Friday, 17 May 2013

சாதா விந்தைகளின் ஆரா ரசிகன்

எகிப்திய பிரமிட். தாஜ் மஹால். அஜந்தா ஓவியம். காஜுராஹோ சிற்பம். மாமல்லபுரம், அங்கோர் வாட், மோனா லிஸா, ஸிஸ்டைன் ஆலயக் கூறை ஓவியம். கலைகளின் சிகரம், அழகின் உச்சம், உலக அதிசயம், கற்பனை களஞ்சியம்; விசத்திரம், அற்புதம்,  இணையிலா படைப்பு என இவையெலாம் நமக்கு வியப்பும், இன்பமும், பிரமிப்பும் தருகின்றன. நாளும், பணமும் செலவிட்டு, பத்தாய் நூறாய் ஆயிரமாய் கோடியாய், குடும்பமாய் குழுக்களாய், கடலும் மலையும் நதியும் நாடும் கடந்து, இவற்றை கண்டு ரசித்து பேசி புகழ்ந்து பகிர்ந்து மகிழ சுற்றுலா செல்கிறோம்.

எப்படி செல்கிறோம்? காரிலும், பஸ்ஸிலும், ரயிலிலும், விமானத்திலும், பல தேசங்களின் பணத்தை பரிமாற்றிக்கொண்டு, படை எடுக்கிறோம். தாளிலே எழுதி, போனிலே பேசி, வலையிலே விலை பார்த்து, சத்திரமும், பயணச்சீட்டும், நுழைவுச்சீட்டும் வாங்கி. கேமிரா, தண்ணி பாட்டில், தோள் பை, மூக்குகண்ணாடி, கடிகாரம், க்ஷவரக்கத்தி, நைலான் ஸாக்ஸ், நைக்கீ ஷூ, பேனா, பல்துலக்கி, ஸோப்பு, ஷாம்பூ – பன்னிருகை வேலனாய் படையெடுத்து களமிறங்கி, இண்டிகோ மயிலேறி, ஊர் விட்டு ஊர் வந்து, ஏசி மின்விளக்கு மின்விசிறி தொலைகாட்சி யாவுமுள்ள அறையிலே, அனைத்தையும் சாதாரணமாக எதிர்ப்பார்த்து பயணம் செய்கிறோம்.

விந்தை இல்லை, விசித்திரம் இல்லை, அற்புதம் இல்லை. வியப்பில்லை, திகைப்பில்லை, இவைக்கூட உலக அதிசயம், கலைகளின் சிகரம், கற்பனை களஞ்சியம் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லை.

            ஐயகோ!!!!! பொலிகப் பொலிகப் பொலிக, இவற்றை போல் உலகில் வியப்பில்லை காண்பீர். மன்னனோ, முனிவனோ கண்டதில்லை, மயனும் சூரனும் கேட்டதில்லை, புலவரும்  ஞானியும் சொன்னதில்லை, தெய்வங்கள் அறிந்ததில்லை, அறிந்தால் பகிர்ந்ததில்லை, பகிர்ந்ததாய் புராணமில்லை.

மறந்து போன யுகத்திலும் மறைந்து போன ஊரிலும் மட்டுமல்ல, நூறு ஆண்டுக்கும் முன் ஒருவருக்கும் இல்லாத இந்த செல்வம், இந்த சாதா விந்தைகள், இன்றோ கோடிக்கணக்கான ஏழைகளும் சொந்தமும் பயனும் மகிழ்வும் கொண்டு களிக்கின்றனர். ஆனால இந்த மகா விந்தையை கண்டு, மா பெரும் செல்வ வெள்ளத்தின் சுவையை, கற்பகமரத்தின கற்பனையை மிஞ்சிய சீர் வரிசையை, கண்டு, களித்து, மகிழ்ந்து, ரசித்து, மலைத்து, இன்புற நமக்கு நாதியில்லை!!!

ஏன்? இவை தனிப்பொருள் அல்ல, மலிவானவை, யாரும் வாங்கக்கூடியவை, சாதா விந்தைகள் என்பதாலா? இவற்றை காணவோ, வாங்க
வோ, ரசிக்கவோ, கையாளவோ, பகிரவோ நாம் கடலும் காடும், மலையும் நதியும் கடந்து செல்ல தேவையில்லை. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, கடைக்கு கடை, வீட்டுக்கு வீடு, இவை பலவும் நம்மைத்தேடி, விளம்பரம் முழங்கி, நாளொரு விலை குறைந்து, தரம் உயர்ந்து, ஒய்யார படை எடுத்து வருகின்றன.

இவற்றை நான் ரசிக்கிறேன். சாதா விந்தையின்ஆரா ரசிகன் நான்.





No comments:

Post a Comment