Monday 7 November 2016

நல்வினை பெயல்நீர்

The English version of this essay, On Human Kindness, is here
2014இல் ஆங்கிலத்தில் நான் எழுதிய பதிவின் தமிழாக்கம்.

சமீபத்தில் (ஜனவரி 2014இல்) குஜராத் சென்றேன். அங்குள்ள மக்களின் அன்பும் உதவியும் விருந்தோம்பலும் பெருந்தன்மையும் நெகிழ வைத்தது. குஜராத்தில் மட்டுமல்ல, புனேவிலும், ஹைதராபதிலும், சென்னைக்கு திரும்பி வந்தபின், நம் ஊரிலும். சுகமான பயணத்தையோ பொழுதையோ கெடுக்க ஒரு அற்ப செயலோ, கடின சொல்லோ போதும். நாவினால் பட்ட வடு நல்ல அனுபவத்தில் நஞ்சை கலக்கும். யானோ உத்தமன்? பல முறை யானே கள்வன். பலமுறை பட்ட வலியுமுண்டு. ஆனால் அறிமுகமற்ற நல்லோரும் வல்லோரும் புது நண்பர்களும் தன்னலமற்ற உதவி செய்து உபசரித்து அன்பாக பேசி எண்ணற்ற முறை மலைக்கவைத்துள்ளனர். இயற்கை காட்சிகளின் எழிலை ரசிப்பதும் இன்சுவை விருந்தை ருசிப்பதும் கண்கவர்ந்த கலையில் திளைப்பதும் நன்றே. அதனினும் நன்றே, நன்றி அறிந்து, நயம்பட நவில்தல்.

பெறுக பெறுபவை பிசகற பெற்றபின்
நவில்க நன்றியை நன்று

என்ற எழுதாகிளவியை என்னுள் ஆய்ந்து, நொந்து நூடுல்ஸாய் போன உள்ளங்களுக்கு கொஞ்சம் நீவி நீவி நெகிழ்ந்து நவில்கிறேன்.

முகம் சுளித்துக்கொண்டே நல்லுதவி பெற்றேன் பூஜ் நகரில். ரயில் பயணச்சீட்டை அச்செடுக்க தேடிச்சென்றால் ஒரு கணினி/அச்சு/இணையம் கடை தேட மேலும்கீழும் அலைந்து, ஒரு பயண ஏற்பாட்டாளர் கடையில் வழிகேட்க நுழைந்தேன். அவரே இணையத்தில் பார்த்து சீட்டை அச்செடுத்து கொடுத்து நான் காசு நீட்ட, பாரதியாரை சுண்டுவிரலால் வினவின நம்பூதிரி போல் என்னை ஒரு விரல் காட்டி துரத்திவிட்டார். முருகனை நாவல் பழம் கேட்க, யாளி மாம்பழம் கொடுத்த கதை.

ஏனோ நல்வினைகளை விட அநீதிகளே நம் மனதில் நீண்ட காலம் நிற்கிறது. இனிய உளவாத இன்னாத கூறுதலே எளிமையாய் உள்ளதே, ஏன்? பொறுத்து பூமி ஏதும் ஆளவேண்டாம், சிறுதுன்பத்தை தாங்கி ஒரு நிமிடம் நாவினை அடக்கி, உறுமாமல் இருத்தலே போதும்.

நண்பர்களின் நல்லுள்ளமும் நற்சொல்லும், எம்முறை கேளிர் எவ்வழி அறிதும் என்று கேட்க முடியாத மாற்றாரும், நம் உள்ளத்து செம்புலத்தில் பெயல்நீராய் நல்வினை பொழிய, நம் ஊடகங்களிலும் மன்றங்களிலும் சினமும் வெறுப்பும் அசூயையும் தலைவிரித்து ஆடுகின்றன. அதைவிட கொடுமை சுற்றாரையும் சூழ்ந்தோரையும் வசைபாடுதல்; அவரிடம் வசை படுதல்.

சமீபமாக ஒன்றும் வசை படவில்லை, திட்டவில்லை, சபிக்கவில்லை. இரண்டு மாதங்களாக அன்பு மழையிலும்,  பாராட்டு தென்றலிலும், புகழார பூமாரியிலும் திளைத்து  திணறி மலைத்துக்கொண்டிருக்கிறேன். ஆயினும் அவ்வப்பொழுது சம்பந்தமில்லாமல் கோவமும் குரோதமும் பொங்கி வருகிறது. நல்லவேளை, சீக்கிரமே சித்தம் தெளிந்து சிரித்து விடுகிறேன். “When it is a deep, dark November in your soul”,  (“கார்த்திகை மாத கார்மேகம் ஆன்மாவை கறுக்கும்போது”) என்று மோபி டிக் நாவலில் ஹெர்மன் மெல்வில் எழுதினார். செம்பரிதி சுடர்வீசும் அன்புசூழ் உலகில் ஆன்மா ஏன் கறுக்கவேண்டுமோ?


நீங்கள் இந்த கட்டுரையை ரசித்தால், இவற்றையும் ரசிக்கக்கூடும்

No comments:

Post a Comment