Wednesday, 15 April 2020

அழகின் விதிகள்


Art and the Brain - English version of this essay


விலையனூர் ராமசந்திரன் ஒரு உலகப்புகழ் பெற்ற மருத்துவர். அமெரிக்காவின் சான் டியகோ நகரிலுள்ள கலிபோர்ணியா பல்கலைகழகத்தில் பேராசிரியர். Phantoms in the Brain (மூளையின் மாயாஜாலங்கள்) என்ற நூலை எழுதியுள்ளார் (தமிழிலும் இது கிடைக்கிறது, பாரதி புத்தகாலயம் பதிப்பு). சில மனநோயாளிகளின் விசித்திர இன்னல்களை ஆராய்ந்தார். அதில் சில் நோய்கள் மூளையின் நரம்புகளின் சேதத்தால் விளைந்தவையே அன்றி மன உளைச்சலால் அல்ல என்று கண்டுபிடித்து, சில நோய்களுக்கு தீர்வு, குணமாக்க கருவிகள், சிகிச்சை, பயிற்சி, என்ற பல புதிய யுக்திகளை படைத்தார். 

இந்த ஆய்வுகளால் மனித மூளையின் சில செயல்களுக்கும் புதிய விளக்கமளித்தார். கலையின் இயல்பும் அகழின் இயல்பும் கலைஞனின் பார்வையிலும் தத்துவத்திலும் மட்டுமில்லை; மூளை மருத்துவரின் ஆய்விலும் விளக்கத்திலும் உருவாகலாம் என்பது இவர் சித்தம். இயற்கையின் விதிகளை போல் அழகிற்கும் விதிகளை இவை என கருதி, வகுத்துள்ளார்.


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையிலும் பல்வேறு மேடைகளிலும் இதை பேசியுள்ளார். சமீபத்தில் அப்பராவ் கலைக்கூடத்தின் மேடையில் பேசிய உரையின் புள்ளிவிவரங்களே இந்த கட்டுரை. அவர் குரலில் எழுதியுள்ளேன்.

ராமசந்திரனின் உரை

நான் சென்னைக்கும் வரும்போது மயிலை கபாலிச்சுரர் கோவிலுக்கு செல்வது வழக்கம். மற்ற பல கோவில்களுக்கும் செல்வதுண்டு. கோயில் சிற்பங்களின் அழகும் ஐம்பொன் சிலைகளின் அழகும் என் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

சி.பி.ஸ்நோ Two Cultures (இரண்டு கலாச்சாரங்கள்) என்றொரு புகழ்பெற்ற கட்டுரை எழுதினார். கலையுலகம் ஒரு புரம், அறிவியல் உலகம் ஒரு புரம். இவ்விரண்டும் ஒவ்வாமல் பிரிந்துள்ளன் என்பது அவர் வாதம். அவர் கொள்கை தவறு என்பது என் வாதம். சிலரை சாடுவது நம் கடமை என்று ரீத் துரை கூறினார். அந்த கடமையை இன்று ஆற்றுகிறேன்.

சமூக மரபுகளை கடந்த ரசனை உள்ளதா? கலை கண்ட மூளை எப்படி இயங்குகிறது? நோம் சாம்ஸ்கி சமூக மரபுகளை கடந்து மொழிக்கு ஒரு அடிப்படை கொள்கை திகழ்கிறது என்கிறார். சமூக மரபுகளை கடந்து அழகிற்கும் ரசனைக்கும் ஒரு அடிப்படை உள்ளது என்பது என் வாதம். சமூக மரபுகளை தாண்டி, ஒட்டுமொத்த விலங்கின குடும்பத்திற்கும் ஒரு அடிப்படை அழகியல் ரசனை உள்ளது என்பதே என் வாதம். மலர்கள் மனிதர்களுக்காக அழகான வடிவமும் வண்ணமும் பெறவில்லை. தேனீக்களையும் பட்டாம்பூச்சிகளை தங்கள் அழகால் ஈர்ப்பதற்கே, மலர்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழகழகாக தோன்றின. மனிதன் உருவாகியதோ சில கோடி ஆண்டுகளுக்கு முன்பே. நாம் தேனிக்களிலிருந்து பரிணமிக்கவில்லை. ஆனாலும் மலர்களின் அழகை ரசிக்கும் அதே ரசனை நமக்கும் உள்ளது.

பெருங்கூடு (பவர் -bower) பறவை சாம்பல் நிற சிறுபறவை. பாசி, குச்சி, குப்பை, இலை, சிகரட் தோல் எல்லாம் கொண்டு மாபெரும் கூடுகளை இந்த சிறிய பறவை கட்டுகிறது. அதை பார்த்தால் ஒரு பறவை படைத்தது என்றே யாரும் நம்பமாட்டார்.

நிற்க.
பார்வதி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதம் வந்த பல ஆங்கிலேயர் ஐம்பொன் சிலைகளை இகழ்ந்தனர். பார்வதியின் ஒரு சிலைகண்டு, இயற்கைக்கு மாறாக கோரமாக இருக்கிறது என்று கடிந்தனர். மெல்லிய இடை, கனத்த கொங்கை, சமகால பெண்களில் காண இயலா முகம், ஆதலால் இது கொச்சை, கொடூரம் என்றனர். இந்திய சிற்பங்களில் அங்கங்கள் எதுவும் இயற்கை அளவின்றி செயற்கையாக தெரிகிறது என்றனர். விசித்திரம் என்னவென்றால், அதே காலகட்டத்தில், சில ஆங்கிலேய பெண்கள், தங்கள் இடைகளை குறைக்க எலும்புகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்! அப்படி எலும்பை அகற்றிய பெண்களின் எலும்புகூடுகளை நான் லண்டனில் பார்த்திருக்கிறேன்.

(பிக்காசோ போன் ஓவியர்களின்) நவீன மேற்கத்திய கலை. உருவத்தை நீட்டியும் குறைத்தும் வளைத்தும் சுளித்தும் சிதைக்கிறது. இந்த சிதைவுகளே “வடிவ கொடுங்கோலிலிருந்து விடுதலை” என்பது நவீன ஓவியர்களின் பெருமிதம்!

கலையின் நோக்கம் இயற்கையை படம் பிடிப்பதல்ல. ஒரு புகைப்படம் இதை செய்யலாம். எல்லா புகைப்படங்களையும் நாம் கலை என்று அழைப்பதில்லை.

சமஸ்கிருதத்தில் ரசம் என்று ஒரு சொல் இதை மொழிபெயர்ப்பது கடினம். கலை தூண்ட முயலும் உணர்ச்சியே ரசம்.

இந்த படத்தை காணவும். தொலைவை நோக்கும் ஒரு யுவதி தெரிகிறாள். இடது பக்கம் நோக்கும் ஒரு கிழவியும் தெரிகிறாள். இது ஒரு சிலேடை ஓவியம்.
சிலேடை ஓவியம் - யுவதியும் கிழவியும்

இதுவும் ஒரு சிலேடை ஓவியம். முயல் வாத்து இரண்டும் தெரியும். முயலின் காதுகள் வாத்தின் அலகாக பாவிக்கிறது.
கலையின் நுணுக்கமே பார்வையின் லீலைகள். மூளையை சீண்டி வெவ்வேறு காட்சிகளை, தரிசனங்களை காண தூண்டுவது கலையின் ஒரு முயற்சி.
சிலேடை ஓவியம் -  வாத்து முயல்

இது போன்ற ஆய்வுகளால் நான் அழகின் ஏழு விதிகளை வகுத்திருக்கிறேன். இது முற்றுபெற்ற ஆய்வல்ல. வேறு விதிகளும் இருக்கலாம்.
கலையின் ஏழு விதிகள்

ஒரு குறிப்பு. கலாச்சாரங்களில் கலை வேற்றுமைகளை பலரும் ஆராய்ந்துள்ளனர். அது கலை வரலாறு. அதை நான் இங்கு கூறவில்லை. மரபுகளை கடந்த கலையின்  உயிரியல் அடிப்படைகளை தான் தேடுகிறேன்.

குவியல் (Grouping) வேட்டை விலங்கிடம் தப்பிக்க உருவாகியது. இலைமறைவான ஒரு சிங்கத்தை நம் கண்கள் பல சிங்கத்துண்டுகளாக பார்ப்பதில்லை. முழு சிங்கமாக பார்க்கிறது. இது பரிணாம வளர்ச்சியின் பலன். இந்த விதியை ஓவியர்கள், நெசவாளர்கள் போன்றோர் கையாள்வது சகஜம்.

இந்த படத்தை காணவும். புள்ளிகளின் குவியலாக தெரிகிறதா? ஒரு டால்மேசியன் நாய் தெரிகிறதா? முதலில் சிலருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் நாய் தெரிந்துவிட்டால் அது மறையாது.
புள்ளிகலில் ஒரு டால்மேசியன் நாய்

சிகர தகற்றம் (Peak shift) ஒரு எலிக்கு முக்கோணங்களும் நீள்சதுரங்களும் காட்டி, நீள்சதுரத்தை நோக்கி செல்லும் போது ஒரு உணவு துண்டு கொடுத்தால், அது சீக்கிரம் நீள்சதுரத்தை விரும்ப பழகிவிடும். முன்பை விட நீளமான நீள்சதுரம் காட்டினால் அதைநோக்கி செல்லும். ஒரு தனிப்பட்ட நீள்சதுரத்தை அந்த எலி விரும்புவதில்லை. நீள்சதுர வடிவத்தை அது விரும்ப கற்கிறது.

கேலிசித்திரம் என்னும் தூரிகையின் அடிப்படை இதுவே. ஓபாமவையோ நிக்சனையோ வரையலாம். ஒருவரின் வேற்றுமையை பெரிதாக்கினால் அவரது இயல்பை விட அந்த சித்திரம் நமக்கு ஏதோ சொல்கிறது. நிக்சன் மூக்கையும் காதையும் பெரிதாக்கினால, நிக்சனை விட அந்த சித்திரம் நிஜமாகிறது இந்த யுக்தியை சோழ சிற்பிகள் ஐம்பொன் சிலை வடிக்க கையாண்டனர்.

(கோபுவின் குறிப்பு  இந்திய ஓவியர்கள், இந்திரா காந்தியின் மூக்கை பெரிதாக வரைந்து காட்டினர். சந்தன வீரப்பனின் மீசை, கே ஆர் விஜயாவின் புன்னகை யாவும் சிகர தகற்ற யுக்திகள்)

டிம்பர்கன் என்று ஒரு உயிரியல் அறிஞர் கடல்புறா குஞ்சுகள் தங்கள் தாயை அடையாளம் காணும் முறையை ஆராய்ந்தார். கடல்புறாக்களின் அலகு நுனியில் ஒரு சிவப்பு புள்ளியிருந்தது. அந்த புள்ளியை குஞ்சு தன் அலகால் தட்டும். தாய்பறவை தன் வாயிலிருந்து இறையை குஞ்சுக்கு தரும். செத்த பறவை ஒன்றி அலகை வைத்து டிம்பர்கன் பரிசோதனை செய்தார். ஒரு குஞ்சு அந்த அலகின் புள்ளியை தட்டி உணவு கோரியது. அடுத்து ஒரு குச்சியின் நுனியில் சிவப்பு புள்ளி வரைது ஒரு குஞ்சிடம் காட்டினார். அந்த குச்சியையும் குஞ்சு தன் அலகால் தட்டி உணவு கோரியது. ஒரு புள்ளிக்கு பதில் மூன்று புள்ளிகளை வைத்த குச்சியை டிம்பர்கன் நீட்டிய போது, அலாதியாக ஆர்வமாக அதிகாம அதை குஞ்சு தட்டியது. இதுவும் சிகர தகற்றம்.

இடக்கரடக்கலும் தனிமைபடுத்தலும் (Principles of Understatement and Isolation)

கலையில் இவற்றின் பங்கும் முக்கியம்.  ஆனால் இது சிகர தகற்றத்திற்கு நேர்மாறாக உள்ளதே? மூளை பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகிறது. ஒரு உருவத்தின் வடிவக்கோடு நிறத்தைவிட பல தகவல்களை தருகிறது. ஒரு பெண்ணின் கோட்டோவியத்தில் நம்மை வண்ணத்தை விட வடிவம் அதிகம் கவர்கிறது. ஓவிய சிற்ப கலைஞர்கள் இதை ஆழமாக உள்வாங்கி பரவலாக கையாள்வர்.

கலை உவமை (Artistic metaphor) மை ஏன் நம்மை கவர்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு பொருளை விட வெறும் வர்ணனையை விட ஒரு உவமை நம்மை ஏன் சிலிர்க்கவைக்கிறது? ஓவியர், கதாசிரியர், புலவர் யாவருக்கும் உவமை ஒரு சிறந்த கருவி. ஷேக்ஸ்பியரை போன்ற மேதை உவமைகளை தெறிக்கவிடுவார். கலைஞர் மட்டுமல்ல. பாமரரின் மொழியிலும் முப்பது சதவிகிதம் உவமைகள் இருக்கும்.

கேள்வி பதில்கள்

கேள்வி  மட்டமான கலை என்று ஏதேனும் உள்ளதா? அல்லது காண்பவன் கண்ணில்தான் அழகா?

பதில் அமெரிக்காவில் மட்டமான கலை இருக்கிறது. அதை கிஷ் என்று அழைப்போம். செவ்வியல் ஓவியம் ரசிக்க தொடங்கினால் கிஷ்ஷை ரசிக்க முடியாது. ஒருவந்து கிஷ் இன்னொருவனின் செவ்வியல் என்று நான் சொல்லமாட்டேன்.

பள்ளிக்கல்வியில் கவிதையும் கலையும் ஆரம்பத்திலேயே சேர்க்கவேண்டும். இந்தியாவில் மக்காலேவின் திட்டத்தால் இலக்கணத்தை முதலில் கற்பிக்கிறோம். அது பயனற்றது. செவ்வியல் கலைகளை ஆரம்பத்தில் அறிமுகம் செய்தால் கிஷ்ஷை தவிர்த்து நல்ல கலை ரசனை வளரும்.

கேள்வி மனிதர், விலங்கு பறவை ரசனை பற்றி கூறினீர்கள். மீன் பாம்பு ஊர்ந்து செல்லும் விலங்குகளுக்கும் ரசனை உண்டா?
பதில் பறவைகள் மனிதர்களை போல் பகலில் உலவும். அதனால் மோப்பத்தை விட பார்வை திறன் அதிகம். பாம்புகளும் ஊர்ந்து செல்லும் விலங்குகளும் மோப்ப சக்தி அதிகம் கொண்டவை. அதனால் தான் அவை பறவைகளை போல் வண்ணவண்ணமாயில்லை.

கேள்வி சிகர தகற்றம் கண்நுகரும் கலையில் மட்டும் பிரதானமா செவிவழி கலைகளிலும் உண்டா?
பதில் மூளையில் மூன்றில் ஒரு பங்கு பார்வைக்கு. நூற்றிஐம்பது வருடங்களாய் நாம் பார்வையை ஆராய்ந்துள்ளோம். மனித இனத்தின் செவித்திறன் பார்வைத்திறனுக்கு ஈடாகாது. ஆய்வுகளும் அத்துறையில் குறைவே.

ஆனால் கலையில் பொதுவான அம்சங்களுண்டு. கர்ணாடக சங்கீதம் கேட்டிறாத பல அமெரிக்கர்களுக்கு நான் கர்ணாடக் சங்கீதம் கேட்கவைத்து பரிசோதித்ததில், பத்தில் எட்டு நபருக்கு, தர்பாரி கானடா ராகம் வாசித்தால் ஒரு சோகம் உணர முடிகிறது. மோகன ராகம் கேட்டால் ஸ்ரீங்கார ரசம் உணர முடிகிறது. இதை தர்க்க ரீதியாக விளக்க முடியாது. என் கணிப்பில் பெற்றோரை பிரியும் உணர்ச்சி சிகரத்தை தகற்றி, தெய்வத்திடமிருந்து பிரியும் உணர்ச்சியை தர்பாரி கானடா தூண்டுகிறது.

மூளையில் பெரியீட்டல் லோப் என்ற பகுதி உள்ளது. ஐம்புலன்களும் அங்கே இணைகின்றன. இவற்றிற்கு பொதுவாக சில விதிகள் வேலை செய்கின்றன.
  
கேள்வி கலையில் நாம் சமபங்கத்தை ரசிக்கிறோம். ஆனால சில வேளைகளில் ஆபங்கத்தையும் ரசிக்கிறோம். இது சிகர தகற்றத்தின் செயலா?
பதில் சமபங்க பொதுவானது. ஆனால் ஒரு லேசான ஆபங்கம் ரசனையை தூண்டுகிறது. உயிரியல் அறிஞர்களின் பார்வையில் கலை என்பது உயிருள்ள பிராணிகளி அடையாளம் கண்டுகொள்ள வளர்ந்த ஒரு திறன். சமபங்கம் பொதுவாக பிராணிகளை காட்டுவதால், அதை நாம் விரும்புகிறோம்.

சுட்டிகள்
ராமசந்திரனின் இவ்வுறையின் வீடியோ (ஆங்கிலம் - வேறொரு அரங்கில்)
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் ராமசந்திரனின் உரை (ஆங்கிலம்)
சி.பி.ஸ்நோ கட்டுரை – இரண்டு கலாச்சாரங்கள் (ஆங்கிலம்)
The Heuristics of Science - VS Ramachandran lecture at VarahaMihira Science Forum
Neuroscience : A History - Nishant Chandrasekar lecture at VarahaMihira Science Forum


ராமசந்திரனோடும், அவர் மனைவியோடு
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை நண்பர்கள்

No comments:

Post a Comment