Thursday, 10 November 2016

தடை கேளு தடை கேளு

நேற்று இரவு எட்டுமணி முதல் தமிழி மொழியில் இரண்டு சுழி ண மூன்று சுழி ன தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இவ்விறு எழுத்துக்களையும் ஆதார் அட்டையில்லாத எழுத்தாளர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், தமிழ் இலக்கியத்தில் பிண்ணவீணத்துவம், மாயணிலைமெய்த்துவம், வநிகபேராசைத்துவம், மதச்சார்ப்பற்ற ஆண்மீகம், முற்போக்கு பெண்மீகம் போன்ற இலக்கிய சீரழிப்பு நடைகளை பாகிஸ்தான் ராணுவமும் ஏகாதிப்பத்திய அமெரிக்க கார்ப்பரேட் சக்திகளும், பாரதநாடு முழுக்க அவிழ்த்துவிடுவதாகவும், அந்த சதியை முறிக்கவே இத்திட்டம் என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. தற்காலிகமாக ணகரமும் னகரமும் நவீன தமிழிலன்றி, சுழியில்லாத தமிழ் பிராம்மி என்னும் சங்க கால தமிழ் லிபியில் எழுதவேண்டும் என்றும் மேலும் மோடி அறிவித்துள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பிற்கு தமிழ் படிப்போர் சிலர் ஆதரித்தும் சிலர்  எதிர்த்தும் பேசியுள்ளனர். ஆனால் கொஞ்சம் கூட தமிழே படிக்காதவர்களிடம் இது பிரம்மாண்ட சச்சரவை கிளப்பியுள்ளது. ஹிந்திக்காரன் மோடிக்கு தமிழை திருத்த எந்த அதிகாரமும் கிடையாது என்று கொந்தளித்த சிலரை மறுத்து, காசியில் சாகித்ய அகாடமி விருதை வாபஸ் செய்யாத சில ஹிந்தி புலவர்கள் “மோடி பேசும் குஜராத்தியை ஹிந்தியென்று நினைப்பது மிகவும் தவறு. அவர் ஆங்கிலத்தில் ஈஜ் அப் டூயிங் பிஜினஜ் என்று சொல்வது கூட குஜராத்தி எழுத்தில் தான்,” என்று பதிவு செய்துள்ளனர்.  இந்திய பிரதமரை அவமதிப்பது போல் இந்த கருத்து உள்ளது என, மோடியின் ஆதரவாளர்கள் கொந்தளிக்க, ஒரு அமெரிக்க நிருபர், “ஜார்ஜ் புஷ் பேசும் ஆங்கிலமே பல நேரம் குஜராத்தி மாதிரி தான் இருக்கும், இதுவே அதிபர்களுக்கு அழகு,” என்று சொன்னதால், சச்சரவு அடங்கியது.

“மோடிக்கு என் அரசியல் ஆதரவு இல்லை எனினும், இதை நான் வரவேற்கிறேன்,” என்று எதிர்பாரமால் அப்போலோவுக்கு வந்த அன்னா ஹசாரே கருத்து கூறியுள்ளார். அங்கு வந்திருந்த புலவர் கீழ்பாக்கம் கிளவிவளவன், ஹசாரேவை சும்மா விடவில்லை. “அண்ணா என்ற மராட்டியிலும் தமிழிலும் உள்ள சொல்லை விட்டுவிட்டு அன்னா என்று இரண்டு சுழியில் எழுதுவது தானே காரணம்? அதற்கு பழிவாங்கத்தானே இந்த னண ஒழிப்பை ஆதரிக்கிறீர்கள்?” என்று கேள்விக்கணைக்களை போன வருடத்து மழைப்போல் மாரியாய் பொழிந்தார். அண்ணா ஹசாரேவுக்கு மூன்று சுழியா என்று சில் பத்திரிகை நிருபர்களும், தமிழகத்தில் ஒரு மூன்று சுழி அண்ணாவுக்கு தான் இடமுண்டு என்று, வேறு சிலரும், பத்திரிகையை படிக்கிறதே ஜாஸ்தி இதுல சுழியெல்லாம் எவன்டா எண்ணுவான் என்று வாசகர்களும் வெவ்வேறு விதம் பேசிக்கொல்கிறார்கள். ஆனால் இது மேட்டுக்குடி மனப்பான்மை என்று கண்டித்து இனிமேல் கச்சேரிகளிலும் எச்சேரிகளிலும் சரிகமபதநி என்பதற்கு பதில் சரிகமபதனி என்றே பாடப்போவதாக பிரபல பாடகர் கிருட்டிநந் செந்நையில் அறிவுத்துள்ளார்.

இரண்டு என்ற சொல்லில் மூன்று சுழி ணவும் மூன்று என்ற சொல்லில் இரண்டு சுழி னவும் இருப்பதே தமிழில் எண்ணும் எழுத்தும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று கணித நிபுணர் நகுபோலியன் முகநூலில் சொல்ல, நகுபோலியன் யார் என்று சிலர் கூகிளில் தேட, கங்கைக்கொண்டசோழபுரத்து கலங்கரை விளக்கை நோக்கி ஒரு வரலாற்று ஆர்வல படை புறப்பட்டுள்ளது.

இந்த தடைக்கு பொருளாதார காரணங்களும் உண்டா என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் அருந் ஜெட்லீ ஆமோதித்து பதிலளித்துள்ளார். தமிழக அச்சுகளின் மை சீனதேசத்தில் தயாரிப்பதாகவும், சுழிகளால் மை மிகவும் அதிகமாக செலவாகிறதென்றும், வெளிநாட்டில் இருந்து கருப்பு பணம் மட்டுமே பாரதம் வரவேண்டுமே தவிற கருப்பு மை வரக்கூடாது என்ற தேசபக்தி உள்ளோர் சுழியில்லாத எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேக் இன் இண்டியா, மந்நிக்கவும், மேக் இந் இந்திய திட்டத்தில் இந்தியாவிலேயே மார்ச் 2017 முதல் தயார் செய்யப்படும் என்றும், அதன்பின் மீண்டும் சுழித்த ணன அறிமுகமாகும் என்று ஜெட்லீ கூறினார். இதை கேட்டு கோடம்பாக்கம் புருடாபாடியபெருங்கடுங்கோ ஒரு நியாயமான கேள்வியை எழுப்பின்னார். நான்கு சுழி ஐந்து சுழியுள்ள கன்னட தெலுங்கு மொழிகளுக்கும் இந்த தடைவிதிக்கப்படுமா என்பதே அக்கேள்வி. வெறும் கேள்வியாக கேட்காமல் ஒரு கட்டுரையாக எழுதி பத்தாயிரம் பிரதி எடுத்து தமிழகமெங்கும் பலச்சுவர்களில் மார்ட்டின் லூத்துர் போல் அறிவிப்பாகவே ஒட்டிவிட்டார். கேள்வி நியாயமாக இருந்தாலும், அதற்கு ஏன் “மூலம் விரைவீக்கம்” என்று தலைப்பிடபட்டுள்ளது என்று சிலர் ஐயம் எழுப்ப, அது ஒரு பசைசெய்தபிசை (paste-orical blunder) என்று பெருங்கடுங்கோ பெருங்கடுங்கோபத்தில் கர்ஜித்தார். தமிழக மீநவர்களையும் அந்றாடண்காச்சிகளையும் இது எப்படி பாதிக்கும் என்பதே முக்கியமென்றும் அசம்பாவிதமான தலைப்பு முக்கியமில்லை என்றும் அவர் கடிந்துள்ளார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சூடான பதிலை கிரிஷ் கர்நாடு கூறியுள்ளார். தான் கன்னடத்தில் நேராக எழுதினால் அதுக்கு யாருக்கும் புரியாதென்றும் சுழித்து சுழித்து எழுதுவதே இலக்கியம் என்றும் கூறியுள்ளார். கேள்வியையும் பதிலையும் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் யாரும் கண்டுகொள்ளாவிடினும், மலையாளத்தில் இந்த உரையாடல் எட்டாயிரம் பிரதிகள் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கிய மன்றங்களிலும் பத்திரிகைகளிலும் தர்க்கவாதம் செய்ய வேண்டிய கருத்தை போஸ்டர்வாதம் செய்யலாமா என்று வாசகர் ஒருவர் தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கடிதம் அனுப்ப, இரண்டு தமிழ் எழுத்தார்களையாவது தமிழ் துரோகி என்று திட்டினால்தான் அந்த விவாதத்தையே எங்கள் இதழ்களில் அனுமதிப்போம் என்று பதிப்பாளர்கள் கண்டிப்பாக பதிலளித்துள்ளனர்.

சர்வதேச அளவுக்கு சர்ச்சை நீடித்துள்ளது. இரண்டு சுழி மட்டுமே தன் பெயரிலிருந்தாலும், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் ஆதரவினால் மூன்று சுழியை தன் பெயரில் வைத்துக்கொண்ட ஹிலரி கிள்ண்டனை வீழ்த்தியது தன்னுடைய பேச்சுத்திறமைக்கும் நிர்வாக ஆற்றலுக்கும் சான்று என்று அமெரிக்க தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

(தொடரும்)

மற்ற முயல் கர்ஜனைகள்
1. எழுத்தாளர்களின் குத்துச்சண்டை
2. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு
3. லகள ரகளை
4. முயல்கர்ஜனை
5. ஹிட்லர் மகன்

No comments:

Post a Comment