Wednesday 3 November 2021

அம்மா பிறந்தநாள் - நவம்பர் 2

நவம்பர் 2 - அம்மா பிறந்தநாள்.  அம்மா இறந்து நாற்பது வருடம் கடந்துவிட்டன. ஆயினும் அம்மா பிறந்தநாள் தானே. 

சிஐடி காலனி


வாழ்ந்த போது அம்மா பிறந்த நாளை நாங்கள் கொண்டாடியதில்லை. தம்பி தங்கை எங்கள் மூவரின் நட்சத்திரத்திற்கு ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலிலோ சிஐடி காலனி பிள்ளையார் கோயிலிலோ அர்ச்சனை நிச்சயம். காலையிலேயே சாப்பாடுடன் பாயசம் நிச்சயம். சாயங்காலம் கொஞ்சம் பாக்கி இருக்கும். புத்தாடை வாங்கி தையல் கடையில் கொடுத்து வருமா வருமா என்று கடைசி நாள் வரை அம்மாவுக்கு அவஸ்தை. துணி வந்துவிடும். கழுகுகள் பதிந்த சட்டை ஞாபகம்...

மிக சிறுவயதில் குடும்பத்தோடு சினிமாவுக்கு சென்று இருட்டும் தங்கவேலு செய்த காமெடி இடிசத்தமும் தாங்காமல் நான் அலறி குடும்பமே படத்தை தியாகம் செய்து வீடு திரும்பியதும் லேசாக நினைவு. அப்புறம் என்னை எந்த சினிமாவுக்கும் அழைத்து செல்லவில்லை. மயிலை காமதேனு தியேட்டரில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்க்க பள்ளியோடு சென்ற போது, சிவாஜி நடிப்பு, அந்த இசை வசனம் எல்லாம் தாங்காமல் பாதிக்கும் முன்பே வீட்டுக்கு வந்துவிட்டேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அம்மாவுடன் சில நாடகங்கள் பார்த்தேன். “2*2*2 டுட்டுடூ” என்று கேட்டு வாய்விட்டு சிரித்த ஞாபகம். பள்ளி நாடகத்தில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடிக்க, மன்னிக்க மேடை ஏற வைத்தனார் சிஐடி காலனி பள்ளி ஆசிரியைகள். 


ஒரு வருடம் பள்ளிவிழாவுக்கு அப்பா தலைமை தாங்கினார். அம்மா மாணர்களுக்கு பரிசுகள் வழங்கினார். புகைப்படமிருக்கிறது.

சிஐடி காலனி பள்ளிவிழா


ஒரு பெரிய பாத்திரத்தில் மூவருக்கும் இரவு ரசம் சாதம் கலந்து ஆளுக்கு ஒரு கை தருவாள். கதை சொல்லுவாள். பல்வேறு கதைகள். ஒரு கொடூர சோசியலிஸ்ட கதை மட்டும் ஞாபகம் இருக்கிறது. எம்.ஏ. எகனாமிக்ஸ் படிக்கும் போது அம்மா கற்றகதையாக இருக்கலாம். பிற்காலத்தில் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளின் அந்த வார கதை சொல்லுவாள். அம்மாவுக்கு அப்புசாமி கதை ஒழுங்காக சொல்ல வராது. ரசகுண்டு என்ற பெயரை சிரிக்காமல் சொல்ல முடியாது. பாதி கதையில் சிரிப்பு தாங்காமல் நிற்கும். அம்மாவின் சிரிப்பை ரசித்து நாங்கள் தயிர் சாதமும் தீர்த்துவிடுவோம். 



அம்மாவின் அடங்கா சிரிப்பு மறக்கமுடியாது. பின்னாளில் சாக்ஷாத் “பாக்கியம் ராமசமி” ஜ.ர.சுந்தரேசனை சந்தித்து அவரை அன்பை பெற்றதை கேட்டிருந்தால் அம்மாவுக்கு பெருமை தாங்கியிருக்காது.

“பாக்கியம் ராமசமி” ஜ.ர.சுந்தரேசனுடன்


பெங்களூக்கு சென்றால் இந்த இரவு சாதம் பாட்டி கையால் கிடைக்கும். பாட்டி ததி பாண்டியன், அர்ஜுனன், பீமன் கதைகள் சொல்வாள். பாட்டிக்கு சோசியலிம் தெரியாது. தெரியாமலேயே அதன் சுகதுக்கங்களை அனுபவித்தாள். பாட்டிக்கு சிரிப்பு வந்தால் அம்மாவைவிட அடங்காமல் சிரிப்பாள். நடுவில் ரயில் விசில் ஹெ.ஏ.எல் சங்கு மாதிரியெல்லாம் சங்கதிகள் சேறும்.


ஒரு நாள அம்மா தன் கனவை என்ண்டிம் சொன்னாள். நான் மன்னார் அண்டு கம்பெனி போல் ஒரு பெரிய கம்பெனிக்கு மேனேஜராக இருப்பேனாம். மேனேஜிங் டைரக்டர். கோட்டு சூட்டு கார் ஏசி நாலு டெலிபோன் என்று 1970 படங்களை போல படாடோபம். எனக்கு அம்மா ஃபோனடிக்க எரிச்சலுடன் நான் எடுக்க, ஒரே ஒரு நாள் உன்னோடு நான் உன் ஆபிசில் லஞ்ச் சாப்பிடனும்டா என்று கெஞ்சுவாளாம். சரி சரி என்று நான் பெருந்தன்மையுடன் ஒத்துக்கொள்வேனாம். ஆனால் முதலில் என் இரண்டு மூன்று செக்ரடரி, டெப்பூடி டைரக்டர் எல்லாரிடமும் அப்பாயிண்மண்ட் இல்லையென்று விசாரித்து விட்டு, ஒரே ஒரு அமைச்சருடன் இருப்பதாக தெரிந்து கொண்டு, அவரிடம் போன்பேசி, அவர் லஞ்ச அப்பாயிண்டமெண்டை டின்னருக்கு மாற்றி, அம்மாவோடு அவசரமாக முத்துராமன் மாதிரி நான் சாப்பிட, சௌக்கார் ஜானகி மாதிரி எனக்கு பொரைக்கேறும் போது அம்மா தட்டிக்கொடுக்க.... தங்கவேலு காமெடியும் சிவாஜி கணேசனின் வசனமும் தாங்க முடியாதவனுக்கு இதெல்லாம் என்ன புரியும்? 

1980ல் தாய்மாமன் வரதராஜன் அமெரிக்கவிலிருந்து குடம்பம் சமேத கேமராவுடன் வந்திருந்தார். சில படங்கள் எடுத்தார். அதில் ஒன்று சமீபத்தில் வாங்கிய டைனிங் டேபிளில் நாங்கள் ஐவரும் சாப்பிடும் காட்சி.

தாய்மாமன் வரதராஜனுடன்

தொட்டில் பழக்கம்

புரட்சி குடிமகன் [தாய்மாமா பேராசிரியர் வரதராஜன்]

ஏரோபிளேன் ஏறிய எலி - (தாத்தா பூண்டி வெங்கடாத்ரி)

என் சரிதம்


2 comments:

  1. This is easily one of the most beautiful piece of prose I've ever read. It moves u in ways beyond words!

    Don't ever say
    - u failed as a writer.
    - u r a better speaker than a writer.

    Thank u for leaving lingering memories that resonate deep within me too!

    ReplyDelete