Showing posts with label மால்கம் ஆதிசேஷையா. Show all posts
Showing posts with label மால்கம் ஆதிசேஷையா. Show all posts

Thursday, 28 April 2016

தொட்டில் பழக்கம்

வருடம் 1970. 

மாலை வேளை. சென்னை மயிலாப்பூரில் ரணாடே நூலகம். பொருளியல் வல்லுனர் மால்கம் ஆதிசேஷையா உரையாற்றவிருந்தார்.

“லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்,” என்று தொடங்கினார். 

திருத்திக்கொண்டார்.

“லேடீ அண்டு ஜெண்டில்மென்,” கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்ணை பார்த்து புன்னகைத்தார்.
கூட்டத்தில்லுள்ளோர் கழுத்தை நீட்டி அந்த பெண்மணியை பார்த்தனர்.

திருத்தம் சீர்திருத்தமானது. 

“கைக்குழந்தையோடு வந்திருக்கும் பெண்மணியே, ஆடவரே,” என்றார். கூட்டம் சிரித்து கைத்தட்டியது.

மால்கம் ஆதிசேஷையா

MIDS

இந்த சம்பவத்தை அடிக்கடி என் தந்தை ரங்கரத்தினம் சொல்லியுள்ளார். அப்பொழுது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர். மயிலாப்பூர் வக்கீல். விவேகனந்தா கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர். வணிகவியல் மாணவர்களுக்கு வணிக சட்டத்தை பாடம் நடத்திய காலம். பொழுது போகாத நேரத்தில் சிறுகதை எழுதுவார். தன் ஒரு சிறுகதை ஆத்ரேயன் என்ற புனைப்பெயரில் ஆனந்த விகடனில் வந்தது என்று பெருமையாக சொல்லுவார். சிறுகதை பெயரோ அச்சில் வந்த வருடமோ இதழோ அவருக்கு நினைவில்லை. 1967 தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினராக அரசியலில் கால்வைத்து, திராவிட அலையில் காலை சுட்டுக்கொண்டார். உவமையை அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.

சுப்ரமணிய பாரதி நிவேதிதாவை சந்தித்த பொழுது, உன் மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்க, அவர் திருதிரு என்று விழிக்க…

ரணாடே நூலகத்தில் கைக்குழந்தை வைத்திருந்த பெண்மணி புஷ்பா. பூவிருந்தவல்லியில் பிறந்த அந்த கோயில் தாயாரின் பெயரை பெற்றவர். 1969 ஏப்ரல் மாதம் கர்பிணியாக பொருளியல் முதுகலை பட்டத் தேர்வை எழுதியிருந்தார்.

புஷ்பா என் தாய். இந்த கதை சொல்லும் ஓவ்வொரு முறையும் அப்பா முகத்தில் கம்பீரம் பொங்கும். அவருக்கு என்றும் மீசையோ முண்டாசோ கிடையாது.

திருமதி புஷ்பா, திரு ரங்கரத்தினம் -
சிஐடி காலனி பள்ளிவிழா தலைமை 1977

எங்கள் குடும்பம் - 1980

மால்கம் ஆதிசேஷையா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS - Madras Institute of Development Studies) செல்லும்போது இந்த கதை ஞாபகம் வரும். அன்று மால்கம் ஆதிசேஷையா பொருளியலை பற்றி என்ன பேசினார் என்று நான் கேட்டதேயில்லை. அப்பாவும் சொன்னதேயில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்