Showing posts with label மைக்கேல் கிரைட்டன். Show all posts
Showing posts with label மைக்கேல் கிரைட்டன். Show all posts

Tuesday, 27 April 2021

செய்தி நோய்

 “ஜுராச்சிக் பார்க்” நாவலை எழுதி புகழ் பெற்றவர் மைக்கேல் கிரைட்டன். அவர் ஒரு மருத்துவர். ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். மருத்துவத் தொழிலை விட கதை எழுதுவதை விரும்பி ஆண்ட்ரோமீடா ஸ்ட்ரெய்ன், தி கிரேட் டிரெய்ன் ராபரி, காங்கோ, டிஸ்க்லோஷர், போன்ற நாவல்களை எழுதினார். “தி கிரேட் டிரெய்ன் ராபரி” பின்னாளில் கிரைட்டனின் இயக்கத்தில், ஜேம்ஸ் பாண்ட் புகழ் ஷான் கான்னரி நடிக்க, திரைப்படமாகியது.

அவரது நண்பர் முர்ரே ஜெல்-மன், இயற்பியல் மேதை, குவார்க்கு எனும் அணுவின் நுன்பொருளை கண்டுபிடித்தவர். மருத்தவத்தில் ஈடுபடாத மைக்கேல் கிரைட்டன், ஒரு நோயை அடையாளம் கண்டார்; அதற்கு “முர்ரே ஜெல்மன் அம்னீசியா” என்று தன் நண்பரின் பெயரை சூட்டினார்.

அம்னீசியா என்பது தலையில் அடிப்பட்டவர்களுக்கு வரும் மறதி நோய் என்று நாம் அறிவோம். முர்ரே ஜெல்மன் மறதி என்பது செய்தித்தாள் வாசிப்பவருக்கு வரும் நோய். உண்மையில் இது மருத்துவ ரீதியாக நோயே அல்ல, ஒரு விசித்திரமான மனநிலை. அமெரிக்க நாளிதழ்கள் அச்சிட்ட மருத்துவ செய்தகளில் அபத்தமான பிழைகளும் தவறான கருத்துகளும் படித்து மிரண்டு போனார். அதே போல் இயற்பியல் கட்டுரைகளும் பிழைகள் நிறம்பி, அடிப்படை புரிதலே இல்லாதவர் எழிதியது என்பதும் அவரது இயற்பியல் நண்பர் முர்ரே ஜெல்மன் சொன்னார்.

பற்பல துறை நண்பர்களும் தங்கள் துறை சார்ந்த செய்திகள் அதே விதமாக அபத்தமாக இருப்பதாக கிரைட்டன் தகவல் சேர்த்தார். ஆனால் அதே நண்பர்கள் மற்ற துறை செய்திகளை உண்மையென்றும், பிழையில்லாததென்றும், சீராக ஆராய்ந்து எழுதப்பட்டதாகவும் கருதுவதை கண்டு தான் கிரைட்டன் குழம்பி போனார். மருத்துவ செய்தி அபத்தம், ஆனால் மற்ற செய்திகளை நம்புகிறேன் என்று மருத்துவர்களும், அறிவியல் செய்தி அபத்தம் ஆனால் மற்ற செய்திகளை நம்புகிறேன் என்று அறிவியல் வல்லுனர்களும், பொருளியல் செய்தி அபத்தம் ஆனால் மற்ற செய்திகளை நம்புகிறேன் என்று பொருளியல் வல்லுனர்களும் நடந்து கொள்வதை ஒரு வித மனநோயாக, மறதி வியாதியாக கருதி அதற்கு “முர்ரே ஜெல்மன் அம்னீசிய” என்று பெயரிட்டார்.

“சாலை ஈரமானதால் மழை பெய்கிறது” (Wet streets cause rain) என்று ஒரு உவமை சொன்னார் மைக்கேல் கிரைட்டன். எது காரணம் எது விளைவு என்பதிலேயே குழப்பமாம். இவ்வளவு அபத்தமான செய்தியை படித்தும் நாம் நாளிதழ்களை ஏன் நம்புகிறோம் என்று அவருக்கு புரியவில்லை.

”உன்க்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று நடிகர் வடிவேலு காட்டிய குதர்க்க வாதம் இதன் வேறு ஒரு அவதாரம்



அவ்வப்பொழுது எனக்கும் அப்படி தோன்றுகிறது. இந்தியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரவு எட்டு மணி / ஒன்பது மணி தொலைகாட்சி செய்திகளும், அவற்றில் வரும் விவாதங்களும், வைக்கப்படும் வாதங்களும், இன்றெல்லாம் துறை வல்லுனர்கள் அல்ல, சாதாரண மனிதர்களும் எவ்வளவு அபத்தம் என்று நமக்கு தெரிந்தும் நம்மில் பலரும தொடர்ந்து பார்த்துவருகிறோம். சர்வதேச அளவிலும் இதே போல் தான் பச்சையாக வெளிச்சமாக தெரிகிறது. சமூக ஊடகங்களில் நடப்பதை சொல்லி தெரிய வேண்டாம்.

முதல் பக்கத்தில் தங்க நகைகளுக்கு முழு பக்க விளம்பரம் (லலிதா, ஜிஆர்டி, கேரளா, ஜாய் அலுக்கா), அதன் பின்பக்கம் துணிக்கடை முழு பக்க விளம்பரம் (போத்திஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, பற்பல), அடுத்து இரண்டு பக்கம் புது வீடு மனை நிலத்திற்கு விளம்பரம், அடுத்த இரண்டு பக்கம் டிவி, மைக்ரோவேவ், ஏசி, ஃப்ரிஜ், சலவை இயந்திர கடைகளின் விளம்பரம், (விவேக் அண்டு கோ, வசந்த் அண்டு கோ, கிரியா, குரோமா, பிக் பஜார், சரவணா)  இதை தவிர கார் கம்பெனிகள், கணினி கம்பெனிகள், செல்பேசி கம்பெனிகள், படுக்கை அலமாரி கடைகள் எல்லாம் விளம்பரம் செய்தாலும், “இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி” வகையரா செய்தி படித்து, அதை நம்பி, நொந்து புலம்பும் வாசகர்கள். இதற்கு ஏதாவது அமெரிக்க ஐரோப்பிய வாசி இந்திய பொருளாதார பேராசிரியரின் அரைப்பக்க நேர்காணல் வேறு.

மாய ஆடை என்று சபையே நம்பும் மாதிரி நடிக்க நிர்வாணமான ஊர்வலம் வந்த மன்னர் கதை தெரியும். கண்கூடாக பார்க்கிறோம். ஊருடன் ஒத்துவாழ்வோம்…..

முர்ரே ஜெல்மன் அம்னீசியாவிற்கு ஒரு விக்கிபீடிய பக்கம் இருந்தது. ”என்னது பத்திரிகைக்காராவது தவறாக புரிந்து கொள்வதாவது…” என்று அந்த பக்கத்தையே எடுத்துவிட்டனர். மைக்கேல் கிரைட்டன் விக்கிபீடியா பக்கத்தில் மட்டும் உள்ளது.

அட கிடக்கட்டும், மற்ற விக்கிப்பீடியா பக்கங்களில் தவறு ஏதும் இருக்காது. எல்லாரும் பாருங்க எனக்கும் முர்ரே ஜெல்மன் அம்னீசியா, எனக்கும் முர்ரே ஜெல்மன் அம்னீசியா

முயல்கர்ஜனை கட்டுரைகள்

 What is news?