1746ஆம்
ஆண்டு, பாண்டிச்சேரியில் இருந்த ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளே, சென்னை நகரை கைப்பற்ற ல போர்தனே (La
Bourdannais) என்ற தளபதியின் – இவர் மொரீசியசில் ஆளுனராய் இருந்தவர் - தலைமையில் ஒரு
படையை அனுப்பினார். இந்த படை செப்டம்பர் பத்தாம் நாள் புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியது.
பத்தே நாட்களில் முற்றுகை தொடங்கி கோட்டையை ஃப்ரென்சு படை கைப்பற்றினர்.
அக்டோபர்
மாதத்தில் ஆங்கிலேயர்களுடன் நட்புறவு கொண்ட ஆற்காட்டு நவாப், தன் மகன் மஃபூஸ் கான்
தலைமையில், ஃப்ரெஞ்சிடமிருந்தி மீட்ட பத்தாயிரம்
வீரர்கொண்ட படையை அனுப்பினார். இருநூறு இந்திய சிப்பாய் கொண்ட ஃப்ரெஞ்சு படையினர்,
கேப்டன் பாரடிஸ் என்ற சுவிட்சரலாண்டு தளபதியின் தலைமையில் நவாபின் படையை அடையாற்று
கரையில் சந்தித்து தோற்கடித்தனர். சின்னப்போர்தான் – காலையில் தொடங்கிய போர் மாலைக்குள்
முடிந்துவிட்டது.
இது
வரலாற்றில் மிக முக்கியப்போர் என்று எஸ். முத்தையா கூறுகிறார். ஐரோப்பிய பயிற்சியும்,
துப்பாக்கியும், சரியான தலைமையும் கொண்ட சின்ன படை கூட, கட்டுப்பாடோ சரியான பயிற்சியோ
இல்லாத ஒரு இந்தியப்படையை தோற்கடிக்க முடியும் என்று இதிலிருந்து ஆங்கிலேயர் கற்றுக்கொண்டனர்.
இதற்கு பின் அவர்கள் மெட்றாஸ் ரெஜிமெண்ட் என்ற ஒரு படையை தொடங்கி, ஐரோப்பிய போர் பயிற்சியும்
கட்டுப்பாடும் ஆயுதங்களும் அவர்களுக்கு வழங்கி தங்கள் பலத்தை பெருக்கிகொண்டனர். வணிகம்
செய்ய மட்டுமே வந்த ஆங்கில கம்பெனி நாடு கைபற்றி ஆளும் ஆசையும் திறமையும் வளர்த்துக்கொண்டது.
இந்த் மெட்றாஸ் ரெஜிமெண்டு தான் இன்றைய பாரத நாட்டு ராணுவத்தின் மிக தொன்மையான் பிறிவு.
பிற்காலத்தில் பர்மா நாட்டை இவர்களே பிடித்தனர். மதராசபட்டினத்தில் ஒரு சின்னக்கோட்டையில்
வணிகம் செய்ய தொடங்கி, கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்களையும், ஹைதர் அலியின் படையையும்,
வங்கத்தில் பின் முகலாய படையையும், 1800களில் மராட்டியர் சீக்கியர் படைகளையும் தோற்கடிக்க,
ஆங்கில பேரரசின் வித்து அடையாற்றின் கரையில் தளிர் விட்டது.
நேற்றே இச்சுட்டியை சேர்க்க மறந்ததற்கு மன்னிக்கவும்.
ஆதாரம்
முத்தையாவின் ஆங்கில கட்டுரை. சில சொற்பொழிவுகளிலும் முத்தையா இதை கூறியுள்ளார்.நேற்றே இச்சுட்டியை சேர்க்க மறந்ததற்கு மன்னிக்கவும்.
---------------
இந்த கட்டுரை சென்ற மாதம் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில், ‘போர் காலத்தில் சென்னை’ என்ற தலைப்பில், பிரசுரமான என் கட்டுரையின் ஒரு பகுதி. ஐஐடி பேராசிரியர் ராமனும், எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலியும் கேட்டதால் நான் எழுதிய கட்டுரை.