நவம்பர்
மாதம் நண்பர் சிவாவுடன் கேரள கோயில் பயணம் முடிந்து, கன்னியாகுமரி வந்தோம். திருநெல்வேலியில்
மூன்று நாள் தங்கி, நவத்திருப்பதி பார்க்க ஆசை. நண்பர் கருணாவும், தம்பி ஜெயராமனும்
அங்கே சேர்ந்து கொண்டனர். நவத்திருப்பதியில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கோவிலில் நுழையும்
பொழுதே, நூறு கால் மண்டபத்தில், விசித்திரமாக, தரைநுனியில் பல சிறிய சிற்பங்களை கண்டு
வியந்தேன்.
தரை நுனிச் சிறுச் சிற்பங்கள் |
நாயக்கர் காலத்து மண்டபங்களிலும் தூண்களிலும் பெருந்தோற்றத்தையும்,
காமப்புணர்ச்சி காட்சிகளையும், பாமரக் கலைகளையும் காணலாம். பல்லவர் காலத்திலும் சோழர்காலத்திலும்
சிற்பங்களில் மிளிரும் அதீத கற்பனையும், நளினமும், குறும்பும் விஜயநகர்-நாயக்கர் காலத்து
சிற்பத்தில் இருக்காது என்பது பல கலாரசிகர்களின் கருத்து. இதனால் ஒருசிலர் குணம்நாடி
குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி வெந்து கடிந்து சுண்ணாம்பில் சுட்டெடுத்து வசைபாடி
திருவாய் மலர்ப்பர். நாயக்கர் காலத்து கோயில்களின் தொழில்நுட்பத்தை ரசிப்பவன் நான்.
தமிழ் பாரம்பரிய அரக்கட்டளையின் புதுக்கோட்டை கலை உலாவில், மடத்துக்கோயில் சென்ற பொழுது,
வியந்து வியந்து தூணையும் கும்பபஞ்சரத்தையும் விளக்கினார் உமாபதி ஆசாரியார். மூச்சிறைக்க
விழுந்து விழுந்து படமெடுத்தார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன். உவகையில் பூரித்த பேராசிரியர்
ஸ்வாமிநாதன், “இக்கோயிலை கண்டபின் நாயக்கர் கலையை பற்றியுள்ள கருத்தை மாற்றிக்கொள்ள
வேண்டாமா?” என்றார்.
கொடுங்கையில் உடும்பு |
விளக்கம்
தேவையில்லை, ரசனை மட்டும் போதும்.
குரங்கு வரிசையும் பாம்பாட்டியை சீண்டும் குரங்கும் |