Friday, 23 June 2017

சலைவன் வாழ்த்து – திணைகமழும் உதகைவனம்

குறிஞ்சிவன மலர்கடிகை
உதகை தாவர பூங்கா


சலைவனெனும் அயலவனின் செயல்திறமை சிகரமிதோ
தலைவனவன் ரசனையிலே வளர்ந்ததுமோர் நகர்வனமோ
பனிபடரும் வரைதொடரில் பழங்குறவர் பயன்பெரவும்
வனிதவெழில் வளர்த்தவனை வணங்குகிறேன் தமிழனென

கதிரவனின் கடுமையிலே மருதமுமே சுருண்டிவிட
இதமிதுவே எனவறிந்து கம்பெனிமார் களம்புகவே
உதகையிலே உதித்ததொரு தலைநகரம் வெயில்தணிய
யதுகையென துளிர்ந்ததுகாண் கலைமிளிரும் மலர்வனமும்

மலர்வழியே உவமைகளை உறுகவியோர் உணர்த்தினரே
பலரறியா புதுமலரால் உதகையிலே உழவுசெய்தெ
திணைகமழும் தமிழ்மொழியும் திளைக்கிறதோ புதுவரவால்
அணைத்ததுயார் இயற்கையன்றோ இலக்கணமே மறுமலர

அறம்பொருளும் அகத்திணையும் பழம்புலவர் பரவிவர
குறிஞ்சிவன மலர்கடிகை செடிமரங்கள் அறிவியலாம்
புவிபொலியும் புதுகலையை தமிழ்புரிந்த சலைவன்வழி
நவிலுகிறேன் திணைவளர பலவிரும்பி இவண்கோபு

 
சலைவன் நினைவகம், கன்னேரிமுக்கு

ஜான் சலைவன், நினைவகத்தில் ஓவியம்

முதன்முறை கடந்த மே மாதம் உதகமண்டலம் சென்றேன். கோவையில் ஒரு தொல்லியல் மாநாட்டில் பங்கேற்றபின், நண்பர் ஓவியர் விசுவனாதனுடன் இரண்டு நாள் கோத்தகிரி பயணம், அதில் ஒரு நாள் உதகை சென்றேன். இருளர், படகர், தோடர், கோத்தர், குரும்பர் எனும் ஐந்து மக்கள் வாழும் மலைகளுல் உதகமண்டலமும் ஒன்று. கோத்தர் வாழும் மலை (கிரி) கோத்தகிரி. ஜான் சலைவன் எனும் ஆங்கிலேய அதிகாரி 1819இல் கோத்தகிரி வந்து அதன் இயற்கை எழிலில் மயங்கினார். அதைவிட மதறாஸ் மாகாண கோடை வெயிலிலிருந்து தப்பித்து தஞ்சம் புக இதை விட சிறந்த இடம் ஏதுமில்லை என்று உணர்ந்தார்.

பின்னர் கோடைக்கால ராஜ் பவன் உதகையில் உருவாகி அதற்கு ஒரு தோட்டமும் அமைந்தது. அந்த தோட்டமே பின்பு ஒரு தாவர பூங்காவாக மாறியது. இன்றும் கண்காட்சிக்கும் ஆராய்ச்சிக்கும் சிறந்த தடமாக விளங்குகிறது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உலகின் பிரதான ஆராய்ச்சி தாவர பூங்காவாக கியூ தோட்டம் திகழ்கிறது. விசித்திரம்! உதகை பூங்காவை வடிவமைத்தவ தாவர நிபுணரின் பெயரும் கியூ! பரிணாம வளர்ச்சி கொள்கைக்கு புகழ்பெற்ற சார்ல்ஸ் டார்வினின் நெருங்கிய நண்பர் ஜோசஃப் ஹுக்கர் அக்காலத்தில் லண்டன் கியூ தோட்டத்து ஆளுனர். ஹுக்கர் உலகின் மிகச்சிறந்த தாவர ஆய்வாளரில் ஒருவர். இமய மலையிலும் சில வருடங்கள் அவர் தாவர ஆய்வுகளை நடத்தினார். தென் அமெரிக்காவில் விளையும் ரப்பர் மரத்தை ஆசியாவுக்கு அறிமுகம் செய்து மிகப்பெரும் ரப்பர் தோட்டங்களுக்கு மற்ற வணிக செடிமரங்களுக்கும் வழி வகுத்த புகழுக்கு உரியவர்.
1848ல்  கியூ வடித்த முதல் தாவர தோட்டம்

இருளர், படகர், தோடர், கோத்தர், குரும்பர்

உதகமண்டலம் 1837,
சல்லைவன் நினைவகத்தில் ஓவியம்
உதகமண்டலம், மே மாதம் 2017
(
பங்குனி ஹேவிளம்ப வருடம்)

ஹுக்கர் வட இந்தியாவில் செய்ததற்கு, தமிழகத்தில் சலைவனின் முன்னோடி. சலைவனுக்கும் சென்னையில்  ஆண்டர்சன், புக்கானன், என்று சில தாவரவியல் முன்னோடிகள் கோலோச்சினர். சலைவன் சான்றோராய் மலைவாழ் மக்களின் நினைவில் நிற்கிறார். ஐரோப்பிய காய், கனி, மலர் வகைகளை உதகைக்கு அறிமுக படுத்தி, தோடர் கோத்தர் போன்றோரை சமகால சமூகத்தில் சேர்த்தவர். கோத்தகிரி அருகே உள்ள படகர் கிராமம் கன்னேரிமுக்கு. அங்கே அவர் முதலில் தங்கிய வீட்டை மாவட்ட ஆட்சியர் புனரமைத்து ஒரு நினைவகமும் சிலையும் நிறுவியுள்ளார். அந்த நினைவக இயக்குனர் திருமதி காயத்ரி பொருமையாக பல தகவல்களை அள்ளி தந்தார்.

தாவரவியலில் எனக்கு நுனிப்புல் மேயும் ஆர்வமுண்டு; ஆழமில்லை. தாவரஙக்ளின் வரலாறும் மலர்களின் வரலாறும் மிக சுவராசியமானவை. சமீப கால பரிணாம உயிரியல் ஆய்வுகளின் படி விலங்கினங்கள் தோன்றி பத்து கோடி ஆண்டுகள் பின்னரே தாவரங்கள் தோன்றின. அப்படியானால் அதற்கு முன் விலங்குகள் எதை தின்று வாழ்ந்தன? வேறு கட்டுரையில் எழுதுகிறேன்.

உதகை கோத்தகிரி போன்ற பழங்குடி மக்கள் சங்கம் முதல் நாயக்கர் காலம் வரை தமிழ் சமூகத்தின் விளிம்பிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். சங்க புலவர்கள் உவமைகளில் பலவித மலர்களும் மன்னி மணந்தன, மின்னி மிளிர்ந்தன. ஐந்திணைகளின் பெயர்களே மலர்களின் பெயர்கள்தாம். ஜெயமோகனின் உரையால் எனக்கு இதன் ஆழமும் அகலும் உறைத்தது.

ஆங்கிலேயர் ஆட்சி வரும் வரை பறைசாற்றி அலச தமிழில் அறிவியல் சார்ந்த நூல்களோ ஆய்வுகளோ இல்லையென நினைக்கிறேன். இருந்தால் தெரியபடுத்தவும். சலைவன் வழிவந்தோர் தமிழ் நிலத்திற்கு உதகை பூங்காவை போல பல புதிய ஆய்வு தளங்களை பரிசளித்துள்ளனர். அவற்றை தழுவிய நூல்கள் சிலவே. சலைவனுக்கோ தாவரவியலுக்கோ வாழ்த்து பாடல் உள்ளதா என்றறியேன். தோன்றியது எழுதினேன். உதகை பூங்காவை குறிஞ்சிவன மலர்கடிகை என்றும், தாவரவியலை புதுத்திணை என்றும் நான் புனைந்தது மிகையாகாது என்றே நினைக்கிறேன். வீரமாமுனிவர், சென்னைப்பட்டணத்து எல்லீசன் வழியில் அயலவன் சலைவனை தமிழனென மொழிந்துள்ளேன்.

கவிதைகள்

தொடர்புடைய கட்டுரைகள்
1. சங்க இலக்கியம் – ஜெயமோகன் உரை  (ஒலிப்பதிவு)
2. தமிழில் கலைச்சொற்கள் – ஜெயமோகன் கட்டுரை
3. டார்வினுக்கு ஹுக்கர் செய்த உதவி
4. கம்சிலோவின் உயிரின கணக்கு



No comments:

Post a Comment