“கோபாலா,
பத்து மாதிரி யாரும் சமைக்கமுடியாது. விதவிதமா என்னென்னெவோ பண்ணுவா. வித்தியாசமா ஏதாவது
பதார்த்தம் வேணும்ணா அவளை கேளு, பிரமாதமா பண்ணித்தருவா, சொல்லித்தருவா.” இப்படி சொன்னது
சரோஜா பாட்டி. இந்திராம்மாவின் தளிகையை பற்றி ஒன்றுமே சமீபமாக வரவில்லையே என்று கேட்போருக்கு,
இந்திராம்மாவின் பல குருக்களில் பத்து அத்தைக்கே முதலிடன் என்று, இதன்பால் ஸூப சாஸனமாக
தெரிவிக்க படுகிறது.
சரோஜா பாட்டியும் பத்து அத்தையும் -2003ல் |
பத்து அத்தை, கோபு, தேவசேனா - 2006ல் |
பத்மாவதி
என் தாயார் புஷ்பாவின் அத்தை. எனக்கு அத்தை பாட்டி. ஆனாலும் பத்து அத்தை என்றுதான்
அழைப்பது வழக்கம்; அம்மா அப்படிதானே அழைப்பாள். பத்மாவதியின் தாயார் கனகவல்லி. என்
தாத்தா வெங்கடாதிரியின் பெரியம்மா. கொள்ளுப்பாட்டி என்று அழைக்கவேண்டும். பாட்டி சரோஜா
வெங்காடதிரி அவரை கனகவல்லி பெரியம்மா என்று அழைப்பார். நாங்களும் அவ்வழியே.
நாங்கள்
மயிலாப்பூர் சிஐடி காலனியில் வாழ்ந்து வந்தபோது அம்மாவின் உறவினர்கள் அடிக்கடி வந்து
போவார்கள். 1981இல் அம்மர் இறந்த பின், செல்பேசியுகத்தில் தொலைபேசிகளை போல், வரவுகள்
மலிவடைந்தன. சிங்கசித்தப்பா என்று நாங்கள் அழைக்கும் சின்ன தாத்தா அழகியசிங்கர் மட்டும்
அடிக்கடி வருவார். 1986ல் சரோஜா பாட்டி மாம்பலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு வந்தார்.
நாங்களும் கோடம்பாக்கத்தில் குடிபுக, சரோஜா பாட்டியை பார்க்கும் போது பத்து அத்தையையும்
கனகவல்லி பெரியம்மாவையும் பார்ப்போம். இருபது வயதில் பேரனாகிய நான் மஞ்சத்தில் சுறுசுறுப்புடன்
படுத்து டிவி பார்க்க, பூஜை புனஸ்காரம் எடுபடி வேலை செய்துவிட்டு அறுபது வயது சரோஜா
பாட்டி நாற்காலியில் அமர்ந்து காற்றுவாங்க, எண்பத்தி ஏழு வயது கனகவல்லி பெரியம்மா பம்பரமாய் சுற்றிவந்து சமையல் செய்வாள்.
1990களில் சரோஜா பாட்டி, கனகவல்லி பெரியம்மா, ஜெயலட்சுமி பெரியம்மா |
சரோஜா பாட்டி பிசிபேளேபாத் பிரம்மராட்சசி. குழந்தை பருவத்தில் எங்கள் மூவருக்கும், தனக்கு முன் உக்காரவைத்து, ததிபாணடியன் கதை சொல்லிக்கொண்டே நெய் பருப்புப்பொடி ரசம் கலந்த சாதத்தை, ஆளுக்கொரு உருண்டை மாற்றி மாற்றி தருவாள். இதுதான் மிகப்பழைய நினைவு. என்னவெல்லாமோ பாட்டி சமைத்தாலும், காலங்களில் வசந்தத்தை
போல் சாதங்களில் பிசிபேளேபாத் நா ஓச்சும்.
2004ல்
சரோஜா பாட்டி எங்கள் கோடம்பாக்க இல்லத்தில் தங்க வந்தாள். பூண்டி விஜயகோடி வம்சமே பாட்டியை
தரிசனம் காண எங்கள் வீட்டிற்கு படையெடுத்தது. 1980களில் மலிந்தது 2004ல் பொலிந்தது.
“மன்னி” என்று வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டே பத்து அத்தையும் வந்தாள். அப்படி வந்த ஒரு
தருணம்தான் மேற்கண் பாட்டி கொடுத்த பத்து அத்தை விபூஷண பட்டம்.
விஜயகோடி
வம்சத்தில் அருட்பெரும் சமையல் கலைக்கு தனிப்பெரும் பெருமை. அம்மா புஷ்பா கறியமுதின்
கலைவாணி. பெரியம்மா ஜெயலட்சுமி சாம்பார் சரஸ்வதி. சாம்பான் என்று ஒருமையில் பெயர் சாம்பார்
என்று பன்மையில் பெயரெடுத்தது இந்த பெரியம்மாவின் கைவண்ணத்தினால் என்று வரலாற்று வல்லுனர்கள்
செப்பேட்டில் எதேனும் குறிப்புகள் கண்டுபிடித்தால், முழுதும் நம்பலாம். 1970களில் கேகேநகாருக்கு
செல்லும்போது மாலை சிற்றுண்டியாக ரமணி சித்தி செய்த சப்பாத்தி உருளைகிழங்கை மத்தளம்
கொட்டி வரிசங்கம் அங்கூதி மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து அருந்தாத நாட்களில் அவன்
சார்ப்பில் நாங்கள் அருந்தி மகிழ்வோம். ஒவ்வொன்றாக நால்வரையும் அழைத்துச்சென்றுவிட்டான்.
பத்துவோடு ஐவரானர். நிற்க.
மீண்டும்
2004க்கு பின்சொல்வோம். அமெரிக்காவிலிருந்து வரதராஜன் மாமா வந்திருந்தார். பத்துவும்
ஒரு வாரம் தங்க வந்தாள். தம்பி ஜெயராமன் விருந்து கேட்க – இல்லை பத்துவிடம் கட்டளையிட
– ஒரு நாள் தேங்காய் சாதமும் எலுமிச்சை சாதமும் செய்தாள் பத்து.
பொதுவாக
எனக்கு புளியோதரை தயிர்சாதம் தவிர இவ்வவகை கலந்த சாதங்கள் பிடிக்காது. குறிப்பாக எலுமிச்சை
தேங்காய் சாதங்கள் யார் செய்தாலும் கொஞ்சம் சுமார் தான். எலுமிச்சை சாதம் சில நேரம்
பச்சடியோடும் வருவலோடும் நன்றாயிருக்கும். தேங்காயும் சாதமும் திமுக-பாஜக கூட்டணி போல்
என்றுமே சந்தேக சமாச்சாரம். சேரக்கூடாதது என்று இறையனார் தருமியை கேட்டால் தேங்காயும்
சாதமும் என்று சொன்னால் நக்கீரர் கூட அதில் சொற்குற்றம் பொருட்குற்றம் சொல்லமாட்டார்
நினைத்தேன்.
பத்து
அத்தை ஃபுட்பால் ஆடி பார்த்ததில்லை. அவள் கால்வண்னம் கண்டிலாத நான் அன்று கைவண்ணம்
கண்டுகொண்டேன். எலுமிச்சை சாதத்தை எலைமிச்சம் வைக்காமல் உண்டு களித்தோம்.
தேங்காய்
சாதம்? பாத்திரம் பாணாலி கரண்டியெல்லாம் விட்டுவைத்தது தான் அதிசயம். அதை போல் ஒரு
தேங்காய் சாதம் என்றும் ருசித்ததில்லை. சேரக்கூடாதது என்று நினைத்திருந்தவை செம்புல
பெயல் நீர் போல கலந்திருந்தன.
உவமையே
புலவனின் ஆயுதம். ராமராவண யுத்தத்தை வர்ணிக்க வால்மீகி உவமைக்கு தடுமாறினார். வான்
என்ன வடிவம்? கடலுக்கு என்ன உவமை?
வானம்
வானவடிவு கடலுக்கு கடலே உவமை ராமராவணயுத்ததிற்கு அந்த யுத்தமே உவமை என்று உவமையல்லாமையை
அலங்காரமாக நிலைநாட்டினார்.
“ககனம்
ககன ஆகாரம் சாகர சாகர உபம
ராமராவணயோர்யுத்தம்
ராமராவணயோரிவ”
என்பது
அவர் செய்யுள். அன்று பத்து அத்தை செய்த தேங்காய் சாதம் எங்கள் இல்லத்தில் உவமை அந்தஸ்து
பெற்றது. கலைகளில் ஓவியம், மாதங்களில் மார்கழில், சாதங்களில் பத்து அத்தை தேங்காய்
சாதம் என்பது ஸூபவேத வாக்கானது.
வரதராஜன்
மாமாவும் அதை ஆமோதித்தார்.
“ஒரு
நாளும் இது போல் நான் ருசித்தவன் அல்ல – அந்த
திருநாளை
இவன் தந்தான் யாரிடம் சொல்ல,” என்று விருந்துக்கு வழி வகுத்த ஜெயராமனை புகழ்ந்தார்.
அவர் மார்க்கெட்டிங் பேராசரியர், ஸ்பான்ஸர் மகிமையை உணர்ந்தவர். செய்தவரை புகழ்வதை
போல் செய்வித்தோரை புகழும் தமிழ்மரபை நன்றுணர்ந்து சொன்னார்.
ஒரு
நாள் பத்துமா? சாதமா வினோதமா! அதை நான் பாட இன்றொரு நாள் பத்துமா?
ஒரு
வாரம் இருந்துவிட்டு பத்து மந்தைவெளியிலுள்ள தன் மகன்வீட்டுக்கு கிளம்பும் பொழுது ஜெயராமன்
சாவகாசமாய் கேட்டான், “ஆமாம் பத்து, நீ யார்? நமக்கு என்ன உறவு?” என்று. இதைவிட பலவிசித்திர
கேள்விகளை கேட்டிருந்த பத்து மிரளவில்லை. எங்க ஆரம்பிக்கிறது என்று கொஞ்சம் யோசித்தாள்.
“கனகவல்லி பெரியம்மாவின் மகள்,” என்றேன் நான், கொஞ்சம் அறிமுகமாக. “அப்படியா? ஏன் இதை
யாருமே சொல்லவேயில்லை?” என்று அதிர்ந்து அவன் போனான். “சரி, வெங்கடன் சிங்கன்ன்னு அப்பப்போ
யாரையோ சொல்லிண்டிருக்கையே, அவால்லாம் யாரு?” என்று விசாரணை தொடர்ந்தது. “இதென்னடா
இது? உன் தாத்தா வெங்கடாதிரி வெங்கடன், அவன் தம்பி சிங்கன்,” என்று பத்து அத்தை பதிலளிக்க,
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற உணர்ச்சி பொங்கியது அவன் முகத்தில். பின்னே? நம் சிறுபருவத்தில்
சிம்ம சொப்பனமாய் விளங்கிய இரண்டு தாத்தாக்களாய் பேர்சொல்லும் மகிஷாசுரமர்த்தினியை
பார்த்தால் சான்றோரும் மதி மயங்காரோ? பத்துவுக்கு பத்துவே உவமை என்று இறும்பூது எய்தினான்.
சமையல் வலைப்பதிவுகள்
1. பழைய சாதத்தில் தோசை - சத்யோன்னரோட்டா, பெருகு தோசை
3. சொதிசாப்பாடு
6. கம்பு அடை
7. மார்கழி இசை அனுபவம்
மற்ற வலைப்பதிவுகள்
வரதராஜன் - புரட்சி குடிமகன்
புஷ்பா - தொட்டில் பழக்கம்
ஆயிரம் திருதிராஷ்டிரர்கள் - ஜெயராமனின் வலைப்பதிவு
அமெரிக்காவின் தலை சிறந்த காபி
Wonderfyl write up.
ReplyDeleteUr writing reminds me of Sujatha
ReplyDelete