Friday 29 April 2022

கோயம்புத்தூர் சபாபதி – சூரரை போற்று

எடிசனையும் ஜேம்ஸ் வாட்டையும் எலான் மஸ்கையும் பலரும் அறிவர். அப்துல் கலாமும் ஜகதீஷ் சந்திர போசும் பலரும் அறிந்தவர்களே. கோயம்புத்தூர் சபாபதி? எனக்கும் புதியவரே. வராகமிகிரன் அறிவியல் மன்றத்தில், வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தன் உரையில், இட்லிமாவு அறைக்கும் இயந்திரத்தை உருவாக்கியவர் கோயம்புத்தூர் சபாபதி, என்று சொன்னப்போது ஒரு நிமிட உவகை.

சில வருடங்களுக்கு முன்பு, ஹான்ஸ் ரோஸ்லிங்க் என்பவர் தன் உரையில் துணித்தோய்க்கும் இயந்திரத்தை பற்றிப் பேசியிருந்தார். வீட்டுவேலைகளில் அதிகம் உழைத்த பெண்களுக்கு (ஐரோப்பிய அமெரிக்க பெண்களுக்கு) அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று விளக்கினார். ஒரு நாளில் ஒரு மணிநேரம் வரை பெண்கள துணிகளை தோய்க்த்து ஒரு காலம். துணித்தோய்க்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த ஒரு மணிநேர உழைப்பும் அசதியும் அவர்களுக்கு மிஞ்சியது. அந்த ஒரு மணிநேரம் புத்தகமோ நாளிதழோ படிக்கவோ, கலை ரசிக்கவோ, இசை கேட்கவோ, ஓய்வெடுக்கவோ லாபமாகிய நேரம். 

கல்லூரி நாட்களில் நானும் சக மாணவர்களும் சொந்த துணிகளை வாரம் ஒரு முறை தோய்த்தது மறக்கவில்லை. பத்து வயதிலேயே அம்மா துணிதோய்க்க கற்றுக்கொடுத்தார். வீட்டில் வேலைக்காரி நின்றுவிட்டால் நானோ என் தங்கையோ துணி தோய்ப்போம். 1990களில் தான் துணி தோய்க்கும் இயந்திரம் வாங்கினோம். (அதற்குள் நான் கல்லூரி படிப்பிற்கு அமெரிக்கா சென்றுவிட்டேன்). கிட்டத்தட்ட அதே காலத்தில் இட்லி மாவு கிரைண்டரும் வாங்கினோம். நான் அமெரிக்கா செல்லும் போது துணிகளுடன் ஒரு பெட்டியும், என் மாமா குடும்பத்துக்கு ஒரு இட்லி கிரைண்டரும் எடுத்து சென்றேன். வாரயிறுதியில் அங்கே தங்கும் போது பலமுறை அதன் பலன் கிடைத்தது. அமெரிக்காவில் துணிதோய்க்கும் அவஸ்தை இல்லை. லாண்ட்ரோமாட் என்று கடைகளில், சுமார் இருபது முப்பது துணிதோய்க்கும் இயந்திரங்களும், காயவைக்கும் இயந்திரங்களும் உள்ளன. ஒன்றரை டாலருக்கு காசு போட்டால் ஒரு கூடை துணிகளை தோய்த்துவிடலாம்; காயவைத்து விடலாம். அமெரிக்காவில் எந்த வீட்டிலும் குடியிருப்பிலும் கயிறுகட்டி துணிக்காயவைக்கும் வசதி கிடையாது. மழை பனி பிரதேசங்களில் மட்டுமல்ல, எத்தனை வெயில் அடிக்கும் ஊராயினும், மின்சார இயந்திரம் வைத்து ஈரத்துணிகளை காயவைக்கவேண்டும். உலக வெப்பமய பூச்சாண்டி கதையெல்லாம் மற்ற தாழ்வான மக்களுக்கு சொல்லப்படும் போலி உபதேசம். ஏறக்குறைய அனைத்து அமெரிக்க கானடா நகர கிராமங்களிலும் கயிறு கட்டி துணி காயக்கவைக்ககூடாது என்று சட்டமே உண்டு. வீட்டு பால்கணியிலோ, தோட்டத்திலோ துணிகாய போட்டால் வருமையின் சின்னம், சமூக அவமானம் என்று இந்த இயந்திரங்கள் வந்த காலத்தில் சட்டங்கள் இயக்கப்பட்டன. கார்பன் அசுரனிடமிருந்து உலகை காப்பாற்ற அவதரித்த அல் கோர் முதல் உலகை உய்யவைக்க உதித்த கிரெட்டா துன்பர்க் வரை, எலான் மஸ்க் முதல் திருக்குறிப்பு தொண்டர் வரை “யாகாயவைத்தாலும் துணிக்காய வைக்க துணியாதே” என்பது எழுதி வைத்த சட்டம். நிற்க. (ஐரோப்பா, சிங்கப்பூர், சீனாவில் இந்த வகை சட்டங்களில்லை.)

ஆனால் இந்தியர்களை தவிர எவரும் இட்லி அறைப்பதில்லை.

எடிசன் மின்விளக்கை படைத்து, வீடு தோறும் கம்பி நீட்டி, அதாவது மின் கம்பி வழியாக மின்சார வசதி அமைத்துக்கொடுத்த சில ஆண்டுகளிலேயே, துணி தோய்க்கும் இயந்திரம், பழரசம் பிழிய மிக்ஸி (பிளெண்டர் என்பார்கள்) எல்லாம் வந்துவிட்டன. 1900களிலேயே இவை அங்கு விற்பனைக்கு வந்தன. இந்தியாவில் 1970களில் தான் இம்மாதிரி வீட்டில் பயன் படும் இயந்திரங்கள் நடுத்தர மக்களுக்கும் கிடைக்கும் அளவுக்கு மலிவாக புழங்கின. மிக்ஸி முதல் வாஷிங் மெஷின் வரை யாவும் மேற்கத்திய படைப்புகளே. இங்கே நாம் செய்ததெல்லாம் லைசன்ஸ் பெற்று காப்பியடித்தது. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே டீ காபி சக்கரை மோகமும் அதனால் ஆசிய நாடுகளை ஆக்கிரமித்து போர்களெல்லாம் நடத்தி ஐரோப்பியருக்கு ஏனோ இட்லிதோசை மேல் மோகம் பிறக்கவில்லை. ஆரியப்படையை நெடுஞ்செழியன் கடந்தபோதும், இமயத்தின் வரம்பை நெடுஞ்சேரல் இரும்பொறை அடைந்தபோதும், அதெல்லாம் வேண்டாம் கங்கை கரை போதும் என்று அளவோடு படையெடுத்த ராஜேந்திர சோழனும் கருணாகர தொண்டைமானும் இட்லி இட்ட சோழன் என்றோ பலதோசை பாரளித்த பல்லவன் என்றோ புகழ் பெறவில்லை. கோனார்க்கை கோயிலையும் எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டிக்கொடுத்து பலபுதிர்களை வைத்து சென்று வேற்றுகிரகவாசிகளுக்கும் இட்லிகிரைண்டர் படைக்க ஏனோ இதயம் இரங்கவில்லை. கப்பல் மோட்டார் பார்த்து சிவி ராமனுக்கும், விமான பிரொப்பல்லர் பார்த்த சந்திரசேகருக்கும், ஆயுதமும் காகிதம் செய்ய அறிவுரை பாட்டெழுதிய முண்டாசுக்கவி பாரதிக்கும், “கடகடா குடுகுடு நடுவிலே மோட்டார்” என்று யோசனை தோன்றவில்லை. தென்னாட்டு எடிசன் ஜிடி நாயுடுவுக்கும் தோன்றவில்லை. நல்லவேளை, அவர் ஊரான கோயம்புத்தூர் சேர்ந்த சபாபதி சற்றே மாறுபட்டவர். இட்லி தோசை மாவு அறைக்க ஒரு மோட்டாரை பொருத்தி கல்லை செதுக்கி கருவி செய்யலாம் என்ற உன்னத எண்ணம் தோன்றி, செயலில் இரங்கும் ஊக்கமும் பிறந்தது.

சபாபதியின் முக்கியமான தகுதி அவர் எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார் என்பதே. கில்பர்ட் டோரி என்ற ஆங்கிலேயரின் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் என்ற கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார். அங்கே கிடைத்த பயிற்சியில் டோரியின் ஆதரவும் முக்கியம் என்று அவர் குடும்பத்தார் நம்புவதாக இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை கூறுகிறது. 1955ல் முதலில் உருவாக்கி, 1960ல் கல்யாண பரிசாக தன் மனைவி இந்திராணிக்கு முதல் இட்லி கிரைண்டரை அளித்ததாகவும், அந்த அம்மையார் அதை தெரு மக்கள அனைவரும் பயன் படுத்த அனுமதித்தார் என்றும், அதே கட்டுரை மேலும் தெரிவிக்கின்றது.

பெண் விடுதலைக்கு இந்த இயந்திரங்களின் முக்கியத்துவம் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்திலும் பெயர் பெற்றுவிட்டது

லக்ஷ்மி கிரைண்டர்ஸ் என்ற கம்பெனியை தொடங்கிய கிருஷ்ணமூர்த்தி, பின்னர் சாயும் கிரைண்டரை படைத்த துரைசாமி, மேசையில் இயக்கக்கூடிய கிரைண்டரை அறிமுகப்படுத்திய எல்.ஜி.வரதராஜ், என்று கோயம்புத்தூரில் ஒரு கம்பன்  இளங்கோ வள்ளுவர் என்ற வரிசையில் அவதரித்தனர் என்று இந்த கோவைப்போஸ்ட் கட்டுரை தெரிவிக்கிறது. அடுத்த முறை கோவை சென்றால் இவர்களையோ இவர்கள் தொழிற்சாலைகளையோ காணமுயற்சிக்கவேண்டும். நாடறியவேண்டியவர்கள் இவர்கள்.

சவீதா கல்லூரியில் இன்வென்ஷன்ஸ் என்று ஒரு  வகுப்பு நடத்துகிறேன். சபாபதி பற்றி ஒரு வார்த்தை பேசி, அவருக்கு நன்றி சொல்கிறேன்.


விசைஞர் கட்டுரைகள்

Tech advances in a traditional city - Venkatesh Ramakrishnan VSF lecture


1 comment:

  1. Ur style of writing in Tamil is very interesting, full of wit & wry humour. Exemplified by the above piece.
    A marked contrast from ur writings in English! 😊

    ReplyDelete