Sunday, 10 March 2019

ஏரோபிளேன் ஏறிய எலி

என் பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி

என் தாய்வழி பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி, ஆங்கிலேயர் ஆட்சியில், இந்திய விமானப்படையில் பணி செய்தார். அன்று விமானப்படைக்கு ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்று பெயர்; இங்கிலாந்தின் மன்னர் படைகளின் தலைவர். சுமார் 1937-38ல், பாகிஸ்தான் வங்கதேசம் என்று பிறியாத காலத்தில், அவர் ஒரிரண்டு ஆண்டுகள் இன்றைய பாகிஸ்தானின் பெருநகரான கராச்சியில் வாழ்ந்து பணிபுரிந்தார். அக்காலத்து பத்தாம் வகுப்பு, அதாவது எஸ்.எஸ்.எல்.சி, படித்திருந்தார் என்று நினைக்கிறேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க அவருக்கு பணமோ, படிப்பில் ஆர்வமோ, திறனோ இல்லைப்போலும். கல்மேல் நெல்விளையும் கல்யாணப்பூண்டி என்று மெய்க்கீர்த்தி கொண்ட பூண்டி எனும் சிறு கிராமத்தில் பிறந்த அவரும், அவரது சகோதரார்களும், அக்காலத்தில் பள்ளிப்படிப்பு முடித்ததே பெரிய சாதனை என்று தோன்றுகிறது. இராணுவத்தில் சேர்ந்து பொறியாளராக தொழிலை ஏட்டுபாடமாகவும் அனுபவமாகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியதே சிறப்பு.

1939ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன், விமானப்படையிலிருந்து பதவி விலகி, அவர் மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டார். என்ன காரணம் என்று தெரியவில்லை; கல்யாணம் செய்து கொண்டு, பணம் சம்பாதிக்க படை சேர்ந்தார் என்று நினைக்கிறேன். எங்கோ வடக்கிந்தியாவில் நீ தனியாய் வாழ்ந்து சம்பாதித்து போதும், குடும்பத்தின் மூத்த மகன், புது மாப்பிள்ளை இங்கே தமிழநாட்டில் வாழ்ந்தால் போதும் என்று அவரது பெற்றோரும், குடும்பமும் சொல்லியிருக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் என்றோ, அது ஐந்து வருடம் நீடித்து, ஐரோப்பாவையும் ஆசியாவையும் அவ்வளவு சீரழித்து சமூகங்களை மாற்றும் என்று யாரும் அன்று எதிர்பார்க்கவில்லை. அது தொடங்கியதால் உலகின் பொருளாதாரம், குறிப்பாக இந்திய பொருளாதாரம் பெரிதாக சரிந்தது. இங்கிலாந்து நாட்டை காப்பாற்ற இந்தியாவின் செல்வமும் போர்வீரர்களும் தேவைப்பட்டனர். வேலை வாய்ப்புகள் குறைந்தன, கிடைத்த வேலைகளுக்கு சம்பளம் கொஞ்சமே. 

ஜப்பானிய படை சீன தேசத்தை கைப்பற்றி, கிழக்காசியாவில் ஜெங்கிஸ் கான் படைக்கு ஈடாக வேகமாக இந்தியாவை நோக்கி வந்தது. சிங்கப்பூரை நோக்கி வந்த ஜப்பானியர் படையை தடுக்க, ஆங்கிலேயே செல்வத்திற்கும் ஆதிக்கத்திற்கும் வல்லரசுத்திறனுக்கும் பெருமைக்கும் சின்னமாக விளங்கிய சிங்கப்பூர் அவர்கள கைவிட்டு போகாமல் இருக்க, ராணுவத்திற்கு ஆள் சேர்த்தனர். சென்னை துறைமுகத்தில் படைவீரர் தேர்வு நடந்ததாம். ராணுவத்தில் சேர என் பாட்டனாரும் சென்று வரிசையில் நிற்கையில், அங்கே அவர் தந்தை (என் கொள்ளுதாத்தா) வந்து சேர்ந்தாராம். தன் மகனை ஓங்கி அறைந்து, "வெள்ளைக்காரனும் ஜப்பான்காரனும் ஒருத்தனை ஒருத்தனை வெட்டி கொல்லபோறான், உனக்கென்ன அங்கே வேலை?" என்று திட்டி, தரதர என்று வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.

சில வருடங்களுக்கு முன் என் பெரியம்மா ஜெயலட்சுமி (அம்மாவின் அக்கா, வெங்கடாதிரி தாத்தாவின் மூத்த மகள்), ஏக்கத்தோடு இந்த கதையை சொன்னார். சிங்கப்பூர் போரில் இங்கிலாந்து படு தோல்வி அடைந்ததும், ஜப்பான் சிங்கப்பூரை கைப்பற்றியதும், பாரதமே பயத்தில் தவித்ததும், இங்கிலாந்து என்ற வல்லரசை அன்று முளைச்சு மூணிலை விடாத ஜப்பான் அடித்த வரலாற்று அதிசயமும் பெரியம்மாவுக்கு சின்ன விஷயம்தான். அப்பா படையில் சேர்ந்திருந்தால் நிறைய சம்பாதித்திருப்பார், தங்கள் குடும்பம் பெரிதும் முன்னேறியிருக்கும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. ஆங்கிலேயர் சிங்கப்பூரை இழந்தபோது என் தாத்தா மட்டும் எப்படி தனியாக சம்பாதித்திருப்பார் என்று நான் கேட்கவில்லை. ஆசிய களத்தில் இந்திய படைகளின் தோல்விகளும் வெற்றிகளும் ஐரோப்பிய வரலாற்றிலோ இந்திய வரலாற்றிலோ பெரிதாக பேசப்படுவதில்லை. (சுபாஷ் சந்திர போசின் சுதந்திர படை ஜப்பானிய படையோடு சேர்ந்து ஆங்கிலேய அரசுக்கு போரிட்ட இந்திய படையை எதிர்த்து ஒரு காரணம்.) இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆங்கிலேயரும் அவர்களை நடத்திய விதம் மிக கேவலம். மார்க் டல்லி இதைப்பற்றி எழுதியுள்ளார்

இரண்டாம் உலகப்போரில் எண்ணற்ற இந்தியர்கள் போரிட்டு மாண்டதும், அவரில் சிலருக்கு அங்குமிங்கும் மயானங்களும் கல்லறைகளும் இருப்பதும் பல இந்தியருக்கு தெரியாது. எத்தனை பேர் போரிட்டு மாண்டனர் எனும் விவரங்கள் அதிர்ச்சி. இதற்கு முன்னரே முதலாம் உலகப்போரில், பத்து லட்சம் இந்தியர்கள் ஐரோப்பாவில் போரிட்டதும், அதில் மாண்ட எழுபதாயிரம் வீரர்களின் கல்லரைகளை பெல்ஜியம் நாட்டில் கண்ட அதிர்ச்சியையும் பூஷாவலி எழுதியுள்ளார். இந்த போருக்கு காந்தியும் காங்கிரசும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போர் முடிந்த பின் நடந்த ஜாலியான்வாலா படுகொலை சம்பவத்தினால் தான், காந்தி ஒத்துழையாமையை கையாண்டார்.

தாத்தா சிங்கப்பூர் போயிருந்தால், என் அம்மாவோ நானோ பிறந்திருப்போமா என்பது சந்தேகம்.

தாத்தாவுக்கு சென்னையில் என்ன வேலை கிடைத்தது, எப்படி குடும்பம் நடத்தினார் என்று தெரியவில்லை. அன்று சென்னையிலிருந்து மிக தூரமாக இருந்த பூந்தமல்லியில் தாத்தா குடும்பம் தங்கியிருந்தது. இன்றோ பூந்தமல்லி சென்னை மாநகரின் ஒரு பகுதி. என் இல்லத்தருகே உள்ள ஆற்காடு சாலையில் பூந்தமல்லி முதல் அண்ணா சதுக்கம் வரை ஓடும் 25ஜி, ஒரு உள்ளூர் டவுன் பஸ். பூந்தமல்லியில் அவர்கள் வாழ்ந்தபோது என் தாய் பிறந்தார், அருகிலுள்ள வரதராசர் கோவில் தாயார் புஷ்பவல்லியின் பெயரை அம்மாவுக்கு வைத்தனர்.
1970களில் தாத்தாவின் பெங்களூர் இல்லம் -
இப்பொழுது பள்ளிக்கூடம்
 

அன்று இல்லத்தில் ஒரு அறை
இன்று பள்ளி வகுப்பறை

1980களில் இந்திராநகர் வீடு
சரோஜா பாட்டியும் வெங்கடாதிரி தாத்தாவும்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின், வெங்கடாதிரி பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL ஹெச்.ஏ.எல்) என்னும் விமான கம்பெனியில் இஞ்சினியர் பணியில் சேர்ந்தார். கராச்சி விமான படை அனுபவம் இதற்கு உதவியிருக்கலாம். அவரது நான்கு தம்பிகளில் இருவர், அதே நிறுவனத்தில் வெவேறு காலத்தில் சேர்ந்து வாழ்நாள் தொழில்செய்து ஓய்வு பெற்றனர். அவரது கடைசி தம்பி கோவிந்தராஜன் இந்திய விமானப்படையில் சில காலம் பணியாற்றினார்; 1965 பாகிஸ்தானில் போரில் ஏதேதோ செய்தார்; சில சுவாரசியமான ராணுவ கதைகளை கூறுவார்.

கோடைகாலத்தில் சென்னையில் வாழ்ந்த என்னையும் என் தம்பி தங்கையையும், என் தாய், தாத்தாப்பாட்டி தங்கிய ஹெச்.ஏ.எல் காலனி வீட்டிறுகு அழைத்து செல்வார். ஜெயலட்சுமி பெரியம்மா குழந்தைகளும், ரமணி சித்தி குழந்தைகளும் அங்கே சந்திப்போம். வெங்கடாதிரி தாத்தா சிறுக சிறுக சம்பாதித்து அன்று ஹெச்.ஏல்.எல்லுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த பொட்டல்காடான இந்திராநகரில் நிலம் வாங்கி வீடு கட்டினார். ஒரு முறை வீடு கட்டுமானத்தின் போது பாட்டியோடு ஹெச்.ஏ.எல்லில் பஸ் ஏறி, அல்சூர் ஏரியில் இறங்கி, பாலைவனத்தில் ஒரு கள்ளிச்செடியாய் தோன்றிய இந்திராநகர் வீடுவரை ஒரு கிலோமீட்டர் மேல் நடந்து சென்ற நினைவு; சுமார் 1980 இருக்கும். இன்று இந்திராநகர் என்னும் பொட்டல்காடு, கோடம்பாக்கம் எனும் கீரைத்தோட்டத்தை விடவும் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது.

தாத்தா பணி புரிந்த காலத்தில் இரண்டு கதைகள் பிரபலமாக பெருமையாக சொல்வார். ஒருமுறை, சர்தார் வல்லபபாய் படேலுடன் எலிக்காப்டரில் சென்றது. கேட்க மெய்சிலிர்க்கும்; என்ன எலிக்காப்டர், ஏன், எங்கே என்று கேட்க தோன்றவில்லை.

மற்றொன்று ஒரு ஏரோபிளேனை போகவிடாமல் தடுத்தது. எஞ்ஜின், மின்சார கருவிகள், குழாய்கள், எல்லாம் சரி என்று தளப்பொறியாளர் (Ground engineer) சரிபார்த்து, அனுமதி கொடுத்தால்தான் விமானி ஒரு ஏரோபிளேனை எடுக்கமுடியும். அந்த பணியில் அன்றிருந்த தாத்தா கடைசி நிமிடத்தில் ஒரு எலி படியேறி விமானத்துக்குள் நுழைந்ததை பார்த்துவிட்டாராம். டிக்கெட் வாங்காத பொல்லாத எலி. ஏதாவது முக்கியமான கம்பியை கடித்துவிட்டால் விமானத்திற்கு ஆபத்து என்று தீர்மானித்து, அந்த எலியை கண்டுபிடித்து, வெளியேற்றி, மீண்டும் முக்கிய் பரிசோதனைகள் செய்த பின்னரே ஏரோபிளேன் கிளம்ப அனுமதிப்பது என்பதில் உறுதியாக இருந்தாராம். இதனால் பலருக்கு பெரிய அதிருப்தி, எரிச்சல். மற்றவர் அறிவாளிகள் போலும்.

ஏதாவது விமானம் விபத்தில் விழுந்தால், தீவிரவாதிகளின் செயலா, இயந்திர கோளாரா, கண்ணில் படாமல் தப்பிய எலியா என்று எனக்கு சில நேரம் சந்தேகம் வரும்.

நாள்குறிப்பு 1984ஆம் ஆண்டு மார்ச் பத்தாம் நாள், தாத்தா வெங்கடாதிரி வைகுண்டம் அடைந்தார். அன்று எனக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பம்; இறுதி சடங்கு எதற்கும் போகவில்லை; பத்தாம் வகுப்பு பரிட்சை படிப்பு முக்கியம் என்பது அப்பாவின் கருத்து. அம்மா அதற்கு மூன்று வருடம் முன்பே இறந்துவிட்டார்; அப்பொழுது ஒன்பதாம் நாள் முதல் பதிமூன்றாம் நாள் சுபசுவீகாரம் வரை அம்மாவிற்கு இறுதி காரியங்களை காலையில் செய்துவிட்டு அப்பா நீதிமன்றத்துக்கு பணிசெய்யபோனார்; அதைபோலவே. பரிட்சைகள் முடிந்தபின் கோடை விடுமுறைக்கு நானும் தங்கையும் தம்பியும் பெங்களூர் சென்றோம். முப்பத்தைந்து ஆண்டுகள் சென்றுவிட்டன.

சுட்டிகள்

கல்மேல் நெல் விளையும் கல்யாண பூண்டி – பத்மப்ரியா பாஸ்கரன் கட்டுரை (ஆங்கிலம்)

பூண்டி குடும்ப கதைகள்

என் சரிதம் (Index of my personal blogs)


1 comment:

  1. That Aero plane Eli is my grandfather. He gave birth to three Arabian horses and a Lion. Rest is history.

    ReplyDelete