Saturday, 18 March 2017

தமிழிசையில் மிளிரும் சிற்பங்கள் - அசையும் பொருளில் இசையும் சிவனே


ஆங்கிலத்தில் இந்த பதிவிற்கு தலைப்பு வைத்து எழுதியதால் சிலர் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். சென்ற வாரம் செய்த பதிவே, மீள்.



இந்த  வீடியோ படத்தை பார்க்கவும். பார்த்தபின் சில சிற்பங்களுக்கு விளக்கத்தை கீழே படிக்கலாம்.

கல்கி இயற்றிய “சிவகாமியின் சபதம்” சரித்திர நாவலை 2000த்தில் படித்தேன். அந்த நூல் இந்திய கலையின் ரசிக்கும் ஆர்வத்தை தூண்டியது. தமிழக கோவில்களிலுள்ள சிற்பங்களையும்  ஓவியங்களையும் ஐம்பொன் சிலைகளையும் ரசிக்க தொடங்கினேன். 2005-ல் முதன் முறையாக, ராஜசிம்ம பல்லவன் எழுப்பிய காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு சென்றேன். அங்குள்ள சிற்பங்களின் அழகும் பன்மையும் பாவமும் கலைநயமும் கண்டு மலைத்தேன் மிரண்டேன் மயங்கினேன். 2006-ல் முதன் முறையாக எல்லோரா சென்றேன். ஒரு மலையை குடைந்து ஆலயம் செய்த ஆற்றலில் திளைத்து திகைத்து பிரமித்தேன்.

2008ல் முனைவர் சித்ரா மாதவனின் உரைகளை கேட்ட பின் சிற்பக்கலையில் ஆர்வம் மிகுந்தது. பல சிற்பங்ளின் அடையாளம் அதன் முதலே கண்டுகொண்டேன். பேராசிரியர் சுவாமிநாதனின் இயக்கத்தில் மாமல்லபுரம் கலைஉலாவிற்கு சென்ற பின் ஆர்வம் ஆழமானது.

பாரத நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் திரைப்படமும் அதற்கான இசையும் மிகச்சிறந்த கலைகளாக, புகழும் ரசனையும் பெற்ற கலைகளாக விளங்கினாலும், சிற்ப ஓவிய கலைகளுக்கு அதற்கு நிகரான புகழோ ரசனையோ இல்லை. அப்படி நிலவும் ரசனையும் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் தோன்றிய சிற்ப ஓவியங்களுக்கே உள்ளது.

கர்நாடக ஹிந்துஸ்தானி ஆகிய செவ்வியல் இசைகளுக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறு பங்கே, செவ்வியல் சிற்பங்களுக்கோ ஓவியங்களுக்கோ நிலவுகிறது. கலைஞர்களும் தேர்ந்த ரசிகர்களும் தத்தம் துறைச்சிமிழ்களில் சிக்கிவிடுகிறார்கள். இலக்கிய ரசிகர் சிலரே இசையிலோ சிற்ப ஓவியத்திலோ நாடட்டியத்தில்லோ ஆர்வத்தை வெளிப்படுத்துவர். இசைப்பிரியர்களுக்கு சிற்பம் தெரிவதில்லை, மேலோட்டமாகவே ரசிக்கின்றனர். 

பண்டைக்காலத்து சிற்பிகளின் நாட்டிய கலை ரசனையும் ஆழத்தையும் அறிந்த பொழுது என்னை கவ்விய வியப்பு விஸ்மயம் உறுதியாக மற்றவரையும் கவ்வியிருக்கும்; கவ்வும். (கவ்வுவியப்பு என்று ஏதாவது வினைத்தொகை உள்ளதா?)

இந்த வீடியோ (காணொளி) தமிழிசையோடு சிற்பகலையை கலக்க என் முயற்சி. இதனால் நானும் மகேந்திர வர்ம பல்லவனை போல் சங்கீர்ணஜாதி என்று எனக்கே பட்டமளித்து கொள்ளலாம். கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு எவ்வளவு சிறந்த முன்னோடியாக சிற்பங்கள் திகழ்கின்றன என்று மலைப்பதுண்டு. உங்களை அந்த மலைப்பை பகிறவே என் எண்ணம், இந்த படம்.

நடராஜன் என்னும் ஆடவல்லானாக சிவனை நாம் யாவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானின் மற்ற அபிநயங்கள் சிலருக்கு புதிதாக இருக்கலாம் – குறிப்பாக சதுஷ்ர தாண்டவர், ஊர்த்துவ தாண்டவர் (காலை தூக்கி நின்றாடும் தெய்வம்), கஜசம்ஹாரர், வட்டணைகள் பட நடந்து மாயம் பேசும் பிட்சாடணர், திரிபுரம் எரித்த விரிசடை கடவுளின் நாட்டியம் புதிதாக இருக்கலாம்.

1.   வீணாதர சிவன் – இரு குடங்களுடன் இன்று நாம் காணும் வீணை பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆண்ட மராட்டிய மன்னர் ரகுநாத நாயகர் வடிவமைத்தது. பழைய சிற்பங்களில் வீணை ஒரு நீண்ட கம்பை போன்றே இருந்தது.
     வீணாதர மூர்த்தி, காஞ்சி கைலாசநாதர் கோயில்

வீணாதர மூர்த்தி, பிரம்மேஷ்வரர் கோயில், 
               புவனேஷ்வரம், ஒரிசா
2.    மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை காண்பதரிது. கோவில்பட்டி அருகே கழுகுமலையில் இந்த சிற்பத்தை காணலாம்.
மிருதங்க தட்சிணாமூர்த்தி, 
கழுகுமலை

3.    
பரத முனிவர் நாட்டிய சாத்திரத்தை இயற்றினார். அவருக்கு தண்டு முனிவர் பாடம் நடத்தினாரா? தண்டு முனிவர் என்று கேள்விப்பட்டதுண்டா? அவருக்கு பரமசிவன் கற்றுத்தந்த கலையே தாண்டவம்! (பாண்டுவிலிருந்து பாண்டவர் போல).
தண்டு முனிவருக்கு நாட்டியம் போதிக்கும் சிவன்
               தர்மராஜ ரதம், மாமல்லபுரம்

4.    சிதம்பரம் சபாநாயகர் கோயில் கோபுரத்தில் நாட்டிய கரணங்களின் சிற்பங்களை காணலாம்.
            பரத நாட்டிய கரணங்கள், சிதம்பரம் கோயில்

5.    பலரது (செருக்கை) கர்வத்தை சிவன் அடக்கியுள்ளார். கைலாச மலையை தூக்க முயன்ற ராவணனின் செருக்கையும், மார்க்கண்டேயனை காலனிடமிருந்து காத்து, காலனை காலால் மிதிக்கும் காட்சிகளும் இங்கே
                                காலாரிமூர்த்தி 
                      கொடும்பாளூர் மூவர் கோயில்

          கைலாய மலையை தூக்க முயலும் ராவணன், 
                  எல்லோரா, மகாராட்டிரம்


6.    
மௌனத்தில் சனகாதி முனிவர்களுக்கு பரமசிவன் ஞானம் போதிக்க, சிங்கமும், மானும், யானையும் ஒன்று கூடி அமைதியாய் அடங்கியுள்ளன.

                      தட்சிணாமூர்த்தி, 
         காஞ்சி கைலாசநாதர் கோயில்


7.    எதிலும் இயங்கும் இயக்கம் என்பதை காட்ட இமைய மலையும், தேவரும் கந்தர்வரும் சூரியசந்திரரும் முனிவரும் சீடரும் கின்னரரும் கிம்புருடரும் நரரும் நாகரும் சிவகணரும் பாயும் கங்கையும் மரமும் விலங்கும் தகுமோ?

பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்கும் பரமன் மாமல்லபுரம்
திருவிளையாடல் படத்தில் இந்த பாடல் காட்சி

இந்த படத்தை நீங்கள் ரசித்தால் நான் இயற்றி என் பெரியம்மா அலமேலு பாடிய காஞ்சி கைலாசநாதர் கோயில் வாழ்த்தையும் ரசிக்கலாம். அந்த பாடலை பற்றிய விளக்கம் இங்கே



No comments:

Post a Comment