Tuesday, 22 August 2017

அடையாறு கடல் சேரும் நகரம்

அடையாறு கடல் சேரும்  நகரம்

மெட்றாஸ் டே எனப்படும் சென்னை தினம் இன்று. 22 ஆகஸ்டு 1639 ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டேயும் ஆண்ட்ரூ கோகனும் பூந்தமல்லி நாயக்கர் தார்மள வெங்கடாதிரியிடம் புனித ஜார்ஜ் கோட்டை கட்ட அனுமதி பெற்ற நாள், சமீப சில வருடங்களாய் கொண்டாடப்படுகிறது. நேற்று நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைணவ கல்லூரியில் “நீரின்றி அமையாது சென்னை” என்று ஒரு நாடகம் வழங்கினோம். இந்த நாடகத்தை தூண்டி, கதை வசனம் எழுதி நடித்து இயக்கியவர் வல்லபா ஸ்ரீநிவாசன். அவரே அடையாறு நதியாக பாத்திரமேற்று நடித்தார். பல்லவர் காலம் முதல் இன்று வரை சென்னையில் திகழ்ந்த நீர்நிலை வரலாற்றையும் வளர்ச்சியையும் விளம்பும் நாடகம்.

அடையாறு மரபாவண ஆர்வலர்களில் நானும் ஒருவன். ஏதோ ஒரு கவிதை தோன்ற, சுப்பிரமணிய பாரதியின் “தீராத விளையாட்டு பிள்ளை” பாடலின் மெட்டில் ஒரு கவிதை எழுதி வல்லபாவுக்கு அனுப்ப, அவர் அப்பாடலை இந்நாடகத்தில் சேர்த்துவிட்டார். மெட்டிசைத்து பாடியவர் வித்யாலக்ஷ்மி. தவில்  பரத். தேவராட்ட நாட்டியக்குழு சந்திரசேகர்-சாரதா தம்பதியினர், பாலா.

அடையாறு கடல் சேரும் நகரம் - சென்னை
குடையாக தமிழ்நாட்டை நெறியாளும் நகரம்
படையாக பலநாட்டு மக்கள் - நதி
அடைகின்ற கடலன்ன தக்கண சிகரம்

மாட மா மயிலையாம் பண்டு - புவி
பாடவே குறள் தந்த வள்ளுவன் வாழ்ந்த (மாடமா)
கூடவே பொய்கையும் பூதமும் - மாலை
நாடியே தமிழ்செய்த பேயனும் தோன்றிய (மாடமா / அடையாறு)

மணல்சேலை காற்றாடும் மெரினா - வீர
அனல்வீசும் தமிழ்புயலின் மணம்வீசும் திடலாம்
கனலாக பாரதி பேசி - விடுதலை
அனலாக பரவிட அமைந்தவோர் இடமாம்

தருமமிகு அருமைமிகு சென்னை
வறுமைகளை போக்கும் வணிகமிகு சென்னை
கறுமைமயில் எழிலைமிகு சென்னை
உரிமைகளை முழங்கும் பெருமைமிகு சென்னை


No comments:

Post a Comment