Showing posts with label பெனலோசா. Show all posts
Showing posts with label பெனலோசா. Show all posts

Tuesday, 21 January 2014

தென் அமெரிக்க பேருந்து புரட்சி

தென் அமெரிக்க அரசியல் புரட்சிகளால் மட்டுமே புகழ் பெற்றது. ஆனால் கத்தியின்றி ரத்மின்றி சத்தமின்றி கவனமின்றி, பல நகர மேயர்கள், அங்கொரு பேருந்து புரட்சி நடத்தியுள்ளனர். நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் தொழிலதிபர்களும் சமூகத்தொண்டு வியாபாரிகளும் சிந்தனையாளர்களும் கண்டுகொள்ளாவிட்டாலும், மற்ற நாட்டு மேயர்களும் முதலமைச்சர்களும் மாநில ஆளுநர்களும் பார்த்து ஆய்ந்து தழுவியுள்ளனர். இது ஒரு விஞ்ஞான புரட்சியோ தொழில்நுட்ப புரட்சியோ அல்ல, நிர்வாக புரட்சி; அரசியல்வாதிகள் சிந்தித்து சோதித்து நன்கு செய்தது; போக்குவரத்தில் பொதுமக்களுக்கு மாபெரும் முன்னேற்றம் தருகிறது, தந்து வருகிறது; மக்கள் பணத்தை சிக்கனமாகவும் அறிவுடனும் ஆற்றலுடனும் கையாண்டு வருகிறது.

நெரிசலில் காரும் பஸ்ஸும்
பேருந்துகளே [பஸ்கள்] சிக்கனமான, சிறப்பான, ஜனநாயகமான வண்டிகள் என்பதே அடிப்படை தத்துவம். கார்களும் ரயில்களும், மெட்ரோவானாலும், மோனோரயிலானாலும், நிலத்திலோ, சுரங்கம் செய்தோ, தரைதளத்திலோ பேருந்துகளுக்கு இணையாகா. பிரேசில் நாட்டில் குரிடிபா நகரில் தொடங்கி, பல தென் அமெரிக்க ஊர்களில் Bus Rapid Transit (BRT) - வேகப் பேருந்து முறை (வேபேமு?) பரவியுள்ளது. கொலம்பியா நாட்டு பொகோட்டா நகர மேயர் என்ரிக்கே பெனலோசா இத்திட்டத்தை உலகெங்கும் சிறப்பாக பறையடிக்கும் வியாசர். கோக்கேன், ஹெராயின் வகை போதை பொருட்களின் மூலமாக பத்திருபது ஆண்டுக்கும் முன் கொலம்பியா இகழப்பட்டது. ஓரிரு ஆண்டுமுன் பெனலோசா சென்னையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் உரையாற்றி நான் கேட்டேன். இதோ அவரது டெட் உரை.
பொகோட்டா நகரில் வேகப்பேருந்து முறை - தனி பாதை
சென்னை மக்களிடம் அவ்வுரை இயங்களை மட்டுமே எழுப்பியது. அரசு கல்வி பத்திரிகை துறையினர், இது பாரத நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் சாத்தியமில்லை என்றனர். பாதுகாப்பின் சாக்கில் பிரதமர் முதலமைச்சர்கள், பின் அவசர சாக்கில் தீயணைப்பு ஆம்புலன்ஸ் வண்டிகள், பின் நீதியரசர், எம்பி, சட்டசபையினர், மற்ற அதிகாரிகள் என எல்லோரும் தனிப்பாதையில் செல்ல விரும்புவர். தனிப்பாதை மீண்டும் நெருக்கமாகும் – இது சமூக அரசியல் ரீதியான எதிர்ப்பு. இந்திய சாலைகள் அகலமில்லை, மக்கட்தொகை அதிகம், பஸ் ரிப்பேர் ஆனால் என்னாகும், டிக்கெட் விலை உயர்த்த வேண்டும், காண்டிராக்டர்கள் சாலைகளை தோண்டிவிடுவார்கள், பதனிட மாட்டார்கள் என்ற நிர்வாக ரீதியாக எதிர்ப்புகளும் பேசப் பட்டன.
குரிதிபா நகரம்- சாலை மத்தியில் பஸ் நிருத்தம்
பெனலோசாவின் சிந்தனையோடம்:

சாலைகளை ஜனநாயகமாக பங்கிட வேண்டும் – 80 நபர் செல்லும் பஸ்ஸுக்கு 1 நபர் செல்லும் காரை விட 80 மடங்கு அதிக இடம் சாலையில் தரவேண்டும். சுருக்கமாக: “ஒரு சிறந்த நகரின் அறிகுறி, ஏழைகளும் காரில் செல்வது அல்ல; பணக்கரார்களும் பஸ்ஸில் செல்வதே!”

வேகமாக பேருந்துகள் செல்ல அவற்றுக்கு தனி பாதை அமைத்து (சாலையில் 24 மணி நேர இட ஒதுக்கீடு செய்து) இதை சாதிக்கலாம். ரயில் போல நிருத்ததிலேயெ பயணசீட்டு தருதல், படிகளில்லா பேருந்துகள், உயர் தளத்தில் பேருந்து ஏற மேடைகள் –பிளாட்ஃபார்ம்; அகல கதவுகள், வே.பே.மு-வின்மற்ற அம்சங்கள். இவை முக்கியமானவை  - நுழையும் வெளிவரும் சீட்டுதரும் நேரங்கள் குறைக்காவிடின் தாமதமாகி திட்டத்தை குலைத்துவிடும். இவையாவும் நிர்வாக மாற்றங்களே : புது தொழில்நுட்பம் ஏதும் தேவையில்லை. என் கண்ணுக்கு இதுவே 
இத்திட்டதின் அற்புதம், வியக்க வைக்கும் புதுமை.

மெட்ரோ ரயில், சுரங்கர ரயில் அமைக்க வேபேமு-வை விட நூறு மடங்கு அதிக பணம் செலவாகும்; அவற்றை கட்ட அதிக நேரமும் பொருட்களும் வேண்டும். சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு பாதையை தவிற, ரயில்களை விட பேருந்துகளே அதிகமான பயணிகளையும் வழிசெலுத்துவதாக பெனலோசா கூறுகிறார்.

ரயிலை வியப்பாய் நோக்குபவர் பேருந்தை சாதாரணமாய் நோக்குவதால், சில மனோதத்துவ லீலைகளையும் முன்மொழிகிறார். பேருந்து ஓட்டுனரக்கு விமான ஓட்டுனரைப் போல் பைலட் என்று பட்டம் தருதல், நிருத்தங்களுக்கு அழகு சேர்த்தல், வசதி செய்தல், ஏசி (குளிர்சாதன) வண்டி, இதில் சில யுக்திகளாம். 
குஜரத் அகமதாபாத் நகரில் வேகப்பேருந்து முறை - தனி பாதை
பல நாடுகளின் பல ஊர்களில் BRT என்னும் வேபேமு அமலாகிவிட்டாலும் இது பல மக்களும் அறியாத ரகசியமாகவே இருக்கிறது. என்ன பஸ் தானே என்ற அலட்சியமோ? மெட்ரோ ரயில்களின் அந்தஸ்த்து அதிகமோ? மக்களுக்கு இவ்வளவு ஜனநாயகம் வேண்டாமோ? பாரதத்தில் அகமதாபாதில் நன்றாகவும், டெல்லி, புனேவில் சுமாராகவும் ஓடுவதாக கேள்வி. டெல்லியில் படியுள்ள பேருந்து, குறுகிய கதவுகள், பேருந்தில் டிக்கட் விற்பனை போன்ற பழைய திட்டங்கள் இருப்பதால் வேக பேருந்து முறையாயன்றி தாமத பேருந்தாய் மட்டுமே நிலைக்கிறது. ஆரம்ப காலத்தில் டெல்லி உயர் நீதி மன்றம் கார்களும் வேகபேருந்தின் தனிப்பாதையில் செல்லலாம் என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. பின்னர் வேறு ஒரு தீர்ப்பில், “பணக்காரரும் பேருந்தில்போவதே வளர்ந்த நாடு” என்ற தத்துவத்தை ஏற்று, வேகப்பேருந்துகளுக்கும் மட்டும் தனிப்பாதையை மீண்டும் வழங்கியது.

மேலும் எழுதுகிறேன்.