Showing posts with label பொறியாளர். Show all posts
Showing posts with label பொறியாளர். Show all posts

Sunday, 10 March 2019

ஏரோபிளேன் ஏறிய எலி

என் பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி

என் தாய்வழி பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி, ஆங்கிலேயர் ஆட்சியில், இந்திய விமானப்படையில் பணி செய்தார். அன்று விமானப்படைக்கு ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்று பெயர்; இங்கிலாந்தின் மன்னர் படைகளின் தலைவர். சுமார் 1937-38ல், பாகிஸ்தான் வங்கதேசம் என்று பிறியாத காலத்தில், அவர் ஒரிரண்டு ஆண்டுகள் இன்றைய பாகிஸ்தானின் பெருநகரான கராச்சியில் வாழ்ந்து பணிபுரிந்தார். அக்காலத்து பத்தாம் வகுப்பு, அதாவது எஸ்.எஸ்.எல்.சி, படித்திருந்தார் என்று நினைக்கிறேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க அவருக்கு பணமோ, படிப்பில் ஆர்வமோ, திறனோ இல்லைப்போலும். கல்மேல் நெல்விளையும் கல்யாணப்பூண்டி என்று மெய்க்கீர்த்தி கொண்ட பூண்டி எனும் சிறு கிராமத்தில் பிறந்த அவரும், அவரது சகோதரார்களும், அக்காலத்தில் பள்ளிப்படிப்பு முடித்ததே பெரிய சாதனை என்று தோன்றுகிறது. இராணுவத்தில் சேர்ந்து பொறியாளராக தொழிலை ஏட்டுபாடமாகவும் அனுபவமாகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியதே சிறப்பு.

1939ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன், விமானப்படையிலிருந்து பதவி விலகி, அவர் மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டார். என்ன காரணம் என்று தெரியவில்லை; கல்யாணம் செய்து கொண்டு, பணம் சம்பாதிக்க படை சேர்ந்தார் என்று நினைக்கிறேன். எங்கோ வடக்கிந்தியாவில் நீ தனியாய் வாழ்ந்து சம்பாதித்து போதும், குடும்பத்தின் மூத்த மகன், புது மாப்பிள்ளை இங்கே தமிழநாட்டில் வாழ்ந்தால் போதும் என்று அவரது பெற்றோரும், குடும்பமும் சொல்லியிருக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் என்றோ, அது ஐந்து வருடம் நீடித்து, ஐரோப்பாவையும் ஆசியாவையும் அவ்வளவு சீரழித்து சமூகங்களை மாற்றும் என்று யாரும் அன்று எதிர்பார்க்கவில்லை. அது தொடங்கியதால் உலகின் பொருளாதாரம், குறிப்பாக இந்திய பொருளாதாரம் பெரிதாக சரிந்தது. இங்கிலாந்து நாட்டை காப்பாற்ற இந்தியாவின் செல்வமும் போர்வீரர்களும் தேவைப்பட்டனர். வேலை வாய்ப்புகள் குறைந்தன, கிடைத்த வேலைகளுக்கு சம்பளம் கொஞ்சமே. 

ஜப்பானிய படை சீன தேசத்தை கைப்பற்றி, கிழக்காசியாவில் ஜெங்கிஸ் கான் படைக்கு ஈடாக வேகமாக இந்தியாவை நோக்கி வந்தது. சிங்கப்பூரை நோக்கி வந்த ஜப்பானியர் படையை தடுக்க, ஆங்கிலேயே செல்வத்திற்கும் ஆதிக்கத்திற்கும் வல்லரசுத்திறனுக்கும் பெருமைக்கும் சின்னமாக விளங்கிய சிங்கப்பூர் அவர்கள கைவிட்டு போகாமல் இருக்க, ராணுவத்திற்கு ஆள் சேர்த்தனர். சென்னை துறைமுகத்தில் படைவீரர் தேர்வு நடந்ததாம். ராணுவத்தில் சேர என் பாட்டனாரும் சென்று வரிசையில் நிற்கையில், அங்கே அவர் தந்தை (என் கொள்ளுதாத்தா) வந்து சேர்ந்தாராம். தன் மகனை ஓங்கி அறைந்து, "வெள்ளைக்காரனும் ஜப்பான்காரனும் ஒருத்தனை ஒருத்தனை வெட்டி கொல்லபோறான், உனக்கென்ன அங்கே வேலை?" என்று திட்டி, தரதர என்று வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.

சில வருடங்களுக்கு முன் என் பெரியம்மா ஜெயலட்சுமி (அம்மாவின் அக்கா, வெங்கடாதிரி தாத்தாவின் மூத்த மகள்), ஏக்கத்தோடு இந்த கதையை சொன்னார். சிங்கப்பூர் போரில் இங்கிலாந்து படு தோல்வி அடைந்ததும், ஜப்பான் சிங்கப்பூரை கைப்பற்றியதும், பாரதமே பயத்தில் தவித்ததும், இங்கிலாந்து என்ற வல்லரசை அன்று முளைச்சு மூணிலை விடாத ஜப்பான் அடித்த வரலாற்று அதிசயமும் பெரியம்மாவுக்கு சின்ன விஷயம்தான். அப்பா படையில் சேர்ந்திருந்தால் நிறைய சம்பாதித்திருப்பார், தங்கள் குடும்பம் பெரிதும் முன்னேறியிருக்கும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. ஆங்கிலேயர் சிங்கப்பூரை இழந்தபோது என் தாத்தா மட்டும் எப்படி தனியாக சம்பாதித்திருப்பார் என்று நான் கேட்கவில்லை. ஆசிய களத்தில் இந்திய படைகளின் தோல்விகளும் வெற்றிகளும் ஐரோப்பிய வரலாற்றிலோ இந்திய வரலாற்றிலோ பெரிதாக பேசப்படுவதில்லை. (சுபாஷ் சந்திர போசின் சுதந்திர படை ஜப்பானிய படையோடு சேர்ந்து ஆங்கிலேய அரசுக்கு போரிட்ட இந்திய படையை எதிர்த்து ஒரு காரணம்.) இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆங்கிலேயரும் அவர்களை நடத்திய விதம் மிக கேவலம். மார்க் டல்லி இதைப்பற்றி எழுதியுள்ளார். 

இரண்டாம் உலகப்போரில் எண்ணற்ற இந்தியர்கள் போரிட்டு மாண்டதும், அவரில் சிலருக்கு அங்குமிங்கும் மயானங்களும் கல்லறைகளும் இருப்பதும் பல இந்தியருக்கு தெரியாது. எத்தனை பேர் போரிட்டு மாண்டனர் எனும் விவரங்கள் அதிர்ச்சி. இதற்கு முன்னரே முதலாம் உலகப்போரில், பத்து லட்சம் இந்தியர்கள் ஐரோப்பாவில் போரிட்டதும், அதில் மாண்ட எழுபதாயிரம் வீரர்களின் கல்லரைகளை பெல்ஜியம் நாட்டில் கண்ட அதிர்ச்சியையும் பூஷாவலி எழுதியுள்ளார். இந்த போருக்கு காந்தியும் காங்கிரசும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போர் முடிந்த பின் நடந்த ஜாலியான்வாலா படுகொலை சம்பவத்தினால் தான், காந்தி ஒத்துழையாமையை கையாண்டார்.

தாத்தா சிங்கப்பூர் போயிருந்தால், என் அம்மாவோ நானோ பிறந்திருப்போமா என்பது சந்தேகம்.

தாத்தாவுக்கு சென்னையில் என்ன வேலை கிடைத்தது, எப்படி குடும்பம் நடத்தினார் என்று தெரியவில்லை. அன்று சென்னையிலிருந்து மிக தூரமாக இருந்த பூந்தமல்லியில் தாத்தா குடும்பம் தங்கியிருந்தது. இன்றோ பூந்தமல்லி சென்னை மாநகரின் ஒரு பகுதி. என் இல்லத்தருகே உள்ள ஆற்காடு சாலையில் பூந்தமல்லி முதல் அண்ணா சதுக்கம் வரை ஓடும் 25ஜி, ஒரு உள்ளூர் டவுன் பஸ். பூந்தமல்லியில் அவர்கள் வாழ்ந்தபோது என் தாய் பிறந்தார், அருகிலுள்ள வரதராசர் கோவில் தாயார் புஷ்பவல்லியின் பெயரை அம்மாவுக்கு வைத்தனர்.
1970களில் தாத்தாவின் பெங்களூர் இல்லம் -
இப்பொழுது பள்ளிக்கூடம்
 

அன்று இல்லத்தில் ஒரு அறை
இன்று பள்ளி வகுப்பறை

1980களில் இந்திராநகர் வீடு
சரோஜா பாட்டியும் வெங்கடாதிரி தாத்தாவும்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின், வெங்கடாதிரி பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL ஹெச்.ஏ.எல்) என்னும் விமான கம்பெனியில் இஞ்சினியர் பணியில் சேர்ந்தார். கராச்சி விமான படை அனுபவம் இதற்கு உதவியிருக்கலாம். அவரது நான்கு தம்பிகளில் இருவர், அதே நிறுவனத்தில் வெவேறு காலத்தில் சேர்ந்து வாழ்நாள் தொழில்செய்து ஓய்வு பெற்றனர். அவரது கடைசி தம்பி கோவிந்தராஜன் இந்திய விமானப்படையில் சில காலம் பணியாற்றினார்; 1965 பாகிஸ்தானில் போரில் ஏதேதோ செய்தார்; சில சுவாரசியமான ராணுவ கதைகளை கூறுவார்.

கோடைகாலத்தில் சென்னையில் வாழ்ந்த என்னையும் என் தம்பி தங்கையையும், என் தாய், தாத்தாப்பாட்டி தங்கிய ஹெச்.ஏ.எல் காலனி வீட்டிறுகு அழைத்து செல்வார். ஜெயலட்சுமி பெரியம்மா குழந்தைகளும், ரமணி சித்தி குழந்தைகளும் அங்கே சந்திப்போம். வெங்கடாதிரி தாத்தா சிறுக சிறுக சம்பாதித்து அன்று ஹெச்.ஏல்.எல்லுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த பொட்டல்காடான இந்திராநகரில் நிலம் வாங்கி வீடு கட்டினார். ஒரு முறை வீடு கட்டுமானத்தின் போது பாட்டியோடு ஹெச்.ஏ.எல்லில் பஸ் ஏறி, அல்சூர் ஏரியில் இறங்கி, பாலைவனத்தில் ஒரு கள்ளிச்செடியாய் தோன்றிய இந்திராநகர் வீடுவரை ஒரு கிலோமீட்டர் மேல் நடந்து சென்ற நினைவு; சுமார் 1980 இருக்கும். இன்று இந்திராநகர் என்னும் பொட்டல்காடு, கோடம்பாக்கம் எனும் கீரைத்தோட்டத்தை விடவும் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது.

தாத்தா பணி புரிந்த காலத்தில் இரண்டு கதைகள் பிரபலமாக பெருமையாக சொல்வார். ஒருமுறை, சர்தார் வல்லபபாய் படேலுடன் எலிக்காப்டரில் சென்றது. கேட்க மெய்சிலிர்க்கும்; என்ன எலிக்காப்டர், ஏன், எங்கே என்று கேட்க தோன்றவில்லை.

மற்றொன்று ஒரு ஏரோபிளேனை போகவிடாமல் தடுத்தது. எஞ்ஜின், மின்சார கருவிகள், குழாய்கள், எல்லாம் சரி என்று தளப்பொறியாளர் (Ground engineer) சரிபார்த்து, அனுமதி கொடுத்தால்தான் விமானி ஒரு ஏரோபிளேனை எடுக்கமுடியும். அந்த பணியில் அன்றிருந்த தாத்தா கடைசி நிமிடத்தில் ஒரு எலி படியேறி விமானத்துக்குள் நுழைந்ததை பார்த்துவிட்டாராம். டிக்கெட் வாங்காத பொல்லாத எலி. ஏதாவது முக்கியமான கம்பியை கடித்துவிட்டால் விமானத்திற்கு ஆபத்து என்று தீர்மானித்து, அந்த எலியை கண்டுபிடித்து, வெளியேற்றி, மீண்டும் முக்கிய் பரிசோதனைகள் செய்த பின்னரே ஏரோபிளேன் கிளம்ப அனுமதிப்பது என்பதில் உறுதியாக இருந்தாராம். இதனால் பலருக்கு பெரிய அதிருப்தி, எரிச்சல். மற்றவர் அறிவாளிகள் போலும்.

ஏதாவது விமானம் விபத்தில் விழுந்தால், தீவிரவாதிகளின் செயலா, இயந்திர கோளாரா, கண்ணில் படாமல் தப்பிய எலியா என்று எனக்கு சில நேரம் சந்தேகம் வரும்.

நாள்குறிப்பு 1984ஆம் ஆண்டு மார்ச் பத்தாம் நாள், தாத்தா வெங்கடாதிரி வைகுண்டம் அடைந்தார். அன்று எனக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பம்; இறுதி சடங்கு எதற்கும் போகவில்லை; பத்தாம் வகுப்பு பரிட்சை படிப்பு முக்கியம் என்பது அப்பாவின் கருத்து. அம்மா அதற்கு மூன்று வருடம் முன்பே இறந்துவிட்டார்; அப்பொழுது ஒன்பதாம் நாள் முதல் பதிமூன்றாம் நாள் சுபசுவீகாரம் வரை அம்மாவிற்கு இறுதி காரியங்களை காலையில் செய்துவிட்டு அப்பா நீதிமன்றத்துக்கு பணிசெய்யபோனார்; அதைபோலவே. பரிட்சைகள் முடிந்தபின் கோடை விடுமுறைக்கு நானும் தங்கையும் தம்பியும் பெங்களூர் சென்றோம். முப்பத்தைந்து ஆண்டுகள் சென்றுவிட்டன.

சுட்டிகள்

கல்மேல் நெல் விளையும் கல்யாண பூண்டி – பத்மப்ரியா பாஸ்கரன் கட்டுரை (ஆங்கிலம்)

பூண்டி குடும்ப கதைகள்

என் சரிதம் (Index of my personal blogs)


Tuesday, 18 March 2014

எடிசனின் வால்மீகி

அறிமுகம்

செயற்கை எருவை ஹாபர்-பாஷ் படைத்த வரலாற்றை தாமஸ் ஹாகரின் புத்தகத்தில் படித்தபின் அவர் ஆய்வுக்கு உதவிய புத்தகப்பட்டியலை அலசினேன். வஷ்லவ் ஸ்மில் என்ற பெயரை முதல் முதலில் அப்பொழுது தான் பார்த்தேன். இணையதளத்தில் தேடினால் அவர் எழுதிய சில நூல்களின் தலைப்புகள் என் கவனத்தையும் ஆர்வத்தையும் மிகவும் கவர்ந்தன.

உலக வெப்பமயமாதல் பற்றி பல சந்தேகங்களுக்கு எனக்கு எழும்பிய காலம். ப்யோர்ன் லோம்போர்க், ஃப்ரீமன் டைசன் ஆகியோரின் உரைகளை யூட்யூபில் கண்டு தெளிவு பெற்றேன். யூட்யூப் தளத்தில் நாம் தேடும் தலைப்புக்கு சம்பந்தபட்ட உரைகளும் அணிவரும் – அதில் வஷ்லவ் ஸ்மில் உரையும் ஒன்று. பார்த்து அசந்தேன். ஃப்ரீமன் டைசனைப்போல் இவ்வளவு தெளிவாக, இத்தனை புள்ளி விவரங்களுடன், தொழில்நுட்ப சிக்கல்களை புரிந்து, பொருளாதார் தாக்கல்களும் புரிந்து, யதார்த்த அரசியல் சமூக மனப்பான்மையும் விளக்கி, கருவிகளின் வரலாறும் அறிந்து அவர் பேசியது களிப்பும் தெளிவும் அளித்தது. விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பொதுவாக பொருளாதாரமோ, அரசியலோ, சமூக மனப்பான்மையோ தெரிந்துகொள்ளாமல் பேசுவார்கள். பொருளாதார நிபுணர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளும் விஞ்ஞான அடிப்படை தெரியாமல் பேசுவார்கள். அரசியல்வாதிகளுக்கும், ஊடக மேதைகளும், சுற்றுசூழல் போராட்ட தியாகிகளும் இருஞானமும் இந்தக்கவலையும் ஏதுமின்றி சூரியனும் சந்திரனும் அஞ்சி நடுங்க சூளுரைத்து முழங்குவார்கள்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் வாலஸின் நூல்களையும் பொதுவாக உயிரியல் நூல்களையும் அவ்வப்பொழுது படித்து வந்தேன். ஸ்மில் புத்தகத்தை தேடினேன் – வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு நூல்கள் இருந்தன. டர்பைன்களை பற்றி, அவருடைய Prime Movers of Globalization என்ற நூலை அங்கேயே படித்தேன். குறிப்பாக நீராவி டர்பைனின்றி மின்சார உற்பத்தியும், டீசல் டர்பைன் இன்றி கப்பல்களோ விமானங்களோ ரயில்களோ இயங்காது என்றும்; அவற்றின் வரலாறும், பொறியியல் முன்னேற்றமும், இருபதாம் நூற்றாண்டில் செல்வப்பெருக்கிற்கும் அன்றாட வாழ்வில் அவற்றின் முக்கியத்துவமும் தெள்ளந்தெளிவாய் புரிந்தன. ஒரு சில இடங்களில் பொறியியல் புரியவில்லை; நான் மெக்கானிகல் இஞ்சினியரிங் படித்ததில்லை, பெட்ரோல் டீசல் இஞ்சின் பற்றி கொஞ்சமே தெரியும். டர்பைன் தத்துவம் தெரியவே தெரியாது என்று அப்பொழுது புரிந்து கொண்டேன்.

அறியாமை

ஜாரட் டைமண்டின் மனதின் முன்வராலாற்று நூலையும், தாமஸ் ஃப்ரீட்மனின் உலகமயமாக்கல் நூலையும், கல்கியின் சிவகாமியின் சபதம் படித்து, என் அறியாமை இவ்வளவு பெரிதா என்று வியந்தேன், வெட்கப்பட்டேன். சார்ல்ஸ் ஆலனின் நூலும், தாமஸ் ட்ரௌட்மனின் நூலும், ஹாகரின் நூலும், ஆலன் பெட்டியின் கட்டுரை தொகுப்பும் இதே தாக்கத்தை வெட்கத்தை ஏக்கத்தை ஏற்படுத்தின. ராமசந்திர குஹாவின் “இந்தியாவிற்கு பின் காந்தி” வரலாற்று நூல் வெளிவந்தது – நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தகக்கடையில் அவர் உரை கேட்டேன். புத்தகத்தில் பசுமை புரட்சி பற்றியோ நார்மன் போர்லாக் என்ற பெயரோ இல்லை. இது என்ன வரலாற்று புத்தகம்? சலித்தது. குஹாவிற்கு ஈமெயில் அனுப்பினேன், சொத்தையாய் பதில் கிடைத்தது. சிந்தித்ததில் எல்லா வரலாற்று நூல்களும் பொதுவாக அரசியலோ கலையோ தழுவி தான் உள்ளன, விஞ்ஞானம் தொழில்நுட்பம் செல்வபெருக்கம் தழுவி வருவதில்லை என்று தோன்றியது.

நம் பள்ளிகளில் விடுதலை போராட்டம் மட்டும் தானே படிக்கிறோம். மின்சாரமும், மோட்டர் காரும், தொழிற்சாலைகளும், காகிதமும், பாலமும், ரயிலும் ஏதோ நாட்டை அழித்த நயவஞ்சக வெள்ளையன் சதிபோலவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

“இருபதாம்நூற்றாண்டை படைத்த கதை” என்ற வஷ்லவ் ஸ்மில்லின் நூலை தேர்ந்து படித்தேன்.

மிரட்சி. எடிசனின் சாதனை எத்தகையது. அவர் எப்படி வரலாற்றில் பிரமாண்டமாக நிற்கிறார்.

தாமஸ் எடிசன்

மின் விளக்கும் ஒலித்தட்டும் எடிசனின் சாதனை என்று நாம் பள்ளிப்பாடத்தில் படிக்கிறோம். மின்விளக்கல்ல, ஆராய்ச்சி பிறிவை படைத்ததே எடிசனின் மாபெரும் வரலாற்று காணிக்கை என்று வாதிடுவோரும் உண்டு. ஸ்மில்லின் எழுத்தில் எடிசனின் தொலை நோக்குப் பார்வையையும், திட்டமிடும் திறமையையும் அற்புதமாய் சொல்கிறார்.

எடிசனின் சாதனை

மின் விளக்கு தயாரிக்க பலர் முயன்றனர். ஆனால் ஒரு விளக்கு எறிந்தால் போதாது. நீண்ட நேரம் எறிய வேண்டும். மின்சார உற்பத்திக்கு டைனமோ ஜெனரேட்டர் வேண்டும், நிலக்கரி வேண்டும். மின்கம்பி வேண்டும். மின்சாரம் வோல்டேஞ் எகிரிகுதித்தால் சேதமாகாமல் தடுக்க ஃப்யூஸ் வேண்டும். கம்பெனி நடத்தி லாபம் செய்ய முதலீடு வேண்டும், மின்வணிகம் தொடர மின் பயன் அளந்து கட்டணம் வசூலிக்க மின்சார மீட்டர் வேண்டும். இவை எல்லாவற்றையும் வேண்டும் என்று உணர்ந்த ஒரே விஞ்ஞானி, மனிதன் எடிசன் மட்டும் தான்.

மின் விளக்கு ஆய்வு நடக்கும் போதே இக்கருவிகளையும் உருவாக்கும் ஆய்வையும் எடிசன் மேற்கொண்டார். படிக்க படிக்க அடுக்கடுக்காய் மிரண்டேன். நிலக்கரி சக்தியில் நீராவி செய்யும் இயந்திரங்களை தயாரிக்கும் கம்பெனிகள் அன்றே இருந்தன : ஜேம்ஸ் வாட் தொடங்கி வைத்த தொழிற்சாலை புரட்சியால். ஆனால் அவற்றை வைத்து மின்சாரம் செய்யும் டைனமோ செய்யவேண்டும். அன்று காரும் லாரியும் கிடையாது, நிலக்கரி சுரங்கத்திலிருந்து ரயிலிலும், ரயிலி நிலையத்திலிருந்து குதிரை வண்டியிலும் இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு வர வேண்டும்.

மிக முக்கியமாக, மற்றவரெல்லாம் இரு அடிப்படை மின்சார கொள்கைகளை உள்வாங்கவில்லை. சீரீஸ் பேரலெல் மின்சார வித்தியாசம் ஒன்று. பேரலில் (பக்க இணைப்பில்) எல்லாம் ஒரே வோல்டேஜ்ஜில் இயங்கும், தனித்தனியாக் ஸ்விட்ச் வைக்கலாம், மீட்டர் வைக்கலாம். இரண்டாம் கொள்கை மெல்லிய கம்பி, உயர்ந்த ரெஸிஸ்டன்ஸ்: கம்பி செலவு குறையவும், கனமின்றி இருக்கவும், பளிச்சிட்டு ஒளிவீசவும், இவை முக்கியம்.

இது மட்டுமின்றி வேகமாக சூடாகி மிளிர வேண்டும், சீக்கிரம் எரிந்து விட கூடாது, மலிவாக இருக்கவேண்டும்.

எடிசனின் வெற்றிகள் மட்டும் போதவில்லை மின்சார புரட்சிக்கு. டைரக்ட் கரண்ட் (நேரோட்டம்) பிடிவாதத்தில் எடிசனுக்கு வரலாற்றில் கெட்டபெயர்; எடிசனுக்கும் சிந்தை சருக்கும். இதில் நிக்கோலா டெஸ்லாவின் ஆல்டர்ணெட்டிங் கரண்ட் (மாறுதிசை மின்னோட்டம்) வழி வகுத்தது. இண்டக்ஷன் மோட்டார் டெஸ்லாவின் மற்றொரு பங்கு : எடிசனை விட பெரும் மேதாவியாகவும், தொலைநோக்குள்ளவராகவும், எடிசனால் ஏமாற்ற பட்டவருமாக டெஸ்லாவை பலர் இன்று கருதுவதும் உண்டு. இது அபாண்டம் என்றே நான் நினைக்கிறேன். மற்றும், சத்தமின்றி இயங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர்களின் பங்கையும் வகலச் ஸ்மில் விளக்குகிறார். டர்பைன் இன்றி இவ்வளவு மலிவில் மின்சாரம் இல்லை என்பதை எண்ணோடும் படமோடும் விலையோடும், அவற்றை ஆய்ந்த அளித்து அறியப்படாத சார்ல்ஸ் ஆல்கர்னான் பார்ஸன்ஸ் பற்றியும் நன்றாய் எழுதியுள்ளார்.

இலக்கிய பஞ்சம்

இதற்கு எழுத தமிழில் சொற்களின்றி தவிக்கிறேன் : மற்று பல மொழிகளிலும் இல்லையென்றே யூகிக்கிறேன் – இதை பற்றி அறியவோ படிக்கவோ தமிழ் சமுதாயத்திற்கு 100 ஆண்டு ஆர்வம் இல்லாததால்.

மின்விசிறி, தொலைபேசி, வானொலி பெட்டி, தொலைக்காட்சி, துணி தோய்க்கும் இயந்திரம், குளிர் பெட்டி ஃப்ரிட்ஜ், குளிர் சாதன ஏசி, கணிணி இவை யாவும் செல்வந்தரின் சொகுசில்லை அன்றாட வாழ்வின் யதார்த்தம். மிகச்சாதாரணமான அற்புதங்களை நாம் பாராட்டுவதில்லை, கொண்டாடுவதில்லை. ஏன்? அறிவாற்றல் போதாது என்றோ உணர்ச்சி பரவசம் ஏற்படவில்லை என்றோ இயந்திரத்தின் மேல் ஈர்ப்பு இல்லை என்றொ சொல்லலாம். நான் ஏற்கவில்லை. அதற்கேற்ற இலக்கியமும், சொல்வளமும், ரசிப்பு திறனும், உவமைகளும், உன்னதத்தை சொல்லும் புலவர்களும் கலைஞர்களும் இல்லை என்றே நினைக்கிறேன்.

விஞ்ஞானத்திற்கு, குறிப்பாக பொறியியலுக்கு ஒரு வால்மீகி இல்லை. ஜுல்ஸ் வெர்ணும், ஆர்த்துர் கிளார்க்கும் ஓரளவே இதை செய்தனர். ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலேஸ் உயிரியலின், பரிணாம தத்துவத்தின் வால்மீகி, டார்வினை மிஞ்சி. எனக்கு வஷ்லவ் ஸ்மில் எடிசனின் வால்மீகியாய் தெறிகிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், சமீபத்தில், “நான் மிகவும் எதிர்ப்பார்த்து படிப்பது வஷ்லவ் ஸ்மில்லின் புத்தகங்களையே” என்று அரைகூவி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். நண்பர் வி.எஸ்.எஸ் ஐயர், எடிசனையும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸையும் ஒப்பிட்ட வஷ்லவ் கட்டுரை படித்து புல்லரித்து போனார். நீங்களும் படிக்கலாம்.

1. மின்சாரத்தின் ஆரம்பகால வரலாறு - ஜெஃப் பீஸாஸ் உரை
2. உயிரியலின் அறுவடை - வஷ்லவ் ஸ்மில் நூலின் பில் கேட்ஸ் விமர்சனம்

21 மார்ச் 2016 : திருத்தம் இதுநாள் வரை அவர் பெயர் உச்சரிப்பு வக்லவ் என்று தவறாக நினைத்தேன். வஷ்லவ் என்பதே சரியான உச்சரிப்பு என்று இந்த வீடியோ காணும்போது தெரிந்தது. மாற்றிவிட்டேன்.

Tuesday, 27 August 2013

பொறியாளர் மாதம்

அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், தொழிலாளர் தினம் ஆகியவற்றை கொண்டாடுவது போல, பல நாடுகள் பொறியாளர் தினம் என்று ஒரு நாளை அறிவித்துள்ளன. இன்று தான் இதை நான் விக்கிபீடியாவில் தேடி கண்டுபிடித்தேன். ஆனால் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு காரணத்தால் வெவ்வேறு நாளில் அறிவித்துள்ளது. உதாரணமாக இந்தியா, விஸ்வேஸ்வரையாவின் பிறந்தநாள் என்பதால் செப்டம்பர் 15 தான் பொறியாளர் தினம்.

இன்று – இந்த வலைப்பதிவை நான் எழுதும் நாள், ஆகஸ்து 27, ஜெர்மானிய ரசாயன மேதை கார்ல் பாஷின் பிறந்தநாள். இவரைப்பற்றி போன வருடமே அறிந்து கொண்டு, சில மாதங்களுக்கும் முன் நான் எழுதினேன். இருபதாம் நூற்றாண்டில் காந்தி, நேரு,சர்ச்சில், ரூஸவெல்ட், ஹிட்லர், கோன்ராட் அடெனார், ஸ்டாலின், மாவோ சேதுங், டெங் சாவோபிங்,அடாடர்க், கோமேனி,கோர்பச்சேவ், தாச்சர், ரீகன்,சுகார்ணோ போன்ற தலைவர்கள் உலகப்புகழ் பெற்றிருக்க, இதைப்போல் ஜாக்கிச்சான், சார்லி சாப்லின், மாரிலின் மன்றோ, வால்ட் டிஸ்னி, ஜேம்ஸ் கேமரான் போன்ற சினிமா கலைஞர்களும், பெலே, பெக்கம், டென்டூல்கர், போன்ற விளையாட்டு வீரர்களோ, பிகாஸ்ஸோ, ஜேகே ரௌலிங், அகாத்தா க்ரிஸ்டீ, ஸல்மான் ருஷ்டீ ஆகிய கலையுலக பேரொளிகள் சிந்தையிலும் செய்தியிலும் மின்ன, இவர்கள் யாவரையும் விட மிக பிரம்மாண்டமாக உலகையும் மனிதக்குலத்தையும் முன்னேற வைத்த கார்ல் பாஷ், ஹாபர், நார்மன் போர்லாக், சார்லஸ் பார்ஸன்ஸ், நிக்கோலா டெஸ்லா போன்றோர் புகழ் மங்கி இருப்பது மனிதகுலத்தின் பெரும் குறையாகவும் அவமான பரிதாப செய்நன்றிமறந்த மகா அவலமாய் எனக்கு தெரிகிறது.

நிற்க.

ஆகஸ்து மாதம் பொறியாளர்களை அள்ளி தந்த மாதம். இவர்களின் பிறந்தநாட்கள் கீழ்வருமாறு:
19 - ஆர்வில் ரைட்
19 – ஃபைலோ ஃபார்ண்ஸ்வர்த் – தெலைக்காட்சி பெட்டியை உருவாக்கியவர்
26 – அந்துவான் லவோசியே – ரசாயனத்தின் தந்தை என்று சொல்லலாம். இயற்பியலிற்கு நியூட்டன்னும், உயிரியலிற்கு டார்வின்/வாலஸைப் போல், ரசாயனத்திற்கு லவோசியே
26- லீ டி ஃபாரஸ்ட் – ட்ரையோடு செய்தவர். இதனால் தான் எலக்ட்ரானிகஸ் யுகம் தொடங்கியது.
27 – கார்ல் பாஷ்
20 – ஜேம்ஸ் பிரின்ஸப் : இவர் பொறியாளர், ஆனால் இந்திய வரலாற்றை மீட்டெடுத்தே இவரின் மாபெரும் பணி
18 – ஃப்ரெட்ஸாங்கர் – மரபணு ஜாம்பவான். ப்ரோட்டீன் பிதாமகன்.
23 – ஹாமில்டன் ஸ்மித்: இவர் உயிரியல் விஞ்ஞானி – restriction enzymes கண்டுபிடித்தவர். மரபணுத் துறையின் பிதாமகன்.

இவ்விருவரின் செயலால் (கேரி மல்லிஸ், க்ரேக் வெண்டர் ஆகியோரையும் சேர்க்க வேண்டும்), உயிரியல், குறிப்பாக மரபணுவியல், பொறியியல் துறையாக மாறியுள்ளது.


ஆகஸ்து மாதத்தில் சில மாமேதை பொறியாளர்களின் நினைவு நாளும் வரும் – ஜேம்ஸ் வாட்,  ரிச்சர்ட் ஆர்க்ரைட்,  ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன், மைக்கேல் ஃபாரடே, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.