Monday, 18 August 2025

கரிகாலச் சோழன் - முனைவர் சிங்கநெஞ்சம் அவர்களின் குறிப்புகள்


முனைவர் சிங்கநெஞ்சம் சம்பந்தம், புவியியல் துறையில் பணியாற்றி, சென்னைப் பிறிவில் தலைமை பதவி விகித்து ஓய்வு பெற்று, சுவையான பல தகவல்களை சேர்த்து, எளிமையான தமிழில் பல கட்டுரைகள் சமூக வலைதளங்களில் எழுதிவந்தார். வராகமிகிரன் அறிவியல் மன்றம் தொடங்கிய முதல் வருடம், நதிகள் வழிமாறும் வரலாறும், பல இடங்களில் கடல்  ஒரு காலம் பின்வாங்கியும்  ஒரு காலம் நிலத்தை விழுங்கியும் செய்யும் புவியியல் லீலைகளை பற்றி ஒரு உரை தருவதாக தானே முன்வந்தார். ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டோம். காணொளி மேலே.

திடீரென்று நோய்வாய்பட்டு அவரும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சில மணி நேரங்களில் இருவரும் இம்மை விலகி மறுமை எய்தினர். இருவரும் இறந்தபின் யாரோ முகநூலில் தகவல் பகிரும் போதுதான் அவர்கள் நோய்வாய்பட்ட செய்தியே அறிந்தேன். சிங்கநெஞ்சம் ஐயாவின் அகால மரணம் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் பெரும் இழப்பு. 

அவ்வப்போது அவரு எழுதிய கட்டுரைகளை முகநூல் நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டுரையை (16 ஆகஸ்டு 2018 பதிவிட்டது) இங்கே பகிற்கிறேன். அனுமதி இன்றி பகிற்கிறேன். யாரிடம் அனுமதி கேட்கவேண்டும். முகநூலில் இல்லாத சில் ஆர்வலர்கள் படிக்கவும், அவருக்கு ஒரு அஞ்சலியாகவும் இதை இங்கே பகிற்கிறேன். கல்லணை படமும் அவர் பதிவிலிருந்து எடுத்தது, யார் எடுத்த படம் என்று அவர் குறிப்பிடவில்லை.

தலைப்பு ஒரு புறம் இருக்கட்டும், எவ்வளவு சிறப்பாக கரிகால சோழனை பற்றிய பல தகவல்களை பிற்கால பாடல்களிலிருந்து எடுத்து தொகுத்து வழங்கியுள்ளார்.

-----------------------------------------------------


கல்லணையைக் கட்டியது கரிகாலனா .....

அண்மையில் அன்பர் வீரமணி வீராசாமி அவர்கள் கரிகாலன் – கல்லணை பற்றி நாளிதழ் ஒன்றில் வந்த செய்திப் படத்தை பகிர்ந்திருந்தார் (காண்க: படம்) அதற்கு, பின்னூட்டம் ஒன்று அனுப்பியிருந்தேன். தொடர்ந்து, இது குறித்து விரிவாக எழுதும்படி நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
பலமுறை படித்தாயிற்று, பட்டினப்பாலையிலும் , புறநானூற்றிலும் கரிகாலன் கல்லணையைக் கட்டியதாக செய்தியில்லை .
சில வாரங்களுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில் மடலாடிக் கொண்டிருந்தோம். அப்போது தேமொழி அவர்கள், தஞ்சை கரந்தைத் தமிழ் சங்கத்தின் திங்கள் வெளியீடான “ தமிழ்ப் பொழில்“( தாது ஆண்டு ,1936-37, 12 ஆவது) இதழில் கல்லணையைப் பற்றிய குறிப்பு உள்ளதாகக் கூறி, சுட்டியையும் இணைத்திருந்தார். அவருக்கு நன்றி.
இந்த இதழில் “வல்வடுகு நான்கு” எனும் கட்டுரையில், ‘திரு கே. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், 'அச்சுதப்ப நாயக்கர்’செய்த நற்பணிகளைப் பற்றி எழுதும் போது கல்லணையைப் பற்றி குறிபிடுகிறார். . மாற்றம் அதிகம் செய்யாமல் அதை அப்படியே கீழே இணைக்கிறேன்
"செல்லார் பணியும் செம்பியர்கோன்
செழுங்கா விரியின் சிறந்தகரை
கல்லால் அணைகட் டுதற்கேவு
கருமம் முடித்த சோழியர்கள்
பல்லார் மேழி நெடுங்கொடியைப்
பாயும் புலியி னொடுபதித்த
வல்லாண் மையினார் குடிவாழ்வு
வளம்சேர் சோழ மண்டலமே" 41
(இந்தப் பாடல் சோழ மண்டல சதகத்தில் உள்ளது.)
கரிகால் வளவன் காவேரிக்குக் கரை கட்டும்போது சோழியர் மிகவும் உதவினர். கரிகாலன் ஏவலால் கல்லணை கட்டியவர்கள். சோழிய வேளாளர்கள் தங்கள் மேழிக் கொடியைச் சோழர்தம் புலிக் கொடியுடன் இணையாக வைத்தவர்கள்.
கரிகாலன் காவிரியில் கரையையே கல்லால் கட்டுவித்தான்; அணை கட்டவில்லை என்றும் கூறுவர். இப்பாடலிலும் கரை கட்டியதையே கல்லணை என்று கூறப்படுகிறது.
இனி,
"தொக்க கலியின்மூ வாயிரத்துத் தொண்ணூற்றில்
மிக்க கரிகால வேந்தனுந்தான் - பக்கம்
அலைக்கும் புனல்பொன்னி ஆறுகரை இட்டான்
மலைக்கும் புயத்தானும் வந்து"
என்பது பழம்பாடல். இதன்படி கி.மு. 11-இல் கரைகட்டிய செய்தி புலப்படுகிறது. முதல் அடிக்கு ‘தொக்க சகனில் தொளாயிரத்துத் தொண்ணூற்றில்’ என்ற பாடபேதமும் உண்டு (பெருந்தொகை - 778) அதன்படி காலம் கி.பி. 1068 ஆகிறது.
இந்தப் பாடலுக்கு
"- பக்கம்
அலைக்கும் புனற்பொன்னி ஆற்றணையை
இட்டான்
மலைக்கும் கொடைக் கரத்தான் வந்து"
எனும் பாட பேதமும் உண்டு.
தொடர்ந்து, 'மூவர் உலா', ' பரணி' போன்ற இலக்கியங்களிளிளிருந்து பாடல் வரிகளைத் தருகிறேன்.
"அஞ்சின் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்
கஞ்சி காவேரிக் கரைகண்டு – தஞ்சையிலே
எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான்
விண்புக்கான் தண்புகார் வேந்து"
என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 779).
"உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்
எச்சம் பிரிவாய் இருபதுகோல் - தச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோல் எண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை"
என்பதும் ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 2154).
கரிகாலனைப்
"பொன்னிக் கரைகண்ட பூபதி"
என்று விக்கிரம சோழன் உலாவும் [13]
"மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்"
என்று குலோத்துங்க சோழன் உலாவும் [18]
"தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
என்று கலிங்கத்துப் பரணியும்" (இராசபாரம்பரியம் 20)
"ஈரருகும்
எண்கரை செய்யாது எறிதிரைக் காவிரிக்குத்
தண்கரை செய்த தராபதி"
என்று சங்கர ராசேந்திர சோழன் உலாவும் [13] கூறுகின்றன.
கரைகட்ட ஈழத்திலிருந்து பிடித்து வந்த கைதிகளைப் பயன்படுத்தினான் என்பர்.( தமிழ் இணையப் பல்கலைகழகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை )
இதுகாறும் கண்ட பாடல்கள் , கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டிய செய்தியை சொல்கின்றனவே தவிர, ஆற்றின் குறுக்கே நீரை மறித்து அணை கட்டிய செய்தியை சொல்லவில்லை.
(தொடர்வோம்)