Saturday 12 October 2013

என் அப்பாவுக்கு பிடித்த கவிதை

இது நான் டிசம்பர் 2003இல் எழுதிய கவிதை. அப்பாவுக்கு படித்துக் காட்டினேன். ஒவ்வொரு வரியும் ரசித்தார். பல வருடங்கள் கவிதை படிக்காததாலும், மகன் எழுதினான் என்ற பெருமையாலும், மிகவும் ஆவர் ரசித்திருக்கலாம். அவர் நினைவில்…

           புதுமை எங்கே
அழகியை ஓவியம் வரைய நினைத்தேன்
அதிலென புதுமை அதனை தவிர்த்தேன்
குரூபியை வரைய முடிவு எடுத்தேன்
திறமை குறைவால் முயற்சி தவிர்த்தேன்
பௌர்ணமி நிலவை பாட நினைத்தேன்
உவமை அலுத்ததில் உதறி விடுத்தேன்
அமாவாசையை கவிசெய நினைத்தேன்
யாருக்கு புரியும் கூறிட மறுத்தேன்

முல்லை மருதம் புகழ்ந்திட முனைந்தேன்
நெய்தல் குறிஞ்சி நெகிழ்ந்திட முனைந்தேன்
பாலை தேனை பைந்தமிழ் அமுதை
கள்ளை மதுவை பருகிட முனைந்தேன்
நஞ்சை கவிதை கருத்தாய் வைக்க
நெஞ்சில் முனைந்தேன் வெறுத்து வெகுண்டேன்

காதல் காமம் கசப்பாய் தெறிந்தது
வீரம் பண்பு வெந்து கிடந்தது
நன்மை தீமை உண்மை பொய்மை
நமத்து கிடந்தது கற்பனை பொறிக்கு
பழைய ஆடையின் நூல்களை பிரித்து
மறுபடி நெய்வதில் மகிமை எங்கே
ஆயிரம் தலைமுறை அழகாய் சொன்னதை
புதிதாய் புனைவதில் புலமை எங்கே

கண்ணில் தெறியும் கலைகளை எல்லாம்
மண்ணில் புதைத்து மறந்திடுவோமோ
காதால் கேட்ட இசைமொழி எல்லாம்
காற்றில் சிதறி மறந்திடுவோமோ
பழையன கழிதலும் புதுவன புகுதலும்
விதைத்தபின் வளர்க்கும் அறுவடை தானோ
மனிதன் அறியா மண்ணிருந்தாலும்
கருத்து படியா களமெங்குளவோ

முற்றுப்புள்ளி மேல் மோகம் வீணோ
கேள்விக்குறிதான் கலையின் குறியோ
விடைதெறிந்தாலும் விளங்காப் போமோ
விடை ஒன்றுளதோ வினவே தவறோ


1 comment:

  1. Really a beautiful poem!
    Do write some more like this!

    ReplyDelete