என் பன்னிரண்டு
வருட பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியிலேயே பயின்றேன். ஐந்தாம் வகுப்பு வரை, என் வீட்டெதிரே
இருந்த சி.ஐ.டி. காலனி ஆரம்ப பள்ளியில்; இதை திருமதி ரத்னையா என்னும் ஒரு கத்தோலிக்க
கிறுத்துவ பெண்மணி நடத்தி வந்தார்; அவரே தலைமை ஆசிரியை. அவர்களை ஆங்கிலத்தில் ஆண்ட்டி
என்றழைப்போம்; பள்ளிக்கு ஆண்ட்டிஸ்கூல் என்றே பிரபலமான பெயர். மற்ற ஆசிரியைகள் யாவரும்
மிஸ் தான். சில மாணவர்கள் சி.ஐ.டி காலனியில் வாழ்ந்த நடுத்தர குடும்பங்களிலிருந்தும்,
சிலர் காட்டுக்கோயில் தோட்டத்திலிருந்தும் பள்ளியில். வேறு சிலர் அக்கம்பக்கம். பள்ளிக்கூடம்
இரண்டு வளாகங்களில் இருந்தது. கிண்டர்கார்டன் முதல் இரண்டாம் வகுப்புவரை சி.ஐ.டி. காலனி
ஐந்தாவது குறுக்கு தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான் நிலத்தில் வாடகை கட்டிடத்தில்
வகுப்புகள். கிண்டர்கார்டன் ஒரு தகர கொட்டகையில், ஒன்றாம் இரண்டாம் வகுப்பு செங்கல்
சிமெண்டு கட்டிடத்தில். மூன்றாம் முதல் ஐந்தாம் வகுப்புகள் சி.ஐ.டி. காலனி முதல் பிரதான
சாலையில் நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி இல்லத்திற்கு எதிரில் ஒரு கட்டிடம். அதில் ஒரு
பகுதி ஆண்ட்டி ரத்னையாவின் இல்லம். மற்ற அறைகள் பள்ளிக்கூடம். நான் நான்காம் வகுப்பில்
படிக்கும் போது என் தாய்தந்தையரை பள்ளி ஆண்டுவிழாவுக்கு தலைமை தாங்க அழைத்து கௌரவித்தார்.
அங்கே தமிழாசிரியர் திருமதி ருக்மணி, அவர் மகன் ஞானசேகரும் என் வகுப்பில். ஆலிஸ், மேரி,
சரஸ்வதி மிஸ் இன்றும் நினைவில்.
ஆறாம் வகுப்பு
முதல் பத்தாம் வகுப்பு வரை, மயிலாப்பூரில் பிரபலமான பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி.
ஆண்ட்டிஸ்கூல் கத்தோலிக்க கூடம்; பி.எஸ் அன்றைய சென்னையின் தயிர்சாத தலைமைச் செயலகம்.
திருமதி வசந்தகுமாரி தமிழாசிரியர். ஒரு குடுமிவைத்த பிரமாண தாத்தா மற்றொரு தமிழாசிரியர்,
அவர் பெயர் மறந்துவிட்டது; அவர் வகுப்பில் கண்விழித்திருப்பதே மாபெரும் சாதனை. பதினொன்றாம்
பன்னிரண்டாம் வகுப்புகள் ராயபேட்டை கில் ஆதர்ஷ் பள்ளியில் படித்தேன். அங்கே தமிழை வெறுக்க
கற்றுக்கொடுத்த ஒரு தமிழ் ஆசிரியர், பெயர் மறந்துவிட்டது; மற்ற மாணவருக்கு அவர் ஒரு
சிறந்த ஆசிரியராக இருந்திருக்கலாம்.
இஞ்ஜினியரிங் கல்லூரியில்
தமிழ் பாடமிலை. கல்லூரி சேர்ந்த் நாள்தான் எனக்கு இந்த தமிழ் சனியனிலிருந்து விடுதலை
நாள். தமிழ் ஒரு சனியனல்ல, அதன் அழகும் சுவையும், புலமையும், மகிமையும், அருமையும்
என்னவென்று சக மாணவர்களும் ஆங்கிலமறியா மக்களும் புரியவைத்த பருவம். பலருக்கு கணிதமோ,
வரலாறோ, ஆங்கிலமோ, பூகோளமோ, விஞ்ஞானமோ, வேறு ஏதோ பாடமோ இதே உணர்வை தரும் என்று எனக்கு
புரிய பல வருடங்களாயின.
எங்கள் வீட்டில்
கதை புத்தகங்கள் ஏதும் இருக்காது. ஜன்னல் ஓரத்தில் ஒர் அபிராமி அந்தாதி, அயகிரி நந்தினி
காலணா புத்தகம். அப்பாவின் மேசையில் அவர் தன் பால்யத்தில் சந்திரசேகர சரஸ்வதி என்ற
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் பரிசாய் பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம். மற்றதெல்லாம் அப்பாவின்
சட்ட புத்தகங்கள். இதைத்தவிற அம்மா வாங்கிப்படிக்கும் குமுதம், ஆனந்த விகடன், கல்கி,
கல்கண்டு, இதயம் பேசுகிறது. அப்பா ஆங்கில ஹிந்து நாளிதழ் மட்டுமே படிப்பார். பின்னாளில்,
தன் முப்பதுகளில், ஆத்ரேயன் என்ற புனைப்பெயரில் குமுதத்திலோ ஆனந்த விகடினிலோ தான் எழுதிய
சிறுகதை அச்சேரியதாக சொன்னது, எனக்கு பெரும் ஆச்சரியம். எங்கு போவேன் அந்த கதையை தேட?
பாக்கியம் ராமசாமியின்
அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை அம்மா படித்து, குலுங்கி குலுங்கி சிரித்து அவ்வப்போது
வாசித்துக் காட்டுவாள். நானும் அவ்வப்போது கொஞ்சம் படிப்பேன். ஆனால், சிரிப்புத் திருடன்
சிங்காரவேலனும், ரெட்டை வால் ரங்குடுவும்தான் என் ஆத்திச்சூடி, இதிகாசங்கள், சிலப்பதிகாரம்,
மர்ம நாவல்… எல்லாம். மற்றபடி எனக்கு படிக்க பிடித்தது ஆங்கிலம் மட்டுமே. ஒன்பது வயதில்
பாபு பெரியப்பா அலமேலு பெரியம்மாவுடன் கோடைக்காலம் செலவழிக்க புனே செல்ல ரயிலேறிய போது,
யாரோ ”கருடன்” என்னும் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகம் வாங்கித்தந்தார்; யார் என்று
நினைவில்லை. நாங்கள் வாடகைக்கு தங்கிய சி.ஐ.டி. காலனி வீட்டின் சொந்தக்காரர் சி.சி.பிள்ளை,
மாடியில் தங்கியிருந்தார். அவர் மனைவி “மாடி மாமி” தான் என் இரண்டாம் தாய். அவர்கள்
மகள் வசந்தா அக்கா ஹோலி ஏஞ்ஜல்ஸ் பள்ளி ஆசிரியர். வசந்தாக்கா பாம்பே செல்ல, நான் புனே
வரை சேர்ந்து சென்றேன். ரயிலிலும் பின்னர் அடுத்த வருடத்திலும், கிருபானந்த வாரியார்
கந்தசஷ்டி கவசத்தை வாசித்ததை விட அதிகமாக அந்த கருடனை வாசித்திருப்பேன்.
என் படிப்புலகில்,
கருடனுக்கு அடுத்த பெரிய நாயகன் பேண்ட்டம்
(Phantom) தான்- இந்திரஜால் காமிக்ஸ். தமிழில் வேதாளம் என்று பேண்ட்டம் கொஞ்சம் கொடூரமாக பெயர்சூட்டப்பட்டு பல பேண்ட்டம்
சித்திரக்கதைகள் வெளிவந்தன. ஓரிரண்டு வருடங்களுக்கு பின்னர் சூப்பர்மான் Superman,
பின்னர் பேட்மான் Batman டிசி காமிக்ஸ் (DC Comics) அறிமுகமாயினர். எனிட் ப்ளைட்டன்,
ஆந்தனி பக்கரிட்ஜ், ராபர்ட் ஆர்த்தர், பி.ஜி.வுட்ஹவுஸ், நிக் கார்ட்டர், ஜேம்ஸ் ஹாட்லி
சேஸ் என்று ஆங்கில நாவலாசிரியர்களை அடுத்த பல வருடங்கள் படிக்கத்தொடங்கினேன். பாடங்களிலும்
ஆங்கிலமே விரும்பி படித்த பாடம். பள்ளி திறக்கும்முன், பாடபுத்தகங்களை வாங்கி வந்த
முதல் நாள், மூல பாட புத்தகமாகிய குல்மொகர் வெளியீடு ப்ரோஸ் புத்தகத்தையும், அடுத்த
நாள், நாண்டீடெய்ல் என்ற விசித்திர தலைப்புக்கொண்ட நாவலையும் படித்துவிடுவேன். ஜூல்ஸ்
வெர்ண் எழுதிய உலகை சுற்ற எண்பது நாள்கள், வால்டர் ஸ்காட்டின் தாயத்து, அலெக்ஸாண்டர்
துமாவின் மாண்டே க்றிஸ்டோ சிற்றரசன், சார்ல்ஸ் டிக்கன்ஸின் இரு நகரங்களின் கதை எல்லாம்
ஆங்கிலத்தின் மேல் தீரா காதலையும், வியப்பையும், அந்த எழுத்தாளர்கள் மேல் சொல்லவொண்ணா
மரியாதையும் பெற்று தந்தன. என்ன வீரம், என்ன சாகசம். அக்கால ஐரோப்பிய வரலாற்றை புரிந்துகொள்ளும்
நுழைவாயிலாகவும் அவை பயன்பட்டன. நீலமணி (ப்ளூ கார்பங்க்கிள்) என்னும் ஷெர்லாக் ஹோம்ஸ்
சிறுகதை, ஓ ஹென்றி, சகி, கீ மாப்பசான், சோமர்செட் மாம் ஆகியோரின் சிறுகதைகளும் அபாரம்.
ரசிப்பு கடலில் மூழ்கினேன்.
ஆந்தனி பக்கரிட்ஜ்,
பி.ஜி.வுட்ஹவுஸ் பள்ளிக்கூட வாழ்க்கையை சேட்டையும் சிரிப்பும் கிரிக்கட் விளையாட்டும்
கலந்து தந்த பொக்கிஷங்கள். தெருவிலும் வீட்டெதிரே உள்ள மைதானத்திலும் கிரிக்கெட் விளையாடிய
எனக்கு அவையே அறத்துப்பால், காமத்துப்பால். பேண்டம், மேண்டிரேக், பிளாஷ் கார்டன், டிண்டின்,
சூப்பர்மேன் பேட்மான் கதைகள் கற்பனையின், அறிவியலின், தொழில்நுட்பத்தின் உச்சமாக, எதிர்கால
கனவுலகங்களாக தெரிந்தன. நிஜ வாழ்க்கையில் கருப்பு வெள்ளை டிவியும், கருப்பு டெலிபோனும்,
ரேஷன் கடையும், அம்பாசடர் பியட் காரும், மஞ்சள் ஆட்டோவும், இந்தியா எவ்வளவு பின்தங்கிய
நாடு என்றே உணர்த்தின.
தமிழ் கதைகள் எப்படி?
குமணன், ஔவை, பாரி, அதியமான் கதைகளை சிறுவயதில் படித்தாகிவிட்டது. சிலப்பதிகாரம் ராமாயணம்
எல்லம் யதார்த்த வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத ஏதொ பழைய கர்ணாடகம். எட்டாம் ஒன்பதாம்
வகுப்பில் படித்த கிரேக்க புராணங்களும், சிந்துபாது அலிபாபா போன்ற அரபு கதைகளும அதே
ரகம். ஆனால் பத்தாம் நூற்றாண்டில் நடந்த வால்டர் ஸ்காட் கதைகளும், பதினேழு பதினெட்டாம்
நூற்றாண்டில் நிகழ்ந்த ஜூல்ஸ் வெர்ண், அலெக்சாண்டர் தூமா, ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் புத்தம்புதிதாய்,
உற்சாகமாய், நவீனமாய், நவரசமாய் இருந்தன்.
அக்காலத்தில் சினிமாவில்
அணுவளவும் எனக்கு ஆர்வமில்லை. தப்பி தவறி பார்த்த சில காட்சிகளும் தாங்கமுடியவில்லை.
எல்லாமே கிராமம், பண்ணையார், “கற்பகம் உனக்கு ஒண்ணும் தெரியாது, உள்ளே போ”, ஓயா புலம்பல்,
முதுகிலே மொத்தும் “நகைச்சுவை”, “என்னதான் பட்டணம்னாலும் நம்ம கிராமம் மாதிரி வருமா”
என்ற ஓயாத வாய்ச்சவடால் – சகிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் காட்சி உண்டா, ஒரு நகர வாழ்க்கையின்
உற்சாகம் உண்டா... ஒன்பதாம் வகுப்பில்
ஆங்கில சினிமா பார்க்க ஆரம்பித்து ஜேம்ஸ் பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பழைய சார்லி சாப்லின்,
பார்த்து ஓயாத மிரட்சி, ரசனை தான்.
இந்த சூழ்நிலையில்
தமிழ் பாட புத்தகம், சிறுகதை. எட்டாம் வகுப்பு வரை என்ன சிறுகதை படித்தேன் என்றுகூட
நினைவில்லை. பின்னர் ஏதோ ஒரு வகுப்பில் வாழைப்பழச்சாமி மிளகாய்ப்பழச்சாமி என்று ஒரு
கதை. முதலிலிருந்து கடைசி வரை சுவையோ பொருளோ அற்ற அசட்டுத்தனத்தில் தாளித்து மூடநம்பிக்கையை
முந்திரியாய் தெளித்த வைத்த கதை. முழுவதும் முட்டாள்தனமாகவே இருந்தது. இது கதையே இல்லை,
இதை எப்படி மக்கள் ரசிக்கிறார்கள்? வசந்தகுமாரி மிஸ் சொன்னது மறக்கமாட்டேன் – பிரதாப
முதலியார் சரித்திரம் தான் தமிழில் வந்த முதல் நாவல்; கவி வடிவத்திலின்றி இயல் தமிழில்
தோன்றிய முதல் “இலக்கியம்”. இங்கிலாந்திலும் ப்ரான்சிலும் அதற்கு முன்னூறு நானூறு வருடங்களுக்கு
முன்னரே பிரமாதமான நாவல்களை சிறுகதைகளை எழுதத்தொடங்கிவிட்டனர். இதில் மரண இடி என்னவென்றால்
இந்த சிறுகதையின் ஆசிரியர் மகாகவி பாரதியார். இவரை மகாசிறுகதை பாரதியார் என்று ஏன்
யாரும் கொண்டாடவில்லை என்பது தெள்ளத்தெளிவு. ஆங்கிலேயர் பாரதியை கைது செய்த காரணம்
புரட்சி, விடுதலை என்று முழங்கியதற்கா, இந்த கதை எழுதியதற்கா என்ற சந்தேகம் பலமாக எழுந்தது.
பின்பு மயிலைக்காளை என்று ஒரு கதை. அப்பாடா, நமக்குதெரிந்த
மயிலாப்பூர் தானே மயிலை! – என்று படித்தால்… என்ன ஏமாற்றம்! காவேரிக்கரையில் ஏதோ கிராமத்தில்
கதை சென்றது. அந்த பிரதேசத்து மயிலாடுதுறையாவது தலைகாட்டியதா? இல்லை. காளை கிரிக்கட்
ஆடியதா? இல்லை. அட் லீஸ்ட் கிரிக்கட் மைதானத்தில் மேய்ந்து புல்லாவது தின்னதா? இல்லை.
முதல் பக்கத்திலேயே ஏதோ காட்டுக்கு சென்று ஒளிந்துக்கொண்டுவிட்டது. அப்புறம் அந்த மாடு
மேய்ப்ப்வன் கதை தான், காளை கதையல்ல. அப்பொழுதெல்லாம் ஒழுங்காக படிக்கவில்லையென்றால்,
வீட்டு பெரியவர்கள் “படிப்பு வரலையா படிப்பு வரலையா, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான்
லாயக்கு” என்று எரிந்து விழுவார்காள். இங்கென்னவென்றால் பாடமே மாடு மேய்ப்பவனைப்பற்றி.
இதை எழுதியவர்
ஏதோ கல்கி – இந்த விளக்கெண்ணெய் ஆசிரியருக்கும், பக்கங்களின் மூலையில் மன்னர் மந்திரி
ஜோக் வருமே அந்த கல்கி பத்திரிகைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கும் என்று சந்தேகம்.
ஆனால் மயிலைக்காளை கதையில் ஒரு மன்னர் மந்திரி ஜோக் கூட இல்லை. இவருக்கெல்லாம் ஏன்
பேனா பேப்பர் கொடுத்து நம்ம நேரத்தையும் வீணாக்குகிறது தமிழ் சமுதாயம்? சே! சரி சரி,
சுரக்காய்ச்சாமி, புடலங்காய்ச்சாமி என்றெல்லாம் படுத்தவில்லை. சூப்பர்மேன் கதையெழுதும்
எலியட் மேகின், கேரி பேட்ஸ், டிண்டின் எழுதும் ஹெர்ஜ் அளவு திறனில்லையாயினும், சுப்பிரமணிய
பாரதி அளவுக்கு இவர் மோசமில்லை என்ற ஒரு சின்ன சந்தோஷமே மிச்சம்.
ஆனால், அடுத்த
இடி. நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று ஒரு
கதை. இறந்துபோன ஒரு கைக்குழந்தையை புதைக்க கொண்டுவந்த மயானத்தில் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்று வெட்டியான் பாடிக்கொண்டே
குழித்தோண்டுகிறான். தமிழ் இலக்கியம் என்றாலே இழவு ஓலம் ஒப்பாரி என்று முழு வெறுப்பை
வளர்த்த கதை. நாலாறுமாதம் குழிதனை தோண்டி என்ற அடுத்த அடி, இருபத்திநாலு மாதக்காலமா,
அத்தனை நாள் ஏன் ஒருவன் குழிதோண்டவேண்டும் என ஒரு சக மாணவன் வினவ, நாலாறு என்பது பத்து
மாதம் என்றும் நாலையும் ஆறையும் கூட்டவேண்டும் பெருக்கக்கூடாது என்றும் தமிழ்தாத்தாவின்
நீண்ட விளக்கம். ஈரிரண்டு மூவைந்து என்று கம்பராமாயணம், கலிங்கத்து பரணி, வகையறா பழைய
செய்யுட்களில் வந்தால் ஈரிரண்டை பெருக்கி பத்து, மூவைந்து பெருக்கி பதினைந்து என்றெல்லாம்
இருக்க, இந்த பாடலில் மட்டும் ஏன் நாலையும் ஆறையும் கூட்டவேண்டும் என்று ஒரு விவாதம்
தொடர்ந்தது. பத்து மாதம் என்றாலும் குழிதோண்ட அதிகமல்லவா என்று இன்னொருவன் கேட்க, அதென்ன
வவுத்தில் பூச்சி என்று வெட்டியான் மனைவி சொல்கிறாள் என்று கேள்வி எழ, ஆசிரியர் பலவித
நமுட்டுச்சிறிப்பை சிதறி, இப்படி அப்படி கனைத்து, டேய் படவா என்றெல்லாம் திசை திருப்ப,
இருபத்தினாலு மாதம் தோண்டிய குழி எல்லாத் தமிழ் சிறுகதைகளையும் புதைக்க போதுமா என்று
என் சிந்தனையோடை தவழ்ந்தது. ஒரு சின்ன ஆறுதல். இந்த ஆண்டிக்கதை ஜெயகாந்தன் பாரதியைவிட
மோசமான எழுத்தாளர் என்பது உறுதி. என்ன இருந்தாலும் செந்தமிழ் நாடு, தீராத விளையாட்டு
பிள்ளை, ஓடி விளையாடு பாப்பா, அச்சமில்லை அச்சமில்லை என்று அற்புதமான பாடல்களை இயற்றியவனல்லவா
பாரதி.
ஆக மொத்தம் தமிழ்
இலக்கியத்திற்கு ஒரு கும்பிடு. நல்லவேளை இந்த விளக்கெண்ணெய் சிறு கதைகளோடு தப்பித்தேன்,
நாவல் எல்லாம் படித்தால்? நாறிடும். ஆங்கிலம் என்ன ஒரு அற்புத மொழி, நேற்று வந்த புதுமொழியாயினும்
ஆங்கிலேயேரின் கற்பனை திறனும், சொல்வளமும், கதைகளின் நடையும், சாகசமும், அறிவியலும்,
அற்புதமும், சிரிப்பும், நகைச்சுவையும், திகிலும், மர்மமும், வீரமும், சூழ்ச்சியும்,
சிந்தனையும், செயலும், இந்திய நாட்டில் எந்த மொழியிலும் இருப்பது போல் தெரியவில்லையே.
தமிழில் சத்தியமாக இல்லை, இருந்தால் இதைப்போன்ற திராபை கதைகளையா படிக்கவைப்பார்கள்?
மாண்டே கிறிஸ்டோ எங்கே மயிலைக்காளை எங்கே? ஜூல்ஸ் வெர்ணின் உலகை சுற்றும் ஃபினியஸ்
ஃபாக் எங்கெ, ஜெயகாந்தனின் வெட்டியான் எங்கே? வேற்று கிரகத்தில் சாதிக்கும் சூப்பர்மேன்
எங்கே, வாழைப்பழச்சாமி எங்கே? தட்டி தடுமாறி வெறுத்து சலித்து எழுத இயலாமல் தவழ்ந்து
நொந்து அப்படியிப்படி பன்னிரண்டாம் வகுப்பில் 200 க்கு 80 மதிப்பெண் பெற்று தமிழிலிருந்து
விடுதலை பெற்றேன். இனிமேல் இஞ்ஜினியரிங்க்தான், கம்ப்யூட்டர், ராக்கெட், ரோபோ, கிராபிக்ஸ்,
உலக அற்புதங்கள் கைவிறலில்!
ஸ்ரீவில்லிப்புத்தூர்
கலசலிங்கம் கல்லூரியில் சகமாணவர் முக்கால்வாசி தமிழ் மீடியம் பள்ளிகளில் படித்துவந்தவர்.
இது மதறாஸ பட்டணம் அல்ல. நான் தமிழ் மொழியோடு பட்ட பல இன்னல்களை அவர்க்ள் ஆங்கில மொழியிடம்
பட்டனர். கல்லூரியில் அரையுங்குறையுமாக ஆங்கிலம் கற்ற ஒரு சில ஆசிரியர்களின் ஆங்கிலமே
அவர்களுக்கு புதைக்குழியாக இருந்தது. சென்னை, கேரள, ஆந்திர மாணவர்களோடு மட்டும் ஆங்கிலத்திலும்
மற்றவரோடு பெரும்பாலும் தமிழிலும் பேசுவேன். ஆங்கிலத்தில் புத்தகம் படிப்பவர் சிலரே,
ஆனால் தமிழில் படிப்பவர் பலர்; அவர்களுக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா என்று தெரிந்தது.
அவர் ரோபோ கம்ப்யூட்டர் கதையெல்லாம் எழுதவாராம். கமல்ஹாசன் நடித்து அப்பொழுது வெளியான்
விக்ரம் படம் பார்த்திருந்தேன். அதை எழுதியவர்
சுஜாதாவாம். சலாமியா பாஷை, என் ஜோடி மஞ்ச குருவி, ஒரு கம்ப்யூட்டரைக்கூட ஒழுங்கா காட்டாத
டைரக்டர், அமெரிக்கா டிவியில் வருவதைவிட கேவலமான ராக்கெட் எல்லாப்பழியும் சுஜாதாவுக்கே.
சுஜாதா நூல்களை தீண்டக்கூடவில்லை.
ஆனால் ஏதோ விபரீதத்தில்
அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவல் கிடைத்தது.
கல்லூரி சேர்ந்த ஆரம்பக்காலத்தில் ஆங்கில புத்தகமேதும் கையில் கிட்டவில்லை என்பதே மூலமுதல்
காரணமாக இருக்கலாம். முதல் இரண்டு மாதம் ரேக்கிங்க் பிரச்சினை சூழ்நிலையால் ஹாஸ்டலை
விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போக வாய்ப்பில்லை. ஏன் படிக்கத்தொடங்கினேன் என்று நினைவில்லை.
ஏன் நிறுத்தவில்லை என்றும் நினைவில்லை. பக்கம் பக்கமாக படிக்க படிக்க மயான அழுகையெல்லாம்
மிடில்கிளஸ் அபார்ட்மெண்ட்டில் அழலாம் என்பதை அந்த நாவல் வெளிப்படுத்தியது. கண்ணீர்
என்ற பெயர்தான் அச்சுபிறழ்ந்து வால்நீண்டதோ என்ற சந்தேகம். கே பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் சில் காட்சிகளை
பார்த்த போது, அதற்கு கண்ணீர் கண்ணீர் என்று
பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றியது. வெரும் கண்ணீர் மட்டுமல்ல, நிரைய இருமலும் உண்டு.
இது 1980களில்.
ஜெயலலிதா சென்னைக்கு வீராணம் திட்டம் கொண்டுவந்தது 2004இல் தான். 1980களில்
கருணாநிதி ஆட்சியின் வீராணத்திட்ட ஊழல் சான்றாய், அகற்றாமல் எம்ஜிஆர் ஆட்சிக்காலம்
முழுதும் சென்னை சாலைகளில் கொலுவீற்றிருந்தன. மீண்டும் கருணாநிதி ஆட்சி வந்தபின் அவை
அகற்றப்பட்டன என்பது ஞாபகம்; ஆனால் ஒரு பத்து பன்னிரண்டு ஆண்டுகள் எல்லா தமிழ்ப்படத்திலும்
வறுமையை காட்ட இந்த வீராண குழாய்களில் குடியிருப்பவர்களாக சிலரை காட்டுவர். அப்பொழுது
ஒரு சிலவீடுகளில் கூரைமேல் தண்ணீர் தொட்டி, தண்ணி ஏற்ற மோட்டார் எல்லாம் இருக்கும்.
எங்கள் கோடம்பாக்கம் வீட்டில் ஒரு கிணறும், ஒரு கைப்பம்பும் தான் உண்டு. ஒரு நாள் விட்டு
ஒரு நாள் குழாயில் தண்ணீர் விடுவார்கள், கைப்பம்பு அடித்து தண்ணீர் பிடித்துக்கொள்ள
வேண்டும். மழைக்காலத்தில் ஏரிகள் நிரம்பியுள்ளபோது காலை ஆறு மணிமுதல் எட்டு மணி வரை
தண்ணீர் வரும். வீட்டில்வேலைசெய்பவர் யாரேனும் இருந்தால் அவர்கள் நாலைந்து தவலைகள்
நிரம்ப பம்புக்குழாயில் தண்ணீர் இரைப்பார். எங்கள் வீட்டில் வேலைக்காரி சில மாதம் உண்டு
சில மாதம் இல்லை குடும்பத்தலைவி இல்லாத வீட்டில் இது சகஜம். அப்பாவோ, நாங்களோ தான்
அடித்துக்கொள்ளவேண்டும். புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் குறைந்தால் மெட்ரோவாட்டர்
முருங்க மரத்தில் ஏரிக்கொள்ளும். விடிகாலை நாலிலிருந்து ஆறு மணிவரை குழாயில் தண்ணீர்
வரும். எழுந்து அடிக்கவில்லை என்றால் அக்கம்பக்கத்து வீட்டில் ஏதோ பம்பில் வந்தால்
கெஞ்சி நாமே அடித்துக்கொண்டு, வாளி குடத்தோடு வீடு திரும்பவேண்டும்.
சோசலிசம் தலைத்தோங்கிய
காலம்; மோட்டார் எல்லாம் சொகுசு பொருள். இந்த இருபது லிட்டர் பாட்டில் டெலிவரி கம்பெனி
ஏதுமில்லை.
கிட்டத்தட்ட அசோகமித்திரனின் தண்ணீர்
கதை நபர்களின் வாழ்க்கை, இருமலுக்கு 80 சதவிகிதம் தள்ளுபடி போக, எங்கள் தினசரி வாழ்க்கை.
இதில் எங்கே கதை, இலக்கியம் எல்லாம். பார்க்கவே சகிக்காத ஆனால் ஜனாதிபதி பரிசி பெறும்
மலையாள வங்காள கலைச் சினிமா போல் இந்த அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருக்கிறார் என்பது
மட்டும் திண்ணம். அமெரிக்காவில் எல்லார் வீட்டிலும் குழாயில் தண்ணி வருமாம். பம்பு
அடிக்கவேண்டாம். சின்டெக்ஸ் டாங்கில் நிரப்பி வைக்கவேண்டாம். துணி தோய்க்க வாஷிங் இயந்திரம்,
பாத்திரம் தேய்க்க டிஷ்வாஷர்….நான் அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் கம்ப்யூட்டர்,
ரோபோ, ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் எல்லாம் எதிர்காலத்து கனவுகள்; ஆனாலும், அமெரிக்காவுக்கு
சென்றால் இதெல்லாம் சாதாரண குடும்பத்தில் கூட வீட்டிலேயே உள்ள கருவிகள் என்று நினைத்தப்போது,
அந்த தண்ணீர் கதை பாரதியார் மேலும், கல்கி
மேலும், ஜெயகாந்தன் மேலும் வளர்ந்திருந்த இலக்கிய வெறுப்பு தணிலில் நெய்யூற்றியது.
இந்த கதையை சலாமியா பாஷையிலேயே எழுதியிருக்கலாம், சுஜாதா ரசிகர்களாவது மெய்சிலிர்த்திருப்பார்கள்.
என்னவோ ரோபோ, கம்ப்யூட்டர்,
வாஷிங் மெஷின், குழாயில் தண்ணி எல்லாம் அமெரிக்காவின் நிகழ்காலமாகவும் பாரதத்தின் தூரத்து
எதிர்காலமாகவும் தோன்றின.
1991ல் அமெரிக்கா
சென்ற பின் தமிழ் மேல் கொஞ்சம் ஆர்வமும் ஏக்கமும் பிறந்தன. 2000ல் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தேன். நான் முழுதாக படித்த முதல் நாவல்.
பின்குறிப்பு 1
2000ல் சென்னையெங்கும்
சிண்டெக்ஸ் டாங்குகள் தான் சென்னையின் நீர்பற்றாகுறையின் பிரதான சின்னம். நடுத்தர்
பகுதிகளிலும் எல்லாத்தெரு ஓரங்களிலிம், ஒரு சிமெண்ட் திட்டின் மேல் ஒரு சிண்டெக்ஸ்
டாங்க் இருக்கும். எம்ஜிஆர் இறந்த பதினைந்து வருடங்களுக்கு பின்னும் சென்னையின் தண்ணீர்
பிரச்சனை மாறவில்லை. தெருவெல்லாம் தண்ணீர் லாரி. 2004ல் ஜெயலலிதா ஆணையில் மழை நீர்
சேகரிப்பும், வீராணம் திட்டமும் நிறைவேரின. கோர்ப்பாசேவ், நரசிம்ம ராவ் தயவில் குழாய்களும்,
வாஷிங் மெஷினும் பாரத நாட்டின் பல கோடி குடும்பங்களின் நிகழ் கால நிஜங்களாயின.
பின்குறிப்பு 2
செம்பை வைத்தியநாத
பாகவதர் தியாகராஜ ஆராதனைக்கு தலைமை தாங்கி மற்ற பாடகர்களோடு கச்சேரி நடத்திய போது,
ஒருவர் வந்து அவரிடம் கேட்டாரம், “மாமா, நானும் பாடணும். நீங்க தான் பெரிய மனசு வெச்சு
எனக்கு வாய்ப்பு தரணும்,” என்றாராம். “இப்பவா? இங்கயா?” என்று செம்பை வாய்பிளக்க,
“ஆமாம் ஆமாம். ரொம்ப நன்றி மாமா. அடுத்த பாடல் நான் பல்லவி பாட ஆரம்பிச்சு நீங்க எல்லாரும்
சேர்ந்த்துக்கணும்,” என்று தொடர்ந்தாராம். பாவம் செம்பைக்கு நாவே எழவில்லை. அடுத்து
அந்த நபர் சொன்னதே பொன்னில் பொறிக்க வேண்டிய சாசனம். “முன்னாடி நாலு கட்டைல பாடுவேன்.
இப்பல்லாம் இரண்டு கட்டை தான் வருது.”
செம்பையின் பதில்
: “இரண்டு கட்டையெல்லாம் போதாதே.”
ம்ம்ம். இரண்டு
கட்டை போதாது.