Friday, 3 July 2015

மசூதி பிரியர்

2006 ஆம் ஆண்டு அஜந்தா எல்லோரா சென்றபொழுது வாழ்வில் முதல்முறையாக பௌத்த சமண புராதான குகை கோயில்களை, விகாரங்களை கண்டேன். இவற்றில் பூசைகள் இல்லை, ஆனாலும் வெளிநாட்டு பிக்குகளும் மற்றசிலரும் அங்குள்ள புத்தசிலைகளை வணங்க கண்டேன். காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பருத்திகுன்றத்து சமணக்கோவிலுக்கு 2005இல் சென்றிருந்தாலும், 2011ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஒரிசா மாநிலம் சென்றபோது, புவனேஷ்வர் நகரின் எல்லையில் உள்ள உதயகிரி மலையில் முதன் மதலில் பூசை நடக்கும் சமணக்கோயிலை பார்த்தேன். 

பௌத்த சமண ஆசிவக சீக்கிய கோயில்கள்

பிகார் சென்றபோது நாளந்தா, வைஷாலி, ராஜ்கிர், ஆகிய ஊர்களில் முதல்முதலாக பழம்பெரும் பௌத்த விகாரங்களை, அசோக தூண்களை, ஸ்தூபங்களை நேரில் கண்டேன். புத்தகயாவில் பூசை நடக்கும் பௌத்த கோவிலில் நுழைந்தேன். இந்தியாவிலேயே மிகவும் தொன்மையான கற்கோயிலாம் ஆசிவக முனிவர்கள் லோமாச ரிஷிக்கும், சுதாமா ரிஷிக்கும் மௌரியமன்னர்கள் எழுப்பிய கோயில்கள்களையும் முதலில் புத்தகயாவின் அருகிலுள்ள பராபர் மலைகளில் கண்டுமகிழ்ந்தேன். 

பட்ணா நகரில் கடைசி சீக்கிய குரு கோபிந்த்சிங் பிறப்பிடமான பட்ணா சாஹிப் குருத்வாராதான் நான் முதலில் உள்ளே சென்ற சீக்கியர்கோவில். தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஒரு சில சர்ச்சுகளுக்கு - கிறுத்துவ தேவாலயங்களுக்கு - சிறு வயதிலேயே சென்றுள்ளேன். 

ஆனால் 2014 ஆம் ஆண்டு வரை எந்த மசூதிக்கும் சென்றதில்லை.

குஜரத் மசூதிகள்

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் ஐந்தாம் கலை உலா பயணமாக குஜரத் மாநிலம் பலர் சென்றோம். சம்பானர் நகரில் முகமது பேகடா கட்டிய மசூதியையும், அகமதாபாத் நகரில் சார்கெஜ் ரோஃஸா மசூதியையும் குழுவாக சென்று பார்த்தோம். மசூதிகளையும் இஸ்லாமையும் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கலை உலா முடிந்து மற்றவர் சென்னை திரும்ப, நான் சில நாட்கள் தங்கி குஜரத்தின் வேறு இடங்களையும் கண்டேன். 2012இல் திருவரங்க கலை உலாவின் சகபயணியாக அறிமுகமாகிய ரவிசங்கருடன், அகமதாபாத் நகரில் தங்கி, நண்பர்கள் சிவா, பூஷாவலியுடன் அங்குள்ள தாதா ஹரிணி படிக்கிணறு, அதை ஒட்டிய ஒரு மசூதி, சிதி சயீது மசூதி ஆகியவற்றை சென்று அவர் விளக்க விளக்க செவிகொடுத்தேன். 
குஜரத் கலை உலா குழிவினர்

அன்று மாலை சிவா, பூஷா சென்னை திரும்பினர். அடுத்த நாள் நானும் ரவியும் தோல்கா நகருக்கு சென்று அங்கு சில மசூதிகளை கண்டோம்.

ரவிசங்கர் ஒரு மசூதிப்பிரியர். அரபு கலாச்சார ஆர்வலர். இஸ்லாமிய மதத்தின் தோற்றம், ஆரம்ப காலம், முதல் சில காலிஃப்களின் வரலாறு, அரபு பேரரசின் அசுர வளர்ச்சி, இந்தியாவை போர்களால் வென்ற திறம், இந்தியாவை ஆண்ட பல்வேறு முஸ்லிம் மன்னர் வம்சங்கள், அவர்களது வரலாறு என்று ஒரு பல்கலைகழகமாக விளங்குபவர். கிஷோர், கிருஷ்ணகுமார், ராம்கி ஆகிய கலை ஆர்வல நண்பர்களுடன் கூவம் நதிக்கரை கோயில்களை நாங்கள் காணச்செல்லும் போது, காரில் ஒரு பெரிய வகுப்பே நடத்திவிட்டார். மப்பேட்டில்லும் தக்கோலத்திலும் சிவன் கோவிலுக்குள் ”சிவாஹுஅக்பர்” என்று சொல்லாக்குறையாக நுழைந்தோம்.

அகமதாபாத் ஜம்மா மசூதி
அகமதாபாத் மசூதியின் டோம்

தோல்கா நகரில் முதலில் ஜும்மா மசூதிக்கு சென்றோம். அது மூடி இருந்தது. “ஜும்மா” என்பது வெள்ளிக்கிழமை போலும். வெள்ளி முஸ்லிம்களின் புனித நாள் என்பதால் எல்லா பெரிய ஊர்களிலும் ஒரு ஜும்மா மசூதி புகழ் பெற்றுள்ளது. ஒரு பெரியவர், ஏன் இங்கு வந்தீர்கள், உங்கள் கனவில் யாரவது வந்து இந்த மசூதியை பார்க்கச்சொன்னார்களா என்று கேட்டார். அவர் ஹிந்திமொழியில் பேசியதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

ஹிந்திமொழியில் எனக்கு இருபத்திமூன்றேமுக்கால் சொற்களே தெரியும்; இருபத்தி ஐந்து கற்றுக்கொண்டால் தில்லியில் அழைத்து கலைமாமணி பட்டம் கொடுத்துவிடுவார்களோ என்று அச்சம். அதனால் பத்திரிகைகாரர்கள் என்ன சீண்டினாலும் மயான மௌனம் காக்கும் மன்மோகன் சிங், நரேந்திர மோதி ஞானமார்கத்தில் மௌனம் காத்தேன்.

தோல்கா கான் மசூதி

ரவி சிரித்துவிட்டு காரில் ஏறிக்கொண்டு அவர் சொன்னதை விளக்கினார். மலவ் தலவ் ஏரிக்கு சென்று, அங்கே பாரம்பரிய துணித்துவைக்கும் காட்சிகளையும் ஓரிரு பாழடைந்த சிலைகளையும் பார்த்து, பின் கான் மசூதிக்கு சென்றோம். “நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பரங்கிமலைக்கு பக்கத்தில் உள்ள பாழடைந்த மண்டபதுக்கு வா,” என்று எம்ஜிஆர் படங்களில் நம்பியார் சொல்வாரல்லவா? அப்படிப்பட்ட ஆள்நடமாட்டமில்லாத ஒரு மண்டபத்தை உச்சிவெயில் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்தோம். மணி பத்து தான் இருக்கும் ஆனால் பன்னிரண்டு என்று சொன்னால் தான் நம்பியார் ஆத்மா சாந்தி அடையும்.

ரவி அசந்து விட்டார்! “இவ்வளவு பெரிய மசூதியா?” என்று அதிசயித்தார். “இந்த ஊரில் எதற்கு? மற்ற மசூதிகளை விட டோம் பிரம்மாண்டமாக இருக்கிறதே,” என்றார். “இது அகமது ஷாவிற்கோ, முகமது பேகடாவிற்கோ முக்கிய தலைநகர் அல்ல. அவர்கள தலா அகமதாபாதிலும் சம்பானரிலும் பெரிய ஜும்மா மசூதிகளை கட்டினர்.”


அவை இரண்டும் பெருங்கல் மசூதிகள். தோக்லாவில்லுள்ள கான் மசூதியோ செங்கல் கட்டுமானம். அகமாதபாது ஜும்மா மசூதியில் இன்றும் தொழுகின்றனர். சம்பானர் மசூதி மாமல்லபுரம், அஜந்தாவைப்போல் தொல்லியல்துறையின் பாதுகாப்பிலுள்ளது. நுழைவாயில் மண்டபங்கள் நல்ல நிலையில்லுள்ளன; சம்பானர் தோட்டங்கள் அழகாக இருந்தன; இரண்டிலும் கல்லில் செதுக்கிய ஜன்னலகளில் ஜாலி வேலை சிறப்பாக இருந்தது; பெரும் தூண்கள் உள்ளன. ஒரு பெரிய மத்திய டோமும், அதை சுற்றி பல சிறிய டோம்களும் உள்ளன. தொழுவோருக்கு சுத்தம் செய்து கொள்ள குளங்கள் உள்ளன (இதற்கு வாஃஸூ [wazoo] என்று பெயர் என்று நினைக்கிறேன்).தோல்கா கான் மசூதியோ கேட்பாரற்று கிடந்தது. வாசலில் ஒரு கால்வாய் ஓடியது. சேதமடைந்த நுழைவாயில் மண்டபத்தில் எருமைகள். பெரிய புல்வெளி, ஆள்நடமாட்டமே இல்லை. தூண்கள் ஏதுமில்லை. பெரிய மத்திய டோம், சூழும் சிறு டோம் என்றில்லாமால், மூன்று மிக பிரம்மாண்டமான டோம்களே இருந்தன. இவற்றை கண்டு தான் ரவி மிகவும் வியந்தார். கட்டுமானத்திலும் காட்சியிலும் இவை பிரமிப்பூட்ட கூடியவை. மசூதியில் வாஃஸூ குளமில்லை; ஆனால் பின்னால் ஒரு மாபெரும் ஏரியே இருந்தது.

ரவிசங்கர், கான் மசூதி, கால்வாய்

தோல்கா நகர கான் மசூதி

மின்பார் மெஹ்ரப்

கான் மசூதியின் செங்கல் வட்ட விமானம் Brick dome

கான் மசூதி பின்னால் ஏரி


கண்ணுயரத்தில் கழுகு


கங்கைகொண்டசோழபுரம், விஜயநகரம், தோளவீரா போல், கான் மசூதி ஏதோ வரலாற்றின் மறக்கப்பட்ட பேரரசின் சின்னமாக தனிமையில் வெறுமையில் நின்றது. இஸ்லாமிய ஆட்சி காலத்தில் தோல்காவின் முக்கியத்துவம் என்ன என்று தெரியவில்லை. குஜரத்தை சளுக்கியர்கள் (குஜரத்தி மொழியில் “சோலாங்கி” என்று இந்த வம்சத்துக்கு பெயர்) அன்ஹில்வார் பாடணத்தை தலைநகராக கொண்டு ஆண்டபோது குறுநில மன்னர் குலமான வாகேலா வம்சத்தின் தலைநகரம் தோல்கா. பின்னர் சோலாங்கி வம்சம் சரிந்து வாகேலா வம்சம் பாடணத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தது. முகமது பேகடா 
சம்பானரிலிருந்து ஆட்சி செய்தார்; அகமது ஷா அகமதாபாதை தலைநகரமாக நிறுவினார். குஜரத்தை ஆண்ட மன்னர் குலங்களின் காலவரிசையையும், தமிழகத்தோடு ஒப்பிட்டு இங்கு காணலாம்.

ஜன்னல் சித்திரங்கள்

இரு பக்கத்திலும் இரு மினரெட்டுகள். சுவர்களில் சுதையிலேயே அங்குமிங்கும் அழகான அரபு எழுத்துக்கள், வளைவு வடிவங்கள். மசூதிகளில் உயிரினங்களை சித்தரிக்கக்கூடாது என்பது இஸ்லாமிய கொள்கையாம். செடிகொடிகள் மலர்கள் கூட சித்தரிக்க படமாட்டா. ஆனால் குரானிலுள்ள பாடல்களை அரபு மொழியில் அலங்கார எழுத்தாக வடிப்பது வழக்கமாம். அகமதாபாதில் மசூதி சுவர்களில் சாயத்தில் தீட்டியுள்ளனர். கான் மசூதியில் சுதையிலேயே செதுக்கியுள்ளனர். ஜன்னல்களில் சதுரம், வட்டம், முக்கோணம், பலக்கோணம் என்ற பல்வேறு கோலவடிவங்களை காணலாம். அங்குமிங்கும் வளைவது சில நேரங்களில் நமக்கு கொடிகளை போல் தோன்றும். சிதி சயீது மசூதியின் ஜன்னலிலும் சம்பானர் ஜன்னலிலும் உள்ள வளைவுகள் இதில் அவ்வகை சார்ந்தவை. 

இயற்கையாகவே செடிகொடிகளிலும் இலைகளிலும் இது போன்று சில வளைவுகள் 
அமைவதுண்டு.
சிதி சயீது ஜன்னல் அலங்காரம்

கான் மசூதி ஜன்னல் வடிவங்கள்

அகமதாபாத் ஜம்மா மசூதி சுவரில் வடிவம்

சம்பானர் மசூதியின் அழகிய மினரட்டும் பல டோம்களும்

சம்பானரில் கலை நுணுக்கம்

பேராசிரியர் சுவாமிநாதன் எழுத்துவடிவங்களை விவரித்த உரைத்தொடரில், தன் கல்லூரி நாட்களில் இஷ்டம் போல் அரபு எழுத்தின் தோற்றத்தில் ஏதோ கிறுக்கி விளையாட்டாக தன் முஸ்லிம் நண்பரிடம் காட்டி படிக்க சொன்னதை நினைவூட்டினார். நண்பர் படித்துவிட்டார்!! சுவாமிநாதன் மிரண்டுவிட்டார்! அரபு மொழியின் வடிவ எளிமையை புரியவைக்க அவர் சொன்ன சம்பவம் இது.

அகமதாபதில் சுவரி அரபு எழுத்து

சுதையில் அரபு எழுத்தும் கோலமும்

ஓரிரு காதல் ஜோடிகள் கல்லூரியை விட்டு அங்கே வந்தனர். செல்கேமராக்களில் தங்களை படமெடுத்துக்கொள்ள, நானும் ரவியும் கான் மசூதியில் மேலே ஏறினோம். தாதா ஹரிணி கிணற்றருகே உள்ள மசூதி டோம் இருகரம் நீட்டும் அகலம் இருந்தது. கான் மசூதி டோம் எத்தனை அகலம் என்று கீழே படத்தில் காணலாம். மிகவும் அமைதியான இடம். மினரட்டில் ஏறும் போது, கழுகு, கிளி, புறா, கொக்கு என பல பறவைகள் பறக்கும் காட்சியை கண்ணுயரத்தில் பார்த்தேன்! 

விஷ்ராந்தியாக ஒரு மணிநேரம் படமெடுத்தும் பறவைகளை ரசித்தும் அமைதி அனுபவித்தபின், தோல்கா நகரில்லுள்ள பஞ்ச பாண்டவர் மசூதிக்கு சென்றோம்.
தாதா ஹரிணி மசூதி டோம்

கான் மசூதி டோம்

பஞ்ச பாண்டவருக்கும் எப்பொழுது மசூதி கட்டினார்கள்? அதன் உண்மையான பெயர் பஹேலோல்கான் காஃஸி மசூதி. எனக்கு புரிந்த வரை அருகில் பாண்டவர் பள்ளிக்கூடம் ஒன்றுள்ளது. எழும்பூர் என்ற சொல் வாயில் நுழையாமல் அதை எக்மோர் என உச்சரித்த ஆங்கிலேயரை போல் பஹேலோல்கான் என்ற சொல் வாயில் நுழையாமல் அதை பஞ்ச பாண்டவர் மசூதி என்று ஊர்மக்கள் பட்டம் அளித்துள்ளனர்.

பஹேலோல்கான் காஃஸி மசூதி

தாராசுரத்தில் கற்களை வளைவாக வெட்டி சக்கரத்தை அமைத்ததை போல், இங்கே கற்களை வளைவாக வெட்டி டோம் அமைத்துள்ளனர். கொடும்பாளூர் மூவர் கோவில், தஞ்சை பெரிய கோயில்களில் சதுரத்தின் மேல் சதுரமாக விமானம் எழுப்பியதை போல் வட்டத்துக்கு மேல் வட்டமாக மசூதிகளில் டோம் எழுப்பியுள்ளனர். டோம் என்ற சொல்லை வட்ட விமானம் என்று சொல்லலாம்.


தூண்களும், மிகவும் துல்லியமாக நுணுக்கமாக, மூங்கில் காடு போல் காணபெற்றது. கதவின் மேல் கல்லில் தோரணம் அருமை. கான் மசூதி பெருந்தோற்ற பெருன்காவியம் எனில், பஹேலோல்கான் மசூதி கலைநுணுக்க சிறுகவிதை. மாடத்தில் ஓரத்து சிறு மண்டபங்கள் தனி அழகு அனைத்தையும் மிஞ்சியது அங்குள்ள மினரட்டின் அழகு – படத்தில் காணலாம், சொற்கள் போதாது.

மசூதிக்குள்ளே ஒருவர் நுழைய நாங்களும் பின்னே சென்றோம். ஒரு பெரியவர் குரானை பிரித்து வைத்துக்கொண்டு அதில் ஏதோ படித்தார். ரவி கேட்டபொழுது அந்நூலின் அமைப்பை விளக்கினார். நடுவில் அரபு மொழியில் குரான் எழுதியிருந்தது. அதை சுற்றி வேறு லிபியில் – இங்கே குஜராதி லிபியில் – அரபு சொற்களும், அம்மொழியில் பாடலின் பொருளும் எழுதப்பட்டிருக்குமாம். அவர் ஹிந்தியில் பேச, ரவி மொழிபெயர்த்தார். ஒரு தூணில் தொழுகை நேரங்களையும் குறித்துள்ளனர்.

பாஹ்லேல்கான் காஃஸீ மசூதி


வளைவு கற்களில் வட்ட விமானம் 

மூங்கிலை ஒத்த தூண்கள்


மினரெட் அழகு

அரபு குஜரதி லிபியில் குரான் 
பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஒட்டக அன்னை கோவிலுக்கு சென்றோம் – படிக்கிணறுகளை காண. மசூதிபிரியர் ரவியின் மற்றொரு கட்டுமான காதலி. குஜரத கலை உலா செல்லுமுன் அம்மாநில படிக்கிணறுகளை பற்றி ஒரு விரிவான வரலாற்று உரையை அவர் நடத்தினார்.

இந்த சனிக்கிழமை மசூதிகளை பற்றி டக்கர் பாபா பள்ளியில் பேசுவார். எல்லீரும் வாரீர்.

தொடர்புடைய கட்டுரைகள் 

5. Vaishali - the city that dazzled Buddha

3 comments:

 1. சிறிது நேரத்தில் குஜராத் சென்று பல மசூதிகளைப் பார்த்த உணர்வு படித்ததும் வருகிறது.விறுவிறுப்பான,சுவாரசியமான ஒரு பதிவு.மெருகூட்ட மெல்லிய நகைச்சுவை ஆங்காங்கே.இதற்கு பிறகும் சனிக்கிழமை டக்கர்பாபா அரங்கில் இன்னோரு அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.ஆனால் நான் அடுத்து வரும் காணொளி பதிவு மற்றும் எங்கள் பகுதி RVS வர்ணனைக்கு காத்திருக்கவேண்டியது தான்.நாளை நான் திருநள்ளாரில் இருப்பேன்.பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 2. Simply wonderful! Excellent narration !! However how come you missed ' shaking Minurates ' at Ahmedabad!!

  ReplyDelete
 3. RVNATHAN : ரசித்து பாராட்டியதற்கு நன்றி! ஆர்விஎஸ் பதிவை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

  Mohan: I missed the Shaking Minarets, but I think Ravishankar will cover them in his lecture

  ReplyDelete