Showing posts with label ஜெயராமன். Show all posts
Showing posts with label ஜெயராமன். Show all posts

Wednesday, 27 January 2016

தமிழ் இசை - ஆயிரம் திருதராஷ்டிரர்கள்

என் தம்பி ஜெயராமன் எழுதிய கச்சேரி அனுபவ கட்டுரை.

-------------------

ஆயிரம் திருதராஷ்டிரர்கள்

சென்ற வருடத்தின் கடைசி செவ்வாயன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை சங்கத்துக்காக திரு. சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய கச்சேரியை கேட்க பேராவலுடன் சென்றிருந்தேன் (சஞ்சய் என்பதால் ஆவல்; தமிழ் என்பதால் பேராவல்). தமிழையும் இசையையும் கேட்டு என் மனம் உன்மத்தமாகி அந்த அனுபவத்தைப் பற்றி ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று ஆசை கொண்டு துடித்தது.

நான், ராஜகோபாலன், வல்லபா, ஜெயராம்ன், பாலாஜி

ஒரு கலையை விமர்சிக்க  எவ்வளவுதான் ரசனை இருந்தாலும், சிறிதளவேனும் ஞானம் வேண்டுமே என்றெண்ணி ஆசையை அடக்கியபடி வாளாவிருந்து விட்டேன். 
புது வருடம் பிறந்தவுடன் கூடவே ஒரு புது சிந்தனையும் பிறந்தது. ‘அந்த ஞானமாகியதுதான் சஞ்சய் சுப்ரமணியத்திடம் வேண்டிய அளவு இருக்கிறதே, எழுதுபவனுக்கு  சிறிதளவு ரசனை இருந்தால் போதாதோ’ எனும் அந்த சிந்தனை சௌகரியமாக என் மனதுக்குள் வேரூன்ற, துணிந்து விட்டேன். அவலையும் உமியையும் கலந்துவிட்டு அதை ஊதி தின்னுவது நமக்கு புதிதான விஷயமா என்ன?

அண்ணாமலை மன்றத்திற்கு செல்வதென்றாலே இனம் தெரிந்ததோர்  ஆனந்தம் அடையும் என் மனம். எந்தையவர் ஹைக்கோர்ட் வழக்கறிஞர். சில இல்ல சூழல்களால், பல நேரங்களில் 31 Law Chamber எனும் அவரது அலுவலகம்தான் எனது Baby sitterஆக இருந்திருக்கிறது. அந்த பகுதியில் இருக்கும் பல விஷயங்கள் மீது எனக்கு ஒரு தனி வசீகரம் இருந்ததுண்டு. Advocates Association Canteen கற்கண்டு பொங்கல்,  ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் கோதுமை அல்வா, ஜெயின் மித்தாய்வாலா(கிட்டத்தட்ட Full menuவுமே), சுவை தேர்ந்தே கனிகள் கொண்டு தரும் பழக்கடை நண்பர் சந்தானம் மற்றும் எட்வர்ட்(my very own சபரி’s), சூடான இம்மூர்த்தி என்று பல இருக்க, குறையொன்று இருக்குமேயானால் அது குஜராத்தி மண்டலில் சாப்பிடாதது மட்டும்தான்.

அதைப்பற்றி குறிப்பிடும்போது ‘மூர்த்தி சிறிது; ஆனால் கீர்த்தி மிகப்பெரிது’ என்று நம் சேரநாட்டு நண்பர் வி.எஸ்.எஸ். ஐயர் கூட அடிக்கடி வாய் ஊற சொல்வார். ஆதலால் ஒவ்வொரு முறை அண்ணாமலை மன்றத்திற்கு செல்லும் போதும் அந்த குஜராத்தி மண்டலில் ஒரு பிடி பிடிக்க வேண்டும் எண்று எண்ணி செல்வேன். ஏங்கி தவிப்பேன்; ஏமாந்துத்  திரும்புவேன். ஏனெனில், வழக்கமாக நிகழ்வு முடிவதற்குள் கடை மூடிவிடுமே எண்றெண்ணி மேடையை பார்ப்பதில் பாதி நேரமும் கைக்கடிகாரத்தை பார்ப்பதில் பேர்பாதி நேரமும் செலவாகிவிடும். ஆனால் கடந்த செவ்வாய்  அந்த தோஷம் நீங்கிவிட்டது போலும். மூடிய கண் திறவாமல், ‘அப்பாடா! நம் நீண்ட நாள் சந்தேகத்திற்கு பதில் கிடைத்துவிட்டது. 

சங்கீதத்தின் பால் நமக்கிருப்பது ஆர்வம்தான், ஆர்வக்கோளாறு இல்லை’ என்று ஊர்ஜிதமான அதே நேரம் திடுக்கிட்டு மணியை பார்தேன். இந்த திடுக்கிடல், குஜராத்தியர் கடை மூடிவிடுமோ என்ற கவலையினால் அல்ல; சஞ்சயவர் நடை சாத்திவிடுவாரே எனும் புதுக்கவலை பிறந்ததினால்.

சஞ்சயின் அடுத்த தமிழ்க் கச்சேரி எங்கே என்று கேட்கலாம் என பார்த்தால் என்னிருபுரம் அமர்ந்திருந்த சகாக்களும் சகட்டுமேனிக்கு கண்ணாமூச்சி விளளயாடுபவர் போல்  கண்மூடியிருந்தனர். புன்னகைத்தபடி நாற்புறமும் கண்ணோட்டம் விட்டால், காட்சிபிழையோ எனும் சந்தேகம் உண்டாகும்படி அண்ணாமலை மன்றமே கண்மூடி காட்சியளித்தது. 


உதாரணத்திற்கும் ஒப்பீட்டிற்கும் எவ்வாறு அமெரிக்காவை எடுத்துக் கொள்கின்றோமோ, அதை போல உவமைக்கும் உபகதைகளுக்கும் மகாபாரதத்தை எடுத்துகொள்ளலாம் என்று என் நெடுநாள் நண்பர் ராமஜெயம் அவர்கள் என்னிடம் சொல்வார். அதே போல, நாம் தேடும் விஷயம் மஹாபாரத்தில் இல்லை என்றால் அது பெரும்பாலும் நமக்கு தேவையற்றதாகவே இருக்கும் என்று பெருமதிப்பிற்குரிய திரு KM கங்கூலி அவர்கள் சொன்னதாகவும் கேள்வி.


அப்பேர்ப்பட்ட மகாபாரதத்தில் ஒரு பாத்திரத்தின் மேல் எனக்கோர் அலாதி வாஞ்சை உண்டு.  அவரது அருமைபெருமைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் மன்னரின் தேரோட்டி மட்டுமல்லாமல் அவரது  ஆலோசகர்; விதுரரை போன்ற ஆன்றோர் அலங்கரித்த சபையிலிருந்து கௌரவர்கள் சார்பில் தூது செல்ல தேர்ந்தெடுக்கபட்ட Diplomat; வேத வியாஸரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு  விசேஷ சீடர். இதெல்லாம் போதாதென்று, பகவத்கீதையை முதல்முதலாக சொன்ன ‘மனிதர்’! யுத்த களத்தில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு  கீதோபதேசம் செய்த அதே தருணத்தில், கண்களிழிந்த திருதராஷ்டிரருக்கு reporting live என்பது போல சொன்ன சஞ்சயனைத்தான் சொல்கிறேன் என்று நான் ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும்!


சஞ்ஜை சுப்ரமணியம் குழுவினர்  (படம் - விகே ஸ்ரீநிவாசன்) 
திருதராஷ்டிரருக்கு மட்டுமல்ல, சஞ்சய் எனும் பெயர் கொண்டவர் எங்கிருந்தாலும் - அது அஸ்தினாபுரமோ, அண்ணாமலை மன்றமோ - அங்கிருக்கும் எவருக்கும் கண்களுக்கு வேலையே இராது போலும். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு செவிகள் மூலமாக மட்டுமே அந்த இசையால் பெருக்கெடுத்த ஆனந்த வெள்ளத்தில் மீள விரும்பாது திளைத்திருந்தார்கள். இந்த இரண்டு சஞ்சய்களில் ஒருவரை அறிந்திருந்தாலும் திருவாளர் ஷேக்ஸ்பியர் What’s in a name என்று அவ்வளவு சாதாரணமாக கேட்டிருக்கமாட்டார் என்று தோன்றியது. 

திருதராஷ்டிரன் என்ற பெயருக்கு நல்லரசன் என்று பொருளாம். ஒரு மாலை பொழுதில் என்னை திருதராஷ்டிரனாக மட்டுமின்றி திருத ‘ரசிகன்’ ஆகவும் வாழச்செய்த ‘ச.க’ சஞ்சய் மஹாராஜாவுக்கு என் மனமார்ந்த நன்றி!


------ ஜெயராமனின் கட்டுரை முற்றும் --------

தொடர்புடைய கட்டுரைகள்

1. சஞ்ஜை கச்சேரி - ராஜகோபாலனின் முகநூல் பதிவு 
2. தமிழ் நாடக இசை
3. பாட்டும் பாவமும் - கர்நாடக இசை
4. மார்கழி இசை அனுபவம்
5. சிவபெருமான் கேட்ட சங்கீதம் - ஆர்விஎஸ் கட்டுரை 
6. மயிலாப்பூரில் பல்லவர் இசை