Showing posts with label Mandhata. Show all posts
Showing posts with label Mandhata. Show all posts

Saturday, 7 January 2023

காசி மாந்தாதேஷ்வரர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் கோபுரத்திலுருந்து கங்கை கரை நோக்கி செல்லும் வழியில் இந்த பாரத மாதா சிலையும் அதன் பின் மாந்தாதேஷ்வரர் கோவிலும் உள்ளன. பாரத மாதா சிலை புதிது.

மாந்தாதேஷ்வரர் கோயில்



கோவில் முன் பாரத மாதா சிலை

திரேதா யுகத்தின் சிறந்த மன்னன், மகாபுருஷன் ராமன். சீதையை தேடி இலங்கை சென்ற ராமன் தமிழகக் கடற்கரையில் சிவனை பூசித்த இடம் ராமேஷ்வரம்.
கிருத யுகத்தின் மிகச் சிறந்த மன்னன், மகாபுருஷன் மாந்தாத்தன். இவன் கதை இப்பொழுது பரவலாக புழக்கமாக இல்லை. பரமார மன்னன் போஜன் இயற்றிய வடமொழி கவிதையில் கிருத, திரேத, துவாபர யுக மகாமன்னர்கள் வரிசையில் மாந்தாத்தன், ராமன், யுதிஷ்டிரனாகும்.
உஜ்ஜயினியை தலை நகராக கொண்ட மன்னன் மாந்தாத்தன், சிவனை பூஜிக்க கேதார்நாத் செல்ல, அவனிடம் சிவப்பெருமானே, நீ காசிக்கு சென்று என்னை வழிபடு என்று ஆணையிட, மாந்தாத்தன் காசிக்கு வந்து வழிப்பட்ட தலம் இந்த மாந்தாத்தேஷ்வரன் கோவில் என்று ஒரு வரலாறு கூறுகிறது.
பௌத்த மரபிலோ மாந்தாத்தன் தன் மிகச்சிறந்த புண்ணியத்தால் தேவலோகம் சென்றான் என்றும், அங்கே இந்திரன் அவனுக்கு தன் சிம்மாசனத்தில் பாதி இடத்தை கொடுத்தான் என்றும் கூறுகிறது. இதை விவரிக்கும் சிற்பம் ஒன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமராவதி சிற்பங்களுள் ஒன்று.
மாந்தாத்தன் கோயில் பஞ்சாயதன வடிவத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் காசி காரிடார் அமைப்பில் அது புதுப்பிக்க பட்டுள்ளது என்றும் வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோதி ரோஹில்லா அனுப்பிய வலைத்தளத்தின் தகவல்.

பொன்னியின் செல்வன் கதையில் நான்காம் அத்தியாயத்தில் கடம்பூர் மாளிகையில் ஆதித்தக்கரிகாலனின் மெய்கீர்த்தியை கட்டியங்காரன் கூறும்பொழுந்து ”மனு மாந்தாத்தா” என்று தொடங்குவான்.

தொடர்புடைய கட்டுரைகள்

அமராவதி சிற்பங்கள் - என் ஆங்கில உரை


Friday, 18 December 2015

மாந்தாதா Mandhata

மாந்தாதா - அமராவதி சிற்பம் 
Mandhata panel - Amaravati gallery


मान्धाता च महीपतिः कृतयुगालङ्कारभूतो गतः
सेतुर्येन महोदधौ विरचितः क्वासौ दशास्यान्तकः।
अन्ये चापि युधिष्ठिरप्रभृतयो याता दिवं भूपते
नैकेनापि समं गता वसुमती मुञ्ज त्वया यास्यति।।

பொன்னியின் செல்வன் நாவலின் மணிமகுடம் அத்தியாயத்தில், கடம்பூர் அரண்மணையில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை கட்டியக்காரன் அறிவிக்கும்போது மநுமாந்தாதா என்று தொடங்க, “மநு சரி, அது யார் மாந்தாதா?” என்று ஐயம் எழுந்தது. சென்னை எழும்பூர் அமராவதி சிற்பங்களை காணுகையில் மாந்தாதா என்ற மாமன்னன் பெயர் கண்டு, இம்மன்னனுக்கும் பௌதத்திற்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் வளர்ந்தது. போஜ ராஜன் தன் ஒரு பாடல், இதே மாந்தாதாவின் பெயரில் தொடங்கியதை கண்டு, ஐயம் வெடித்தது. மகேந்திர வர்ம பல்லவனுக்கு கற்பனையிலும் கலை ஆர்வத்திலும் படைப்பாற்றலிலும் விசித்திர சிந்தனையிலும் போஜ ராஜனை மட்டுமே ஒப்பிடலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதன் முதல் கலை உலாவின் தொடக்கத்தில் சொன்னதும், நினைவுக்கு வந்தது.

நகுபோலியன் பாரதி பாலு இந்த கவிதையை விளக்கினார். போஜன் சிறுவனாக இருந்த பொழுது அவன் சித்தப்பன் முஞ்சன் அவனை கொன்று சிம்மாசனம் சிம்மாசனம் பறிக்க முயன்றதாக ஒரு கதை உண்டு. சூழ்ச்சியை அறிந்துகொண்ட போஜன், தப்பிவிட்டு, இந்த கவிதையை புனைந்தானாம். இதன் பொருள்: “அரசகுல திலகங்கள் மாந்தாதாவும் ராமனும் யுதிஷ்டிரனும் இறந்தபொழுது இந்த பூமி அவர்களோடு போகவில்லை, அட முஞ்சா உன்னோடு போவாள் என்று நினைத்தாயோ?” அழுத்தமான கேள்வி. சொல்லமைப்பும் அற்புதம். துக்கமும் காழ்ப்பும் நீரில் கலந்த உப்பை போன்ற கலந்த தாக்கம்.

பாடலை தமிழில் படித்து, சொல் பொருள் பார்ப்போம்.

மாந்தா⁴தா ச மஹீபதி​: க்ருʼதயுகா³லங்காரபூ⁴தோ க³த​:
ஸேதுர்யேன மஹோத³தௌ⁴ விரசித​: க்வாஸௌ த³ஸா²ஸ்யாந்தக​:|
அன்யே சாபி யுதி⁴ஷ்டி²ரப்ரப்⁴ருʼதயோ யாதா தி³வம்ʼ பூ⁴பதே
நைகேனாபி ஸமம்ʼ க³தா வஸுமதீ முஞ்ஜ த்வயா யாஸ்யதி||

ராமனும் யுதிஷ்டிரனும் இதிகாச புருஷர்கள். இவர்களோடு ஒப்பிட மாந்தாதா யார்? இதுவே பாடலின் மற்றொரு பெருஞ்சுவை. நாம் மறந்து போன வரலாற்றின் ஆழமும் இங்கே மிரட்டுகிறது. துவாபர யுகத்தின் இதிகாச மன்னன் யுதிஷ்டிரன்; திரேதா யுகத்தின் இதிகாச மன்னன் ராமன்; கிருதாயுகத்தின் புராண மன்னன் மாந்தாதா.
கிருதாயுக அலங்கார மஹிபதி (மகாராஜன்) மாந்தாதாவின் உடலும்(பூத) சென்றுவிட்டது(கத). பெருங்கடலில் (மஹோததி) சேது படைத்து தசமுகன் (தஷாஸ்ய) ராவணனை அந்தகம் (மரணம்) செய்தவன் எங்கே (க்வா)?  யுதிஷ்டிரனும் சொர்கம் (திவம்) சென்றான் (யாதா). ஒருவனோடும் (ஏகேன) சேர்ந்து (ஸமம்) ந கதா (போகவில்லை) வஸுமதீ (பூமி). முஞ்சா உன்னோடு (த்வயா) யாஸ்யதி (போவாளோ?)
{ந + ஏகேன + அபி = நைகேனாபி}

ராமாயணம் மகாபாரதம் தெரிந்த அளவு நமக்கு புராணக்கதைகள் தெரிந்திருப்பதில்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் அமராவதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டில் போஜன் காலத்திலும் மாந்தாதா நினைவிலிருந்தான்.

இந்த கவிதையும், அந்த முஞ்சன் சம்பவமும் நம்பத்தகாதது என்கிறார் காஞ்சி விஷ்வ வித்யாபீட வடமொழி பேராசிரியர் சங்கரநாராயணன். அதாவது போஜன் இக்கவிதை எழுதினான் என்பதே சந்தேகமானது. இருந்தாலும் மாந்தாதவை பற்றிய அழகான கவிதை என்பதால் எழுதியுள்ளேன். மாந்தாதாவின் பிறவி கதை இதைவிட நம்பகத்தன்மை குறைவானது. இருக்கட்டும்.

சிற்ப வடிவம் மிகவும் அழகு. சபை நடுவே கொலுவீற்றியுள்ள மாந்தாதாவின் கம்பீரமும், செருக்கும், மன்னனுக்கே உரிய தன்னம்பிக்கையும் மிளிர்கின்றன. அவனே பின்னே உள்ள அரசகுல மகளிரும் சாமரம் வீசுவோரும் கூட அதே செருக்கில் மிதக்கின்றினர்; அவன் வலது பக்கமுள்ள பெண்டிர் முகங்களில் மோகமோ காதலோ வியப்போ பொங்குகிறது. அவன் காலடியில் அமர்ந்து பரிசுகொடுப்போரின் மிகவும் தாழ்ந்த நிலையும் மன்னனின் செருக்குக்கு நேர்மாறாக பணிவு ததும்புகின்றன. அதிகாரத்திற்கும் அரசகம்பீரத்திற்கும் கிடைக்கும் மரியாதை இவை. மன்னனின் வலது பக்கத்தில் காணும் ஊரோர் செல்வந்தர் கூனிகுறுகாமலிருப்பினும், பவ்யமாகவே உள்ளனர்.

வேறோரு சிற்பத்தில் புத்தர் போதிமரத்துக்கடியில் சிம்மாசனத்தில் (!) கொலு வீற்றிருக்க அவரை தரிசிக்க வந்த மற்றவர் யாவரும் அச்சமோ மோகமோ இன்றி பக்தியோடு மட்டும் காட்சியளிக்கின்றினர். பெண்டிரை காணவில்லை.

புத்தருக்கும் மாந்தாதாவிற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டவே அமராவதி சிற்பிகள் இரண்டையும் வடித்துள்ளனரோ?

அமராவதி சிற்பங்கள் இந்திய கலை வரலாற்றில் முன்னோடிகள். அவற்றின் அமைப்புக்கு பல்லவ சிற்பங்கள் கூட போட்டியில்லை என்கிறார் ஓவியர் சந்துரு. இவர்  சென்னை கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்.


தொடர்புடைய பதிவுகள்


அமராவதியின் நளகிரி சிற்பம் - ஓவியர் சந்துரு (காணொளி)
நகுபோலியன் சிறுகதை - மழ நாட்டு மகுடம்
கல்லிலே ஆடவல்லான் 
பர்த்ருஹரியின் ஒரு கவிதை
Purnagiri - a Tantrapitha
Vaishali

திருத்தம் இதை 18-12-2015இல் முதலில் எழுதிய போது, பாந்துகா சிற்பத்தை மாந்தாதா சிற்பம் என்று தவறாக குறிப்பிட்டிறுந்தேன். இன்று 21-12-2016 திருத்திவிட்டேன்.
பாந்துகா - ஷாஷ்வத் எடுத்த படம்