Saturday, 5 October 2013

குந்தவை ஜீனாலயம்

திருமலை  அருகே - வயலும் தூரத்து மேகமும் மழையும்
 அக்டோபர் இரண்டாம் நாள், நண்பர் விசுவநாதனுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தலுக்கும், திருமலையில் உள்ள குந்தவை ஜீனாலயத்திற்கும் சென்றேன். கூழமந்தலை பற்றி மற்றொரு நாள் எழுதலாம். திருமலை, புகழ்பெற்ற திருவேங்கடம் அல்ல, ஒரு சிறு கிராமம். போளூர் ஆரணி சாலையில் வடமாதிமங்களம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் சென்றால் திருமலையை அடையலாம். போளூர் வந்தவாசி அருகேயும், ஆரணி ஆற்காடு அருகேயும் உள்ளன. வந்தவாசியும் ஆற்காடும், இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ளன.


திருமலை கிராமம்
சென்னை முதல் காஞ்சி வரை குளிர்சாதன பேருந்திலும், காஞ்சி முதல் கூழமந்தல் வரை விரைவு பேருந்திலும், அங்கிருந்து வந்தவாசிக்கும், வந்தவாசியிலிருந்து போளூர் வரை மெதுவாக சென்ற விரைவு பேருந்திலும் சென்றோம். வடமாதிமங்களத்திற்கு ஆரணி போகும் பேருந்தில் சென்று இறங்கி, ஆட்டோ பிடிக்கலாம் என்றார் நண்பர். ஆனால் போளூரில் திருமலை செல்லும் 3.15 மினிபஸ் வந்ததால் அதில் ஏறி பசுமை பொங்கும் வயல்களும், மேகம் முட்டும் மலைகளும் ஒரு வண்டிமட்டுமே செல்லும் சிமெண்ட் சாலைகளில் பயணித்தோம். தூரத்தில் மழை கொட்டும் காட்சி அற்புதம். முடகள் ஜன்னலை உரச காற்று உடலையும் மனதையும் சிலிர்க்க, கராஜில் டிராக்டரகளும் வாசலில் காளைகளும் உள்ள சில வண்ண சிமண்ட் வீடுகளையும், சாலையில் விரகு அடுப்பு மூட்டும் சில குடிசைகளயும் கடந்து சென்றோம்.

 
பாறை விளிம்பில் நான்
சமண துறவிகள் சங்க காலத்திலும் சோழர் காலத்திலும் மலைக்குகைகளில் வாழ்ந்தவர். சங்க கால மன்னர்களும் செல்வந்தரும் இவர்களுக்கு கல் படுக்கை செய்து கல்வெட்டு எழுதியுள்ளனர். சங்க காலத்தில் மாங்குளம் ஆனைமலை ஏழடிப்பட்டம் போன்ற இடங்களில் பிராமி எழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன – இவையே தமிழ் மொழியின் மிக பழமையான எழுத்துக்கள் ஆகும். சில இடங்களில் இவர்களுக்காக சிறு கோயில்களையும் அங்கு சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளயும் செய்து சில ஓவியங்களையும் தீட்டிவைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் கூரை ஓவியத்திற்கும் பாண்டியன் கல்வெட்டிற்கும் மிக புகழ்பெற்றது.
இடதுபுற சுவரில் சமவ சரண ஓவியம், அதற்குபின் குகை, கூரையில் பந்தல் ஓவியம், எதிர் சுவரில் சிவனோ?

குகை பாறை கூரையில் பந்தல் ஓவியம்
குந்தவை ஜீனாலயம் ராஜராஜசோழனின் அக்கா குந்தவை தந்த தானத்திற்கு பெய்ர்போனது. துறவிகள் தங்கிய குகையின் கூரையில் பந்தலைப்போல் ஓவியங்கள் உள்ளன.  குகையை சுற்றி செங்கல் சுவர் எழுப்பையுள்ளனர். சுவர்களில் சமவசரண ஓவியங்கள் உள்ளன. ஒரு சுவரில் உள்ள ஓவியம் பரமசிவனைப்போல் உள்ளது. வெளியறைகளில் ஓவியங்கள் நன்றாய் தெறிகின்றன, உள்ளறைகளில் இருளில் உள்ளன. ஆனால் என் கேமராவில் ஃப்ளாஷ் அடிக்காமல் நன்றாக சில படங்கள் வந்தன. பாதி இருளிலும் பாதி ஒளியிலும் உள்ள சிலைகளையும் ஓவியங்களையும் முழுதாக படமெடுக்க முடியவில்லை. ஓவியங்கள் விஜயநாகர் காலத்தவை, சோழர் காலத்து ஓவியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பரமசிவனா? - இல்லை யக்‌ஷி அம்பிகை

மலை உச்சியிலிருந்து கண்கொள்ளா காட்சியாய் நிலமகளின் பச்சை சேலை எழில் கொஞ்சியது. ஓரிடத்தில் குங்க்ஃபூ பாண்டா காட்சியும் ஆமை குரு ஊக்வேவின் மரமும் நினைவுக்கு வந்தன. மலை மேல் நேமிநாதர் கோவிலும், மலை நடுவே கோமதேஸ்வரரின் பெரும் சிலையும் உள்ளன.

வெளிச்சுவர்களிலும் ஓவியங்கள் உள்ளன. அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
மலை உச்சியிலிருந்து குந்தவை ஜீனாலயம்

இருட்டு குகைகூரையில் பந்தல் ஓவியம் – புகைப்படத்தில் மட்டுமே நன்றாக தெரியும்
எச்சரிக்கை: போக்குவரத்து வசதிகள் சுமார். இரவு 7.45 போளூர் செல்லும் பேருந்து வருமாம். 6.30க்கு கிளம்பி வடமாதிமங்களம் வரை விட்டில் பூச்சிகளும் தூரத்து மின்னலும் வழிகாட்ட ஐந்து கிமீ நடந்து வந்து, ஆரணி பஸ் பிடித்தோம். இரவு சென்னைக்கு இரண்டு மணிக்கே வந்தோம். 150கிமீ வர எட்டு மணிநேரம் எடுத்தது கடுப்பான அனுபவம். ஆற்காட்டில் பரோட்டா உண்ட ஓட்டலில் உணவு தேடி வந்த பசு, ஒரு கால்நடை கவிதை.

பின்குறிப்பு: நவாபினாலும் கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவினாலும் புகழ்பெற்ற ஆற்காட்டையும் வந்தவாசியையும், கோடம்பாக்கத்து ஆற்காட்டு சாலை அருகே வந்து வசிக்கும் நான் பார்க்கவில்லையே, போகும் வழியில் ஒரு பேருந்து மாரும் இடமாகவே இவை உள்ளனவே என்று சின்ன வருத்தம். ஆனால், ஒரு கணம் யோசித்தால், லண்டன், நியூ யார்க், கைரோ, பாரிஸ், டோகியோ, ஹாங்க் காங்க், பம்பாய், தில்லி, சியோல், ஏதென்ஸ், அபுதாபி, டாய்பேய், குவாலாலம்பூர் ஆகிய ஊர்களையும் விமானம் மாரும் இடங்களாகவே பார்த்திருக்கிறேன் என்று அற்ப ஆறுதல். சிதம்பரம் ராமேஸ்வரம் பார்க்காதது அற்பத்தின் அடுத்த கட்டம்.



ஆற்காடு ஆரிய பவனில் பசியுடன் பசு
குந்தவை ஜீனாலயம்    கூகிள் வழிகாட்டி Google map location 

1 comment:

  1. ஷ்யாம்12 October 2013 at 09:08

    அற்புதமான கட்டுரை. தொடரட்டும் உங்கள் பயணமும் பணியும்.

    ReplyDelete