஒரு வரி கதை. எனக்கு புளிக்கவில்லை, உங்களுக்கு கசந்ததா?

எச்சரிக்கை: நான் புல்லியே எழுதிய புத்தக்த்தை படிக்கவில்லை. டைசனின் புத்தகத்தில் ஒரு பக்கத்தின் சாராம்சத்தை, என் பாணியில் எழுதியுள்ளேன். இதன் தொடர்பாக தொடர்ந்து நான் படித்த சில விஷயங்களை சில நாட்கள் கழித்து எழுதுகிறேன்.


No comments:

Post a Comment