Tuesday, 27 August 2013

பொறியாளர் மாதம்

அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், தொழிலாளர் தினம் ஆகியவற்றை கொண்டாடுவது போல, பல நாடுகள் பொறியாளர் தினம் என்று ஒரு நாளை அறிவித்துள்ளன. இன்று தான் இதை நான் விக்கிபீடியாவில் தேடி கண்டுபிடித்தேன். ஆனால் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு காரணத்தால் வெவ்வேறு நாளில் அறிவித்துள்ளது. உதாரணமாக இந்தியா, விஸ்வேஸ்வரையாவின் பிறந்தநாள் என்பதால் செப்டம்பர் 15 தான் பொறியாளர் தினம்.

இன்று – இந்த வலைப்பதிவை நான் எழுதும் நாள், ஆகஸ்து 27, ஜெர்மானிய ரசாயன மேதை கார்ல் பாஷின் பிறந்தநாள். இவரைப்பற்றி போன வருடமே அறிந்து கொண்டு, சில மாதங்களுக்கும் முன் நான் எழுதினேன். இருபதாம் நூற்றாண்டில் காந்தி, நேரு,சர்ச்சில், ரூஸவெல்ட், ஹிட்லர், கோன்ராட் அடெனார், ஸ்டாலின், மாவோ சேதுங், டெங் சாவோபிங்,அடாடர்க், கோமேனி,கோர்பச்சேவ், தாச்சர், ரீகன்,சுகார்ணோ போன்ற தலைவர்கள் உலகப்புகழ் பெற்றிருக்க, இதைப்போல் ஜாக்கிச்சான், சார்லி சாப்லின், மாரிலின் மன்றோ, வால்ட் டிஸ்னி, ஜேம்ஸ் கேமரான் போன்ற சினிமா கலைஞர்களும், பெலே, பெக்கம், டென்டூல்கர், போன்ற விளையாட்டு வீரர்களோ, பிகாஸ்ஸோ, ஜேகே ரௌலிங், அகாத்தா க்ரிஸ்டீ, ஸல்மான் ருஷ்டீ ஆகிய கலையுலக பேரொளிகள் சிந்தையிலும் செய்தியிலும் மின்ன, இவர்கள் யாவரையும் விட மிக பிரம்மாண்டமாக உலகையும் மனிதக்குலத்தையும் முன்னேற வைத்த கார்ல் பாஷ், ஹாபர், நார்மன் போர்லாக், சார்லஸ் பார்ஸன்ஸ், நிக்கோலா டெஸ்லா போன்றோர் புகழ் மங்கி இருப்பது மனிதகுலத்தின் பெரும் குறையாகவும் அவமான பரிதாப செய்நன்றிமறந்த மகா அவலமாய் எனக்கு தெரிகிறது.

நிற்க.

ஆகஸ்து மாதம் பொறியாளர்களை அள்ளி தந்த மாதம். இவர்களின் பிறந்தநாட்கள் கீழ்வருமாறு:
19 - ஆர்வில் ரைட்
19 – ஃபைலோ ஃபார்ண்ஸ்வர்த் – தெலைக்காட்சி பெட்டியை உருவாக்கியவர்
26 – ஆண்டன் லவாய்ஸியர் – ரசாயனத்தின் தந்தை என்று சொல்லலாம். இயற்பியலிற்கு நியூட்டன்னும், உயிரியலிற்கு டார்வின்/வாலஸைப் போல், ரசாயனத்திற்கு லவாய்ஸியர்.
26- லீ டி ஃபாரஸ்ட் – ட்ரையோடு செய்தவர். இதனால் தான் எலக்ட்ரானிகஸ் யுகம் தொடங்கியது.
27 – கார்ல் பாஷ்
20 – ஜேம்ஸ் பிரின்ஸப் : இவர் பொறியாளர், ஆனால் இந்திய வரலாற்றை மீட்டெடுத்தே இவரின் மாபெரும் பணி
18 – ஃப்ரெட் ஸாங்கர் – மரபணு ஜாம்பவான். ப்ரோட்டீன் பிதாமகன்.
23 – ஹாமில்டன் ஸ்மித்: இவர் உயிரியல் விஞ்ஞானி – restriction enzymes கண்டுபிடித்தவர். மரபணுத் துறையின் பிதாமகன்.

இவ்விருவரின் செயலால் (கேரி மல்லிஸ், க்ரேக் வெண்டர் ஆகியோரையும் சேர்க்க வேண்டும்), உயிரியல், குறிப்பாக மரபணுவியல், பொறியியல் துறையாக மாறியுள்ளது.


ஆகஸ்து மாதத்தில் சில மாமேதை பொறியாளர்களின் நினைவு நாளும் வரும் – ரிச்சர்ட் ஆர்க்ரைட்,  ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன், ஜேம்ஸ் வாட், மைக்கேல் ஃபாரடே, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

No comments:

Post a Comment