Showing posts with label SQL Server. Show all posts
Showing posts with label SQL Server. Show all posts

Thursday, 20 August 2015

எண்ணெழுத்தும் கையெழுத்தும்

தும்மல் இருமலை கூட விடாமல் படமெடுத்து நாம் இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் காலமிது. இது காமெரா கூடிய செல்பேசி புரட்சியின் பெரும் விளைவு. நான் பள்ளி கல்லூரி நாட்களிலும் அலுவலகம் சென்று வேலை செய்த காலத்திலும் காமெரா வாங்கிக்கொள்ளவில்லை. வேறொருவர் தயவிலோ காமெராவிலோ பதிந்தால் அதிசயம். 

இப்படி எதேச்சையாக சில படங்களை டெக்ஸாஸில் படித்தபோது எடுத்துக்கொண்டேன். ஃபில்ம் கேமெரா தான். தம்பி ஜெயராமன் வற்புறுத்தலில் ஒரு காமெரா வாங்கி பிற்காலத்தில் சியாட்டிலிலும் ஸான் ஹோஸேவிலும் வேலை பார்த்த காலத்தில் ஒரு சில படங்களை எடுத்துக்கொண்டேன். வீட்டிலும், இயற்கை சூழ்ந்த மலை நதி காடு போன்ற சுற்றுலா தலங்களில் தான் எடுத்துக்கொண்ட படங்கள். 

1993 இல் டெக்ஸாஸ் ஏ&எம்  பல்கலைகழகத்தில்
ஆனால் ஐந்து வருடங்களாக மாமா வரதராஜனும் மாமி பிரபாவும் கொடுத்த காமெராக்களில் டிஜிட்டல் படமெடுத்து கணினி கஜானா நிரம்பி வழிந்து தள்ளாடுகிரது.

எதிர் காலத்தை பார்த்தே வாழ்ந்த அந்த நாட்களில் நிகழ்காலத்தை பதிவு செய்யும் ஆவல் ஏனோ இல்லை. இப்பொழுது வருந்துகிறேன். அவ்வப்பொழுது என் தந்தை ரங்கரத்தினம் தமிழிலும், மிக சிறப்பாக ஆங்கிலத்திலும் பொது மேடைகளிலும் நீதிமன்றத்திலும் விவேகானந்தா கல்லூரியிலும் புகழ்ந்து சிலாகித்து பிரமித்து அவ்வுரைகளை கேட்டவர் சொல்லும்பொழுது, நாம் கேட்கவில்லையே என்று ஒரு சோகம் எழும். ஒலிப்பதிவுகளோ ஒளிப்பதிவுகளோ இல்லையே என்று மற்றொரு ஏக்கம். பள்ளிக்காலத்தில் பலமுறை சென்னை உயர்நீதிமன்றம் சென்றுள்ளேன், ஆனால் அவர் வாதாடி கேட்டதில்லை. அவருடை ஜுனியர் வழக்கறிஞர் லக்ஷ்மிநாராயணனின் மகனின் திருமணத்தில் ஒருவர் அவரது ஒரு சொற்பொழிவின் ஒலிநாடா இருப்பதாகவும், எனக்கு தருவதாகவும் சொன்னார்; அதன் பின் அவரை பார்க்கவே இல்லை. எங்கு தேடுவது. ஒரே ஒரு முறை தான் அரைகுறையாக மதறாஸ் உயர்நீதிமன்றத்தில் வக்கீல் உடையில் அவருடைய படத்தை எடுத்துக்கொண்டேன். ஆனந்த விகடனில் ஆத்ரேயன் என்ற புனைப்பெயரில் அவர் 1950-60 இல் ஒரு சிறுகதை எழுதினாராம். எங்கே எப்படி தேடுவது? என் அம்மாவும் பல கதைகள் எழுதினார் என்று அவர் அக்கா ஜெயலக்ஷ்மி போன வருடம் கூறினார். ஒன்றும் இன்று இல்லை.


மேடைகளில் தந்தை ரங்கரத்தினம்


விவேகானந்தா கல்லூரி மாணவர்களுன், என் தந்தை

கையெழுத்து

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது எதையோ இணையத்தில் தேட, திடீரென்று நானும் அணில்வேலை செய்த MS SQL Server ஸீக்வெல் ஸெர்வர் மென்பொருளின் வரலாறை பற்றிய ஒரு இணையதளத்தை காண நேர்ந்தது. குழுவினர் படம் இல்லை. ஆனால், குழுவினர் கை எழுத்து பதித்த அட்டை பெட்டியின் படமிருந்தது. அதில் ஓரத்தில் என் கையெழுத்தும் கண்டு சிலிக்கான்பூதெய்தினேன். அடடா, நான் கூட வேலை செய்ததற்கு சான்றுள்ளதே! வாழ்க மைக்ரோஸாஃப்ட்டின் ஆவண ஆர்வம்! சந்ததி என்றோ உருவானால் இதாவது மிஞ்சும்.

Microsoft SQL Server 6.5 - அடியில் மங்கலாக என் கையெழுத்து

Microsoft SQL Server 6.0 -
வலது ஓரத்தில் என் கையெழுத்து


சில பெயர்களின் குறிப்புகள் 

ரான் சூக்கப் - Ron Soukup - குழுத் தலைவர்
பாப் ஹேய்ஸ் - Bob Hayes - நெருங்கி பழகிய நண்பர்
அம்ரீஷ் குமார் - Amrish Kumar - 6.5 இல் என் மேனேஜர்
சமீத அகர்வால் - S Agarwal - ஒரு வருடம் வீடு பகிர்ந்துகொண்ட roommate
மைக் ஹாப்பன், க்ரிஸ் கஸெல்லா, ஸ்ரீகுமார், லாலி திவ்ரிங்கி, கேவின் ஜன்கி - முக்கிய மென்பொருள் பொறியாளர்கள்
பீட்டர் ஹஸ்ஸி - Peter Hussey- குழுவை விட்டு விலகும் போது போகாதே நான் வேறு வேலை தருகிறேன் என்று கேட்டவர்!
ஹெய்டி க்ரௌர் - Heidi Krauer - secretary - செயலாளர்
6.0 மேனேஜர் கார்ல் ஜான்சன், வழிகாட்டி மற்றும் நல்ல நண்பர் மைக் பைத்தர் கையெழுத்துக்களை காணவில்லை, பெட்டியின் வேறுபுறம் இருக்கவேண்டும்.

உயிரெழுத்தா எண்ணெழுத்தா மென்பொருளா?

எழுத்தை எண்ணாக்கி, எண்ணை மின்னாக்கி செயல்படுவது மென்பொருள். Software ஸாஃப்ட்டுவேர் என்ற ஆங்கில சொல்லின் கவிநயமும் தமிழெழிலும் அன்றி மொழியாக்கிய சொல். Hardware, software - வணிகவழியே சிந்திக்கும் ஆங்கில சொற்கள் இவை என்று சொல்கிறார் நகுபோலியன். ஸமஸ்கிருதத்தில் Hardware ஸ்தூலம் என்றும் Software ஸூக்ஷமம் என்றும் சொல்லாடவேண்டும் என்பது அவர் கருத்து. கணினியின் மெய்ப்பொருள் ஹார்டுவேர், உயிரெழுத்து ஸாஃப்ட்டுவேர். எண்ணெழுத்து என்றாலும் தகும்.


தொடர்புடைய கட்டுரைகள்