Monday, 18 January 2016

தேசபக்தனும் சுதேசமித்திரனும்


கீழுள்ள பகுதி, திரு.வி.க நடத்திய தேசபக்தன் பத்திரிகையின் தமிழ் நடையயை புகழ்ந்தும் சுதேசமித்திரனின் நடையை கிண்டலடித்தும், கல்கி எழுதியது. பிற்காலத்தில் திரு.வி.க நடத்திய நவசக்தி பத்திரிகையில் கல்கி பணிபுரிந்தார்.

-------கல்கி எழுதிய பகுதி தொடக்கம்-------

“தேசபக்தன்” இதழை பார்க்கப் பார்க்க, ‘என்ன துணிச்சல்! என்ன ஆர்வம்! எத்தகைய அரசியல் நுட்பம்? எவ்வளவு தீவிர தேசபக்தி! என்ன தமிழ்!’ என்று தமிழ் நாடே வியந்து கொண்டிருந்தது.

எல்லாவற்றிலும் அதிக வியப்பு “என்ன தமிழ்!” என்பதற்காகத்தான். அதுவரையில் தமிழ்நாட்டில் தனியாட்சி நடத்திக்கொண்டிருந்த ஒரே தினசரிப் பத்திரிகை “சுதேசமித்திரன்” ஆகும். அதில் தலையங்கம் ஏறக்குறைய பின்வரும் முறையில் அமைந்திருக்கும்.

“பெங்கால் புரொவின்ஷியல் காம்பரன்ஸில் மிஸ்டர் அம்பிகா சரண் மஜும்தாரின் பிரஸிடென்ஷியல் அட்ரெஸில் இந்தியப் பிரஜைகளின் தேசீய அபிலாஷைகளை அடக்க இந்திய புயுராக்ரஸி கையாண்டுவரும் ரிப்ரஷன் முறைகளின் உபயோகமற்ற தன்மையைப் பற்றிக் கரதலா மலகமாய்க் கூறியிருப்பது ஹிஸ் எக்ஸெலன்ஸி வைஸ்ராய் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படுமென்று நம்புகிறோம்.”

(இது பழைய சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டதன்று; சு.மி.யின் அக்காலத்திய நடையை எடுத்துக் காட்டுவதற்கான சொந்தக் கற்பனை)

இதே விஷயத்தை “தேசபக்தன்” பத்திரிகை எழுதி இருக்கக்கூடிய முறை பின்வருமாறு:

“வங்கத் தாயின் புதல்வர்கள் அண்மையில் மாகாண மகாநாடு கூடினார்கள். திரு அம்பிகா சரண் மஜும்தார் என்னும் வங்க வீரர் தலைமை தாங்கி அரியதொரு சொற்பொழிவு ஆற்றினார். அச்சொற்பொழிவில் இந்திய அதிகார வர்கத்தார் இந்தியக் குடிமக்களின் விடுதலை வேட்கையைத் தகைவதற்குக் கையாளும் அடக்குமுறைகளைக் கடிந்தார். அம்முறைகள் பயனற்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெற்றென் எடுத்துக் காட்டியுள்ளார். இச்செவ்விய உரைகள் மேன்மை தங்கிய இந்திய இராஜப் பிரதிநிதியின் திருச்செவியில் ஏறுங்கொல்!”

---கல்கி எழுதிய பகுதி முற்றும்—

“தென் பாசிபிக் கதைகள்” (Tales of the South Pacificஎன்று ஜேம்ஸ் மிசெனெர் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில், ஒரு தீவை பற்றிய ஒரு கட்டுரை, பிறகு அத்தீவு மக்களை பற்றி ஒரு சிறுகதை என்று இயலும் புனைவும் மாறி மாறி எழுதியுள்ளார். இரண்டாம் பதிவின் முன்னுரையில், “இப்பொழுது மீண்டும் படிக்கும் பொழுது, கட்டுரைகளை விட கதைகளில் உண்மை அதிகமாக தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்கி எழுதிய மேற்பட்ட விமர்சனமும் அதே வகை. சுதேசமித்திரனிலிருந்தும் தேசபக்தனிலிருந்தும் அதே கட்டுரைகளை எடுத்து காட்டியிருந்தால், இவ்வளவு சுவையாக இருந்திருக்குமா என்பது சந்தேகம். ஓவியமும் புகைப்படமும் காட்டும் வேற்றுமையை இவ்வாறு காட்டியுள்ளார்.

படித்ததில் ரசித்தது.

சுப்பிரமணிய பாரதி கவிதைக்கு மட்டுமல்ல, பத்திரிகை துறைக்கும் முக்கிய முன்னோடி. ஆனால் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் அதைப்போல் ஒரு முக்கிய முன்னோடி. கல்கியை இவரது பின்னோடி என்று வைத்துக்கொள்வோம். பாரதி பாமரனையும் கவர்ந்தவன்; ஆனால் திருவிக பண்டிதச் சிமிழில் மாட்டிக்கொண்டார்.

நல்லவேளை, கண்ணதாசனுக்கு அந்த கதி நேரவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்
கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்
ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்




No comments:

Post a Comment