Showing posts with label பெங்களூரு. Show all posts
Showing posts with label பெங்களூரு. Show all posts

Sunday, 3 December 2023

எங்கள் ஊர் கல்வெட்டு

சாலையோரம் புதர்களுக்கு இடையே ஒரு கல். மரத்தோரம் கேட்பாரற்று  உள்ள இந்த கல்லில் ஒரு கல்வெட்டு இருப்பதாக ஒரு பழைய தொல்லியல் கல்வெட்டு நூலில் குறிப்பு. அறுநூறு ஆண்டுகளுக்கு மும்பு ஒரு மன்னன் சூரிய கிரகண நாளொன்றில் சில பிராமணர்களுக்கு ஒரு கிராமத்தை பிரம்மதேயமாக தானம் கொடுத்தான் என்பது கல்வெட்டின் சாராம்சம். 

தொல்லியல் நூலில் ஒரு விவசாயி பெயர் குறிப்பிட்டு அவர் வயலில் இந்த கல்வெட்டு இருப்பதாகத்தான் குறிப்பு. வயலும் வாரிசுகளும் அகன்று சாலையும்  சில வீடுகளும் ஒரு சிறு பள்ளிக்கூடமும்.


உதயகுமார் என்பவர் இந்த தொல்லியல் நூலை படித்துவிட்டு இந்த கல்வெட்டை தேடி சென்றார். பெங்களூரில் பல தலைமுறைகளாக வாழும் அவருக்கு வரலாற்று ஆர்வமும் கல்வெட்டு தேடும் ஆர்வமும் ஆழமாக தொற்றிக்கொண்டுவிட்டது.

அந்த கல்வெட்டு உள்ள கிராமத்தில் எங்கே தேடுவார். அங்கே ஒரு பள்ளி முதல்வரை சந்தித்து ஏதாவது பழைய தகவல் கிடைக்குமா என்று விசாரித்து பார்க்கிறார். எங்கள் கிராமம் ஒரு குக்கிராமம் என்பதை தவிற அவர் வேறொன்றும் சொல்லத்தெரியாமல் இருக்கிறார். 

”உங்கள் குக்கிராமம் வரலாற்றில் குக்கிராமமே இல்லை - இங்கே ஒரு பிரமதேயம் நிறுவப்பட்டு, ஒரு கல்லூரியே நடந்திருக்கிறது. வேதமும் தர்ம சாத்திரமும் அதை ஒட்டிய பற்பல கலைகளும் சாத்திரங்களும் இங்கே கற்பிக்கப்பட்டன. இங்கே அருகில் தான் பெங்களூரு பல்கலைக்கழகம் இருக்கிறது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று உதயக்குமார் கேட்கிறார்

பள்ளி முதல்வர் பரவசத்துடன் ”எப்பேர்பட்ட எவ்வளவு பெரிய பல்கலைகழகம் சார். எங்களுக்கு பெருமை தானே,” என்று மலைக்கிறார்.

“இந்த பல்கலைகழகம் நிலைக்கும் பெங்குளூரை குக்கிராமம் என்று சொன்னால் தகுமா?”

மிரண்டு போகிறார் பள்ளி முதல்வர் - “நீங்க என்ன சொல்ல வரீங்க?”

“பல்கலைகழகம் கட்ட அரசாங்கமும் பெரும் செல்வந்தர்கள்  எல்லாம் நிலம், பணம், பொருள் தானம் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதன் நினைவாக அடிநாட்டுக் கல்லில் ஒரு பதிவுப்பலகை செதுக்கி இந்த தானங்கள் கொடுத்தவர்களின் பெயர் பொறித்து முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அல்லவா?”

”ஆமாம் நிச்சயமாக”

“பெங்களூரு பல்கலைக்கழகம் நிறுவும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உங்கள் குக்கிராமம் ஒரு முக்கிய கல்லூரி. இந்த கிராமத்தில் எழுத படித்தவர்கள் வாழ்ந்தார்கள் என்பதன் மிகப்பழைய வரலாற்று குறிப்பு அந்த கல்வெட்டு. அதைத்தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது இந்த வயல் அதிலுள்ள கல்வெட்டு இதை பற்றி தகவல் தெரியுமா? அல்லது யாரையாவது கேட்டு சொல்லமுடியுமா?”

விருவிருப்பாக உற்சாகமாகி பள்ளிமுதல்வர் தன்னால் முடிந்ததை செய்கிறார். இந்த புதரில் இந்த கல்வெட்டை கண்டுபிடித்த உதயகுமார் தன் முயற்சிகளை தொடங்குகிறார். யந்திரங்களை வைத்து புதர்கள் களையப்படுகின்றன. ஊர்மக்கள் ஆர்வம் பெருகுகிறது.  முழுதாக கல்வெட்டு சாசனம் மீண்டும் படிக்கப்பட்டு, நாங்கள் ஒரு குக்கிராமம் அல்ல வரலாற்று புகழ்பெற்ற பிரம்மதேயம் என்று ஊரே விழாக்கோலம் பூணுகிறது. 

மீட்கப்பட்ட கொங்காதிபுரம் கல்வெட்டு


விழாக்கோலம்

கல்வெட்டுக்கு மரியாதை செலுத்தி மாலை அணிவிக்கப்பட்டு, ஒரு திருவிழாவே நடக்கிறது. இந்த கிராமத்திலேயே அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற வரலாற்றில் பெருமிதம் கொண்ட ஒரு தாய் தன் சிறு குழந்தைக்கு முதல் எழுத்து பயிற்சியை கல்வெட்டு எழுத்தில் விரலை வளையவைத்து பழக்குகிறாள். விஜயதசமி நாள் அன்று நம் மரபில் முதல் முதல் ஒரு குழந்தைக்கு அரசியில் அ என்று எழுதி பழக்குவர். சம்ஸ்கிருதத்தில் கன்னடத்திலும் இதை அக்ஷராப்யாசம் என்பர் (எழுத்து பயிற்சி என்றே பொருள்). இதை கண்டு உள்ளம் பொங்கும் மகிழ்ச்சியில் பள்ளி முதல்வர் படம் எடுத்து உதயகுமாருக்கு அனுப்புகிறார்.

கல்வெட்டில் எழுத்து பயிற்சி


சென்ற வெள்ளிக்கிழமை நவம்பர் 24 அன்று பெங்களூரு அம்ருதா கல்லூரியில் ஆரியபடனின் குட்டகா கணித முறையை பாடமாய் நடத்த என்னை அழைத்தனர். கொஞ்சம் நேரம் இருந்தால் எங்கள் மிதிக் சொசைட்டிக்கு வந்த நாங்கள் செய்யும் பணியை பார்க்கலாமே என்று உதயகுமார் அழைத்தார். சனிக்கிழமை இரண்டு மணிநேரம் உதயகுமார் உரையில் மெய்மறந்து மூழ்கினேன். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற....

படங்கள் குடுத்தவர் உதயகுமார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அரங்கில் உதயகுமார் பெங்களூரின் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் 2018ல் உரையாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

வரலாற்று கட்டுரைகள்