Sunday, 25 March 2018

கிளிவாழை கவிதைகள்

Helionica - கிளிவாழை 

திரு மோகன் ஹரிஹரனும் அவர் மனைவி திருமதி சித்ரா ஹரிஹரனும் மூன்று வருடமாய் எனக்கு நண்பர்கள். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை 2015 ஜனவரியில் நடத்திய தென்பாண்டி நாட்டு கலை உலாவிற்கு மோகன் வந்தார். அவர் ஒரு கட்டடகலை வல்லுனர் (ஆர்க்கிடெக்ட் – ஸ்தபதி எனலாமா?), புகழ்பெற்ற ஆர்க்கிடெக்ட திரு ஸ்ரீநிவாசனின் மாணவர்.

திரு சுதர்சனமும் அவர் மனைவி கீதாவும் கிட்டத்தட்ட அதே காலம் பழக்கம். இருவருக்கும் மரபுக்கவிதை புலவர்கள். ஆசுகவிகள். 2014ல் முகநூலில் நண்பர் வி.கே.ஸ்ரீநிவாசன் பகிர்ந்த படத்தை ரசித்து ஒரு கவிதை எழுதினேன். அதை இருவரும் மிகவும் ரசித்தனர். ஆயிரம் கவிதை எழுதும் புலவர்கள் நாலைந்து கவிதைகள் எழுதுபவனின் கவிதையை ரசித்தால் என்ன செய்யலாம்? திளைத்தேன், திளைக்கின்றேன்.

கீதாவும் சுதர்சனமும் சித்ரா மோகன் தம்பதியர் இல்லத்தில் விருந்துண்ண சென்று, தோட்டத்தில் கிளிவாழை பூவைக்காண, கீதா இந்த கவிதையை இயற்றினார்

கிளிவாழைக்கு பொய் வாழை என்றும் பெயர். ஆங்கிலத்தில் ஹெலிகோனியா. 

கிளிவாழை – கீதாவின் அறிவியல் குறிப்பு இந்தப் பூவுக்கு மணம் கிடையாது. அதனால் எல்லாப் பூச்சிகளையும், பறவைகளையும் கவர்வதில்லை. இதனால் மகரந்தம் வீணாகாமல் தடுக்கப் படுகிறதாம். இந்தக் காம்பிதழுக்குள் பத்திரமாக இருக்கும் பூக்கள், தேன் நிறைந்த நீண்ட மகரந்தக் குழலின் அமைப்பு ஆகியவை Humming birds (தாரிச் சிட்டு, தும்பிச் சிட்டு) களுக்காகவே பிரத்யேகமாக உள்ளவை போல் அமைக்கப் பட்டுள்ளனவாம். எனவே மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் ஹம்மிங் பேர்ட்ஸ் களால் நிகழ்கிறது என்கிறார்கள். சில வகைப் பூக்களில் வௌவாலாலும் நிகழ்கிறது. மோகன்ஜி வீட்டில் தாரிச்சிட்டுகள் வருகின்றனவா என்று அவர்தான் சொல்ல வேண்டும்.

கீதாவின் கவிதை
(கலிவிருத்தம் -----மா மா மா மா)
வாழை யிலைநீ; வான்புள் ளிலையே;
வாழை யூடாய் வளர்ப்போர் வளர,
பேழை பொதித்துப் பிறப்பைப் பேணும்
ஊழி முதல்வன் உருவம் நீயே!
பொழிப்புரை
பொய்வாழை என்னும் பெயருடையதால் வாழை இல்லை நீ.
False birds of paradise என்னும் பெயரால் வான் புள்ளும் இல்லை நீ (வான் சுவர்க்கம், paradise புள்=பறவை )
பிரளயக் காலத்தில், மீண்டும் உயிர்கள் உயிர்க்கத் தேவையானவற்றை படகில் வைத்துக் (மச்சாவதாரத்தில்) காப்பாற்றிய திருமால் போன்று, இந்த மலரின் bracts எனப்படும் பேழை வடிவில் இருக்கும் காம்பிதழுக்குள் பொதித்து உயிரணுவைக் காத்து, இந்தஇனம் தழைக்கவும், இதை ஊடு பயிராய் வளர்க்கும் விவசாயிகள் வளர்ச்சிக்கு உதவி, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பேணியும் காத்தல் தொழில் செய்யும் நீ அந்த ஊழி முதல்வனின் உருவமே!
(இப்போது பார்த்தால் மீன் உருவம் போலவும் தோன்றுகிறது).
[பொழிப்புரை முடிந்தது]

தமிழில் அறிவியல் கவிதைகள் என்ற முகநூல் குழுவை நான் தொடங்க, சுதர்சனமும் சில நண்பர்களும் அதில் கவிதைகள் சேர்த்தனர். ஆனால் அக்குழு செழிக்கவில்லை, கவிதை மணமோ அறிவியல் மணமோ நுகரா சிலர் ஏதேதோ எழுத, அக்குழு செயலற்று கிடக்கிறது. அதனால் அறிவியலும் அழகியலும் ததும்பிய கீதாவின் இக்கவிதையை மிகவும் ரசித்து நானும் ஒரு கவிதை எழுதினேன்.

இன்று மீண்டும் முகநூலில் வந்ததால், வலைப்பூவில் சேர்க்கிறேன்.
முன்பு விகே ஸ்ரீநிவாசனின் படத்தில் ஆம்பல் மலரை உதயசூரியனாய் கண்டேன். கிளிவாழையில் யாகத்தீயை கண்டேன்.

கோபுவின் கவிதை
மோகனம் நாறுமோ சித்திரம் நாறுமோ
மோகக் கிளிவாழை மகரந்தம் நாறுமோ
யாகத்தீ மணமோ கீதை தமிழ்த்தீயில்
வேகும் நெய்மணமோ விளக்கிச் சொல்லாழி

பொழிப்புரை
மோகனம், சித்திரம் மணக்குமா? இல்லை. ஆனால் அவர்கள் சமைத்தால் சாதித்தால் கைமணக்கும். மகரந்தம் பொதுவாக மணக்கும். ஆனால் கிளிவாழை மகரந்தம் மணக்காதாம். யாகத்தீ போல் சிவப்பும் மஞ்சளும் வீச கதிர்விடும் கிளிவாழையிலிருந்து யாகத்தீ போல் மணம் வருமோ? இல்லை கீதாவின் தமிழ்தான் அதில் நெய் போல் மணக்குமோ

சுதர்சனம் என்ற ஆழி தான் சொல்லவேண்டும்

சுதர்சனத்தின் முதல் கவிதை
பாட்டனிக்குப் போலி மயிற்கொன்றை பற்றிநல்
பாட்டினிக்கத் தந்தார், படித்து
பொழிப்புரை
நன்கு படித்து, (ஆராய்ச்சி செய்து), போலி மயிற்கொன்றை என்னும்
தாவரத்தைப் பற்றி, இனிக்க ஒரு பாட்டு, botany-க்காகத் தந்தார்

சுதர்சனத்தின் இரண்டாம் கவிதை
(கலித்துறை மா காய் காய் காய் காய்)
மணக்கா மோகனமும் சித்திரமும் மணக்குமவர் சாதிக்க;
மணக்கா மயிற்கொன்றை மகரந்தம்; மணக்குந்தான் மற்றெல்லாம்:
மணக்கா சிவந்தமஞ்சள் கிளிமலர்ப்பூ மறையவர்த்தீ போலிருந்தும்

கணக்காய்ப் பாட்டெழுதும் தமிழ்நெய்யோ, கீதாவின்? ஆழிநீசொல்!

சுதர்சனம் சிறப்பாக பாடுவார். மல்லை பல்லவன் கல்வெட்டை சஹானா ராகத்திலும், மகாவீரரின் கணித வாழ்த்தை கமாஸ் ராகத்திலும் பாடியுள்ளார்.

மோகன் ஹரிஹரனின் ஆரணி உரை இங்கே

தொடர்புடைய பதிவுகள்
எடிசன் வாழ்த்து – அறிவியல் 
சலைவன் வாழ்த்து  – குறிஞ்சி, அறிவியல் 

அசோகத்தூண்கண்டெடுத்த காதை (சுதர்சனம் கவிதை

No comments:

Post a Comment