Friday 2 May 2014

பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு

கற்கால கல்வெட்டு கல்
கீழ்வாலை பாறை ஓவியங்களை பார்க்க போனால், அங்கு சில காட்சிகள் அடிப்படை வரலாற்றை புரட்டி போட்டன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதலில் பார்த்த அதிர்ச்சி பண்டைக்கால கல்வெட்டு.


பாண்டுரங்கன் கல்வெட்டு
பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் எல்லாம் தாண்டி நவீன தமிழில் அறியா வம்சத்தின் தெரியா அரசன் பாண்டுரங்கன் தன் பெயரை செதுக்கியுள்ளான். கற்காலத்தில் மன்னராட்சி இருந்ததா, மக்கள் நாடோடிகளாய் குழுக்களாகவே வாழ்ந்தனர், என்ற கேள்வி எழுந்தது.

 பட்டபெயரா பிறவிப்பெயரா?
சற்றே  கவனுத்துடன் பார்த்தால், ஆட்சியாண்டு 36 இல், கலியுக வருடம் 1988 இல் அரசன் பாண்டுரங்கன் இந்த கல்வெட்டை செய்வித்தான் என்று யூகிக்கத்தோன்றியது. நான் ஆர்வலன் தான், கல்வெட்டு துறையில் பட்டப்படிப்பெல்லாம் இல்லை. வல்லுனர்கள் தான் இதை உறுதி செய்ய வேண்டும். பாண்டுரங்கன் என்பதை பாண்டு - ரங்கன் என்று பிறிக்கலாம். பாண்டியர் வம்சத்திற்கு முன்னோடியாகி பாண்டு என்ற சொல்லும் (Proto-Pandya) அரங்கம் அமைத்ததால் வினையாலமையும் பெயராக ரங்கன் என்றும், மன்னனின் பட்டப்பெயர் இருந்திருக்க வேண்டும். மேலே ஜெயராமன் என்ற பெயர் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதால், அவனே அவனுக்கு பிறக்கும்போது வைத்த பெயரென்றும், அரியணை ஏறியபின் வந்த பட்டப்பெயரே பாண்டுரங்கன் என்றும் நம்பலாம். ராஜராஜன் என்பது பட்டபெயர் என்றும் அப்பெயர் கொண்ட சோழ மன்னனின் பிறவிப்பெயர் அருள்மொழி வர்மன் என்பதும் வாசகர்களுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறேன்.

கற்காலத்தில் எப்படி சமஸ்கிரத எழுத்தான “ஜெ” வந்தது என்றும், எண்களை எழுதும் பழக்கம் அப்பொழுது இருந்ததா என்றும், இரண்டு ஐயங்கள் எழலாம். கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்பதும், வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழகம் என்றும் நினைவில் வைத்தால் முதல் ஐயம் தீரும். எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்பது ஆதிமுதல் தமிழரின் அறிவியல் தொலைநோக்கு பழமொழி  என்றும், கற்கால மனிதர்களுக்கு நிச்சயம் இரண்டு கண்கள் தான் இருந்தன என்பதும், இரண்டாம் ஐயத்தை ஒழிக்கும்.




அருகே சிர்காசி-ரவேல் கல்வெட்டு இருந்தது. இந்த சொற்கள் சங்ககாலத்திற்கு முன்பு உள்ள பெயர் மரபை குறிக்கும். அமைச்சர், அரசவை புலவர் பெயர்களாக இருக்கக்கூடும். உற்று நோக்கினால், ஒரு காம்பில் இரு இலைகள் பொறிக்கபட்டதை காணலாம். இது பாண்டு வமச அரச லச்சினையென்று சந்தேகமின்றி கூறலாம். அவர்களக்கு செடிகள் மேதுள்ள காதலும், இயற்கையோடு கற்கால மனிதன் எவ்வாறு ஒன்றி வாழ்ந்தான் என்றும் காலக்கடலைத் தாண்டி நமக்கு இச்சின்னம் அறிவுறுத்துகிறது.


ரவேல் லச்சினை கல்வெட்டு



ஆய்வாளர் கருணாகரன் - வீற்றிருந்த திருக்கோலம், விசுவநாதன் - சயனத்திருக்கோலம்

கற்காலமனிதனின், மன்னிக்கவும், கற்காலத்தமிழனின் கருவிகளாக கற்களையே எண்ணுகிறோம். பிந்தைய சிந்துசமவெளிகாலத்தில் அவன் பானைகள் செய்து மட்கால மனிதனாகவும், மரத்தில் கருவிகள் செய்து மரத்தமிழனாகவும், களிமண்ணை செங்கல் செய்து செங்கல்வராயனானதும் சரித்திர நிதர்சனம். ரோம நாகரிகமே மண்ணை உருக்கி கண்ணாடி செய்த நாகரிமாக ரோமர் வழிவந்த ஐரோப்பியர் எண்ணலாம். ஆனால் பண்டைய பாண்டுரங்கன் காலத்தில் தமிழகத்திலேயே சொல்லுருக்கி புலமை வளர்த்தது போல் மண்ணுருக்கி குவளை வளர்த்துள்ளனர். சான்று இங்கே காணலாம். பல்லவர் காலத்து கோயில்களை சுற்றி பிற்காலத்து நாயக்க மன்னர்கள் மதிள்சுவரும் கோபுரமும் எழுப்பியது போல், தமிழ்வடித்த குவளையில் பிற்காலத்து ஆங்கிலேயர் ஏதோ பொறித்துள்ளனர். அவர்களது நாசச் செயல் கண்டிக்கத்தக்கது என்றாலும், இந்த பாரம்பரிய சின்னங்களை திருட்டுத்தனமாக கடத்தி சென்று மேல் நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்காததற்கு அவர்களை நாம் சுண்டிவிரலால் பாராட்டலாம்.

மண்ணுருக்கி குவளை
ஆற்று மணலடியிலும் புதைந்த பானைகளிலும், மண்ணைத்தோண்டியும் அகழ்வாராய்ச்சி செய்வோருக்கு ஒரு நற்செய்தி. சோழர்காலத்துக்கு முந்தைய பொற்காசுகளோ செப்புக்காசுகளோ சிலவே தமிழகத்தில் கிடைத்துள்ளன. அவை பெரிதும் யவன நாணயங்களாகவும், மற்ற கலைகளில் மிளிர்ந்தாலும் நாணயஞ்செய்வதில் மங்கியே நாணும் இரண்டொரு பல்லவ நாணயங்களாகவும் பரிதாப கோலம்தான் மிச்சம். ஆனால் கீழ்வாலையில் தோண்டவும் வேண்டாம் புதையலை தேடவும் வேண்டாம் – அங்கங்கே கண்ணுக்கெதிரே சிதரிக்கிடைக்கின்றன செல்வங்கள். பாண்டு வம்ச காகித பணத்தை பாருங்கள் – கல்விகற்றோர் புரிந்துகொள்ளும் படி 5 என்ற எண்ணுடனம், படிப்பறிவு பாக்கியமில்லாதார், ஏழை எளி ஏர்பிடிக்கும் பாமரர், எண்ணி புரிந்துகொள்ளும் வகையில் ஐந்து மண்வெட்டி சின்னங்களும் தீட்டி பணத்தை அன்போடும் அறிவோடும் அச்சிட்டுள்ளான், பாண்டுரங்கன். என்கொல் அவன் முன்யோசனை! எத்தகைய கருணை, கரிசனம், பூர்வ தரிசனம், சமூக விழிப்புணர்ச்சி. ஆணாதிக்க ஐரோப்பியர் போலன்று, ராஜசின்னங்களை மட்டுமே பொறிக்காமல் ராணிமுகத்திலும் பணத்தை அச்சிட்டுள்ளனர். சீனதேசத்தில் தான் காகிதம் செய்யும் கலை விளங்கியது என்ற சீனரின் ஜம்பமும் இத்தோடு முறியடிக்கபடுகிறது. போதிதருமருக்கு முன்னரே கீழ்வாலை கப்பலோட்டிய தமிழன் ஒருவன் தான் காகிதக்கலையை சீனருக்கு பரிசாக அளித்திருக்கவேண்டும்.




கடைசியாக பாறை ஓவியத்திற்கு வருவோம். இந்தபன்றிவடிவப்பாறையை தாண்டிச்சென்றால் அங்குள்ள ஒரு பாறை நிழலில் படுத்துக்கொண்டு பார்த்தால் சென்னிற ஓவியங்களை பார்க்கலாம். பொது உடைமை கொள்கையை குறிக்கத்தான் சென்னிறமா, என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

பன்றிமுகக்கல் - கற்கால வராஹம்?

ஓவியப்பாறை

குதிரை ஓவியம்
குதிரைமேல் ஏறிய வீரன் ஒருவனின் படம் கிமு 6000 த்திற்கு முன்னால் கீழ்வாலையில் காணலாம். அந்த குதிரையின் மூக்கில் மூக்கணாங்கயிறு கட்டியுள்ளதும், அதை இழுத்து ஒருவன் செல்வதும் காணலாம். சிந்து சமவெளியில் வாழ்ந்த இனத்தை குதிரைமேலேறி வந்த ஆரியர்கள் அழித்து வேதக்கலாச்சாரத்தை நிறுவினர் என்பதை மறுக்கும்படி, தமிழகத்திலேயே கற்காலத்தில் குதிரைகள் இருந்தன என்று சந்தேகமின்றி இந்த ஓவியம் நிரூபிக்கிறது.

வரலாற்று நாயகர்களே, படையெடுங்கள்! கீழ்வாலை உங்கள் ஆய்விற்கு ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறது!! நம்பவில்லையா? கல்வெட்டை பாருங்கள், எழுத்தாளர் ஜெயமோகனால் பரிந்துரைக்கபட்ட புதியத்தமிழ் எழுத்துருவில், நல்வரவை வான் நோக்கி இடிமுழக்கமாய் கர்ஜிக்கிறதல்லவா?

புதியத்தமிழ் எழுத்துருவில் நல்வரவு கர்ஜனை

யாம்பெற்ற கல்வெட்டு இன்பம் பெருக இவ்வையகம்.

கல்வெட்டு இன்பம்

ஒத்த பதிவுகள்



No comments:

Post a Comment