Showing posts with label நோய். Show all posts
Showing posts with label நோய். Show all posts

Wednesday, 18 March 2020

பாட்டியை மூஞ்சில் குத்து



ஹான்ஸ் ரோஸ்லிங் (Hans Rosling) எனும் பொருளியல் வல்லுனர் எழுதிய ஃபாக்ட்ஃபுல்நஸ் Factfulness (செழுந்தகவல்) நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். கற்றோரும், சான்றோரும், பொருளியல் வல்லுனரும், பலநாட்டு தலைவர்களும், ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், இன்றைய உலகை எவ்வளவு தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று பக்கம்பக்கமாக விவரிக்கிறார். 

வளர்ந்தநாடு வளரும்நாடு எனும் இருவகை பிரிவு 1940களில் உருவாகியது. அந்த நிலமை மாறி நாற்பது வருடங்களாகிவிட்டன. இன்று உலக நாடுகளை செல்வத்தாலும் வளர்ச்சியாலும் மக்கள் நலத்தாலும் நான்கு வகையாய் –இரண்டு வகையாக அல்ல - பிரிக்கவேண்டும் என்று 1999 முதல் உலகின் பல அரங்குகளில் சொல்லி வருகிறார். நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா கல்லூரிக்கே இதை புரியவைக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது.

நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தில், ஒர் சம்பவம் சொல்கிறார். இந்த அத்தியாயத்தின் பெயர் “பழி வீசும் இயல்பு”.

என் மொழியாக்கம் கீழே.

பழி வீசும் இயல்பு

நான் கரோலின்ஸ்கா கல்லூரியில் பந்நாட்டு மருந்து கம்பெனிகளை பற்றி பாடம் நடத்தி கொண்டிருந்தேன். வருமையான நாடுகளில் மட்டும் நிலவும் மலேரியா, உறக்கநோய் போன்ற நோய்களை ஒழிக்க, பணக்கார பந்நாட்டு கம்பெனிகளில்  ஆராய்ச்சி ஏதும் நடத்துவதில்லை என்று விளக்கினேன்.

முன் வரிசையிலுள்ள ஒரு மாணவன், “அவர்களை மூஞ்சிலேயே குத்தவேண்டும்” என்றான்.

“ஆகா”, என்றேன். “சில நாட்களில் நான் சுவிட்சர்லாண்டிலுள்ள நோவார்டிஸ் எனும் கம்பெனிக்கு உரையாற்ற செல்வேன். யாரை குத்த வேண்டும், குத்தி என்ன சாதிப்பேன் என்று விளக்கினால், நான் போய் குத்திவிட்டு வருகிறேன்.”

“இல்லை, இல்லை. அவர்கள முதலாளியை குத்தவேண்டும்.”

“சரி. கம்பெனி முதலாளி டேனியல் வசெல்லா. அவரை சந்திப்பேன். அவரை மூஞ்சில் குத்தவா? குத்தியதனால் மலேரியா ஆராய்ச்சி தொடங்க ஆணையிடுவாரா?”

பின்னிருக்கையிலிருந்து வேறொரு மாணவன் வாய்மலர்ந்தான். “கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் அனைவரையும், மூஞ்சில் குத்தவேண்டும்.”

“நிச்சயம் செய்யலாம். அன்று மதியம் நிர்வாக இயக்குனர்கள் சிலரை சந்திப்பேன். காலையில் டேனியல் தப்பித்தார். மதியம் ஒரு ரவுண்டு கட்டி மற்றவரை சுழட்டி சுழட்டி மூஞ்சில் குத்துகிறேன். அனைவரையும் குத்தும் வரை என் கூந்தலில் தேங்காய் எண்ணெய் தடவாதிருப்பேன், ரிப்பன் போடமாட்டேன், அன்னை பராசக்தி மேல் ஆணை. ஆனால் நான் வயதானவன், மல்லனோ சண்டியனோ அல்ல, நாலைந்து நபரை குத்தியபின் அங்குள்ள காவலர்கள் என்னை பின்னி பெடலெடுக்கலாம். சரி இதனால் என்ன மாறும்? நான் கொடுத்த குத்தில் தான் செய்த பாவம் அறிந்து, சித்தம் தெளிந்து, சிந்தை குளிர்ந்து, மெய்ஞ்ஞானம் பெற்ற கம்பெனி இயக்குனர்கள் மலேரிய ஆய்வை மேற்கொள்வாரா?”

“இல்லை இல்லை, நோவார்ட்டிஸ் ஒரு தனியார் கம்பெனியல்ல. பங்கு சந்தையில் அந்த கம்பெனி பங்குகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். பங்காளிகள் தான் அந்த கம்பெனியின் உண்மை முதலாளிகள்,” என்றான் ஒளிபடைத்த கண்ணனாம் மூன்றாம் மாணவன்.

“பலே பாண்டியா! சரியாக சொன்னாய். இந்த கம்பெனியின் பங்குதார்ரகளே மலேரிய ஆராய்ச்சியை விரும்பாமல் செல்வந்தர் நோய் மட்டுமே தீர்த்து பணம் சம்பாதிப்பதில் குறியாய் வெறியாய் நரியாய் அரியாய் உள்ளனர். யாரிந்த குறி வெறி நரிகள்?” என்றேன்.

“பணக்காரர்கள்.” என்றான் முன் வரிசை மைக் டைசன்.

“அது தானில்லை. மருந்து கம்பெனிகளின் வருமானம் கச்சா எண்ணெய் கம்பெனிகளின் வருமானம் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஊஞ்சலாடா. வருடாவருடம் பெரிதாக ஏறியிறங்காமல் நம்பகமாக லாபம் பெற்று, துல்லியமாக பங்குதாரர்களுக்கு பங்கு தருகின்றன. அதனால் இவற்றில் முதலீடு போடுவதும் சில நிதி நிறுவனங்களே. பங்குகளை வாங்கி பலவருடங்கள் விற்காமல் தக்கவைத்து கொள்ளும். அவை யார் யார் என்று தெரியுமா?” என்று கேட்டேன்.

மாணவர்களுக்கு இந்த பங்கு சந்தை விவரம் தெரிந்திருக்கவில்லை. சுட்ட நாவல் பழத்தை கேட்ட அவ்வையை போல் என்னை ஆவலுடன் நோக்கினர்.

“ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (Retirement funds)” என்றேன். மயான நிசப்தம்.

“அந்த மாதிரி நிதி நிறுவனங்களில் பங்கு வாங்கியுள்ள வயோதிகரை நான் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பாட்டியை வாராவாரம் சந்திப்பவராக இருந்தால் இந்த வாரம் உங்க பாட்டி மூஞ்சில் குத்தலாம். சுயநலாமாக தங்களுக்கு மாதாந்திர வருமானம் ஆடாமல் அசையாமல் அள்ளி வரவேண்டும் எனும் ஆர்வத்தில், பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டும் மருந்து தேடும் ஆராய்ச்சி கம்பெனிகளின் உண்மை முதலாளிகள் அவர்களே.

“மேலும். சமீபத்தில் நீங்கள் ஊர்சுற்றவோ விழா கொண்டாடவோ உங்களுக்கு உங்கள் பாட்டி ஏதேனும் அன்பளிப்பாக கொஞ்சம் பணம் குடுத்திருந்தால் உங்கள மூஞ்சையும் கொஞ்சம் குத்திக்கலாம்.”

மொழியாக்கம் முற்றும்.

என் குறிப்பு : ஓய்வுபெற்றவர்களின் நிதிகளை கையாண்டு, மாதாமாத ஓய்வு வருமானத்தை தவிற, கொஞ்சம் பங்கு சந்தையில் போட்டால் நல்ல வருமானம் கிடைக்கலாம் என்பதால் சில நிறுவனங்கள் அவர்கள் உபரி செல்வத்தில் இந்த மாதிரி கம்பெனிகளில் பங்கு வாங்கி, வருடத்திற்கு மூன்றுநான்கு முறை அவர்களுக்கு பணம்பெற்று தருகின்றன.

ஹான்ஸ் ரோஸ்லிங் பேசும் வீடியோ காட்சி

Wednesday, 11 November 2015

செல்வம் உடல்நலம் சுகாதாரம் அன்பு அமைதி சமத்துவம் பெருகி

மேட் ரிட்லி (Matt Ridley) மூன்று உயிரியல் நூல்களும் ஒரு பொருளியல் நூலும் எழுதியுள்ளார். (நான்கையும் படித்துள்ளேன்). சமீபத்தில் இரு துறைகளையும் கலந்து எல்லாவற்றின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு நூல் எழுதியுள்ளார் (இதை நான் இன்னும் படிக்கவில்லை). இவர் லண்டன் எக்கானமிஸ்ட் பத்திரிகையின் முன்னார் அறிவியல் பகுதி ஆசிரியர். இங்கிலாந்தின் துரைமார்களில் ஒருவர், ராஜசபை (House of Lords) அங்கத்தினர். இவர் நிர்வகித்த ஆர்.பி.எஸ் வங்கி 2008 பொருளாதார சரிவில் திவாலானது. நிலக்கரி சுரங்க அதிபர், வயல்களும் வைத்துள்ளார். பிரபல அமெரிக்க ஆங்கிலேய நாளிதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார், இவற்றை நான் அவரது வலை தளத்தில் படித்து வருகிறேன்.

[Rational Optimist என்பதை தமிழில் “பகுத்தறிவு உகமையர்” என்று எழுதவேண்டும். ஐயோ! ஸ்டாலினிஸ்ட், மார்க்ஸிஸ்ட் போல ரிட்லியிஸ்ட், சைமனிஸ்ட் என்று எதோ பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும் போல]

நவம்பர் ஆறாம் தேதி, கனடா தேசத்து மங்க் பல்கலைகழக்கத்தில் மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றி ஒரு விவாதத்தில் இவர் பேசியதன் கட்டுரை வடிவத்தை தன் வலைதளத்தில் ஏற்றியுள்ளார். அதை நான் தமிழாக்கி கீழே தந்துள்ளேன்.

------------------------
அமெரிக்க சினிமா நடிகர் இயக்குனர் உடி ஆலன் ஒரு முறை சொன்னார், “மனிதக்குலம் போக இரண்டு பாதைகள் விரிந்துள்ளன. ஒரு பாதையில் சென்றால் ஓயா துன்பமும் துயரமும். மற்ற பாதையில் சென்றால் இனமே அழிந்து விடும். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் அறிவை பெற (இறைவனை) வேண்டுவோம்.”

இப்படித்தான் எதிர்காலத்தை பற்றி பலரும் பேசுகிறார். என் இளமையில் எதிர்காலம் இருண்டுகிடந்தது. மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பஞ்சம் அச்சுறுத்தியது; பூச்சிமருந்துகள் புற்றுநோய் வளர்த்தன; பாலைவனங்கள் வயல்களை விழுங்கின; மண்ணெணை கிணறுகள் வற்றத்தொடங்கின; காடுகள் மறைந்தன; அமில மழை பொழிந்தது; ஓசோன் மண்டலத்து ஓட்டை வீங்கியது; என் விந்து அளவு குறைந்தது; அணு ஆயுதங்களால் அண்டமே அழிவின் வாசலில் அஞ்சித்தவித்தது.

மிகையாகச் சொல்லவில்லை. 1960களில் பொருளியல் வல்லுனர் ராபர்ட் ஹெய்ல்பிரோனர், ”மனிதக்குலத்தின் எதிர்காலம் மங்கும்; தாங்கொணா துயரம் தாண்டவமாடும்” என்று ஒரு நூலில் கட்டியங்கூறினார்.

பத்தாண்டுக்கு பின் நான் இவை எல்லாமே பூச்சாண்டி கதைகள் என்று உணர்ந்தேன். துயர்மல்கும் எதிர்காலம் இவ்வறிஞர் பயந்தபடி உதிக்கவில்லை. மக்களின் சீரும் சிறப்பும் பெருகிவருகிறது. வாழ்க்கை வளமும் நலமும் தினமும் தினமும் சிறக்கிறது.

  1.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம், ஒரு நாளுக்கு ஐந்து மணிநேரம் வளர்கிறது!
    (அதாவது ஐம்பதாண்டுகாலத்தில் சராசரி மனிதன் ஆயுட்காலம் 50*365*5=91250 மணிநேரம் நீண்டுள்ளது. இது  3802 நாட்களாகும் (91250 / 24). அதாவது பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் நீண்டுள்ளன. 1965 வாழ்ந்த சராசரி மனிதனினை விட, 2015 வாழ்பவர் பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் அதிகம் வாழ்வார்!)
  2. பிறப்பிலேயே இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக (66 சதவிகிதம்) குறைந்துள்ளது
  3. மலேரியா நோயால் இறப்பவரின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டில் அறுபது சதவிகிதம் குறைந்துள்ளது
  4. எண்ணை கப்பல்களில் சிந்தி கடலை பாழாக்கும் எண்ணை 1970 முதல் 90 தொண்ணூறு வதவிகிதம் குறைந்துள்ளது
  5. கைப்பேசி (செல் ஃபொன்) மூலம் பேசலாம், அஞ்சல் அனுப்பலாம், படம் பார்க்கலாம், வரைபடம் பார்த்து வழிசெல்லலாம், அவரவர் கருத்தை உலகுக்கு பறைச்சாற்றலாம்.

மோசமாவன என்னென்ன? போக்குவரத்து நெரிசல், உடல் பருமன். இவை செல்வத்தால் வரும் பிரச்சினைகள், வறுமையாலும் பஞ்சத்தாலும் அல்ல.

ஒரு விசித்திரம் என்னவென்றால் பல முன்னேற்றங்கள் மெதுவாக வளர்வதால் செய்தியில் அடிபடுவதில்லை. விபத்துகளே செய்தியின் சாராம்சம். விமானம் விழுந்தால் செய்தி. சிசு மரணங்கள் எண்ணிக்கையில் விழுந்தால் செய்தி இல்லை.

வருடா வருடம் சராசரி மனிதனின் செல்வம் பெருகி, உடல்நலம் பெருகி, அறிவும் பெருகி, சுகாதாரம் பெருகி, அன்பும் பெருகி, சுதந்திரம் பெருகி, பாதுகாப்பு பெருகி, அமைதி பெருகி சமத்துவம் பெருகி வாழ்கிறான்.

சமத்துவம் பெருகியா?

ஆம் உலகெங்கும் சமத்துவம் வளர்கிறது. அதிவேகமாக. ஏன்? செல்வ நாடுகளில் செல்வந்தரின் செல்வம் வளரும் வேகத்தைவிட ஏழை நாடுகளில் ஏழைகளின் செல்வம் வேகமாக வளர்கிறது.

சமீபத்தில் பொருளாதாரம் வளர்ந்துள்ள ஆசிய நாடுகளை போல், ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதாரம் அமோகமாக வளர்கிறது. 2008 முதல் மொசாம்பிக் நாட்டு பொருளாதாரம் 60% வளர்ந்துள்ளது. எத்தியோப்பிவின் பொருளாதாரம் வருடா வருடம் பத்து சதவிகிதம் வளர்கிறது.

1945 இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், 2014 வரை, ஒரே ஒரு முறை தான் உலகப்பொருளாதாரம் சரிந்துள்ளது. 2009இல் ஒரு சதவிகிதம் சரிந்து பின் ஐந்து சதவிகிதம் வளர்ந்தது. வளர்ச்சி தொடர்வது மட்டுமின்று, அது வேகத்தில் கூடுகிறது

வருவதை எண்ணி வளரும் என் நம்பிக்கை, வரலாற்றை வைத்து மட்டும் போடும் கணக்கல்ல, வளர்ச்சியை இயக்கும் காரணத்தையும் வைத்தே போட்ட கணக்கு.

சிந்தனையும் செயல்திட்டங்களும் கலந்து புணர்ந்து புதுமைகளை உருவாக்கின்றன. அதனால் மேலும் சிந்தனைகள் பிறந்து கலந்து புணர்ந்து புதுமைகளை பிறப்பிக்கின்றன. இது வற்றாத நதி. மனிதரின் அறிவே இந்த நதிமூலம். அவை கலந்து புணரும் வழிகள் எண்ணற்றவை.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றும் புதுமைகளை நம்பும் காலத்தை கடந்துவிட்டோம். சிந்தனை புணர்ச்சியின் வேகத்தை இணையதளம் மேலும் ஊக்குவிக்கும்.

வேப்பிங் என்று ஒரு புதுமை. எலக்ட்ரானிக் மின்னணு சிகரெட். இங்கிலாந்தில் வேப்பிங் வந்த பின் முப்பது லட்சம் மக்கள் புகைபிடிப்பதை கைவிட்டனர். புகைப்பழக்கத்தை கைவிட நாம் படைத்த சாலச் சிறந்து யுக்தி, இதுவே.

ரசாயனமும் மின்னணுவியலையும் அறிந்த ஹான் லிக் என்ற சீனரால் இது படைக்கப்பட்டது.

ஒரு கேள்வி எழலாம். இந்த முன்னேற்றமெத்தால் சுற்றுச்சூழல் சீரழிகிறதல்லவா? இல்லை. மாறாக, மாசுகள் குறைந்து பசுமை வளர்கிறது. நீர் நிலைகள் சுத்தமாகின்றன, காற்று மாசுப்பொருட்கள் குறைந்துள்ளன, காடுகள் வளர்கின்றன, வன விலங்குகள் பெருகிவருகின்றன.

செல்வமிகை நாடுகளில் சுற்றுச்சூழல் வேகமாகவே தூய்மையாகிறது. ஏழை நாடுகளிலே தான் மாசு கேடுகள் அதிகம்.

மக்கட்தொகை? என் வாழ்நாளில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இரண்டு சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆப்பிரிக்காவிலும் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துவருகிறது. இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கட்தொகை நான்கு மடங்காக பெருகியது. இருப்பத்தோராம் நூற்றாண்டில் அது இரட்டிக்குமா என்பதே சந்தேகம். ஐநா சபை மக்கட்தொகை 2080இல் வளராமல் நிற்கும் என்று கருதுகிறது.

போரும் நோயும் பஞ்சமும் பெருகியே மக்கட்தொகை தடுமாறும் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மால்தூஸ் பயமுறுத்தினார். அவ்வாறின்றி, கல்வி செல்வம் சுகாதாரம் பெருகுவதால் மக்கட்தொகை வளர்ச்சி குன்றும். இது ஒரு அழகான எளிமையான விவரம். சிசுப்பருவத்தில் குழந்தைகள் சாகாமலிருந்தால் மக்கள் சின்ன குடும்பங்களோடு குழந்தைபேறை நிறுத்திவிடுகிறார்கள்.

மக்கட்தொகை வளர்ச்சி சுருங்க, வயல்களின் விளைச்சலும் பெருக, பஞ்சம் தவிர்ப்பது எளிமையாகிறது. ஐம்பதாண்டுக்கு முன் தேவைப்பட்ட நிலத்தில் பாதியில் இன்று 68% அறுபத்தெட்டு சதவிகிதம் அதிகமாக பயிர் வளர்க்க முடிகிறது. மீதி நிலத்தில் இயற்கையாய் காடு வளரலாம்.

கனடா நாட்டு ஒண்டாரியோ மாநிலத்தின் பரப்பளவில் உலகத்துக்கு போதுமான பயிர் வளர்த்து, மற்றதை இயற்கை நிலமாக விட்டுவிடலாம்.

பூமியின் பசும் போர்வை  வளர்கிறது. விண்ணிலிருந்து எடுக்கும் படங்களில் முப்பது வருடதுக்கு முன்னை விட இன்று பதிநான்கு சதவிகிதம் அதிகம் பசும் போர்வை விரிந்துள்ளதை காட்டுகிறது.

ஒரு வேளை நான் மிகையாக சொல்கிறேனா? நூறு மாடி கட்டடக்கூரையிலிருந்து குதித்துவிட்டு தரையில் விழுந்து சாகும் முன் “எனக்கு ஒண்ணும் ஆகவில்லை” என்னும் முட்டாள் ஜம்பத்தில் பேசுகிறேனா? இல்லை.

இந்த விவாததில் திருப்புமுனை பற்றி பேச்சு எழும். இந்த தலைமுறை தன் பெற்றோரை விட மோசமாக இருக்கும் என்று எதிர்கட்சியினர் சொல்வார்கள்.

ஒவ்வொரு தலைமுறையும் இப்படி பேசுகிறது. மெக்காலே சொன்னது : “ஒவ்வொரு காலத்திலும், அது வரை முன்னேற்றத்தை கண்டவரும், அடுத்த தலைமுறையில் முன்னேற்றம் ஏற்படாது என்று நம்புகின்றனர். நாம் ஆகவே முடியாது என்று நிரூபிக்க முடியாது. ஆனால் இதை தான் நம்முன் வந்தவர் அனைவரும் சொல்லிவந்துள்ளனர்.”

இறந்த காலத்திலிருந்து நல்ல நினைவுகளையும் எதிர் காலத்திலிருந்து பூச்சாண்டி ஆரூடங்களையும் வடிகட்டி எடுக்கிறோம்.

நம் தலைமுறைக்கு வரலாற்றில் ஈடில்லை என்பது, ஒரு விசித்திர கர்வம்.
மீண்டும் மெக்காலேவை முன்மொழிகிறேன் : “எந்த கொள்கையின் அடிப்படையில், கடந்த காலத்தில் முன்னேற்றமே தெரியும் போது, எதிர்காலத்தில் சீரழிவை மட்டும் எதிர்பார்ப்பது?”

குறிப்பு
“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” என்ற தலைப்பில் எழுதியிருக்கவேண்டும்.

தொடர்புள்ள கட்டுரைகள்


Monday, 12 May 2014

இன்சுலின் நாயகி டோரோதி ஹாட்ஜ்கின்

English version of this essay here

கூகுளின் மூக்கூறு புள்ளிவரைபடம்
இன்று காலை குரோம் பிரௌஸரை திறந்தேன். கூகுளின் மூக்கூறு புள்ளிவரைபடம் கண்டேன். க்ளிக்கினால், டோரோதி ஹாட்ஜ்கினை பற்றிய சுட்டிகள். இன்று மே மாதம் பன்னிரெண்டாம் நாள், அவரது பிறந்தநாள். “இன்சுலினின் மூலக்கூறு வடிவத்தை ஆய்ந்து உணர்த்தியவர்,” என்றது விக்கீப்பீடியா. ஃப்ரெட் ஸாங்கர் அல்லவோ இன்சுலினின் வடிவத்தை ஆய்ந்தார்? அஞ்சலி எழுதினோமே? மேலும் தகவல்: “வைட்டமின் பி-12 மூலக்கூறு வடிவம் ஆய்ந்துரைத்ததற்கு, டோரோதி ஹாட்ஜ்கின் ரசாயன நோபல் பரிசு பெற்றார்.” கல்லாதது டோரோத்தி அளவு. என்னே ஒரு சாதனையாளர். கேள்விப்ட்டதே இல்லை.

ஸாங்கரின் பணியிலிருந்து எப்படி இவர் ஆய்வு மாறுபட்டது? தேடினேன். வெல்கம் கம்பெனி வளைத்தளத்தில் விவரம் கிடைத்தது. இன்சுலினின் அமினோ அமில வடிவத்தை ஸாங்கரும், மூலக்கூறு வடிவத்தை ஹாட்ஜ்கின்னும் தலா ஆய்ந்தனர்.

இன்சுலினின் அமினோ அமில வடிவம்

கூகுளுகு நன்றி, பாராட்டு. டோரோத்தி ஹாட்ஜ்கின்னுக்கு நன்றி, வணக்கம்: என் தந்தை உட்பட, சக்கரை நோயினால் தாக்கப்பட்டவர் கோடி. எண்பது ஆண்டுகளுக்கும் முன் மருந்தின்றி 30. 40 வயதில் தவித்து துடித்து செத்திருப்பார்கள். இன்சுலின் கண்டுபிடிப்பால் வாழ்ந்தவர் கோடி; இவர்களின் அறிவியல் ஆய்வினால், கொங்குதேர் வாழ்க்கை வாழ்ந்தனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், டோரோத்தி ஹாட்ஜ்கின்.

Sunday, 6 April 2014

தோற்று பின்வாங்கும் நோய்கள்

கடந்த 13 ஆண்டுகளில், உலகெங்கும், மலேரியா நோயால் இறந்தவர் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது. எனினும், 2012இல் 6,27,000 நபர்கள் மலேரியாவிற்கு பலியானர். பத்து வருடத்தில் இராக் இலங்கை ஆஃப்கானிஸ்தான் காங்கோ போர்களிலோ, ஆழிப்பேரலை நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளில் இறந்தவரை விட, மலேரியாவின் மரண எண்ணிக்கை அதிகமானது.

போலியோ ஓரிரு நாடுகளை தவிர அழிந்துவிட்டது. கினிப்புழூவின் தாக்கம் முடிவுக்கு வரப்போகிறது. எய்ட்ஸ் நோயினால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 52% குறைந்துள்ளது. காசநோய் (டுபர்குலாஸில்) மரணங்கள் 45% குறைந்துள்ளன.
2000 ஆண்டு தொடங்கி நீங்கள் முழுகம் கெட்ட செய்திகளை – தீவீரவாதம், விலைவாசி உயர்வு, ஊழல், வல்லரசு படுகொலைகள், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு – அனைத்தையும் சேர்த்தாலும், அத்தொகையை மிஞ்சும் நல்ல செய்தி இந்த நோய்கள் பின்வாங்கும் செய்தி.

சூழ்நிலையை கவனிக்கவும்.
  1. ஜனத்தொகை பெருகினாலும்
  2. ஜனநாயகமா சர்வாதிகாரமா இரண்டாங்கெட்டானா, பேதமின்றி
  3. சாதி மத இன ஆண்பெண் பேதமின்றி

           இந்த நல்ல முன்னேற்றம் வெற்றி நடை போடுகிறது. நான் மிகவும் ரசிக்கும் மதிக்கும் உவக்கும் புகழும் மேட் ரிட்லி-யின் ஆங்கில கட்டுரை இங்கே.

ஒரு நாளிதழோ, அரசாங்கமோ, கட்சியோ, ஊடகமோ [கலைஞனோ, புலவனோ, புனிதனோ, எழுத்தாளனோ] இவ்வித நல்லச்செய்தியை கூவி பறையடிக்க மாட்டாது. நீட்டோலை வாசியா நிற்பர்.

தொடரட்டும் அவர்களின் ஓயாத ஒப்பாரி.


Friday, 21 March 2014

Retreating Diseases

Malaria is down by 29 percent. since 2000. But 627000 people still died of it in 2012.  That is probably more than in 10 years of Iraq or Afghanistan wars, Congo Sudan or Sri Lanka conflict or any tsunami or earthquake. Polio has almost been conquered, guinea worm is almost extinct.  Children dying of AIDS is down 52 percent, mortality from Tuberculosis down 45 percent. This is more good news than ALL the bad news you have been drowning in since 2000, everyday, TOTALLED UP.

But if you want to be a pessimist, please keep worrying and infect your friends with the negativism. No government will ever tax that. And feel free to criticize me for being a stupid rational optimist and Matt Ridley for being a failed or fraudulent banker.


Ridley's article is here.

http://www.rationaloptimist.com/blog/the-good-news-you-don't-hear-about-diseases.aspx

Note that this is happening

1. In spite of population increasing
2. Regardless of form of government - democracy or dictatorship, benevolent or otherwise
3. ....or religion or race or gender of people