Wednesday, 1 March 2017

ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயகம்

ஆல் இந்தியா ரேடியோ போலவே, அமெரிக்காவில் நேஷனல் பப்ளிக் ரேடியோ (National Public Radio) என்று ஒரு வானொலி நிலையமுள்ளது. 1990களில் நான் சியாட்டிலில் வாழ்ந்த காலம். காரில் போகும் பொழுது அதை கேட்பேன். குறிப்பாக மதியம் “ஃப்ரெஷ் ஏர்” Fresh Air (புதிய தென்றல்) என்ற ஒரு நிகழ்ச்சியை ரசிப்பேன். டெரி கிராஸ் (Teri Gross) என்ற பெண்மணியின் நேர்காணல்கள் சிறப்பானவை.

ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டருடன் டெரி கிராசின் நேர்காணல். 1976 முதல் 1980 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர், 1960களில் ஜார்ஜியா மாநிலத்து தேர்தலில் போட்டியிட்டார். மாநில சட்டசபையில் மேலவைக்கு நடந்த அந்த தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் நடந்த சம்பவங்களை டெரி கிராசிடம் வானொலியில் நினைவு கூறிவந்தார்.

ஒரு சின்ன ஊர், அதில் ஒரு தொழிர்சாலை. அவ்வூரின் முக்கால்வாசி குடிமக்கள் அந்த தொழிர்சாலையில் தொழிலாளிகள். அதனால் அதன் வாசலிலேயே வாக்குச்சாவடி. தொகுதியிலுள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு சென்று கண்காணிக்கும் போது, அங்கே கொஞ்சம் எதிர்கட்சியின் ஆதிக்கம் அதிகம் என்று தெரிந்துகொண்டாராம். தொழிற்சங்கத் தலைவரும் எதிர்கட்சியின் முக்கிய புள்ளி, அவர் வாக்குச்சாவதி அமர்ந்திருந்தாராம்.

தன் கட்சிக்காரர் யாரும் அங்கில்லை. வாக்குபெட்டியின் வாய் கொஞ்சம் அகலமானதாய் கவனித்தார் கார்ட்டர். ஏனென்று யோசிக்கும்போதே, ஒருவர் வாக்கை பதிவிட்டு சென்றார். சங்கத்தலைவர் கை அசைத்தார். அவரது தொண்டர் வாக்குப்பெட்டியில் கையைவிட்டு அந்த வாக்குச்சீட்டை எடுத்து தலைவருக்கு காட்டினார். நம்ம கட்சிக்கு தான் அந்த ஆள் வாக்களித்தான் என்று தலைவர் அமைதியானார். வாக்குசீட்டு பெட்டிக்குள்ளே சென்றது. என்ன அநியாயம் என்று கார்ட்டர் பொங்கியெழுந்தாராம்.

வானொலியில் டெரி கிராசும் தவளை போல் விக்கினார். லேசாக சிரித்தபடி நான் வண்டியோட்டினேன்.

கார்ட்டர் பாதி பொங்கும் பொழுதே அடுத்த வாக்காளர் வந்தாரம். அவர் ஒரு பெண்மணி. அவரிடம் தேர்தல் பணியாளர் ஒரு வாக்குச்சீட்டை தர அவர் இன்னொரு சீட்டை கேட்டாராம். எதற்கு என்று கேட்டால், என் கணவருக்கு உடல் சரியில்லை அவருக்கும் சேர்த்து வாக்குசீட்டு வேண்டும் என்றாராம். கேட்பதில் ஒரு நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட தேர்தல் பணியாளரும், இரண்டாம் சீட்டை கொடுத்தாராம். வட்டச்செயலாளர் வண்டுமுருகனை போல் அன்று தவித்த கார்ட்டர், இன்று கொஞ்சம் நிதானமாகவே இதை சொன்னார். டெரி கிராஸ் ஆச்சரியத்தில் ஜேஎன்யூ மாணவரை போல் அலறினார். எனக்கு சிரிப்பு தாளாமல் வண்டியை ஓரம் கட்டினேன்.

இரண்டு வாக்கையளித்த பெண்மணி சரியான கட்சிக்கு தான் வாக்களித்தாரா என்று தொண்டருக்கோ தலைவருக்கு பெரிதும் ஆர்வமில்லை. பெண்ணாச்சே, ஒரு கண்ணியம்தான்.
அடுத்து ஒருவர் வந்தாராம். அவரும் இரண்டு வாக்குசீட்டு கேட்டாராம். கோவத்தோடு கார்ட்டர் அவரை பார்த்து, “என்ன உங்கள் மனைவிக்கு உடல் சரியில்லை அவருக்கும் சேர்த்து ஒரு வாக்கா?” என்றாராம். அவர் சாந்தமாக, “இல்லை அப்பாவுக்காக,” என்றாரம். “அப்பாவின் உடலுக்கு என்னவாம்?” என்று கார்ட்டர் வினவ, “இல்லை, அவர் இறந்து ஆறு மாதமாகிவிட்டது, அவர் எப்படி வந்து வாக்களிப்பார்?” என்றாராம்.

டெரியைவிட கொஞ்சம் நான் அதிகமாக சிரித்திருக்கலாம். நல்ல வேளை ஏற்கனவே வண்டியை ஓரங்கட்டிவிட்டேன்.

மந்தகாசமாக புன்னகை செய்த எதிர்கட்சி பெரிசை பார்த்து, “இந்த வாக்குச்சாவடியில் எத்தனை வாக்காளர்கள்?” என்று கார்ட்டர் கேட்க, அவர் “சுமார் 300 இருக்கும்,” என்றாராம்.

“உங்கள் கட்சிக்கு எத்தனை கிடைக்கும்?” – கார்ட்டர்.

“410 முதல் 420 வரை.”

நவரசத்தில் நான்கைந்து ரசங்கள் கார்ட்டரின் முகத்தில் கடுகு தாளித்திருக்கும். ஆனால் அதுவல்ல கதை. இதை யாவையும் மீறி அந்த தேர்தலில் கார்டர் வென்று சட்டசபை உறுப்பினர் ஆனார். சும்மாவா அமெரிக்கா வல்லரசாய் மிளிர்கிறது?

மற்ற தொகுதி கதைகளை அவர் பேசவில்லை. சட்டசபையில் இந்த பிரச்சனையை எழுப்பி, இறந்தவர் சார்ப்பில் மக்கள் வாக்களிக்கும் வழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்று ஒரு மசோதாவை கார்ட்டர் பிறப்பித்தாராம். இதற்கு மற்ற உறுப்பினர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை. ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களை அவ்வளவு சாதாரணமாக மாற்றிவிட கூடாது. காரசாரமான விவாதத்திற்கு பின், ஜார்ஜியா சட்டசபை ஒரு சமரசத்துக்கு வந்து புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி, ஒருவர் இறந்தபின் மூன்று வருடம் வரை மட்டுமே அவரது குடும்பத்தார் அவர் சார்ப்பில் வாக்களிக்கலாம் என்பதே புதிய சட்டம்.

இணையத்தில் தேடிப்பார்த்தால் இந்த் நேர்காணலின் ஒலிப்பதிவு கிடைக்கவில்லை. மசோதா சட்டம் தேட எனக்கு பொறுமையில்லை. நீங்கள் நம்ப கொஞ்சம் தயங்கலாம். ஜிம்மி கார்ட்டர் சிவப்பாக இருப்பார். சிவப்ப இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நான் மாநிறம். இந்த மாதிரி பொய் சொல்லத்தெரிந்தால் எங்கேயோ போயிருப்பேன்.

பின்குறிப்பு 1  ஜூல்ஸ் வெர்ண் எழுதிய அற்புதமான நாவல் “எண்பது நாட்களில் உலகை சுற்றி” (Around the World in 80 days) – இதில் சான் பிரான்சிஸ்கோ நகரின் ஒரு தேர்தல் காட்சி சுவாரசியமாக நடைபெறும்.
கார்ட்டர் அருங்காட்சிகம் - செய்தி துண்டு

பின்குறிப்பு 2  கார்ட்டரின் கட்சி ஓபாமாவும் கிளிண்டனும் சேர்ந்த ஜனநாயக கட்சி. இக்கட்சிக்கே ஒரு நூற்றாண்டாக தொழிற்சங்கங்கள் வாக்களித்து வருகின்றன. என் நினைவில் வானொலியில் தன் கட்சிக்கே தொழிற்சங்க வாக்குகள் விழுந்ததாக கார்ட்டர் சொல்லியதாக நினைவு. 2015இல் அட்லாண்டா சென்றபோது படத்தில் காணும் செய்தி துண்டு கார்ட்டர் அருங்காட்சியகத்தில் கண்பட்டது.

மற்றும் சில முயல்  கர்ஜனைகள்


1 comment:

  1. நம்ம ஊரு தான் இப்படின்னு நினைச்சா... அம்ரீக்கா இதுலையும் நம்ம ஏப்பம் விட்டுருச்சி...

    ReplyDelete