நாளை
அக்டோபர் 23, புதன்கிழமை, மாலை 6.45 மணிக்கு தியாகராய நகர் டக்கர் பாபா பள்ளியின் காந்தி
மையத்தில், உயிரியல் பேராசிரியர் ஜாரெட் டைமண்ட் எழுதிய ‘Guns, Germs and Steel’ நூலை பற்றி, பேச என்னை அழைத்துள்ளனர்.
1999இல்
இந்த நூலை படித்தேன். கிணற்று தவளைக்கு கடலைக்கண்ட உணர்வும் வியப்பும் மலைப்பும் தெளிவும்
எய்தினேன். என்னதான் சுதந்திரம் பெற்றாலும், ஆன்மீக சக்தி, அகிம்சை, புண்ணிய பூமி,
என்றெல்லாம் நம் முதுகில் நாமே தட்டிக்கொண்டாலும், விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில்,
பொருளாதாரத்தில், கல்வியில், நாட்டு நிர்வாகத்தில், நகர அமைப்பில், படை பலத்தில், ஏன்
கலைகளில் கூட வெள்ளையர்களே வல்லரசராக இருப்பத்தை நாம் அறிவோம். இதனால் நம்மில் பலருக்கு
தாழ்மனப்பான்மையும், வெள்ளையர் பலருக்கு கர்வமும் கோலோச்சுவதும் உலக நிதர்சனம். ஆசியர்,
தம்மை விட ஆப்பிரிக்க மக்கள் கீழானவரென்று சில நேரம் ஒரு வித ஆறுதல் அடையலாம், பரிதாப
படலாம். முன்னொருக்காலத்தில் ஐரோப்ப கண்டம் இருண்டிருக்க நம் நாட்டில் செல்வமும் வணிகமும்
கல்வியும் கலையும் எழிலும் கர்வமும் கொடிகட்டி பறந்தன என்று வேறு விதத்தில் தேற்றிக்கொள்வோம்.
சீனரும், அரபியரும், எகிப்தியரும், பாரசீகரும், இராக் மக்களும், ஏன் யவனராகிய கிரேக்கரும்
இத்தாலியரும் கூட இப்படி நினைக்கலாம்.
ஆனால்
வெள்ளையர் உண்மையில் அறிவிலும் ஆற்றலிலும் மற்றோரை விட சிறந்தவரா? கருப்பர் அடிமட்டத்தினரோ?
ஆசியர் நடுத்தரம் தானோ? இன்கா, மாயா, அஸ்டெக் வாரிசுகள் நிலை என்ன? பழம் பெரும் நாகரிக
நாடுகள் ஏன் சீரழிந்தன? சில மொழிகள் இலக்கிய செழிப்புடனும், பல மொழிகள் எழுத்தே இன்றியும்
ஏன் உள்ளன? குதிரைப்படை கொண்ட ஐரோப்பியர், ஆப்பிரிக்க கருப்பரை அடிமையாக்கி, அமெரிக்க
சிவப்பினத்தை அழித்தனரே, வரிக்குதிரை படைகொண்ட ஆப்பிரிக்கர் சிவப்பினத்தை அடிமையாக்கி
ஏன் ஐரோப்பாவை ஆளவில்லை? கருப்பினர் பலர் உடையில்லா வேட்டைக்காரர்களாக 40000 ஆண்டு
வாழ்ந்த ஆஸ்திரேலியாவில், 200 ஆண்டில் வெள்ளையர் ஒரு சிறந்த நாகரிக்த்தை உருவாக்கியது
எப்படி? 40000 இன்கா படையினிரை 200 இஸ்பானிய சிப்பாய்கள் வென்றது எப்படி?
விடைகளை
எழுதப்பட்ட வரலாற்றிலும் மனிதவியலிலும் தேடாமல், நாகரிகத்திற்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின்
எழுதா வரலாற்றிலும், அவர் வாழ்ந்த நிலத்திலும், அந்நிலத்து செடிகளின் வரலாற்றிலும்
விலங்குகளின் வரலாற்றிலும் தேடினார் ஜாரட் டைமண்ட். அதன் விளைவே இந்த நூல்.
காந்தி
மையத்தில் வாரா வாரம் ஒரு நூல் அலசப்படும். யாவரும் வரலாம். ஜூன் மாதம் அங்கு நான் தாமஸ் ஹாகர் எழுதிய
‘The Alchemy of Air’
என்ற நூலை பற்றி
பேசினேன்.
nice buddy...
ReplyDelete