Sunday, 16 June 2013

ஜாதியை மாற்றும் மூலதனம்

டெல்லி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா, வாரா வாரம் “Walk the Talk” என்ற தலைப்பில் நடந்துகொண்டே நேர்காணல் நடத்துகிறார். இது NDTV சேனலில் ஞாயிறு மாலை ஒளிபரப்பாகும். இதன் சொற்பதிவு நாளிதழின் இணையதளத்தில் வருகிறது.

தமிழில் இதன் மொழிபெயர்ப்பு வருகிறதா என்று தெரியவில்லை. சந்திரபான் பிரசாத் பல ஆண்டுகளாக, பா.ஜ.க எம்.பி சந்தன் மித்ரா நடத்தும் பயோனியர் பத்திரிகையில், கருத்து கட்டுரைகள் எழுதிவந்த “தலித்” சிந்தனையாளர். இடைக்காலத்தில் ஏனோ அதை நிறுத்திவிட்டவர், மீண்டும் எழுதுகிறார். இந்திய ஆங்கில பத்திரிகைகளில் எழுதிவந்த ஒரே “தலித்” எழுத்தாளர் என்று கேள்விபட்டேன். மிலிந்த் காம்ப்ளே ஒரு “தலித்” தொழிலதிபர்.

கீழ்வருவது என் மொழிபெயர்ப்பு – கோபு.


சேகர் குப்தா  நான்  (பம்பாய்) நாரிமன்முனையில் இருக்கிறேன். இது சீர்மல்கும் கார்பரேட் இந்தியாவின் மையம். “அரவணைக்கும் வளர்ச்சி” என்று முழங்கும் இக்கால கட்டத்தில், அதை செய்யும் இருவருடன் இன்று எம் நேர்காணல். ஒருவர், தலித் இந்திய வணிக தொழிலாலை குழுமத்தின் (DICCI) நிறுவனர், மிலிந்த் காம்ப்ளே. மற்றவர், அக்குழுமத்தின் தத்துவ ஆசான், சந்திரபான் பிரசாத். நாங்கள் தாழ்த்தப்பட்ட பலிக்கடாக்கள், எங்களுக்கு மானியம் சலுகை இட ஒதுக்கீடு தாருங்கள் என்று புலம்பாதவர்கள். நீங்கள் என்ன விதிவிலக்குகளா? கதையை மாற்றி எழுதுகிறீர்களா?
சந்திரபான் பிரசாத்  இது தலித் மரபு – அம்பேத்கரும் குரு ரவிதாஸும் தன் சுயமுயற்சியில் வளர்ந்தனர். சொந்த முயற்சியால் முன் வந்த பல்லாயிரம் தலித்கள் உண்டு. நாங்கள் விசித்திரமானவர்கள் அல்ல. கடந்த 50, 60 ஆண்டுகளில் அரசின் திட்டங்களும் இடஒதுக்கீடுகளும் தவறாக புறியப்பட்டன; “தாழ்த்தப்பட்டவர்”களால் தவறாக பயன்படுத்தபட்டன.
சேகர் குப்தா “தாழ்த்தப்பட்ட”வர்களுக்கு பயனளித்ததா இல்லையா?
சந்திரபான் பிரசாத் பயன் அளித்தது. ஆனால் இம்முறைகளின் பலத்தையும் பயனையும் கடந்து வந்துவிட்டோம். இன்று வேறு முறைகள் தேவை.
சேகர் குப்தா மிலிந்த்-ஜி நீங்கள் புதிய பாதை வகுக்கிறீர்கள். தலித் தொழில் முனைவர்களை இந்த DICCI குழுமத்தில் ஒருங்கிணைக்கிறீர்கள். அத்தனை தலித் தொழில் முனைவர்கள் இந்தியாவில் உள்ளனரா?
மிலிந்த் காம்ப்ளே  ஆமாம், உள்ளனர். MSME (Micro, Small and Medium Enterprise)  அமைச்சகத்தின் கணக்கெடுப்பில், 10% MSME நிறுவனங்கள் தலித் மக்களுக்கு சொந்தம் – சுமார் 1,64,000. என்களில் பெரும்பாலோர் இவ்வகை தான். ஒரு சிலரே பெரும் நிறுவன சொந்தக்காரர்கள்.
சேகர் குப்தா யார் மிகப்பெரியவர்கள்? சில உதாரணங்களை சொல்லுங்கள்.
மிலிந்த் காம்ப்ளே மிகப்பெரியது உத்தர பிரதேசத்து சீதாப்பூர் மாவட்ட ராஜேஷ் ஸரையாவின் நிறுவனம். யுக்ரைன் நாட்டில் இருக்கிறார். லண்டன், யுக்ரைன் மற்றும் ஆறு நாடுகளில் அவர் நிறுவனம் அரசு பதிவு பெற்றது. மும்பையிலும் கிளை இருக்கிறது. ரூ. 2000 கோடி பணம் புறட்டுகிறார்.
சேகர் குப்தா  அது சுமார் அரை பில்லியன் டாலர். அவரை பற்றி சொல்லுங்கள்.
சந்திரபான் பிரசாத் இன்ஜினியரிங் (பொறியியல்) படிக்க scholarship (கல்வி உதவிநிதி) கிடைத்து, அவர் ருஷ்யா சென்றார். சோவியத் யூனியன் உடைந்த போது, சிறு கைப்பிடி வேலைகள் செய்து கல்வியை தொடர்ந்தார். பின் லக்ஷ்மி மிட்டலின் ஸ்டீல் கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். வணிக முறைகளையும் நுணுக்கங்களையும் கற்று, டாடா கம்பெனியுடன் வியாபாரம் செய்து வந்தார். இன்று 400 கோடி டாலருக்கு அதிபர், நான்கு மெர்ஸிடிஸ் கார் வைத்துள்ளார். நாற்பது சில்லரை வயது தான் ஆகிறது. கல்பனா சரோஜ் என்று இன்னொருவர். 1975-இல் நாளுக்கு ரூ.5 சம்பாதிக்க தொடங்கி, இன்று காமினி ட்யூப்ஸ் என்ற கம்பெனியின் அதிபர்.
சேகர் குப்தா டாடா நானோ காரின் ஸைலன்ஸரை தயாரிப்பவர் ஒடு தலித்தாமே?
மிலிந்த் காம்ப்ளே ஸைலன்ஸர் மட்டும் இல்லை, மற்ற பாகங்களும் உண்டு. இந்தியாவில் பொதுவாக எங்கள் சமுதாயத்தை பற்றிய கருத்து இருக்கிறதே….
சேகர் குப்தா ….தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தபட்டவர்கள் என்று?
மிலிந்த் காம்ப்ளே தலித்கள் எல்லோரும் அரசின் ஜமாய் (மாப்பிள்ளைகள்) என்று. இது உண்மை அல்ல. ஒருவர் நானோவிற்கு ஸைலன்ஸர் தயாரிக்கிறார்,  காஸியாபாத் நகரில் சுஷீல் குமார் என்பவர் ஹீரோ கம்பெனிக்கு மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டு தயாரிக்கிறார். பூனேவில்  கோகுல் கெயிக்வாட் டாடா இண்டிகோ காருக்கு உறுபுகள் தயாரிக்கிறார்; ஸங்கிலியில் ஸதமதே தொழிற்சாலை உள்ளது, பஜாஜிற்கும், ஃபோர்ப்ஸ் மார்ஷலுக்கும் உறுபுகள் தயாரிக்கிறார்கள்.
சந்திரபான் பிரசாத்  பஜாஜ் பல்ஸாருக்கு மூன்று உறுபுகளை தலித் கம்பெனிகள் தயாரிக்கின்றன. பஜாஜ், டாடா, ஹீரோ, ஹோண்டா கம்பெனிகளுக்கு செல்லும் உறுபுகள் தடை பட்டால்…
சேகர் குப்தா …அந்த கம்பெனிகளை இழுத்து மூட வேண்டும்…
சந்திரபான் பிரசாத் …இல்லை இல்லை. மாற்று உறுபுகள் தேவைப்படும் வண்டிகள் ஓடா.
மிலிந்த் காம்ப்ளே  மக்களின் மனப்பான்மையை மாற்ற விரும்புகிறோம்.
சேகர் குப்தா தாழ்த்தப்பட்டோம் என்ற மனநிலையை அகற்ற நினைக்கிறீர்கள், அல்லவா?
மிலிந்த் காம்ப்ளே ஆமாம். பலர் தம் சூழல்களிருந்து வெளியேறி கம்பெனிகளை தொடங்கியிருக்கிறார்கள்.
சந்திரபான் பிரசாத் உத்தர பிரதேசத்தில் மட்டுமே, தலித் மருத்துவர்கள் 50 மருத்தவமனைகளை நடத்துகிறார்கள். அவர்களில் சிலர் சிறுவயதிலும் பள்ளி கல்லூரி வயதிலும் கூலி வேலை செய்தவர்.
சேகர் குப்தா இட ஒதுக்கீட்டினால் தான் தலித்கள் மருத்துவர் ஆக முடிந்தது.
சந்திரபான் பிரசாத் ஆமாம்
சேகர் குப்தா ஆகவே இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் மறுக்க முடியாது.
சந்திரபான் பிரசாத்  உண்மை. இடஒதுக்கீடு முதல் அடி. ஆனால் அங்கேயே நிற்ககூடாது. களத்தில் இறங்கி ஓட வேண்டும், பறக்க வேண்டும்.
சேகர் குப்தா பொருளாதார சீர்திருத்தங்களும், உலகமயமாக்கலும் தலித்களுக்கு பயனளித்தனவா?
மிலிந்த் காம்ப்ளே நாங்கள் இரண்டையும் வரவேற்கிறோம். இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு அவை இன்றியமையாத படிகள். முன்பு கார் ஸ்கூட்டர் போன்ற வண்டிகளை செய்ய சில ஆலைகளே இருந்தன. ஏனெனில் அவற்றிற்கு மட்டுமே உரிமை (லைஸன்ஸ்) தர பட்டது. லைஸன்ஸ் சர்வாதிகாரம் ஒழிந்தபின் புது கம்பெனிகள் உறுவாகின. பழைய கம்பெனிகளுக்கு ஒரு சில கடைக்காரர்களோடு மற்றுமே உறவு இருந்தது. புது கம்பெனிகள் வந்தபின், புது கடைகள், புது தயாரிப்பாளர்கள் (suppliers), புது பண்டச்சங்கிலிகள் (supply chains) தேவைப்பட்டன. இதனால் புது கம்பெனிகள் தொடங்க வாய்ப்புகள் உண்டாகின.
சந்திரபான் பிரசாத் முன்பு ஓரிடத்தில் ஒரு பொருள் உறுவாக்கும் நிலை இருந்தது. பொருளாதார சீர்திருத்தங்களால், உலகமயமாக்கலால், இது இனி சாத்தியமில்லை. ஒரு பண்டத் தயாரிப்பை பல பகுதிகளாய் பிரித்து வெவ்வேறு கம்பெனிகளுக்கு outsource செய்ய வேண்டும். தலித் முனைவர்களுக்கு இதனால் பல வாய்ப்புகள் கிடைத்தன.
சேகர் குப்தா பொறியியல் ஆலைகளில் outsourcing வந்ததால்?
சந்திரபான் பிரசாத்  ஆமாம். உலகமயமாக்கலால் மனுதர்மத்தை வீழ்த்த ஆடம் ஸ்மித்தின் கொள்கை வந்தது. முதன்முதலாக (இந்திய வரலாற்றில்) ஜாதியை விட பணம் பெரிதானது.
சேகர் குப்தா  சந்தை (market) ஜாதியை விட, கார்ல் மார்க்ஸை விட பெரிதாகிவிட்டதா?
சந்திரபான் பிரசாத் ஜாதியை விட, கார்ல் மார்க்ஸை விட, எல்லோரையும் விட முதனமையாகிவிட்டன. ஏனெனில், சந்தையில் ஒருவனின் திறமைக்கு மட்டுமே மதிப்பு.
சேகர் குப்தா சந்திரபான்ஜி, பணம் மார்க்ஸையும் ஜாதியையும் வீழ்த்துவதாக சொல்கிறீர்கள். ஆனால் இளமையில் நீங்கல் துப்பாக்கி ஏந்தும் நக்ஸலைட்டாக இருந்தீர்.
சந்திரபான் பிரசாத் ஆமாம். அது என் முட்டாள்தனம்.
சேகர் குப்தா உங்கள் நக்ஸலைட் பருவத்தை பற்றி சொல்லுங்கள்.
சந்திரபான் பிரசாத் தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் (ஜேஎன்யூ) படித்துக்கொண்டிருந்தேன். இந்தியாவை மாற்ற நினைத்தேன். அதற்கு துப்பாக்கியே சிறந்த வழி என்று யாரோ சொல்ல, அவ்வழி பற்றினேன்.
சேகர் குப்தா மார்க்ஸிட் கட்சியையே ஆபத்தான வலதுசாரிகள் என்று கருதும் இடம், ஜேஎன்யூ.
சந்திரபான் பிரசாத் ஆம். களப்பணி செய்யும் பொழுது, வன்முறையால் சமுதாயம் மாறாது என்று புறிந்துகொண்டேன். ஆயுதம் ஏந்தலும், மக்கட்படையும் ஆட்சியை புரட்ட தகாதவை. அந்த மாயை தெளிந்தபின், யாவரும் சில தவறு செய்கிறோம், நானும் தவறு செய்தேன்  என்று எனக்கு தோன்றிற்று.
சேகர் குப்தா நக்ஸலைட் வாழ்வை துறந்து மீண்டும் வந்து நேர் எதிர் திசையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டீர்கள்.
சந்திரபான் பிரசாத்  ஆம். முன்பு மற்றவர் சிந்தனைகளின் பாதையில் சென்றேன். பிறகு சுயமாக யோசித்தேன். இந்தியாவில் மாற்றங்களை கவனித்தேன். பகதூர்கரில் பாலிடெக்னிக்கில் படித்த ஒரு தலித் கிரேன் கம்பெனி நடத்துவதை கண்டேன்; மாறும் இந்திய தெரிந்தது. கூர்ஜாவில் ஒரு தலித் இனிப்பு கடை வைத்தார். அவர் தலித் என்று தெறிந்தும் மக்கள் அவர் கடையில் இனிப்புகள் வாங்கினர்; மாறும் இந்திய தெரிந்தது. பல ஊர்களில் இன்று தலித் உணவகங்கள் உள்ளன;  அனைவரும் அங்கு சாப்பிடுகிறார்கள்; மாறும் இந்திய தெரிந்தது. மாற்றங்களில் நானும் கலந்துகொள்ள முடிவெடுத்தேன்.
சேகர் குப்தா மிலிந்த்ஜி, நீங்கள் பூனேவிற்கு வந்து கம்பெனி தொடங்கியிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் ஜாதியை நினைவூட்டினரா? இல்லை கண்டுகொள்ளவில்லையா?
மிலிந்த் காம்ப்ளே மகாராஷ்டிரத்தில் ஒருவரின் பெயர்  அவரது ஜாதியை காட்டிவிடும். காம்ப்ளே என்பது ஊரறிந்த தலித் பெயர். நான் செய்யும் கட்டடத் தொழிலில்…
சேகர் குப்தா  … ரூ. 80 கோடி புரட்டுது உங்கள் நிறுவனம்.
மிலிந்த் காம்ப்ளே …நான் நடத்தும் எல்லா நிறுவனங்களையும் சேர்த்தால் அந்தத் தொகை வரும். கட்டடத் தொழிலில் 80% தொழிலாளிகள்  SC ST. வேலைகளுக்கு கடினமான் உடல் உழைப்பு தேவை. அது எங்களால் தான் முடியும். அதனால் நான் ஜாதி அடிப்படையில் புறக்கணிப்பில்லை.
சேகர் குப்தா நீங்கள் இன்ஜினியரிங் படித்தது உதவியுள்ளது.
மிலிந்த் காம்ப்ளே  ஆமாம்.
சேகர் குப்தா  சந்தை சமத்துவம் உண்டாக்க மார்க்ஸை மிஞ்சுவதுபோல், சமத்துவத்தம் உண்டாக்க சந்தை மாயாவதியையும் மிஞ்சுகிறதா?
சந்திரபான் பிரசாத் நிச்சியமாக. இதுவரை ஒரு சிறந்த தலைவரால் தான் சமூக விடுதலை கிடைக்கும் என்று நினைத்தோம். இன்று பொருளாதார வழிமுறையால் சமூக விடுதலை காண்கிறோம். எந்த தலைவரையும் விட அதிகமாக, மூலதனமே இதற்கு காரணம். ஜாதியை எதிர்த்து மூலதனம் போரிடுகிறது. தலித் மக்கள் இதை புறிந்துகொண்டு மூலதன கொள்கையை ஒரு ஜாதி ஒழிப்பு சக்தி என தழுவவேண்டும். கிராமங்களில் தலித் மக்கள் முன்னேற முடியாது. பரம்பரை தொழில்களில் தலிதகள் சாதிக்க முடியாது. அதனால் தான் சில்லரை வணிகத்தில் அன்னிய மூலதனம் வரவேண்டும். தலித்தால் ஒரு படி கூட எடுத்து வைக்க முடியாத பாரம்பரிய அமைப்புகளை அது அழிக்க வேண்டும்.
சேகர் குப்தா மேல் ஜாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பணமும் வியாபார பலன்களும்…
சந்திரபான் பிரசாத் மனிதன் செய்ய தவறியதை மூலதனம் செய்கிறது. உங்கள் சமூக சீர்திருத்தங்களை விட வேகமாய் செயல்படும் மூலதனத்தை நாம் ஏற்க வேண்டும்.
சேகர் குப்தா மிலிந்த்ஜி, இன்று ஜூன் ஆறாம் நாள். இன்னாள் தலித் வளர்ச்சியில் ஒரு வரலாற்று திருப்புமுனை என்று நீங்கள் சொல்வது ஏன்?
மிலிந்த் காம்ப்ளே இன்று ரூ.500 கோடிக்கு, ஒரு venture capital நிதி தொடங்கியுள்ளோம். இதை SEBI தனி நிதியாக பதிவு செய்யும். இந்தியாவின் தலித் தொழில்முனைவோர்க்கு மட்டுமே பணிசெய்யும் முதன்முதல் சமூக வளர்ச்சி நிதி. நாட்டின் மூலதன சந்தையிலும், வணிகத்துறையிலும் லச்சினை பொறிக்கப்போகிறோம்.
சேகர் குப்தா  தலித்கள் வேலை தேடுபவராக இல்லாமல், வேலை தருபவர்ளாய் விளங்க வேண்டும் என்பது உங்கள் கொள்கை.
மிலிந்த் காம்ப்ளே அதே.
சந்திரபான் பிரசாத் பீமாராவ் அம்பேத்கரின் எல்லா சீடர்களும் அப்படி ஆக வேண்டும்.
சேகர் குப்தா நீங்கள் இருவரும் - உத்திரபிரத்து அஸம்கரிலிருந்து வரும் சந்திரபான்ஜி, மகாராஷ்டிரத்திலிருந்து வரும் மிலிந்த்ஜியும் - சந்தித்தது எப்படி?
சந்திரபான் பிரசாத் அவர் (காம்ப்ளே) DICCI அமைத்து தலித் முனைவர்களை ஒருங்கிணைப்பதை பார்த்தேன். தலித் சமுதாயத்தில் வணிக வளர்ச்சி கொள்கை பரப்ப நினைப்பவர் அவர். தலித் தொழில்முனைவர்கள் கட்டும் வரிகளை கணக்கிட்டு, தலித் நலதிட்டதிற்கு அரசு செலவிடும் பணத்தை விட, தலித்கள் அரசுக்கு கட்டும் வரிகளே அதிகம் என்று நிரூபிக்க நான் முயல்கிறேன். நான் கேட்டுகொண்டேன், அவர் சேர்த்துக்கொண்டார்.
சேகர் குப்தா என் மனதிலும் சில ருசு இல்லா கருத்துகள் நிலவுகின்றன. தலித் கட்டும் வரிப்பணம் தலித்துக்கே செலவழிக்க வேண்டும் என்று கேட்பீர்களோ என நினைத்தேன்.
சந்திரபான் பிரசாத் தலித் நலதிட்டதிற்கு அரசு செலவிடும் பணத்தை விட, தலித்கள் அரசுக்கு கட்டும் வரிகளே அதிகம். நான் வணிகன் அல்ல, எழுத்தாளன். எங்கள் ஆர்வம் எங்களை ஒன்றுசேர்த்தது. தலித் எடுத்து வாழ்பவர்கள் அல்ல, கொடுத்து வாழ்பவர் என நாடறிய வேண்டும்.
சேகர் குப்தா DICCI தொடங்கும் போது மக்கள் உங்களை ஏளனமாய் பார்த்ததுண்டா?
மிலிந்த் காம்ப்ளே ஆம். இவன் பைத்தியம் என் நினைத்தவர் உண்டு. அது என்ன SC ST வணிக குழுமம்? நம் சமூகத்தினர் வியாபாரம் செய்யக்கூடுமா? என்னை கேலி செய்தவர் உண்டு. 2003-2005 காலத்தில் DICCI உறுவாக்கினோம். 2010-இல் பூனேவில் முதல் வணிக கண்காட்சி நடத்தினோம்.   ஊடகங்களின் கவனம் எங்கள் பக்கம் திரும்பி, நாடு முழுதும் அறியப்பட்டோம். போன வருடம் பந்த்ரா-குர்லா கூடத்தில் ஒரு கண்காட்சி நடத்தினோம்.
சேகர் குப்தா பந்த்ரா-குர்லா கூடம் இந்தியாவின் புதிய வங்கி பகுதி.
மிலிந்த் காம்ப்ளே எங்கள் கண்காட்சியில் 150 தலித் கம்பெனி முதலாளிகள் கடைவிரித்தனர். ஆதி கோத்ரெஜ், ரடன் டாடா, சுஷீல்குமார் ஷிண்டே, ஷரத் பவார் ஆகியோர் கண்காட்சிக்கு வந்தனர். அதற்கு பின், என்னை பார்த்து கேலி செய்தவரும், தங்கள் ஜாதிப்பெயரை மூடிமறைத்து கம்பெனி நடத்திய தலிதகளும் மனம் மாறினர். DICCI கார்பரேட்களுடன் கூட்டணி அமைத்தது. 50 கார்பரேட்கள் கண்காட்சிக்கு வந்தன. DICCI புகழ் நாடு பரவ, இன்று 17 மாநிலங்களில் கிளைகளும், 3000 உறுப்பினர்களும் கொண்டுள்ளோம்.
சேகர் குப்தா சந்திரபான் ஜி, நீங்கள் ஒரு எழுத்தாளர், அறிஞர், பிரயாணி, ஆய்வாளர். ஆதிவாசிகளிடமும் தலிதகளிடமும் மாற்றம் உள்ளதா?
சந்திரபான் பிரசாத் பெரும் வகையில் மாற்றமுண்டு – நான் நினைக்காதது – மற்ற ஜாதிகளும் தலித்களும் அதே உணவுகளை உண்பதுதான்.முன்பு தலித் மக்கள் கம்பு வகைதான் உண்டனர். இதை தலித் உணவென்றும் மாட்டுத்தீனி என்றும் கருதினர். இன்று எல்லா ஜாதியரும் அரிசி கோதுமை உண்கிறார்கள். ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து வருகின்றனர். இவை விடுதலையின் ஆயுதங்கள். கிராமங்களில் இவை இன்று சகஜம். நல்ல உணவு, நல்ல உடை – நாட்டுபுறத்தில் ஏதோ பெரும் சம்பவம் நடக்கிறது. மும்பை, ஔரங்காபாத், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். ஓரிரு மாதத்தில், ஒரு  பெரிய இந்திய கம்பெனி ஒரு தலித் தொழில்முனைவரோடு கூட்டணி அமைத்து ஒரு பொருள் விற்கப் போகிறார். பழைய மனப்பான்மையை இது குலுக்கும். இந்தியா உலகமயமாகி, ஒரு புது வழிமுறை உண்டாகிறது.
சேகர் குப்தா  மார்க்ஸும் மாயாவதியும் செய்யாததை மூலதனம் சாதிக்கிறதா?
சந்திரபான் பிரசாத் ஆண்டான் அடிமை முறையை நசுக்கி ஜாதியை அழித்தே மூலதனம் தொடரமுடியும். விருப்பமோ இல்லையோ இது நடக்கிறது.
சேகர் குப்தா மாண்டெக் ஸிங் அஹ்லுவாலியா தான் DICCI – இன் குரு என்று நீங்கள் கூறுவது ஏன்? இது பலருக்கு அதிர்ச்சி தரும். வாஷிங்டன் ஒப்புதல் (Washington consensus) ஆசாமி என்று அவருக்கு ஒரு அடையாளம் உண்டு.
சந்திரபான் பிரசாத்  மாண்டெக் ஸிங் என்பவர் ஆடம் ஸ்மித்தின் நண்பர். ஆடம் ஸ்மித் மனுவின் எதிரி. இதனால் மாண்டெக் எங்கள் நண்பர்.
சேகர் குப்தா  எதிரியின் எதிரி உங்கள் நண்பர். வறுமை பற்றிய உரையாடலில் – வறுமையை நேராக ஒழிக்கவேண்டும், வறுமையே பிரச்சனை, வறுமை ஒழியாது, வறுமை குறையருவில்லை -போன்ற கருத்துகளில் உங்கள் நிலை என்ன?
சந்திரபான் பிரசாத்  வறுமை ஒழிப்பு ஒரு தொழில். அதில் வேலை பார்ப்பவர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். வறுமையை ஒழிக்க விமானத்தில பறப்பதும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதும், வெளிநாட்டு வறுமை ஒழிப்பு நிதி நிறுவனங்களோடு உறவாடுவதும், அற்புதமான தொழில். வறுமையை ஒழிக்கிறேன் என்று நிரைய சம்பாதிக்கலாம்.
சேகர் குப்தா  இந்தியர் வறுமைமயமாக்கல் என்ற புது தத்துவத்தை உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படை கொள்கை – “வறுமை எந்து பிறப்புரிமை. உனக்கு அதை தருவதே என் லட்சியம்.” நீங்கள் படித்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், இந்த கொள்கையின் தலைநகரம்.
சந்திரபான் பிரசாத்  “தன் கை மட்டுமே என்றும் உதவாது” என்பது அங்குள்ளோரின் தாரக மந்திரம்.
சேகர் குப்தா மிலிந்த்ஜி, ஜேஎன்யூ வறுமை வளர்ச்சியில் ஊரினாலும், நீங்கள் செல்வம் வளர்ப்பவர். உங்களின் தூண்டுகோல் என்ன?
மிலிந்த் காம்ப்ளே  என் முதல் தூண்டுகோல் அம்பேத்காரின் பொருளாதார் எண்ணங்கள். இரண்டாவது, அமெரிக்காவின் கருப்பின மக்களின் மூலதனம். நண்பன் ஒருவனை, பராக் ஒபாமா எப்ப்டி அமெரிக்க ஜனாதிபதி ஆக முடிந்தது என்று கேட்டேன். வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதனா!! அமெரிக்காவில் பல வணிகத்துறை ஒபாமாக்கள் இருப்பதால், அரசியலில் ஒரு ஓபாமா வந்தார் என்று என் நண்பர் பதிலளித்தார். அமெரிக்காவில் கருப்பின முனைவர்கள் உருவானதுபோல் இந்தியாவில் பல தலித் முனைவர்கள் உருவானால் மட்டுமே, இந்திய பொருளாதார வளர்ச்சித் தொடரும்.
சேகர் குப்தா நன்றாக சொன்னீர்கள். மிலிந்த்ஜி, நன்றி, இந்த உரையாடல் உற்சாகம் அளிக்கிறது. சந்திரபான்ஜி நீங்கள் ஒரு அற்புத வழிகாட்டி. நல்ல வேளை, நீங்கள் போவது சரியான பாதை. நக்ஸலைட்டாக தொடர்ந்திருந்தார் அவர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினயாய் அமைந்திருக்கலாம்.

[மொழிபெயர்ப்பு குறிப்பு: Entrepreneur, supply chain, venture capital, போன்ற பல நவீன வணிக சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் தமிழில் நல்ல சொற்கள் இல்லை. இருந்தால் புழக்கத்தில் இல்லை.


நேற்று  (ஜுன் 15)  இந்த நேர்காணலை நான் மொழிபெயர்த்தேன். டைம்ஸ் ஆஃப் இந்தியவின் பொருளாதார நிபுணர் சுவாமிநாதன் ஐயர், இதைபற்றி இன்றைய (ஜுன் 16, 2013) இதழில் எழுதியுள்ளார்.]