The English version of this essay "History: Three perspectives" is here
ராபர்ட் கால்டுவெல் பாதிரி திராவிட மொழிகளை ஒப்பிடும் இலக்கண நூல் இயற்றியவர். திருநெல்வேலி வரலாறு (தி ஹிஸ்டரி ஆப் தின்னவேலி) என்ற அவரது மற்றொரு ஆங்கில நூலில், இவ்வாறு எழுதியுள்ளார்.
வரலாறு
என்பது யாது? என் சித்தம் கிளறிய மூவரின் மொழிகளை பார்ப்போம். குருடர்கள் யூகித்த யானைப்போல
மூவரின் நோக்கமும் ஒன்றோடொன்று ஒவ்வாதவை.
ராபர்ட் கால்டுவெல் பாதிரி திராவிட மொழிகளை ஒப்பிடும் இலக்கண நூல் இயற்றியவர். திருநெல்வேலி வரலாறு (தி ஹிஸ்டரி ஆப் தின்னவேலி) என்ற அவரது மற்றொரு ஆங்கில நூலில், இவ்வாறு எழுதியுள்ளார்.
“தத்துவமும் செய்யுளும் சட்டமும் கணிதமும்
இசையும் நாடகமும் கட்ட்டக்கலையும், சிறப்பாக சமயமும் நெகிழ்ந்து நேசித்த இந்துக்கள்,
ஏனோ வரலாற்றில் ஆர்வம் செலுத்தவில்லை.”
இக்கருத்து
அபூர்வமல்ல. பல வரலாற்று வல்லுனர்கள் இதை சுட்டியுள்ளனர். சீனம் எகிப்து ரோமாபுரி பாரசீகம்
சுமேரியா என பண்டைய மரபுடை நாடுகளின் வரலாற்று நூல்களோடு பாரதத்தின் வரலாற்று நூல்களை
ஒப்பிட்டால், மலையும் மடுவும்.
கால்டுவெல்
காலத்தில் பாரதம் வந்த அமெரிக்க நாவலாசிரியர் மார்க் ட்வெயின், இதற்கு நேர்மாறாக மொழிந்தார்.
அவர் வரலாற்று பண்டிதர் அல்ல; ஆயினும், அதுவே அவருக்கு ஒரு பலம். சுவையின்றி சுவடுகளை
பேசும் வரலாற்று வல்லுனரின் கண்ணில் படாத நெஞ்சைத்தொடாத இந்திய பண்பும் கலையும் மார்க்
ட்வெய்னின் புலன்களில் புகுந்து மொழியில் மலர்ந்தன. அவர் மொழிந்தது:
“இந்தியா மனித குலத்தின் தொட்டில், பேச்சின்
பிறப்பிடம், வரலாற்றின் அன்னை, புராணத்தின் பாட்டி, மரபின் கொள்ளுப்பாட்டி.”
கல்தோன்றி
மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தகுடி என்ற பழமொழியை தன்வழியில் தானுணர்ந்து நன்மொழியாய்
நவின்றார்.
கால்டுவெல்
இதை முழுமூச்சாய் மறுத்திருப்பார். ஆனால் கால்டுவெல் தோன்றிய காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிகளாம்
வில்லியம் ஜோன்ஸ், ஹோரேஸ் வில்ஸன், ஹென்றி கோலபுரூக், ஜேம்ஸ் ப்ரின்ஸெப், அலெக்ஸாண்டர்
கன்னிங்காம், ஆகியோரும், பின்வந்து பாரதத்தை ஆண்ட கர்ஸன் துரையும் டுவெயின் மொழிக்கு
மெய்யூட்டி பணிபுரிந்தனர். சென்னை வாழ்ந்த காலின் மெக்கன்ஸீ, எல்லீசன், வால்டர் எலியட்
ஆகியோரும் இவ்வகையே.
ஆனால் இவர்களை அன்பில் நெருங்காமல் புகழில் மிஞ்சிய ஜான் மில்,
தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே துரை, வருத்தப்படாத வாக்கியவாரிதி வின்ஸ்டன் சர்ச்சில்
ஆகிய தோல்நிறவாதிகள் ஏற்கமாட்டார். ஆளப்பிறந்தவர் ஆங்கிலேயர் என்ற செருக்கு அவர்களது
நூல்களை நிறப்பிய கருத்து. அதை நம்பிய இந்தியர் பற்பல கோடி. இக்கருத்துக்களே நாமின்று
படிக்கும் வரலாற்று நூல்களில் காணகிடைக்கின்றன. முன்வந்த ஜோன்ஸ் ஆதியின் கொடையும் பணியும்
பாரத நாட்டையும் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன.
நான்
முன்வைக்கும் மூன்றாம் கருத்தை மொழிந்தவர் பி.டி.ஸ்ரீநிவாச ஐயங்கார். “எ ஹிஸ்டரி
ஆப் தி தமிழ்ஸ்: ப்ரம் தி எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி ஸிக்ஸ்த் செஞ்சுரி ஏ.டி.”
(பண்டைக்காலம் முதல் கிறுஸ்து பிறந்த ஆறாம்
நூற்றாண்டு வரை தமிழரின் வரலாறு) என்ற தலைப்பில் அவர் ஆங்கில நூல் எழுதினார். அதன்
தொடக்கமே இந்த வாக்கியங்கள்:
“அரச பரம்பரைகளின் தோற்றமும் வீழ்ச்சியும்,
வீரத்தின் பெயரில் போர்களத்தில் எண்ணிலா
மனிதரின் மரணும்,
உழைத்தவர் வளர்த்ததை கொள்ளையடித்தும்,
அவரை நிலம் பெயர்த்த சாகச கதையும்,
அரச பெண்டிரின் வலிந்து கவர்ந்ததும்,
மாசிலா மக்களின் ரத்தம் சிந்தலும்,
வரலாறு என்றால்,
கிபி ஆறாம் நூற்றாண்டு வரை,
அப்படி எந்த வரலாறுமில்ல இன்பநிலம் தமிழகம்.
ஆனால்,
திணையே
முதலாகவும் நிலமே வளமாதலும்
பிணைந்த
மறுமனிதரால் மலர்ந்த மரபாலும்,
ஒரு
மக்களின் சமூகமும் மதமும் வளர்ந்த கதையும்,
உண்டதும் கண்டதும் ஆடியதும் பாடியதும்,
மன்னரை பாடியதும் தெய்வங்களை வணங்கியதும்,
வணிகமும் தொழிலும் வளர்ந்ததும் விரிந்ததும்,
பாமரப் பாடல் ஓங்கி செந்தமிழ் கூடலானதும்,
வரலாறு என்று கருதினால்,
பண்டைக்காலம் முதல் கிபிஆறாம் நூற்றாண்டு
வரை
சீர்மல்கி செழித்த அந்த வரலாற்றை வகுக்க
தக்க பல தகவல்களை உள்ளன. அதை இப்புதகம் தருகிறது.”
செப்டம்பர்
25, 2016 அன்று ஆழ்வார்பேட்டை டாக் செண்டரில் “தமிழகத்தின் ஆரம்பகால வரலாறு” என்ற தலைப்பில்
நான் வழங்கிய உரையில், இம்மூன்று மொழிகளையும் சுட்டிக்காட்டினேன்.
இவற்றின்
ஆங்கில மூலம் இங்கே
சென்னைப்
பட்டணத்து எல்லீசன் - ஒலிப்பதிவு
பிறஹா
– தனி ஒரு மொழி
தமிழில்
கணித சொற்கள்
போர்க்காலத்தில் சென்னை - 1 பல்லவர் சோழர் காலம்
போர்காலத்தில் சென்னை - 3 முதல் உலகப்போர்
போர்காலத்தில் சென்னை – 4 இரண்டாம் உலகப்போர்
No comments:
Post a Comment