Wednesday, 16 March 2016

காஞ்சி கைலாசநாதர் கோவில் வாழ்த்து

முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் வைணவ பாசுரங்களை பாடியவர்களில் முதல் ஆழ்வார்கள் மூவர். திருக்கோவலூரில் உள்ள விண்ணகரத்தில் பெருமாளை தரிசிக்க ஓர் மழைப்பொழிந்த இரவில் மூவரும் நோக்கிச்செல்ல, பொய்கையாழ்வார் முதலில் வந்தார். ஒரு குடிசையின் கதவை தட்டினார். யாருமில்லை. உள்ளே சென்று குளிர்காற்றுமழைக்கு ஒதுங்கி படுத்துக்கொண்டு இளப்பாரினார். யாரோ கதவைதட்டி உள்ளே மழைக்கொதுங்க இடம் கேட்டார்.  “ஒருவர் படுக்கலாம்,” என்று பொய்கை பதில்சொன்னார். “ஒருவர் படுக்கலாம் எனில் இருவர் இருக்கலாம்,” என்று மீண்டும் வேண்டுகோள் வந்தது. கதவை திறந்து அவரை பொய்கையார் அனுமதிக்க, இருவரும் இருளில் அமர்ந்தனர். வந்தவர் பூதத்தாழ்வார் என்பது பொய்கையாருக்கோ இருந்தவர் பொய்கையார் என்று பூதத்தாருக்கோ தெரியாது. அப்போழுது மூன்றாம் ஒருவர் கதவை தட்டி இடமுள்ளதா என்று வினவினார். “இருவர் இருக்கலாம்,” என்று இவர்கள் பதில் சொல்ல, “இருவர் இருக்கலாம் எனில் மூவர் நிற்கலாம்,” என்று அவர் கேட்க, கதவை திறந்து உள்ளே அழைத்தனர். இந்த மூன்றாம் மனிதர் பேயாழ்வார். மூன்று ஆழ்வாரும் மற்றொருவரை யாரென்று தெரியாமல் இருளில் நிற்க திடீரென்று, கதவு திறக்காமலே யாரோ உள்ளே வந்ததுபோலும் மூவர் நிற்கும்மிடல் நால்வர் திணிந்து திகைப்பது போல் ஒரு நெரிசலை உணர்ந்தனர். சற்றே திகைத்து குழம்பி தவித்தபின், அடடா நாம் வணங்கும் நாராயணனால் மட்டுமே கதவை திறக்காமல் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே வந்திருக்க முடியும் என்று எண்ணி மழிந்து பொய்கை ஆழ்வார் சொல்லால் விளக்கேற்றும் விதம் ஒரு பாடலை பாடினார். இப்பாடலே அது.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழியான் அடிக்கே சூடினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

வையம் உலகம். தகளி அகல் விளக்கு. ஆழி சக்கரமும் ஆகும், கடலும் ஆகும். இந்த வையத்தை அகல் விளக்காக, கடலை அவ்விளக்கிற்கு நெய்யாக, கதிரவனை அகலுக்கு சுடராக, அந்த சுதர்சனம் என்ற சக்கரமேந்திய பெருமானின் அடிக்கு, துன்பம் எனும் கடல் நீங்க, சொல் மாலை சூடுகிறேன், என்று பொய்கை ஆழ்வார் சொல்விளக்கேற்றினார்.

இதைகேட்டு, பூதத்தாழ்வார் இப்பாடலை பாடினார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்

அன்பால் அகல்செய்து ஆர்வத்தை நெய்யாக சேர்த்து சிந்தையையே திரியாக்கி நாராயணனுக்கு ஞானத்தால் சுடரேற்றினார் பூதத்தாழ்வார். இவ்விரு ஆழ்வார்களும் ஏற்றிய பாசுரவிளக்கில் இருள்நீங்க அந்த நாராயணனை கண்டேன் என்று பேயாழ்வார் பாடினார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என் ஆழிவண்ணன்பால் இன்று


எக்கோலத்தில் நாரணனை கண்டார்? மாலவன் மார்பில் மலர்ந்தே, திரு என்று பெயர்கொண்ட இலக்குமியை (லக்ஷ்மியை) கண்டேன், நாரணனின் பொன் நிற மேனி கண்டேன், எதிரிகளின் செருக்கை அழிக்கும் பொன்நிற சக்கரம் கண்டேன், வலம்புரி சங்கையும் அவன் கையில் கண்டேன், கடலைப்போல் கருத்த நிறம் கொண்டவனிடம் (ஆழிவண்ணன்பால்) இன்று, என்றார்.

காஞ்சி கைலாசநாதர் கோவில் வாழ்த்து

இந்த பாடலின் கற்பனையை கொஞ்சம் திருடியே கைலாசநாதர் வாழ்த்தை நான் இயற்றியுள்ளேன்.

கல்மாலை தகளியா சில்பமே நெய்யாக
சொல்மாலை செதுக்கிய இடுதிரியாய் - பல்லவன்
அதியந்தகாமன் அரன்முறுவல் கச்சிவைத்தான்
அதிமானம் அதியற்புதம்

என் அலமேலு பெரியம்மா இப்பாடலை பாடியது. விவரங்கள் பின்வரும்.


கைலாசநாதரை உங்களோடு பார்க்கவேண்டும் என்று ஒருமுறை முனைவர் நாகசாமியிடம் பேராசிரியர் சுவாமிநாதனும் நானும் கேட்க, அவர் சொன்ன முதல் சொற்கள் “அதிமானம் அதி அற்புதம்.” தான் கட்டுவித்த கோயிலுக்கு ராஜசிம்மனே வடித்த சொற்றொடர். சாலப் பொருந்தும்.  அந்த கோயிலை புரிந்துகொள்ள இச்சொற்றொடரே மானசீக வாயில் கோபுரம்.

அத்யந்தகாமன் என்பது ராஜசிம்மனின் ஒரு பட்டப்பெயர். விருது. அவனுக்கு மிகவும் பிடித்த விருது. மாமல்லபுரத்திலும் காஞ்சியிலும் பல்வேறு இடங்களில் இப்பெயரால் தன்னை கல்வெட்டில் குறித்துக்கொண்டவன் ராஜசிம்மன். அந்தம் என்றால் முடிவு. அத்யந்த என்றால் முடிவற்ற. காமம் என்றால் ஆசை. முடிவற்ற ஆசைகளை கொண்டவன் ராஜசிம்மன்.

हरस्य हरहासरूपम् अतिमानम् अत्यद्भुम् “ஹரஸ்ய ஹரஹாஸரூபம் அதிமானம் அத்யத்புதம்” என்று ராஜசிம்மபல்லவேச்சுரத்தை ( காஞ்சி கைலாசநாத கோவிலை ) கல்வெட்டில் வர்ணிக்கிறான் ராஜசிம்ம பல்லவன். சிவனுக்கு ஹரன் என்றும் பெயர். ஹர என்ற வடமொழி சொல்லுக்கு திருடுதல் என்றும் ஒரு பொருள். ஹரனுடைய (ஹரஸ்ய) கள்ள புன்முறுவல் வடிவம் (ஹரஹாஸரூபம்) இக்கோயில் என்று மனம் களிந்து – அரன்முறுவல் கச்சிவைத்து, அதிமானம் அத்யத்புதம் என்று பெருமிகறான். உமையொருபங்கன் ஆலயத்திற்கு உகந்த உவமை அவன் சிரிப்பே என்று கல்லில் எழுதிய கலைக்கடலாம் ராஜசிம்மனை ரசிக்காமல் என்ன செய்வது?

மூலவரின் கோயில் அதிமானம் என்றால் அதை சுற்றி பல சிற்றாலயங்களை ஒரு மாலை போல் சூழந்து அமைத்துள்ளது. இக்கோவிலில் நுழைபவரின் கண்ணைக்கொள்ளும் முதல் காட்சி இந்த ஆலய மாலையே. கோவிலின் சுவற்றிலும் மதிமயக்கும் சிற்பங்களில் சிவனும் உமையும் மற்ற தெய்வங்களும் கணங்களும் கண்ணை பறிக்கும். 

கண்கொள்ளா காட்சி என்பது மற்ற எதற்கு பொருந்துமோ தெரியாது, நிச்சயமாக இக்கோயிலுக்கு பொருந்தும். சிற்பத்தினால் அலங்கரிப்பது மட்டும் போதுமென்றால் அவன் அத்யந்தகாமனாக இருப்பானா? ஸம்ஸ்கிருத மொழியில் கிரந்த லிபியில் ஒரு அற்புதமான கவிதையை இயற்றி, சொல்மாலையாக அதையும் செதுக்கிவைத்தான். திரி போன்று நீண்ட இச்சொல்மாலையில் அவன் சிவ பக்தி சுடர்விட்டு எரிகிறது.

சிற்றாலயங்களை சும்மாவிடவில்லை. இருநூற்றுக்கும் மேற்பட்ட தன்னுடைய பட்டபெயர்களை ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு லிபிகளில் செதுக்குவித்தான்!

கோயிலை சூழும் சிற்றாலய மாலை


விமானம் அல்ல - அதிமானம்!!

நாயன்மார்கள் யாரும் காஞ்சி கைலாசநாதரை பாடவில்லை. மிக அருகிலுள்ள அனேகதங்காபதம் எனும் கோயிலுக்கு வந்து அதை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், கைலாசநாதனை பாடவில்லையே என்று காஞ்சி பல்கலை கழக பேராசிரியர் சங்கரநாராயணன் ஒருமுறை வருத்தம் தெரிவித்தார். வேறு யாராவது கைலாசநாதனை பாடியுள்ளார்களா என்று தெரியவில்லை. நிற்க. 


அலமேலு பெரியம்மா பாடிய முதலாழ்வார் பாசுரங்கள் இங்கே 


மல்லை வாழ்த்தும் காஞ்சி வாழ்த்தும்

2010இல் தமிழ் பாரம்பரிய அறகட்டளை நடத்திய மல்லை கலை உலாவில் கலந்துகொண்டேன். அப்பொழுது மல்லை சிற்பியர் வாழ்த்து என்று ஒரு கவிதை எழுதினேன். ஓரிருவர் ரசித்தனர். உண்மையில் முதலாழ்வார்களின் பாசுரங்கள் அறிந்தவர் அக்கவிதையை கொஞ்சம் ஒரு வீசை அதிகம் ரசிக்கக்கூடும்.

மல்லை கலை உலாவில் ஓர் இரவு ஒரு நாடகம் நடத்தினர். வரலாற்றையும் சமூக அக்கரையையும் கலந்து கொஞ்சம் நவீன நையாண்டியை தூவிய நாடகம அது; தெருகூத்து பாணியில்,  நடிகை / கலைஞர் விநோதினி வைத்தியநாதனால் இயக்கப்பட்ட அந்த நாடகத்தில் அரசன் ஓரு ஓலைச்சுவடி படிப்பது போல் காட்சிவரும். அதில் இந்த கவிதையை அரசன் வேடமேற்ற நண்பர் சந்திரசேகர் வாசித்தார். யாருக்கும் புரியவில்லை. பாசுரங்களை நன்றாகவே அறிந்த திரு கண்ணன் அவர்களோ, கிறுத்துவ கல்லூரி பேராசிரியர் பாலுசாமி, பத்ரி சேஷாத்ரி  கூட அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒரு முறை தனியே சொன்னபோது கண்ணன் ரசித்தார். கலை உலாவிற்கு வந்த குடந்தைவாசி ஸ்தபதி உமாபதி ஆசாரிக்கு அதை அனுப்பினேன். அவரே அதை முதலில் மிகவும் ரசித்தவர். சமீபத்தில் மாமல்லபுரத்தில் வேரொறு தருணம் சொன்னபோது பாலுசாமியும் பத்ரியும் ரசித்தனர். சென்ற வருடம் 2015 புனே சென்றபோது, அங்கே வாழும் பெரியம்மா அலமேலுவிடம் இதை வாசிக்க மிகவும் ரசித்தார். 

பெரியம்மாவிடம் முதலாழ்வார் பாசுரங்கள், மற்ற சில பாடல்களை ஒலிஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தேன். 1920களில் அலமேலுவின் சிறுவயதில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு நடிகர் எம்.கே. தியகராஜ பாகவதர் அடிக்க வந்து பாடுவாராம். அவர் பக்தியோடு கோயிலில் பாடிய பாடல்களை அங்குள்ள மற்ற சிறுமிகள், சினிமா மோகத்திலும் சங்கீத ஆர்வத்திலும் மனப்பாடம் செய்து அடுத்தமுறை பாகவதர் வரும்போது பாடிகாட்டி அவரை அசத்துவார்கள் என்று, மலரும் நினைவகளில் பெரியம்மா திளைத்தார். பாகவதர் பாடிய சில சினிமா பாடல்களையும் பெரியம்மா பாட, நான் பதிவு செய்தேன். எண்பத்தியைந்து வயதில் என்ன ஒரு குஷி, என்ன ஒரு குறும்பு, என்ன ஒரு தமிழ் ஆர்வம். “அஞ்சரை கட்டைல பாடுவேண்டா, இப்போ அரை கட்டைலே போறது,” என்று நையாண்டி கலந்த ஒரு அலுப்பு. அலுப்பிலும் சிரிப்பு. “வேறு கவிதை எழுதினா சொல்லு, அதுக்கு மெட்டு கட்றேன்,” என்று அன்புக்கட்டளை. 

திருமணத்திற்கு வட இந்தியாவில் பல இடங்களில் வாழ்ந்தபின் பெரியப்பா நரசிம்மன் ஓய்வு பெற்றபின், சென்னையில்  1980களில் வாழ்ந்த காலத்தில் பல பஜனை குழுக்களுடன் பாடினவர் அலமேலு பெரியம்மா. வேங்கட வரதன் என்பவரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். தமிழிசை சங்கம், ஆல் இந்தியா ரேடியோவிலும் பாடியுள்ளார்.

1980 - பாட்டி, அம்மா, அலமேலு பெரியம்மா

அத்தை மகன் பார்த்தசாரதியுடன் ஒருநாள் பாடாலேஷ்வரர் குகை கோயிலுக்கு சென்றுவந்தேன். அந்த சில மணிநேரத்தில் அலமேலு பெரியம்மா இந்த கவிதையை மனப்பாடம் செய்து மெட்டும் ராகமும் கட்டி பாடிகாட்டினார். கல்லே தகளியா பாடலின் மெட்டில் பாட சரியாக அமையவில்லை என்று வேறு ராகத்தில் (கேதாரகௌளையில்) பாடினார். அடுத்தநாள் நானும் சாரதியும் பாஜா கார்லே குகைகளுக்கு சென்றுவருவதற்குள் கைலாசநாதர் வாழ்த்தையும் ஆரபியில் ராகம் கட்டி பாடிவிட்டார்.

இந்த ஆஜிவக வாலேசன் வலைப்பதிவை எழுதத்தொடங்கிய பொழுது அந்த மல்லை சிற்பியர் வாழ்த்து கவிதையை இங்கு பதிவிட்டேன். 2015ஜூன் மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்காக இரண்டாயிரம் ஆண்டுகளாக மாமல்லபுரம் (Two thousand Years of Mamallapuram) என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதே தலைப்பில ஆங்கிலத்தில் ந. ராமசாமி எழுதிய ஆங்கில நூலின் சாரம்சம் அந்த உரை. மே மாதம், அவர் இல்லத்தில் பேச வாய்ப்பளித்த முனைவர் நாகசாமி, அந்நூலை இரவலாக கொடுத்தார். உரைக்கு நடுவே அலமேலு பெரியம்மா பாடிய இப்பாடலை சேர்த்தேன். பாடலிலிருந்து ஒலியை மட்டும் பிரிக்க யெஸ்ஸெல் நரசிம்மன் உதவினார். பாடலை விஜயன் ஒளிப்பதிவில் சேர்த்தார்.

மல்லை சிற்பியர் வாழ்த்து

கல்லே தகளியா கற்பனையே நெய்யாக
பல்லவன் கட்டளை இடுதிரியா – மல்லை
ஆழி கரையோரம் உளியால் விளக்கெடுத்தார்
வாழி எம் சிற்பியர் புகழ்.

இதை அலமேலு பெரியம்மா பாடிய ஒலிப்பதிவு இங்கே


தொடர்புடைய கட்டுரைகள் சுட்டிகள்

1.    காஞ்சி கைலாசநாதர் கோயில்  – காணொளி (வீடியோ)
2.    அதிமானம் அதி அற்புதம் – திருமதி ராதிகா பார்த்தசாரதி கட்டுரை
3.    ராஜசிம்ம பல்லவேச்சுரத்தின் ஓவிய எழுத்து
6.    2000 ஆண்டுகளாக மாமல்லபுரம் – காணொளி (வீடியோ)
7.  முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள
8.  Swaminathan Natarajan's blog on Kanchi Kailasanatha temple 

 துக்கடா - அலமேலு பாடிய மற்ற சில பாடல்கள்

 மன்மத லீலையை வென்றார் உண்டோ (படம் - ஹரிதாஸ்)


வள்ளலை பாடும் வாயால் (படம் : சிவகவி)

வள்ளலை பாடும் வாயால் தியாகராஜ பாகவதர் பாடியது

பாலும் தெளிதேனும் (விநாயகர் அகவல்)


உப்புமா கிண்டி பாரடி

3 comments:

  1. Excellent Original work done. My Sincere Appreciations. For the Quality Poem, both the Writer and Singer Deserves a Significant Swarna'Por Kizhi".

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete