Friday, 11 October 2013

ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்

ஃப்ரென்சு எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்ணின் ‘From the Earth to the Moon’ புத்தகத்தை படித்துவருகிறேன். தன் அறிவியல் பொறியியல் ஞானத்தை தன்  கதைகளில் எவ்வளவு ஆழமாக கையாண்டார்! வியக்கிறேன்! படிப்பவன் பாமரன், அறிவியலை எளிமையாக சொல்லலாம், குறைக்கலாம், இலக்கிய நயத்தில் மறைக்கலாம் என்றெல்லாம் பின்வாங்காமல், தயங்காமல் அள்ளி வீசுகிறார். புதுமையில் புகுக, புனைவில் களிக, கற்பனை வளர்க, முன்னோர் திறமையை மிஞ்சுக, என்று எழுதுகிறார். ஒரு ஜல்லிக்கட்டு காளையின் துள்ளலும் வீரமும் ஒரு அறிவியல் ரசிகனின் ஆர்வமும் ஆற்றலும் அவர் எழுத்தில் காணலாம். படித்தேன் சிலித்தேன் மலைத்தேன் இதுவென மலைத்தேன்!

இந்திய இலக்கியத்தில் காதல் வீரம் ஹாஸ்யம் கற்பனை களவு சூது சூழ்ச்சி விவேகம் தர்மம் நேர்மை மடமை எல்லா ரசத்தையும் காணலாம். ஆனால் இது போல் ஒரு கதையும் எனக்கு தெறிந்து இல்லை. உலகில் மற்ற மொழிகளில் சிலவே உள்ளன. ஆங்கிலத்திலும், விஞ்ஞான புதினங்கள் பலவும் விஞ்ஞான சாயலுள்ள மாயாஜால கதைகளே.

கத்தி வில் துப்பாக்கி அன்றி லேசர் துப்பாக்கி, ஃபோடான் ஆயுதம்; கடகடா சிறிப்பு மந்திரவாதி அன்றி சிடுமூஞ்சி பித்துக்குளி மாமேதை – உதாரணம் ஜேம்ஸ் பாண்ட், ஸூப்பர்மேன், பாட்மேன் பட வில்லன்கள்; ரத்தக்காட்டேரி அன்றி டைனசார், வெளியுலக யாளி; புது நாடு, ஊர், கலாச்சாரம் என்றில்லாமல் வேற்றுலகம், வேற்று காலம். கதைகளின் திணையும் சர்வாதிகாரம், புரட்சி, போர், காதல், வல்லரசு சூழ்ச்சி என்று அறைத்த பழைய மாவுதான்.

ஆர்த்தர் கிளார்க், லாரி நிவென் போன்ற வெகு சிலரே விதிவிலக்கு. விஞ்ஞான கதை வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கை, விஞ்ஞான வரலாறு, போன்ற நூல்களை மட்டுமே படிக்கவேண்டும். தவறல்ல – ஜேம்ஸ் வாட்ஸனின்  “Double Helix”, ஜாரட் டைமண்டின்  “Guns Germs and Steel”, தாமஸ் ஹாகரின் “The Alchemy of Air”, அயேன் மெக்கலனின் “Darwin’s Armada”,  ஜென்னி அக்லோவின் “Lunar Men” போன்றவை, கதை படிக்கும் வேகமும் ரசிக்க வைக்கும் புதுமையும் மிரளவைக்கும் சாதனையும் சாலக்கலந்த சுவையுள்ளனவே.

ஃப்ரென்சு மொழியில் விக்டர் ஹுகோ, அல்பேர் கமூ, ஸார்டர், ஆகியோரின் சமூக தத்துவ கதைகளே உள்ளன. ஜூல்ஸ் வெர்ணுக்கு விஞ்ஞான இலக்கிய வாரிசு இல்லை.  ‘From the Earth to the Moon’ நூலின் முன்னுரையில், நூலை மொழிப்பெயர்த்த எடுவர்ட் ராத் என்பவரின் ஒரு பத்தி, இங்கே, என் தமிழில்:

பொதுவாக ஒரு கதையிலுள்ள அங்கங்கள் (வெர்ணின் நூலில்) இல்லை. கொலை, துரோகம், கொடுமை, மனமுடைத்தல், ஆடம்பரம், தத்துவம், மர்மம், மயிர்கூசும் வர்ணனை, சொல் நயம், யதார்த்த சொல்லோவியம், உணர்வு பிதுங்கல், கொடூரச் சிகரம் – இவை ஏதுமின்றியும், கதை சொல்லொணா சுவையுடன் சிந்தையை கிளறியது.


எந்த தமிழ் நூல் இப்படி சொல்லத்தகும்? நம் நாட்டில் பல ஷேக்ஸ்பியரும், ஓமர் கய்யாமும், டால்ஸ்டாயும், வால்டர் ஸ்காட்டும், ஹோமரும் உள்ளனர். ஒரு ஜூல்ஸ் வெர்ணும் இல்லை. என்ன பரிதாபம். 

No comments:

Post a Comment