Showing posts with label சுந்தரர். Show all posts
Showing posts with label சுந்தரர். Show all posts

Saturday, 18 June 2016

தேவாரத்தில் பாரி

தேவார திவ்ய பிரபந்த பாடல்களில் சங்க காலத்தை பற்றி குறிப்புகள் ஏதுமில்லையே என்று பல நாளாக எனக்கு ஒரு வருத்தம். சங்க காலம் ஒன்றிருந்தது என்பதே மறக்கும் நிலைக்கு தமிழகம் வந்து, உ.வே.சா.வின் பணியால் அது வெளிச்சத்திற்கு வந்தது ஊரறிந்த கதை.

எத்தனை மீட்சிகள்?

சங்க காலத்து சான்றுகளாக ஒரு சில சமண பள்ளிகளும் அவற்றருகே சில பிராமி லிபியில் தமிழ் கல்வெட்டுகளும் மட்டுமே உள்ளன. ஒரு கோவிலோ, அரண்மனையோ, கட்டடமோ, சிற்பமோ, ஓவியமோ ஒன்றுமில்லை. இலக்கியம் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதிலும், தெலைந்தவை போக கிடைத்தவை சிலவே. சோகம் என்னவென்றால், தேவார பிரபந்த வரலாறுகளும் இப்படி தானே உள்ளன. தேவாரம் தொலைந்து விட, நம்பி ஆண்டார் நம்பி அவற்றை மீட்டதாகவும், ஆழ்வார் பாசுரங்கள் எனும் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொலைந்து விட, நாதமுனிகள் அவற்றை மீட்டதாகவும், சைவ வைணவ மரபுகளும் இலக்கியங்களும் நமக்கு சொல்கின்றன.

கிரேக்க இலக்கியத்தின் பாரசீக பாதுகாவலர்

ஐரோப்பிய வரலாறை பார்த்தால், சுமார் நான்காம் நூற்றாண்டில், ரோமாபுரியின் வீழ்ச்சிக்கும் கிருத்துவ மத எழுச்சிக்கும் பின், சாக்ரேடீஸ் அரிஸ்டாடில் காலத்து கிரேக்க இலக்கியங்களும் ஐரோப்பாவிலிருந்து தொலைந்து வழக்கொழிந்து விட்டன. மாசிடோனிய மாவீரன்அலெக்ஸாண்டர் காலத்தில் அரபு பாரசீக நாடுகளின் மேல் போர் தொடுத்து அங்கே கிரேக்க மொழியை ஆதிக்க மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் நிலை நிறுத்தினான். அவன் வழியே அவனுடைய குரு அரிஸ்டாடிலின் சிந்தனைகளும் ஹோமர், அரிஸ்டோபேனீஸ், தேலீஸ், யூரிபைடீஸ், பிளேட்டோ போன்றோரின் பண்டைய கிரேக்க இலக்கியங்களும் அறிவியல் நூல்களும் அரபு நாடுகளிலும் குறிப்பாக பாரசீகத்திலும் பரவலாக படிக்கப்பட்டன. 

முன்னூறு ஆண்டுகள் கிரேக்க மொழி இன்றைய இராக் இரான் பாகிஸ்தான் மத்திய ஆசியாவில் கோலோச்சியது. கிரேக்க மொழியிலும் சமஸ்கிருதத்திலும் அகதோகிளீஸ் போன்ற மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர். சாம்ராட் அசோகன் டமாஸ்கஸ் நகரை ஆண்ட கிரேக்க மன்னன் ஆண்டியோகஸ்ஸிற்கும் எகிப்தை ஆண்ட தாலமிக்கும் தன் கொள்கைகளை தூதாக அனுப்பனினான். இதை அவன் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

ஆனால அசோகன் காலத்தில் வளர்ந்த சங்க இலக்கியத்தை பற்றி வடமொழியிலோ பிராகிருத இலக்கியங்களிலோ ஒரு தகவலும் இல்லை. நம் நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வந்த பொழுது நாம் அசோகனை, மௌரியரையும், குப்தரையும், சாதவாகனரையும், பல்லவரையும் மறந்துவிட்டோம். மிகப்பரிதாபமாக, அசோகனின் தூணை வீமனின் கைத்தடி என்று பண்டிதர்கள் தவறாக விளக்கியுள்ளனர்.

பாரசீகத்தை இஸ்லாமிய படைகள் வென்ற போதும், பின்னர் மங்கோலிய படைகள் தாக்கியபோதும், பாரசீகத்தில் கிரேக்க இலக்கியம் வழக்கொழியவில்லை; பாக்தாதிலும் இவை வழக்கத்திலிருந்தன. அந்நாட்டு சான்றோர் அவ்விலக்கியதை பாதுகாத்துவந்தனர். சுமார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் மீண்டும் இவ்விலக்கியங்களை படிக்கும் வாய்ப்பை பெற்றனர். இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது. சைவ வைணவ இலக்கியங்களுக்கு நம்பி ஆண்டார் நம்பியும், நாதமுனிகள் செய்த தொண்டை, பாக்தத் பண்டிதரும், பாரசீக பண்டிதரும் கிரேக்க இலக்கியங்களுக்கு செய்தனர்.

சங்க இலக்கியம் – கால குழப்பம்

நிற்க. எது சங்க இலக்கியம் என்றே தெளிவில்லை. பதினென்மேல்கணக்கு எனும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மட்டுமே சங்க இலக்கியம் என்பது சிலர் வாதம். இவற்றின் இலக்கணத்தை விவரிப்பதாகவே தொல்காப்பியத்தை கருதலாம். திருக்குறள் நாலடியார் உட்பட பதினென்கீழ்கணக்கு எனும் நூல்களையும் சேர்த்து சங்க இலக்கியம் என்றும் சிலர் கூறுவர். சிலப்பதிகாரம் மணிமேகலை கூட சங்க இலக்கியம் என்மனார் சிலர். பத்துப்பாட்டு எட்டுத்தொகை தவிற மற்ற பிற களப்பிரர் காலத்தவை என்ற கருத்துமுண்டு. உறுதியான, மறுக்கமுடியாத ஒரு அட்டவணையை, இன்றும் ஒரு வரலாற்று ஆய்வாளரும் உருவாக்கவில்லை. 

தமிழ வரலாறு - ஒரு கால அட்டவணை

மகேந்திர வர்மனுக்கு (590 கிபி) பின் வந்த பல்லவர்களையும், விஜயலாயனுக்கு (850 கிபி) பின் வந்த சோழர்களையும், அதற்கு பின் தமிழகத்தின் வரலாற்றையும் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வைத்து ஒரு சீரான கால அட்டவணையில் காட்டலாம். நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு நூலிலும் பின்னர் தமிழக தொல்லியல் துறையின் நூல்களிலும் படித்தால் ஒரு கால அட்டவணை செய்யலாம். ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழக வரலாறுக்கு ஒரு தெளிவான கால அட்டவணை இல்லை. வகுக்க முடியுமா என்பது சந்தேகம்.

சங்க காலம் என்னவென்றே விவாதங்கள் தொடர, எது சங்க இலக்கியம் என்பதில் விவாதம் தொடர்வது ஆச்சரியமில்லை. ஆனால் பொதுவாக, பக்தி இலக்கியங்களாகிய தேவார திவ்ய பிரபந்தங்கள் சங்க காலத்துக்கு பிந்தையவை என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் சங்க குறிப்புகள் ஏன் இவற்றில் இல்லை?

சங்க காலத்தில் தமிழகத்தில் நடந்த சிவனின் திருவிளையாடல்களும் அதற்கு முன்னரே நடந்த சிவனின் பல சாகசங்களும் (திரிபுரம் எரித்தல், பாற்கடல் எழுப்பிய நஞ்சுண்டல், ராவணன் வாலி அகத்தியன் சம்பவங்கள் போன்றவை) தேவரத்தில் இருப்பின், சங்ககால இலக்கியங்களில்  சிவன் கோவில்கள் ஏன் பேசப்படவில்லை? தேவார பிரபந்த பாடல்கள் சங்கக்காலத்திற்கு பின் இயற்றியவை என்றால் (அவற்றின் மொழியும் தமிழ்நடையும் யாப்பும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன), இடை வந்த களப்பிறர் காலத்தில் ஏன் களப்பிற மன்னர்களின் குறிப்புகள் ஏதுமில்லை?

பிரான்மலை

சென்ற வாரம் பிரான்மலைக்கு சென்றேன். நணபர் வெங்கடேஷ் ராமகிருஷ்ண்னின் மகன் அக்ஷய் திருமணத்திற்கு தேவகோட்டை செல்கிறேன் என்று சொன்ன வேகத்தில், நண்பர் திரு கண்ணன் அவர்கள், கட்டாயம் அதற்கு அருகிலுள்ள பாரியின் பிரான்மலையும் திருப்பாத்தூரும் பார்த்துவிடவும் என்று அன்பு கட்டளையிட்டார். வெங்கடேஷும் பிரான்மலையை புகழ அங்கே நண்பர் வைத்தியநாதன் ராமமூர்த்தி, என் தம்பி ஜெயராமன், அக்ஷயின் நண்பர் பரத்வாஜ் நால்வரும் பிரான்மலை சென்றோம்.

சங்க கால மன்னன் பாரி ஆண்ட ஊர் என்றும், பாரி மலை என்றோ பறம்பு மலை என்றோ பெயர்பெற்ற ஊர் பின்னர் பிரான் மலை என்று பெயர் மாறியது என்றும் தகவல்கள். சிவனே பிரான் என்று வேறு ஒரு தகவல். தொலைபேசியில் தொல்லியலாளர் முனைவர் பத்மாவதி சொன்னதைப்போல் - குடைவரை கோவில்! குடுமியான்மலை, அரிட்டாப்பட்டி, குன்றக்குடி போன்ற பழைய பாண்டிய குடைவரை கோவில்களில் பாறையிலேயே செதுக்கிய லிங்கம் இருக்கும். ஆனால் பிரான்மலையில் உமையுடன் நிற்கும் ஈசனின் திருவுருவம்! 

எழில் கொஞ்சும் பிரான்மலை

முக்கியமான வணிக கல்வெட்டுகள் இங்கு உள்ளன என்று முனைவர் பத்மாவதி கூறியிருந்தார். கண்ணில் பட்ட கல்வெட்டுகள் வணிக குறிப்பேதும் தெரியவில்லை. மதுரைமீட்ட சுந்தரபாண்டியனின் கல்வெட்டும் குலசேகரபாண்டியன் கல்வெட்டும் கோனிரன்மைகொண்டானின் கல்வெட்டும் மண்டபத்தில் தெரிந்தன. இந்த கல்வெட்டுகளில் திருக்கொடுங்குன்றம் என்றே இவ்வூர் வழங்குகிறது – பிரான்மலை அல்ல. மேலே நீலவண்ணம் பூசியிருந்தாலும் படிக்கமுடிந்தது. மூலவர் கோவிலுக்கு படியேறி மண்டபம் செல்லும் வழியில் இடது பக்கம் ஒரு அநாமதேயமான மண்டபத்தில், வரையில் (வரை=மலை) குடைந்த விநாயகர். 

குடைவரை விநாயகர்

குலசேகர பாண்டியன் கல்வெட்டு

குலசேகரன் கல்வெட்டு  ஸ்வஸ்த் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலைசேகர தேவர்கு யாண்டு 13வதி தேதி 14வது துலா (நரயற்று க்ருஷ்ண -??) பக்ஷத்து அஸ்வதி (?) நாள் திருமலை நாட்டுத் திருக்கொடுகுன்றத்துடையார் திருக்கொடுங்குன்றத்துடைய நாயநார்க்குத் திருநுந்தாவிளக்கெரிவதர்க்கு களக்குடிய நாட்டுக் களக்குடிய கோவிந்தபுரத்து பிள்ளையார் அழகப்பெருமாள் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவனி நாராயண தேவன் இட்ட விளக்கு நெய்…..

சுந்தரபாண்டியன் கல்வெட்டு


தேவாரத்தில் பாரி

மேலே மூலவர் சன்னிதியின் வாசலில் பாரியை பாடி கபிலர் இயற்றிய புறநானூற்று பாடலை 1968இல் செதுக்கிய கல்வெட்டு. வலது பக்கம் தேவார நால்வரின் செப்புத்திருமேனிகள். 

அதற்கு பின் சுவரில் சுந்தமூர்த்தி நாயனாரின் தேவாரம். இதோ :

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக்கு இவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று 

    கூறினும் கொடுப் பார்இலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக 

    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலமர் உலகம் ஆள்வதற்கு 

   யாதும் ஐயுற வில்லையே

எள்ளிநகையாடும் இத்தேவாரப் பாடலில், பாரியே என்று புகழ்ந்தாலும் பரிசு கொடுக்கும் வள்ளல் யாருமில்லை என்று இரண்டாம் வரி சொல்லுகிறது. தேவார பாடலில் ஒரு சங்க கால மன்னன் வரும் பாடல் வேறேனும் நான் கேட்டதில்லை. வரலாற்று நூல்களில் இதை பற்றி பேச்சுமிருப்பதாக தெரியவில்லை. இருந்தால் சொல்லவும். 

தேவாரத்தில் பாரி

கபிலரின் புறநானூற்று பாடல்
பின்குறிப்பு

கோவிலிலுள்ள பல கல்வெட்டுகளின் மேல் சுண்ணாம்பும், நீலம், காவி, மஞ்சள் என்று வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. நுழைவாசல் மண்டபத்தில் கல்வெட்டில்லாத சுவர்களில் அதிவேக நீர்பாய்ச்சி (Water blasting)இந்த சுண்ணாம்பு வண்ணங்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. கல்வெட்டுள்ள பகுதிகள் இப்படி அதிவேக நீர் பாய்ச்சி, கல்வெட்டுகளை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். மீண்டும் வண்ணமோ சுண்ணாம்போ பூசாமல் இருக்கவேண்டும். சுத்தம் செய்கிறேன் என்று கல்வெட்டுகளை அழிக்கும் தமிழகமெங்கும் பல வருடங்களாக நடக்கின்றன.

மண்டபத்தில் கல்வெட்டுகள் - மேலே நீல வண்ணம்

படிகளில் கல்வெட்டுகள் - மேலே காவி வண்ணம்

Water blasting : நீர்பாய்ச்சி வண்ணம் அகற்றும் பணி

ஒத்த கட்டுரைகள்

  1. தமிழக கல்வெட்டுகள் : ஓர் அறிமுகம் – மார்க்சியா காந்தி - காணொளி
  2. Tamilnadu and Karnataka - Dynasty timelines
  3. Tamilnadu and Gujarat - Dynasty timelines
  4. தமிழ் நாடக இசை
  5. தும்பியின் ஏளனம் - கவிதை
  6. கோயில்களில் விண்ணியல் 

பிரான்மலையில் : கோபு, ஜெயராமன், வைத்தியநாதன், பரத்வாஜ்