Saturday 17 February 2018

பள்ளிகளின் மரணச் சங்கு


நவல் ரவிகாந்த் புகழ்பெற்ற சிந்தனையாளர். கணினியுக சித்தர். கச்சித பேச்சாளர், கட்டுரையாளர். ட்விட்டர் பிரபலம். தொழிலால், வணிக நிறுவனர். கடன்காரன், பெரும்பண முதலை என்றும் வர்ணிக்கலாம்.

தன் வலைப்பூவில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். வட்டச்செயலாளர் வண்டுமுருகன் இடிமுழுக்கத்தை தேய தேய ஒளிபரப்பும் தமிழ் காமெடி சானல்களை போல், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியை  ட்விட்டரில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் சிலாகித்து பங்கிட்டு பொங்கி மகிழ்கின்றனர். நிற்க.

ட்வீட் புயல் என்ற ஒரு புது வகை இலக்கியம் ட்விட்டரில் புகழ்பெற்று வறுகிறது. ட்விட்டரின் தனிச்சிறப்பே வெண்பா சுருக்கத்தில் கருத்தை சொல்வது. கனியிருப்ப காய் கவரும் கலையில் தொலைகாட்சிக்கும் நாளிதழுக்கும் பாமர மக்கள் சளைத்தவரல்ல என்பது சமூக ஊடகம் படிக்கும் நம் அனைவரும் அறிந்ததே. கள் தோன்றி சொல் தோன்றா காலத்தே மீம் போட்ட மூத்த குடி, தமிழ் குடி என்று பெருமி மலைத்தாலும், அவ்வப்போது புதிய கூப்பியில் புதிய இளநீர் அருந்த நாமும் விரும்புவதால், இந்த பதிவு.

இந்த ட்வீட் புயல் ரகத்தில் நவல் வல்லவர். இயலை எழுதி எட்டாய் உடைத்து புதுக்கவிதை என ரசிக்கும் நாம், இயலை இயலென்றே வழங்கினால், ரசிக்கவேண்டாமா? ஒரு கட்டுரையை குறு வாக்கியங்களாக வடித்து வழங்கினால் அதன் சுவை கூடலாம். நன்றாக வடிக்கிறார் நவல். ஒவ்வொரு குறுஞ்செய்தியும் தனியாகவும் பொருள்படும். ரசிக்கலாம். ஆனால் கோர்வையாக ஒரு சிந்தனையை வைக்கின்றன. இப்படி எழுதுவது எளிதல்ல.

சமீபத்தில் பள்ளிக்கூட கல்வி முறை பற்றிய நவல் ட்வீட் புயலை நான் இங்கே மொழிபெயர்த்துள்ளேன். 

பள்ளிக்கூடம் என்ற பொதுச்சொல்லில் அவர் கல்லூரி, பல்கலைக்கழகம், தேர்வு பயிற்சி மையம், டியூசன் அனைத்தையும் சேர்க்கிறார். Credential கிரெடென்ஷியல் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இதை சான்றிதழ் என்று கருதத் தகாது. ஐஐடி போலவே பல பொறியியல் கல்லூரிகளும் சான்றிதழ் அளிக்கலாம்; ஆனால் ஐஐடி படித்தவருக்கு மற்ற கல்லூரிகளில் படித்ததை விட சமூகத்தில் மரியாதை அதிகம். இதை நற்பெயர் என்று நான் தமிழில் வழங்குகிறேன். எல்லாத் துறைகளில் இதை போல் சில கம்பெனிகளோ, பதவிகளோ, சாதனையாளர் தொடர்போ வழங்கும்.
  1. பள்ளிகூடங்களின் முதல் பயன் கற்பித்தல் எனின், இணையதளத்தின் உதயத்தால் பள்ளிகள் வழக்கொழிதல் தகும். ஆனால் நற்பெயர் அளிப்பதே பள்ளிகளின் முதல் பயன்
  2. நற்பெயரை வழங்கும் பள்ளிகளுக்கும் அதை நம்பி மதிக்கும் நிறுவனங்களும் ஒரு உறவு இருப்பதால், பள்ளிச்சேராமலே கற்போரை மிஞ்சி அவை இயங்குகின்றன.
  3. நற்பெயர் சான்றிதழ் இன்றி தக்கவரை பணியமர்த்தும் நிறுவனங்கள் உள்ளன. உதாரணம், ஒய்காம்பினேடர்.
  4. திறமையே தலையான துறைகள், போலிச்சான்றிதழ்களை போலி நற்பெயர்ளை தவிர்க்கும்.
  5. தானே கற்று செழிக்கும் ஒரு தலைமுறைக்கு, இணையமே பள்ளி, தொழில்நுட்பமே ஏணி. இது பெருகினால் மரபு வாழி நற்பெயர் பள்ளிகள் நலியும்.
  6. அதுவரை திறனில் வல்லாரும் நொந்து நலிந்தோரும் மட்டுமே பள்ளிகளை புறக்கணிப்பார்.
  7. எங்கு எவ்வளவு படிக்கவேண்டும் என்பதை விட எதை எப்படி படிக்கவேண்டும் என்பதே முக்கியம்.
  8. சாலச் சிறந்த நூல்களும், ஆசிரியர்களும், சக மாணவர்களும் இணையதளத்தில் உள்ளனர்.
  9. கற்க கருவிகள் கடலளவு. கற்கும் ஆவலே கடுகளவு.
  10. மேட்டிமை சமூகத்தில் சேரப் பெருகின்ற சாவியே, பள்ளிகள் வழங்கும் நற்பெயர். இன்றுள்ள பள்ளி அமைப்பை தொடர்வதில் மேட்டிமை சமூகத்தி விடாமுயற்சியை எதிர்பார்க்கலாம்.
  11. இணையதள பேரலையும் தன்னலத்தில் அக்கரையுள்ள நிறுவனங்களும் சிறப்பான பக்குவமான நற்பெயர் வழிமுறைகளை படைக்கும்.
  12. பழையன கழிதலும் புதுவன புகுவதும்…

தொடர்புடைய கட்டுரைகள்

  1. தமிழ்நாட்டில் கல்வி - ஜெயமோகன் கட்டுரை என் ஆங்கில மொழிபெயர்ப்பு
  2. கல்வி – ஒரு வடமொழி பழமொழி
  3. புரட்சி குடிமகன் – பேராசிரியர் வரதராஜன் (என் தாய்மாமன்)
  4. What did Brahmagupta do?


No comments:

Post a Comment