Showing posts with label Varadarajan. Show all posts
Showing posts with label Varadarajan. Show all posts

Wednesday, 12 October 2016

பத்து அத்தையின் தேங்காய் சாதம்

“கோபாலா, பத்து மாதிரி யாரும் சமைக்கமுடியாது. விதவிதமா என்னென்னெவோ பண்ணுவா. வித்தியாசமா ஏதாவது பதார்த்தம் வேணும்ணா அவளை கேளு, பிரமாதமா பண்ணித்தருவா, சொல்லித்தருவா.” இப்படி சொன்னது சரோஜா பாட்டி. இந்திராம்மாவின் தளிகையை பற்றி ஒன்றுமே சமீபமாக வரவில்லையே என்று கேட்போருக்கு, இந்திராம்மாவின் பல குருக்களில் பத்து அத்தைக்கே முதலிடன் என்று, இதன்பால் ஸூப சாஸனமாக தெரிவிக்க படுகிறது.

சரோஜா பாட்டியும் பத்து அத்தையும் -2003ல்

பத்து அத்தை, கோபு, தேவசேனா - 2006ல்
பத்மாவதி என் தாயார் புஷ்பாவின் அத்தை. எனக்கு அத்தை பாட்டி. ஆனாலும் பத்து அத்தை என்றுதான் அழைப்பது வழக்கம்; அம்மா அப்படிதானே அழைப்பாள். பத்மாவதியின் தாயார் கனகவல்லி. என் தாத்தா வெங்கடாதிரியின் பெரியம்மா. கொள்ளுப்பாட்டி என்று அழைக்கவேண்டும். பாட்டி சரோஜா வெங்காடதிரி அவரை கனகவல்லி பெரியம்மா என்று அழைப்பார். நாங்களும் அவ்வழியே.

நாங்கள் மயிலாப்பூர் சிஐடி காலனியில் வாழ்ந்து வந்தபோது அம்மாவின் உறவினர்கள் அடிக்கடி வந்து போவார்கள். 1981இல் அம்மர் இறந்த பின், செல்பேசியுகத்தில் தொலைபேசிகளை போல், வரவுகள் மலிவடைந்தன. சிங்கசித்தப்பா என்று நாங்கள் அழைக்கும் சின்ன தாத்தா அழகியசிங்கர் மட்டும் அடிக்கடி வருவார். 1986ல் சரோஜா பாட்டி மாம்பலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு வந்தார். நாங்களும் கோடம்பாக்கத்தில் குடிபுக, சரோஜா பாட்டியை பார்க்கும் போது பத்து அத்தையையும் கனகவல்லி பெரியம்மாவையும் பார்ப்போம். இருபது வயதில் பேரனாகிய நான் மஞ்சத்தில் சுறுசுறுப்புடன் படுத்து டிவி பார்க்க, பூஜை புனஸ்காரம் எடுபடி வேலை செய்துவிட்டு அறுபது வயது சரோஜா பாட்டி நாற்காலியில் அமர்ந்து காற்றுவாங்க, எண்பத்தி ஏழு வயது கனகவல்லி பெரியம்மா பம்பரமாய் சுற்றிவந்து சமையல் செய்வாள்.


1990களில் சரோஜா பாட்டி,
கனகவல்லி பெரியம்மா, ஜெயலட்சுமி பெரியம்மா

சரோஜா பாட்டி பிசிபேளேபாத் பிரம்மராட்சசி. குழந்தை பருவத்தில் எங்கள் மூவருக்கும், தனக்கு முன் உக்காரவைத்து, ததிபாணடியன் கதை சொல்லிக்கொண்டே நெய் பருப்புப்பொடி ரசம் கலந்த சாதத்தை, ஆளுக்கொரு உருண்டை மாற்றி மாற்றி தருவாள். இதுதான் மிகப்பழைய நினைவு. என்னவெல்லாமோ பாட்டி சமைத்தாலும், காலங்களில் வசந்தத்தை 

போல் சாதங்களில் பிசிபேளேபாத் நா ஓச்சும்.

2004ல் சரோஜா பாட்டி எங்கள் கோடம்பாக்க இல்லத்தில் தங்க வந்தாள். பூண்டி விஜயகோடி வம்சமே பாட்டியை தரிசனம் காண எங்கள் வீட்டிற்கு படையெடுத்தது. 1980களில் மலிந்தது 2004ல் பொலிந்தது. “மன்னி” என்று வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டே பத்து அத்தையும் வந்தாள். அப்படி வந்த ஒரு தருணம்தான் மேற்கண் பாட்டி கொடுத்த பத்து அத்தை விபூஷண பட்டம்.

விஜயகோடி வம்சத்தில் அருட்பெரும் சமையல் கலைக்கு தனிப்பெரும் பெருமை. அம்மா புஷ்பா கறியமுதின் கலைவாணி. பெரியம்மா ஜெயலட்சுமி சாம்பார் சரஸ்வதி. சாம்பான் என்று ஒருமையில் பெயர் சாம்பார் என்று பன்மையில் பெயரெடுத்தது இந்த பெரியம்மாவின் கைவண்ணத்தினால் என்று வரலாற்று வல்லுனர்கள் செப்பேட்டில் எதேனும் குறிப்புகள் கண்டுபிடித்தால், முழுதும் நம்பலாம். 1970களில் கேகேநகாருக்கு செல்லும்போது மாலை சிற்றுண்டியாக ரமணி சித்தி செய்த சப்பாத்தி உருளைகிழங்கை மத்தளம் கொட்டி வரிசங்கம் அங்கூதி மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து அருந்தாத நாட்களில் அவன் சார்ப்பில் நாங்கள் அருந்தி மகிழ்வோம். ஒவ்வொன்றாக நால்வரையும் அழைத்துச்சென்றுவிட்டான். பத்துவோடு ஐவரானர். நிற்க.

மீண்டும் 2004க்கு பின்சொல்வோம். அமெரிக்காவிலிருந்து வரதராஜன் மாமா வந்திருந்தார். பத்துவும் ஒரு வாரம் தங்க வந்தாள். தம்பி ஜெயராமன் விருந்து கேட்க – இல்லை பத்துவிடம் கட்டளையிட – ஒரு நாள் தேங்காய் சாதமும் எலுமிச்சை சாதமும் செய்தாள் பத்து.
பொதுவாக எனக்கு புளியோதரை தயிர்சாதம் தவிர இவ்வவகை கலந்த சாதங்கள் பிடிக்காது. குறிப்பாக எலுமிச்சை தேங்காய் சாதங்கள் யார் செய்தாலும் கொஞ்சம் சுமார் தான். எலுமிச்சை சாதம் சில நேரம் பச்சடியோடும் வருவலோடும் நன்றாயிருக்கும். தேங்காயும் சாதமும் திமுக-பாஜக கூட்டணி போல் என்றுமே சந்தேக சமாச்சாரம். சேரக்கூடாதது என்று இறையனார் தருமியை கேட்டால் தேங்காயும் சாதமும் என்று சொன்னால் நக்கீரர் கூட அதில் சொற்குற்றம் பொருட்குற்றம் சொல்லமாட்டார் நினைத்தேன்.

பத்து அத்தை ஃபுட்பால் ஆடி பார்த்ததில்லை. அவள் கால்வண்னம் கண்டிலாத நான் அன்று கைவண்ணம் கண்டுகொண்டேன். எலுமிச்சை சாதத்தை எலைமிச்சம் வைக்காமல் உண்டு களித்தோம்.

தேங்காய் சாதம்? பாத்திரம் பாணாலி கரண்டியெல்லாம் விட்டுவைத்தது தான் அதிசயம். அதை போல் ஒரு தேங்காய் சாதம் என்றும் ருசித்ததில்லை. சேரக்கூடாதது என்று நினைத்திருந்தவை செம்புல பெயல் நீர் போல கலந்திருந்தன.

உவமையே புலவனின் ஆயுதம். ராமராவண யுத்தத்தை வர்ணிக்க வால்மீகி உவமைக்கு தடுமாறினார். வான் என்ன வடிவம்? கடலுக்கு என்ன உவமை?

வானம் வானவடிவு கடலுக்கு கடலே உவமை ராமராவணயுத்ததிற்கு அந்த யுத்தமே உவமை என்று உவமையல்லாமையை அலங்காரமாக நிலைநாட்டினார்.

“ககனம் ககன ஆகாரம் சாகர சாகர உபம
ராமராவணயோர்யுத்தம் ராமராவணயோரிவ”
என்பது அவர் செய்யுள். அன்று பத்து அத்தை செய்த தேங்காய் சாதம் எங்கள் இல்லத்தில் உவமை அந்தஸ்து பெற்றது. கலைகளில் ஓவியம், மாதங்களில் மார்கழில், சாதங்களில் பத்து அத்தை தேங்காய் சாதம் என்பது ஸூபவேத வாக்கானது.

வரதராஜன் மாமாவும் அதை ஆமோதித்தார்.
“ஒரு நாளும் இது போல் நான் ருசித்தவன் அல்ல – அந்த
திருநாளை இவன் தந்தான் யாரிடம் சொல்ல,” என்று விருந்துக்கு வழி வகுத்த ஜெயராமனை புகழ்ந்தார். அவர் மார்க்கெட்டிங் பேராசரியர், ஸ்பான்ஸர் மகிமையை உணர்ந்தவர். செய்தவரை புகழ்வதை போல் செய்வித்தோரை புகழும் தமிழ்மரபை நன்றுணர்ந்து சொன்னார்.

ஒரு நாள் பத்துமா? சாதமா வினோதமா! அதை நான் பாட இன்றொரு நாள் பத்துமா?


ஒரு வாரம் இருந்துவிட்டு பத்து மந்தைவெளியிலுள்ள தன் மகன்வீட்டுக்கு கிளம்பும் பொழுது ஜெயராமன் சாவகாசமாய் கேட்டான், “ஆமாம் பத்து, நீ யார்? நமக்கு என்ன உறவு?” என்று. இதைவிட பலவிசித்திர கேள்விகளை கேட்டிருந்த பத்து மிரளவில்லை. எங்க ஆரம்பிக்கிறது என்று கொஞ்சம் யோசித்தாள். “கனகவல்லி பெரியம்மாவின் மகள்,” என்றேன் நான், கொஞ்சம் அறிமுகமாக. “அப்படியா? ஏன் இதை யாருமே சொல்லவேயில்லை?” என்று அதிர்ந்து அவன் போனான். “சரி, வெங்கடன் சிங்கன்ன்னு அப்பப்போ யாரையோ சொல்லிண்டிருக்கையே, அவால்லாம் யாரு?” என்று விசாரணை தொடர்ந்தது. “இதென்னடா இது? உன் தாத்தா வெங்கடாதிரி வெங்கடன், அவன் தம்பி சிங்கன்,” என்று பத்து அத்தை பதிலளிக்க, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற உணர்ச்சி பொங்கியது அவன் முகத்தில். பின்னே? நம் சிறுபருவத்தில் சிம்ம சொப்பனமாய் விளங்கிய இரண்டு தாத்தாக்களாய் பேர்சொல்லும் மகிஷாசுரமர்த்தினியை பார்த்தால் சான்றோரும் மதி மயங்காரோ? பத்துவுக்கு பத்துவே உவமை என்று இறும்பூது எய்தினான்.

Wednesday, 21 October 2015

புரட்சி குடிமகன்

ஏப்ரகாம் லிங்கனை வெள்ளை மாளிகையில் ஒரு வெளிநாட்டு தூதுவர் பார்க்கவந்தாராம். லிங்கன் தன் காலணியை துடைத்து கொண்டிருந்தாராம். ஒரு ஜனாதிபதிக்கு இந்த சேவை செய்யக்கூடவா ஆளில்லை என்று அதிசயித்த தூதுவர், “மிஸ்டர் லிங்கன், உங்கள் ஷூவை நீங்களேவா பாலிஷ் செய்கிறீர்கள்?” என்று வினவ, “ஏன், உங்களுக்கு யார் ஷூவை பாலிஷ் செய்து பழக்கம்,” என்று லிங்கன் பதிலளித்தாராம். தன் கையே தனக்குதவி என்பது அமெரிக்க கலாச்சாரம். தன்னுடைய ஷூவுக்கு என்னை பாலிஷ் செய்ய கட்டளையிட்டுக்கொண்டே என் அப்பா இந்த கதையை பல முறை சொல்லியுள்ளார். சில சமயம் தானே பாலிஷ் செய்யும் பொழுதும் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் நான் ஷூ போடாமல் செருப்பை போட்டுக்கொண்டதற்கு இக்கதை ஒரு முக்கிய உளவியல் காரணமாக இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் சரித்திர எழுத்தாளர் ராமசந்திர குஹ (குகன்?) “தி ஹிண்டு” ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்தவர் அமெரிக்கா சென்ற போது, ஒரு பெரும் பல்கலைகழகத்தின் பேராசிரியர், ஒரு பெட்டி நிரைய புத்தகங்களுடன் தன் அலுவலகத்திலிருந்து கார் வரை நடந்து சென்றதை, குறிப்பிட்டார். 

பாரதத்தில் எந்த கம்யூனிஸ்ட்டும் இதை செய்யமாட்டார் என்று மேலும் கூறி, ஓட்டுனரோ குமாஸ்தாவோ பெட்டி சுமந்து வர, கட்சி பிரமுகர்களும் கல்லூரி பேராசிரியர்களும் ஸ்டாலினிய சித்தாந்தம் பேசுவார் என்றும், பேனாவை சுமந்து சட்டைக்கு வலிக்கக்கூடாது என்பதால் மற்றவரிடம் பேனா வாங்கி எழுதுவதே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் அறவழி என்று கொய்யாப்பழத்தில் கோணி ஊசி வைத்திருந்தார் குகன்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, தன் இல்லத்திலிருந்து நூறு மைல் தூரமுள்ள ஹ்யூஸ்டன் விமான நிலையத்திற்கு, என்னையும் எம்பி ஜெயராமனையும் கூட்டிச்செல்ல், தன் காரை ஓட்டிக்கொண்டு வந்து என் மாமா வரதராஜன். டெக்ஸாஸ் ஏ&எம் (Texas A&M University) பல்கலைகழகத்தில், மார்க்கெட்டிங் துறை பேராசிரியர். போகும் வழியில் பெட்ரோல் நிறப்பினோம். அங்கே வைக்கப்பட்டுள்ள சோப்புத்தண்ணியால் கார் கண்ணாடிகளின் அழுக்கை துடைத்தார். ராமசந்திர குகனின் கதை ஞாபகம் வந்தது. இதோ படம்.

(ஐயம்: ஹ்யூஸ்டனை கூசுடன் என்றும், டெக்ஸாஸை தெகுசாசு என்றும் தமிழில் எழுதவேண்டுமோ?)
புரட்சி குடிமகன்
நம் நாட்டில் ஓட்டுனரோ, பெட்ரோல் கடை ஊழியரோ தான், கார் கண்ணாடி துடைத்து பார்க்கமுடியும். ஆனால் அமெரிக்காவில் இது சகஜம். வீட்டில் உண்டபின், நான் என் தட்டை கழுவினால் சமையல் செய்யும் இந்திராம்மாவோ, எங்கள் இல்லத்து ஸ்வச் பாரதி மேரியம்மாவோ, “விட்டுடுங்க, நீங்க ஏன் கழுவுறீங்க, நான் செய்கிறேன்,” என்று காம்போதி ராகத்தில் பாடுவார்கள். ஏப்ரகம் லிங்கனின் மறு அவதாரமாக என்னை உணரும் அத்தருணத்தில், எந்த வெளிநாட்டு தூதுவனும் இல்லையே என்று ஜன்னல் வழியே ஏக்கத்தோடு எட்டிப்பார்பேன். கம்ப்யூட்டர் துறையிலும் பாத்திரம் தேய்ப்பதிலும், எனக்கு கிட்டத்தட்ட சமமான ஆண்டுகள் தொழில் அனுபவம்.

அமெரிக்காவில் பல வேலைகளை அவரவரே செய்துகொள்ளவேண்டும். பல மாநிலங்களில் பெட்ரோல் கடைளில் காசு வாங்குவதற்கு தவிர எந்த தொழிலாளியும் இருக்கமாட்டார். நாமே பெட்ரோல் போட்டுக்கொள்ளவேண்டும், காத்தடித்துக்கொள்ளவேண்டும், கண்ணாடி துடைக்கவேண்டும். முதன்முறை ஓரிகன் மாநிலத்திற்கு சென்றபோது அங்கே பெட்ரோல் போட தொழிலாளிகள் இருந்ததை கண்டு ஆச்சிரியப்பட்டேன். அந்த மாநிலத்தில் அது சட்டமாம். கட்டாய வேலை வாய்ப்பு திட்டம். மொழியாலும் உணவாலும் உடையாலும் அமைப்பாலும் ஒரே மாதிரி காட்சியளித்தாலும், மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர், அமெரிக்காவிலும் பல பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. வாழ்ந்தால் தான் தெரியும். நிற்க.



கார் கழுவுவதை தவிற வேறு சில தொழில்களும் வரதராஜன் மாமா செய்கிறார். முக்கியமாக தோட்டவேலை. புல்வெளியற்ற தனிவீடு இல்லை என்று அமெரிக்காவை சோல்லலாம். வீட்டின் முன்னும் பின்னும் புல் பரவியிருக்கும். ஒரு உயருத்துக்கு மேல் வளர்ந்தால் வெட்டவேண்டும்; இதற்கு ஊராட்சி சட்டங்கள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வாராவாரம் காசு கொடுத்து வெட்டுவோரும் உண்டு, தானே வெட்டுவோரும் உண்டு. புல் காய்ந்து விட்டால், செடிக்கடைகளில் பாய் பாயாக விற்கப்படும் புல் வாங்கிக்கொண்டு வந்து தோட்டம் அமைக்க வேண்டும். புல் வளர (நஞ்சை?) மண் வாங்குவதும் சகஜம். சில நேரம் மண்ணை இலவசமாக சிலர் தருவர். விளம்பரம் செய்து தானம் நடக்கும், வண்டி எடுத்து சென்று மண்ணை அள்ளி வந்து தோட்டத்தில் பரப்பிக்கொள்ளலாம். படம் காண்க.

Free Dirt = இலவச மண்

இருபது வருடத்திற்கு முன் அங்கு சென்ற போது, தன் தந்தைக்கு கிடைத்த மாத சம்பளத்தைவிட, தோட்டத்துக்கு மண் வாங்க செலவழித்தேன் என்று கொஞ்சம் சோகம் ததும்ப சொன்னார். சில வருடங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியில் புடலங்காய் பூசனி கத்திரி கருவேப்பிலை வளர்த்து மகிழ்ந்தார். இவற்றை கூட்டு, குழம்பு, கறியமுது என்று மாமி பிரபா சமைத்து நானும் சுவைத்துள்ளேன்; ருசியோ ருசி. அக்கம்பக்கத்தினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.

என்னளவு இல்லை எனினும் என்னைப்போல் நளபாக ரசிகர். இவரை போல ரசவிரும்பி யாருமில்லை. காபி டீ தரவா என்று யாராவது கேட்டால் சூடாக ஒரு கோப்பை ரசம் கேட்டு அருந்தி மகிழ்வார்.

பிரபா மாமி செய்த நளபாகம்
தமிழ் பிரியர்; ரசிகர். மகளும் மகனும் ஓட ஓட திருக்குறளும் அவ்வைத்தமிழும் பாரதியார் பாடலும் பேசுவார். பெங்களூருவில் வளர்ந்து பள்ளியில் படித்த காலத்தில், கன்னடம் வகுப்பில் பெற்றோர்கள் சேர்த்தனராம். ஒரு கன்னட ஆசிரியர், “கன்னடம் மிக கடினம். நீங்களோ தமிழ் குடும்பம், தமிழ் வகுப்பிலே மகனை சேர்த்துவிடுங்கள்”, என்று சொன்னாராம். அந்த கன்னட ஆசிரியருக்கு அடிக்கடி மானமார்ந்த நன்றி சொல்லுவார். தாங்கவே முடியாத தமிழ் படங்களை சகித்துக்கொண்டு, கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கும் டி,எம்,சௌந்தரராஜன் சுசீலா குரலினிமைக்கும் கேட்டு ரசிப்பார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். கேள்வி நேரம் என்ற சிறுகதை, தற்கொலை செய்துகொள்பவனை, அவன் பயன்படுத்த நினைக்கும் கருவிகள் கேள்விகள் கேட்டு தடுப்பதாக அமைந்திருக்கும். நான் படித்ததில்லை. அவர் சொல்லி கேட்டதுதான். நகல் கிடைத்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்.

நாம் யாவரும் அவர் கதைகளையோ கட்டுரைகளையோ படித்திரா விட்டாலும் அவர் எழுத்தை படித்திருக்கிறோம். பல வருடங்களுகு முன் சென்ன மாநகராட்சி நடத்திய அந்த காலத்து ஸ்வச் பாரத திட்டத்தில், மக்களை குப்பைகளை தொட்டிகளில் போட ஊக்குவிக்க, சிறந்த சொற்றொடர் எழுதும் போட்டி ஒன்றை நடத்தினர். இவர் எழுதி “Use Me” ரூ.25 பரிசு பெற்றது.


எண்ணும் எழுத்தும்

தன் துறையில் அபாரமான பெயர்கொண்டவர். துறை இலக்கிய பத்திரிகைகளான ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங், ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங் ரிசர்ச் இரண்டிலும் பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். (இவற்றை, தலா விற்பனை கலை பத்திரிகை, விற்பனை கலை ஆய்வு பத்திரிகை என்று தமிழாக்கலாமோ?) இரண்டு பத்த்ரிகைகளிலும் ஆசிரியராக பணிசெய்துள்ளார். 

மச்சச்சேத்துப்பட்டு பல்கலைகழகம் ஐம்பதாண்டில் தன் லட்சக்கணக்காண மாணவர்களில் தேர்ந்தெடுத்து கௌரவித்த தலைசிறந்த பத்தில் இவரும் ஒருவர். நூல்கள் நிரம்பி வழியும் அலமாரியை போல் வாங்கிய விருதுகள் நிரம்பி சுவரும் வழிகிறது. கார் கண்ணாடியை விட நன்றாகவே விருதுகள் மிளிர்கின்றன.



அவர் பிறந்தநாள் அக்டோபர் இருபது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், மாமா. 

Journal of Marketing
Texas A&M University டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம்

வரதராஜனின் விருதுகள் அருகில் ஜெயராமன்

தொடர்பான பதிவுகள்

அன்பளிப்பு
On Human Kindness
நான் ரசித்த சில பெயர் பலகைகள்