Friday 7 June 2024

சங்கரநாராயணனின் வாழ்த்து

படங்கள்: இரா.விஸ்வநாதன்


ராஜசிம்ம பல்லவேச்சுரம் - கும்பாபிஷேகம் :
படம் - இரா. விஸ்வநாதன் 





2017 ஜூன் ஐந்தாம் நாள் காலை, காஞ்சிபுரம் சென்று ராஜசிம்மபல்லவேஸ்வரத்து கும்பாபிஷேகம் காணலாம் என்ற எண்ணம். மதியம் 12 மணிக்கு என்று தெரிந்து, டிவியில் அமெரிக்க கூடைப்பந்து போட்டியை பார்த்துவிட்டு 9 மணிக்கு கோடம்பாகத்தில் பஸ் ஏறினேன். போரூர் சென்று அங்கிருந்து ஏசி (குளிர்சாதன) பஸ்ஸில் போக திட்டம். (இந்த வியாசம் முதிலில் முகநூலில் எழுதியப் பதிவு. இன்று ஜூன் 7 2024ல் இங்கே வலைப்பூவில் பிரதி.).

போரூரில் ஒரு மூடிய கடையின்  வாசற்பந்தலின் நிழலின் அருமை வெயலில் தெரிந்தது. காத்து காத்து நின்றாது தான் மிச்சம். பூந்தமல்லிக்கு செல்லும் பல பஸ்களும் திருப்பெரும்புதூருக்கும் திருவள்ளூரூக்கும் செல்லும் சில பஸ்களும் வந்தனவே தவிற, தி நகரில் புரப்பட்டு காஞ்சிக்கு செல்லும் ஏசி பஸ் ஒன்றும் வரவில்லை. அசரீரி விசையான கைப்பேசியில் நண்பர் விசுவநாதன் காஞ்சியை தான் கிட்டத்தட்ட சேர்ந்துவிட்டதாக சொன்னார் (அவர் பகிர்ந்த படங்கள் மேலே). நான் காரில் வருகிறேனா என்றும் கேட்டார். போரூர் அடைந்த போது 9.30 இருக்கும். 10.15 ஆனதும் கொஞ்சம் பொறுமை இழந்தேன். நடு நடுவே நண்பர்கள் பலரும் கைப்பேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அன்பு தென்றலிலும் வாட்சாப்பிலும் மெசஞ்சரிலும் வந்த வாழ்த்து மழையிலும் நனைந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஒன்று வரவே அங்கிருந்து காஞ்சிக்கு பஸ் பிடித்து போகலாம் என்றெண்ணி ஏறினேன். கண்டக்டரிடம் காஞ்சிபுரம் ஏசி பஸ் சேவை நிறுத்தப்பட்டதா என கேட்க, போரூர்ல் நிரைய பஸ் வராது, பூந்தமல்லியிலிருந்து நிரைய பஸ் இருக்கு என்று அவர் பொத்தாம் பொதுவாக சொல்ல, எதிரில் காஞ்சியிலுருந்து தியாகராய நகர் செல்லும் ஏசி பஸ் தெரிந்தது. ஆஹா, பின்னாடியே ஏசி பஸ் வந்து நாம் ஏறிய பஸ்ஸை தாண்டிவிடும் என்று நினைத்து முற்போக்கு சித்தம் துறந்து பின் ஜன்னல் வழியே ஆந்தைப்போல் கண்விரித்து பின் தொடரும் நிழலின் குரலை, மன்னிக்க, பின் தொடரும் பஸ்ஸின் பலகை வட்டெழுத்தை வாசித்தே பயணித்தேன். பூந்தமல்லியில் ஆமை வேக நெருக்கடி. திருக்கச்சிநம்பியின் நமட்டு சிரிப்பு கேட்டது போல் ஒரு லேசான பிரமை. 11 மணி ஆகிவிட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் ஏசி பஸ்ஸும் வரவில்லை, பூந்தமல்லியிலிருந்தும் காஞ்சிக்கு எந்த பஸ்ஸும் புரப்படவில்லை. இனிமேல் சென்றால் 12 மணி கும்பாபிஷேகத்தை நிச்சயம் காணமுடியாது என்று வருந்தினேன்.

அசரீரியாக வேறு ஒரு குரல் கேட்டது போலிருந்தது. செல்போனில் அல்ல,

உள்மனதில்.

ஆதி முனிவர் கன்வரோ, ஆதி மன்னர் துஷ்யந்தரோ அசரீரி குரல் கேட்டால் ஆச்சரயமில்லை. அது புண்ணியம் நிரைந்த க்ருத யுகம். யாரிந்த குரல் என்றால் பல்லவேசுவரன் கைலாசநாதனே பேசினான்.

அவன் கூறியதாவது: சிறுபிள்ளாய் (youth என்று பொருள்), இன்று நீ கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளியில் நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தை காண நினைக்கிறாய். ஆனால் என்னை என்றும் எந்தை எந்தை என்றழைக்கும் ஒரு பித்தன் அவ்வூரிலேயே இருந்தும் இந்த கும்பாபிஷேகத்தை காண இயலாமல், தன் சொல்லால் பக்தியால் சித்ததால் பாடலால் நடனத்தால் பணிவால் பணியால் பண்பால் அன்பால் அறத்தால் அறிவால் ஆற்றலால் தெய்வத்தமிழால் வேதமொழியால் விளக்கால் விளக்கத்தால் வழக்கால் வழுக்காமல் வழிப்பட்டு வருகிறான். அவன் மனக்கோவிலில் தான் எனக்கின்று மகத்தான கும்பாபிஷேகம். அதைக்காணும் அகக்கண் உனக்கில்லை. அதனால் அத்யந்தகாமன் எழுப்பிய கற்றளிக்கு நடக்கும் கும்பாபிஷேகத்தையும் நீ காணவேண்டாம். 

எனக்கு எப்படி இருக்கும்?

கைலாசநாதா! காஞ்சி மகாமணி! தர்மநித்யனே! சங்கரநாராயணுனுக்கு தொழில் செய்யவேண்டியதால் அவரால் உன் கும்பாபிஷேகம் பார்க்க முடியவில்லை? எனக்கோ எந்த வேலையும் இல்லை. என்னை தடுப்பது என்ன தர்மமா?, என்றேன்.

நாற்பத்தி எட்டு வயதான உன்னை சிற்பிள்ளாய் என்றேன். அது மட்டும் தர்ம்மா? என்றார் ஈசன்.

லலிதவிலாசா! எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும், என்று முனக, பல்லவ சிற்ப்ம் போல் சிரித்தான் பல்லவாதித்ய பரமேசன்.

காலக்கோபா! காரணகோபா! என் மேல் என்ன கோபம்? என்று தொடர...

கால தாமதா கோபா! உன் மேல் எனக்கேன் கோபம்?

நான் காஞ்சி போகிறேன் காஞ்சி போகிறேன் என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டேன், அது பொய்யாகிவிடுமா? இஷ்டவர்ஷனே! ரிஷபலாஞ்சனா! அதை நீ அனுமதிக்கலாமா?

அது பொய்யாகவில்லை. நீ வெயலில் நன்றாக காஞ்சி போய்விட்டாய் என்றான் அர்த்தபதி. எனக்கு இவ்வுலகில் ஈடில்லாத அந்த பக்தன் சங்கரநாராயணன் என்ன செய்கிறான் தெரியுமா? இன்று என்னைப் பாடாமல் உன்னை பாடுகின்றான், என்றார்

இது எப்படி நடக்கும் என்று ஒரு சின்னசம்சயம் தோன்றிற்று. சின்னசம்சயன் மறைந்தான்.


படம்: விஜய் பட்

அசரீரி விசை மணி ஒலித்தது. சங்கரநாராயணன் இயற்றி முகநூலில் பகிர்ந்த கவிதையை நண்பர் விகே ஸ்ரீநிவாசன் வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார்.

இதோ அந்த தடுத்தாட்கொண்ட கவிதை.

கோபுவுக்கு ஒரு வாழ்த்து..

 

நாவின் கிழத்தி நற்பயனோங்க

பாவின் முறைமை பணியொடு சிறக்க

ஓங்கு கலைகளும் ஒருங்க வாய்த்து

தாங்கும் தடவென தாரணி தன்னில்

அரங்கரத்தினத்துக் கருமகனாகி

சுரங்கமெனவே சூழ்கலைக்கிடமாய்

பல்லவர் கலையும் பாவலர் நிலையும்

எல்லையில் வானியல் இயலும் சிறக்க

தமிழ்பாரம்பரியத் தகவுடை நிலையின்

அமிழ்தாய்த் திகழ்ந்து ஆய்வுகள் சிறக்க

இராசசிம்மனெனும் ஈடில் அரசன்

பராவிய எழுத்தின் பாங்கறி நிலையும்

வராகமிகிரர் வரைந்தளித்திட்ட

விராவும் வானியல் விழைந்த திறமும்

கலைபல மலிய கவித்திறம் பொலிய

அலையென புகழும் அடர்ந்த விதமும்

எந்தனைப் போலே இத்தரை மக்கள்

விந்தை யடைந்து விழித்திரை விரிக்க

சிந்தும் புன்னகை சீரெனத் திகழ

முந்தும் புகழோ முகிலையும் கிழிக்க

என்றும் இளமை எழிலொடு திகழும்

மன்றம் பலகாண் மாண்புடை கோபா

நன்றென நாட்கள் நலம்பல பயக்க

என்றும் சிறப்பொடு இனிதென வாழி....

 

No comments:

Post a Comment