தியாகராய நகர் தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அரங்கில் இந்திரா பார்த்தசாரதிசிலப்பதிகாரத்தை பற்றி பேசிய நாள். கடைசியில் அவர் மேடை இறங்கி ரசிகர்களை சந்தித்தப்போது, ஒருவர் “என்னை தெரிகிறதா?” என்று கேட்டார். பார்த்தசாரதி தயங்க, அவர் “சார்வாகன்” என்று லேசாக சிரித்துக்கொண்டே தன் பெயரை தெரிவித்தார். அது அவரது இயற்பெயர் அல்ல, சிறுகதைகள் எழுத சூட்டிக்கொண்ட புனைப்பெயர். தன்னோடு வந்திருந்த தன் சகதோரரை அறிமுகம் செய்தார்.
சிலப்பதிகார சிக்கல்கள்- இந்திரா பார்த்தசாரதி உரை சார்வாகன் முன்வரிசை, மோகன் ஹரிஹரன் நடு வரிசை மியூசிக் கண்ணன் பின் வரிசை |
தம்பி கொஞ்சம்
நடிகர் நாசர் சாயல். அப்பொழுது அவர் பெயர் நினைவில்லை; ஆனால அந்த ஆண்டு இறுதியில் த.ப.ஆவின்
கலையுலாவில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து, பேரா சாமிநாதனிடம் சில தகவல்களை கேட்டுக்கொண்டார்.
அக்டோபாரில் கலையுலா உரைகள் தொடங்கியபோது அமெரிக்காவில் இருந்து ஈமெயில் அனுப்பி, தன்
உதவியாளரை (அவர் பெயரும் சாமிநாதன்) அனுப்பி வைத்தார். வாராவாரம் பினாமியாக பாவம் அந்த
சாமிநாதன் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
ஓரிரண்டு மாதம்
கழித்து நேரிலேயே வந்தார் சார்வாகனின் தம்பி. தன் பெயர் ஹரிஹரன் என்றார். மெதுவாக,
ஹரிஹரன் என்பது தனது தந்தையின் பெயர், ஆனால் தானும் தன் மூன்று சகோதரர்களும் தங்கள்
இயற்பெயரை சொல்லாமல் தந்தை பெயரான ஹரிஹரன் என்றே அறிமுகம் செய்வது வழக்கம் என்றார்.
என் பெயர் மோகன், நான் ஒரு ஆர்கிடெக்ட் என்றார்; சகோதரர் சார்வாகன் என்றார். அவரை இந்திரா
பார்த்தசாரதி கூட்டத்தில் பார்த்த நினைவிருக்கிறது என்றேன். திருநெல்வேலி சுற்றியுள்ள
தென்பாண்டி தலங்களுக்கு அந்த ஆண்டு கலையுலா. ஒரு சில சொதப்பல்களாயினும் மகிழ்வோடு கலந்துகொண்டார்.
அடுத்த பல ஆண்டு கலையுலாவிலும் கலந்துகொண்டார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகளில்
மாதாமாதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகநூலில் நட்பாயினோம்.
கூவம் நதிக்கரையில் செஞ்சி பெருமாள் கோவில் |
எழுத்தாளர் வெங்கடேஷ்
ராமகிருஷ்ணன் தொடங்கிய கூவம் கலாச்சார வரைப்பட திட்டத்தில் கூவம் நதிக்கரை வரலாற்று
சின்னங்களை தேடி பயணங்கள் தொடங்க, அதிலும் மோகன் ஹரிஹரன் பங்கு கொண்டார். நான் ஒரு
மாதம் அமெரிக்க பயணம் செல்வதை கேட்டு, என் மகன் மருமகள் லாஸ் ஏஞ்ஜலீசில் உள்ளனர்; என்
மகள் மருகன் பிலடல்பியாவில் உள்ளனர், அங்கே சென்றால் நிச்சயம் அவர்களை பார்க்கவும்
என்று உபசரித்தார். ஆறு ஏழு மாதங்கள் பழக்கத்தில் அவருடைய நட்புணர்வும் விருந்தோம்பலும்
வியக்கவைத்தது. லாஸ் ஏஞ்சலீசில் அவர் மகனை பார்க்க இயலவில்லை. ஆனால் அமெரிக்க தலைநகர்
வாஷிங்க்டனுக்கு சென்று என் உறவினன் ராமாநுஜனுடன் ஒரு வாரம் நானும் என் தம்பி ஜயராமனும்
தங்கினோம். பிலடெல்பியாவிற்கு சென்று பெஞ்சமின் பிராங்கிளின் அருங்காட்சியகம் பார்க்கவேண்டும்
நியூ ஜெர்சிக்கு சென்று தாமஸ் எடிசனின் ஆராய்ச்சிசாலை பார்க்கவேண்டும் என்று எனக்கு
அந்த சமீபத்தில் ஆர்வம் பெரிதும் வளந்திருந்தது. 1990களில் அமெரிக்காவில் வாழ்ந்த போதே
கொஞ்சம் ஆசை; ஆனால அப்பொழுது விடுமுறை கிடைத்தால் உறவினர்களை பார்க்கும் ஆசையும் இயற்கை
காட்சிகளை பார்க்கும் ஆசையும் அதிகம் இருந்ததால் அங்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு
திரும்பிய பின் கலை இலக்கிய வரலாற்றின் மீது வந்த ஆர்வம் போல் அறிவியல் தொழில்நுட்ப
வரலாறு மீதும் ஆர்வம் சிந்தை வனத்தில் அக்னிக்குஞ்சாய் தணல் எரிந்தது. பிலடெல்பியாவிக்கு
ஆர்த்தி அருண் இல்லத்திற்கே அன்புடன் வரவழைத்தனர். அவர்கள் சுட்டி குழந்தைகளின் துடிப்போடு,
ஒரு நாள் பெஞ்சமின் பிராங்கிளின் வாழ்ந்த இல்லத்தையும் அவருடை அறிவியல் படைப்புகளையும்
பார்த்தோம்.
பிலடெல்பியா - 2015ல் ஆர்த்தி அருண் குழந்தைகளோடு நான், ஜெயராம், ராமானுஜன் |
முதல் நாள் இரவு
அவர்கள் இல்லத்தில் விருந்து. தந்தை மோகன் வரைந்த ஓவியங்கள் சுவர்களை அலங்கரித்தன!
விசித்திரம் என்னவென்றால் திருவான்மியூரில் உள்ள மோகன் சித்ரா தம்பதியினர் இல்லத்துக்கு
செல்வதற்கு முன்பே பிலடெல்பியாவில் உள்ள ஆர்த்தி அருண் இல்லதிற்கு நான் சென்றதே.
இந்தியாவிற்கு
வந்த பின் தானும் தன் மனைவியும் எகிப்து சுற்றுலா பயணம் செல்வதாக கூறினார். என்னையும் அழைத்தார். போக ஆசை
தான். ஆனால் ஒரு மாத அமெரிக்கப் பயணத்திற்கு பின் என் பயண ஆவல் குறைந்திருந்தது. ஆனால்
தயக்கத்துடன் அழைப்பை மறுத்துவிட்டேன். பெரிய இழப்பாக இன்று தோன்றுகிறது. கூவம் பயணங்களிலும்
பின்னர் அடையாறு பயணங்களிலும் சந்தித்துக்கொண்டோம். சார்வாகனோடு ஒரு சந்திப்புக்கு
அழைத்தார், அதற்கு செல்ல முடியவில்லை; மற்றொரு இழப்பு.
தான் பிறந்த ஆரணிஎன்ற ஊரைப்பற்றி நவம்பரில் த.ப.அ-வில் மோகன் ஹரிஹரன் ஒரு உரையாற்றினார். டிசம்பர் மாதம்
நடந்த பேச்சுக்கச்சேரியில் கலந்து கொண்டு மிகவும் ரசித்தார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்கு
ஒரு பெரிய தொகையை நன்கொடையாய் அளித்தார்.
ஆர்கிடெக்ட் ஸ்ரீநிவாசன்
என்று தன் குருநாதரை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். தமிழ்நாட்டில் பல சினிமா அரங்ககளை
வடிவமைத்தவர் அந்த ஸ்ரீநிவாசன். சவீதா பலகலைகழகத்து நிறுவனர் மற்றும் சான்சிலர் வீரையன்
அவர்களோடு மோகன் அவர்களுக்கு நாற்பது ஆண்டு நட்பு. வீரையனின் மகளே, டாக்டர் சவீதா.
ஸ்ரீநிவாசனின் பொதுப்பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்திய மோகன்,
சவீதா கல்வி நிறுவனங்கள் சாதனையாளர்களை கௌரவிக்க நடத்திய விழாவில், குருநாதர் ஸ்ரீநிவாசனுக்கு
ஒரு சிறப்பு விருது வழங்க சிபாரிசு செய்தார். சான்சிலர் வீரையன் அந்த ஆசையை நிறைவேற்றி
வைத்தார்.
அவர்கள் “தி பியூப்பில்”
என்ற ஒரு பள்ளிக்கூடத்தையும் நடத்துகின்றனர். அதற்கு ஆர்க்கிடெக் மோகன் ஹரிஹரன் தான்.
அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க, அதன் கட்டுமானத்தின் பல பிம்பங்களை விளக்க ஒரு கட்டிட
உலா நடத்தினார்; மிகச்சிறப்பான அனுபவம். அரைகளுக்குள்ளே வரும் இயற்கை வெளிச்சத்திலிருந்து,
வெப்பத்தணிக்கைக்கு ஏற்ற செங்கல், குழந்தைகளின் மனம் கவரும் வண்ணங்கள், ஓவியங்கள் சித்திரங்கள்,
என்று பல சித்தாந்தங்கள் மிளிர்ந்த கலை. த.ப.அ மற்றும் அது போன்ற கலை மரபு பேச்சாளர்கள்
சவீதா பள்ளி மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சிபாரிசு செய்தார். டாக்டர் சவீதா அவர்களே
இதை நிறைவேற்றினார். பேராசிரியர் சாமிநாதன், பத்ரி சேஷாத்ரி, நான், மற்றும் பல கலை
ஆர்வலர்கள் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினோம்.
பியூப்பில் பள்ளியில் மோகன் ஹரிஹரன் விளக்கம் |
பியுப்பில் பள்ளியின் செங்கல் கட்டுமானமும் நீச்சல் குளமும் |
2017ல் பியுப்பில்
பள்ளி ஆண்டு விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். நான் மயிலை சி.ஐ.டி
காலனி தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்தப்போது என் பெற்றோர் சிறப்பு விருந்தினராய்
அழைக்கப்பட்டனர். அந்த கௌரவம் எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. சவீதா
கல்லூரியோடும் இதனால் தொடர்பு ஏற்பட்டது. சவீதா பொறியியல் கல்லூரி இயக்குனர் மருத்துவர்
ராஜேஷ், டாக்டர் சவீதாவின் கணவர். அவர்களது அழைப்பில் முதலாமாண்டு இஞ்சினியரிங் மாணவர்களின்
ஓரியண்டேஷன் விழாவில் உரையாற்றினேன்.
இதற்குள் வராகமிகிரன்
அறிவியல் மன்றம் தொடங்கியதால், கட்டுமான கலை பற்றி மோகன் அவர்களை உரையாற்ற அழைத்தோம்.
சிறப்பாக உரையாற்றினார். அவரது மற்றொரு மூத்த சகோதரர் கர்ணல் ரமணி ஹரிஹரன் கூட்டத்திற்கு
வந்திருந்தார். ராணுவ உளவுத்தொழில் பற்றி தான் ஒரு உரையாற்ற தயார் என்றார்;
பின்னர் தமிழிலேயே உரையளித்தார். இளைய சகோதரர் சிவகுமார் ஹரிஹரன் த.ப.அ-வின் சாஞ்சி-மத்திய
பிரதேச கலையுலாவில் கலந்துகொண்டார். சமீபத்தில் அவர் நிர்வகிக்கும் பாபாஜி பள்ளிக்கூடத்தில்
என்னை பேச அழைத்தார். இப்படி அந்த குடும்பத்தோடு நீளமாக அகலமாக உறவு வளர்ந்தது.
வராகமிகிரன் அறிவியல்
மன்றத்தில் நாங்கள் நடத்திய இந்திய வானியல் கணித வகுப்பிற்கு, டாக்டர் ராஜேஷ், டாக்டர்
சவீதா, இரு மகள்களோடு வந்து சேர்ந்துகொண்டனர். ஆடிப்போய்விட்டேன். அடிக்கடி மயிலையில்
நடக்கும் த.ப.அ நிகழ்வுகளுக்கும் கோட்டூர்புரத்தில் நடந்த வ.அ.ம நிகழ்வுகளுக்கும் அவர்கள்
வருவதுண்டு. கல்வியிலும் கலையிலும் மரபிலும் அவர்களுக்குறிய ஆர்வம் அசாத்தியம். இவ்வார்வத்திற்கு
மோகன் ஹரிஹரன் ஒரு முக்கிய தூண்டுகோள்.
சவீதா கல்லூரி வளாகத்தில் ஒரு முருகன் கோயில் கட்டினர். சிலைகளையும் மாடியில் உள்ள சிற்றாலயங்களையும் ஸ்தபதிகள் செய்தனர். ஆனால் கோயில் வளாகத்திற்கு மோகன் தான் ஆர்க்கிடெகட். கும்பாபிஷேகத்திற்கு முன் அவர் தலைமையில் ஒரு உலா நடத்தினார். அருகே கட்டிவந்த புதிய மருத்துவ வளாகமும் அவரது கைவண்ணம். அதையும் பார்த்து களித்தோம்.
கொரோனா ஊரடங்கில்
மூடப்பட்ட கல்லூரிகள் வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் தொடங்காமல் டிசம்பர் மாதம் தொடங்கியபோது.
இந்திய வானியல் கணித பாடத்தை ஒரு கோர்ஸாக அவர்கள் சவீதா பொறியியல் கல்லூரியில் நடத்த
பேராசிரியர் மணிமாறன் வழியாக அழைப்பு விடுத்தனர். அவர்களின் வர்புறுத்தலில் இன்வென்ஷன்ஸ்
அண்டு டிஸ்கவரீஸ் என்று ஒரு பாடத்தையும் இணையம் வழியாக இரண்டு செமஸ்டரும், 2021ல் ஊரடங்கு
விலகிய பின் நேரே கல்லூரி வளாகம் சென்று நடத்தி வருகிறேன்.
இந்திரா பார்த்தசாரதி
உரைக்கு வந்த மோகன் ஹரிஹரன் வழியாக வேலைவெட்டியாற்ற நான் மீண்டும் வாரம் ஒரு நாள் வேலை
செய்யும் நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
மோகன் சித்ரா தம்பதியர் சதாபிஷேகம் - நண்பர்கள் உமையாள் சிவசங்கர் பாபுவுடன் நானும் |
மோகன் அவர்களின் சித்திரங்கள் |
சமீபத்தில் மோகன் சித்ராவின் மகன் பிருத்வி மகள் ஆர்த்தி மற்றும் குடும்பத்தினர் சென்னைக்கு வந்து அவர்களது சதாபிஷேகமும் ஐம்பதாண்டு கல்யாண வாழ்க்கையும் சேர்த்து கொண்டாடும் வகையில் ஒரு விழா நடத்தினர். என்னையும் தன் நெருங்கிய நண்பர்களில் ஒன்றாய் அழைத்தார்கள். வாழ்வில் அமைந்த பாக்கியங்களில் இவர்களது நட்பு, அன்பு, அக்கறை, உபசரிப்பு, ஆசிர்வாதம் எல்லாம் சேர்க்கை.
ஆகஸ்து முப்பது
மோகன் ஹரிஹரனின் பிறந்தநாள்.
பல்லாண்டு பல்லாண்டு
!!
No comments:
Post a Comment