Saturday 4 May 2019

ஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்




பாரத நாட்டிலுள்ள எல்லா ஓவியங்களிலிருந்தும் ஐம்பெரும் ஓவியம் என்று தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல்? காலம், அளவு, இடம், மரபு, ரசம், கருப்பொருள் என்று ஆறு வகையான அளவுகோல்கள் எனக்கு தோன்றுகின்றன. இலக்கியத்திலும் இசையிலும் பயன்பட்ட அளவுகோல்களை மேலோடு பார்த்துவிட்டு, பின்னர் ஓவியக் கலையில் நிலைமையை ஆராய்வோம்.

ஒரு நூலை காப்பியம் என்று அழைக்க ஒரு தமிழகத்து சம்ஸ்கிருத புலவர் வகுத்த லக்ஷணமே மிகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரத்தில் பல்லவர்காலத்தில் வாழ்ந்த தண்டி எனும் புலவர் காவியதரிசனம் எனும் நூலில் காவியத்தின் இலக்கணத்தை, அதாவது அளவுகோல்களை வரிசைப்படுத்தியுள்ளார். இலக்கணத்தை (லக்ஷணம்) நிறைவேற்றுவது இலக்கியம் (லக்ஷ்யம்). ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டிக்கு முன்னர் கிமு இரண்டாம் நூற்றாண்டிலோ அதற்கும் முன்னோ வாழ்ந்ததாக கருதப்படும் பரதர் இயற்றிய நாட்டியசாத்திரத்தில், காவியத்தின் தகுதிகளும் காவிய நாயகனின் தகுதிகளும் காணலாம்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வேறு பல இந்திய மொழிகளிலும் புலவர்கள் இவ்விலக்கணத்தை பேணி வந்தனர். சில விதிவிலக்குகளையும் மரபு வழியாக கடைபிடித்தனர். காப்பியத்திற்கு இந்த இலக்கணமிருக்கையில் பெருங்காப்பியம் என்று ஒரு நூலை கருத என்ன தனிப்பட்ட அளவுகோல்கள் என்பதை நான் இங்கு பரிசீலிக்க முனைகிறேன்

தமிழ் இலக்கியம்

(க) கால அளவுகோல் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஐம்பெரும் காப்பியமாம். இவற்றை தேர்ந்தவர் யாரெனத் தெரியவில்லை. கிபி பதினான்காம் நூற்றாண்டில் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், ஐம்பெருங்காப்பியம் என்று முதலில் குறிப்பிடுகிறார்.

காலத்தை அளவுகோலாக நோக்கின், இவையாவும் சங்ககாலத்திற்கு பின்னும், சோழர்கால அஸ்தமனத்திற்கு முன்னுமாகும். ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும். சங்க இலக்கியங்கள் எதுவும் பெருங்காப்பியம் இல்லையா என்று எவரும் கேட்டதாக தெரியவில்லை. குண்டலகேசியும் வளையாபதியும் தொலைந்துவிட்டதாலும், அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு மிக சிறிதே என்பதாலும், அவற்றை நீக்கி, கம்ப ராமாயணமும் சேக்கிழாரின் பெரிய புராணமும் ஐம்பெருங்காப்பியத்துள் சேர்க்கவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். சற்றே காலத்தில் பின் வந்த வில்லிபாரத்தை சேர்க்கவேண்டும் என்று கோருவாருமுண்டு. கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய நந்தனார் சரித்திரம், அருணாச்சல கவியின் ராமநாடகம், சன்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி, அல்லிஅர்சுணன் போன்ற மேடை நாடகங்களை ஐம்பெருங்காப்பியமாக சேர்க்க யாரும் கோரவில்லை.


சிலப்பதிகாரத்தின் தரத்தில் நீளத்தில் இன்று ஒருவர் காப்பியம் எழுதினால் அதை படிக்கவோ கேட்கவோ யாருளர்? இருபதாம் நூற்றண்டில் தான் தமிழ் சமூகம் இயல் தமிழையும் இலக்கியமாக ஏற்றது; ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா போன்ற சரித்திர கதைகளையோ, மற்றவர் கதைகளையோ பெருங்காப்பியம் என்று புகழவோ, ஐம்பெரும்நாவல் என்று ஒரு வகுப்பையோ தொகுக்க யாரும் முனையவில்லை.

சங்க கால இருதியிலோ அதற்கு சற்று பின்னரோ இயற்றப்பட்ட சிலம்பும் மணிமேகலையும், பின்னர் சோழர் காலத்தில் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், குண்டலகேசியும் வளையாபதியும் எப்படி ஒரே தொகுப்பில் இடம்பெற்றன? அப்படி சிறப்பித்து தொகுத்தபின் ஏன் ஒரு சமூகமே மறக்கும் அளவுக்கு அத்துப்போயின? விடைகள் இல்லை. ஆதலால், காலம் ஒரு அளவுகோலல்ல.

(ச) நீள அளவுகோல் பெருங்காப்பியம் என்னில் நீளமாக இருக்கவேண்டும். சிலம்பு ஐந்தாயிரம் வரிகள், சீவக சிந்தாமணி பன்னிரண்டாயிரம் வரிகள்.
ஐங்குறுங்காப்பியம் என்று தனி ஒரு தொகை இருப்பதும் இதை காட்டுகிறது. தொள்ளாயிரம் விருத்தச்செய்யுளே கொண்டது நீலகேசி.
முல்லைப்பாட்டு 103 வரிகள், நெடுநல்வாடை 188 வரிகள், பொருனராற்றுப்படை 250 வரிகள், குறிஞ்சிப்பாட்டு 261 வரிகள், சிறுபாணாற்றுப்படை 269 வரிகள், பட்டினப்பாலை 301 வரிகள், பெரும்பாணாற்றுப்படை 500 வரிகள், மதுரைக்காஞ்சி, மலைப்படுகடாம் தலா 583 வரிகள். இவை சங்ககால காப்பியங்கள் என்று சொன்னாலும் நீளாத்தால் பெருங்காப்பியம் அல்ல.

சோழர்கால இலக்கியத்தில் நளவெண்பா ஏறத்தாழ 1600 வரிகள், கலிங்கத்து பரணி 2400 வரிகள், மூவர் உலா ஓவ்வொன்றும் தலா 600 வரிகள்.

நீளம் ஒரு அளவுகோல் என்பது தெளிவு. எத்தனை நீளம் என்பது தெளிவில்லை.

இராமாயணம், பெரிய புராணம், வில்லிபாரதம் போன்றவையும் சேர்த்து ஏன் எண்பெருங்காப்பியம் என்று பின்னாளில் ஐம்பெருங்காப்பியம் விரிவாகவில்லை? இதற்கு விடையில்லை. நீளம் மட்டுமே அளவில்லை எனத்தோன்றுகிறது.

(ட) இட அளவுகோல் ஓவியமும் சிற்பமும் கோயில், குகை, மண்டபம், கட்டடம் என்ற இடத்தை சார்ந்தவை. இலக்கியத்திற்கு பொதுவாக இது ஒரு அளவுகோலாக தெரியவில்லை.

ஆனால் இந்த ஊரிலோ நாட்டிலோ நிகழ்ந்த கதை ஏற்கலாம், மற்றவை விலக்கலாம் என்று ஏதும் தடையிருப்பதாக தெரியவில்லை.

(த) மரபு அளவுகோல் பாரத நாட்டு பலமொழிகளிலும் கவிதையே இலக்கியம் என்ற கொள்கை பத்தொன்பதாம் நூற்றண்டுவரை நிலைத்தது. கவி செய்வது காவியம். ஆற்றுப்படை, செய்யுட்தொகை, நீதி நூல், பழமொழித்தொகை, காப்பியம், புராணம், உலா, பரணி, தூது, என்று பலவகை இலக்கியம் தோன்றியுள்ளன. இலக்கணம், மருத்துவம், இசை, ஆகமம், கணிதம், கட்டிடக்கலை, ஆகியவை இதிலடங்கா; அவற்றை காப்பியமாக நாம் கருதுவதில்லை. பின் தோன்றியவை குறவஞ்சி, காவடிச்சிந்து, நாட்டிய நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்படம், நாவல். முப்பெரும் உலா, ஐம்பெரும் திரைப்படம், மேடை முப்பது, நாவல் நாற்பது என்று யாரும் தொகுக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

ஐம்பெரும் காப்பியம் என்ற ஒரு தொகை என்றோ உருவானதால், அதையும் ஒரு மரபாக தொடர்ந்து வருகிறோம்.

(ப) ரச அளவுகோல் இதுதானே பெரும்சிக்கல்? ரசனை தனிமனிதனுக்கு ஒருவிதம், சமூகத்திற்கு ஒருவிதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களுக்கு பலவிதம். மேன்மக்களாலோ, மேல்தட்டுமக்களாலோ காலத்தை வென்று நிற்கும் கலைப்பொருட்கள் ஒரு நாட்டிலோ சமூகத்திலோ தங்கி நிற்கின்றன. பாமர மக்களுக்கு அன்றாட வாழ்விலுள்ள அக்கறையும் ஈடுபாடும் செவ்வியல் கலைகளில் இருப்பதில்லை. இதை உலகெங்கும் காண்கிறோம். ஒரு சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதன் ரசனையும் கலையும் மாறுவதை காண்கிறோம். எகிப்தில் பாரோக்களின் வீழ்ச்சிக்கு பின் பிரமிடுகளும் அவர்களது மதக்கோயில்களும் கட்டுவது நின்றுபோனது. சுமேரியா, கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், மதமாற்றத்தால் மரபு மாறிவிட்டன. அமெரிக்க பழங்குடியினரின் ஒல்மெக், அஸ்டெக், இன்கா மரபுகள் யாவும் ஐரோப்பிய படையெடுப்பினாலும் இனவொழிப்பாலும் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டன. பாரதமும் சீனமும் ஜப்பானும் கொரியாவும் ஓரளவுக்கு விதிவிலக்கு.
தமிழ் இலக்கியத்திலும் இதை காணலாம். சங்க கால தமிழுக்கும் பிற்கால தமிழுக்கும் உள்ள வேறுபாடு இரண்டு வரி படித்தாலே சுள்ளென அடிக்கும். உ.வே.சாமிநாத ஐயர் சங்க இலக்கியத்தை “வேறு ஒரு தனி பாஷை” என்றே குறிப்பிடுகிறார். சொற்களும், உவமைகளும், சித்தாந்தமும், கருப்பொருளும் அவ்வளவு மாறிவிட்டன. ஆனால் அந்த மரபு தொடர்கிறது. சங்க இலக்கியங்களை தனி ஒரு தொன்மையாக கருதுகிறோம். ஆனால், ஒரு மரபு பிளவையும் உணர்கிறோம். இயற்றமிழில் இலக்கியம் உருவான இருபதாம் நூற்றாண்டில், அதே போல், ஒரு மரபு தொடர்ச்சி, ஒரு மரபு பிளவு இரண்டும் கலந்தே நிகழ்ந்தன.

ஓவிய சிற்ப கலைகளிலும் இந்த மாற்றம், தொடர்ச்சி இரண்டுமே தெள்ளந்தெளிவு. பின்னர் பார்ப்போம்.

சிலப்பதிகாரம் கதையாலும், சொல்வளத்தாலும், செய்யுள் சுவையாலும், ரசத்தில் மிக சிறந்த காப்பியம். பாத்திரங்களின் குணங்களும் ரசிக்கக்கூடியவை. ஒரு தலைவனின் வீரசாகசமோ, போரோ மையமாக அன்றி, கண்ணகியின் அறச்சீற்றமும், பாண்டியனின் அறவுணர்ச்சியும் பாரத இலக்கியத்திலேயே அதற்கு தனியிடம் பெறவைத்தவை. சேரனின் படையெடுப்பு மையக்கதையின் நீரோட்டத்தை விலகி நிற்கிறது. அதை ஒரு தனி காவியமாகவே படைத்திருக்கலாம்.

சமூகநிலை, இசை குறிப்புகள் நாட்டிய வர்ணனைகள் சிலம்பின் முக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. மணிமேகலை கதையிலோ இசைக்குறிப்பிலோ மிளிரவில்லை. இல்லற வாழ்க்கையை துறந்து துறவரம் நாடும் ஒரு பெண்ணின் கதை, பரதர் தண்டி வகுத்த இலக்கணத்தில் பொருந்தவில்லை. ஆனால் சொல்வளம், நகர வர்ணனை, பஞ்ச கால சோகம், கருணை போன்ற ரசங்களை சிறப்பாக கையாண்டுள்ளது. பல்வேறு மதங்களை விசாரிக்கும் காதை தனி ஒரு சிறப்பு.

சீவகசிந்தாமணியில் கதையே இல்லை; காதல், திருமணம், திருமணம், அப்பப்பா ஆகமொத்தம் எட்டு திருமணம், நகர வர்ணனை, இயற்கை வர்ணனை; அதனை சொல்லும் மிக அழகிய இலக்கியம்.
ரசத்தில் மூன்றும் வெவேறு நிலையில் உள்ளன; ரசம் அளவுகோலாக தெரியவில்லை.

உலகின் மற்ற அனைத்து பேரிலக்கியங்களை போல் ஒரு மன்னனின் வீரசாகசத்தை மையக்கதையாக கொள்ளாமல், தமிழிலேயே மதுரைக்காஞ்சி, பெரும்பாணற்றுப்படை, ராமாயணம், கலிங்கத்து பரணி போலுமன்றி, வணிகர்களை நாயகராகவும், அறம்தேடும் பெண்ணை நாயகியாகவும் கொண்டாடுவது ஐம்பெருங்காப்பியத்தின் தனிச்சிறப்பு.

(ற) கருப்பொருள் அளவுகோல் பன்னிரு திருமுறை சைவப் பாசுரங்கள் மட்டுமே. நாலாயிர திவ்யபிரபந்தம் வைணவப் பாசுரங்கள் மட்டுமே. ஐம்பெருங்காப்பியமோ பௌத்த சமண நூல்கள். அரசியல், வணிகம், உழவு, இவை கருப்பொருளாக இலக்கியங்கள் இல்லை. காதல், போர், பழிவாங்கல், நியாயம், பக்தி, இவைமட்டுமே இலக்கியத்தின் கருப்பொருள். நிற்க. கருப்பொருள் வேறுபடும் போது எவ்வாறு ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததென்றும், ஒன்றை தாழ்ந்ததென்றும் பிறிக்கமுடியும்? ஒரு மதத்தையோ சித்தாந்தத்தையோ சார்ந்தவர் மற்றொரு மதத்தையோ சித்தாந்தத்தையோ, அதை சார்ந்த படைப்பையோ சிறந்ததென்று ஒப்புக்கொள்ள முடியுமா? இல்லை சரிசமமாக பார்க்கமுடியுமா? பலருக்கும் இது இயலவில்லை என்பதே நிதர்சனம். மிகச்சிலரால் முடிகிறது. பன்னிரு திருமுறையும், திவ்ய பிரபந்தமும், திருப்புகழ், தேம்பவணி, சீராப்புரணம் போன்றவையும் தனியாக வைப்பதற்கும் இது ஒரு காரணம் எனத்தோன்றுகிறது. இறைமறுக்கும் அறிவியல், பொதுவுடமை, போன்ற கருத்து தளங்களும் இதில் அடங்கும்.
தமிழில் மிகச்சிறந்த அறிவியல் இலக்கியம் இல்லாதது ஒரு பெரும் குறை. அளவுகோல்களில் ரசத்தை போல், கருப்பொருளும் ஒரு சிக்கலான அளவுகோல் என்பது, இலக்கியத்திற்கு மட்டுமல்ல, மற்ற கலைகளுக்கும் பொருந்தும்.

ஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தில் பெருங்காப்பியம் என்று வகுக்க மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறியவை காட்டுகின்றன.

வடமொழி இலக்கியம்

() கால அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தில் தொன்மையானவை வேதங்கள். அவை வேத சந்தத்தில் உள்ளன; பாணினி இலக்கணத்தை வகுக்கும் முந்தைய காலத்து மொழியிலுள்ளன.
சம்ஸ்கிருதத்தில் வியாகரணம் என்பதை தமிழில் நாம் இலக்கணம் என்கிறோம். இலக்கணம் லக்ஷணம் என்பது சம்ஸ்கிருதத்தில் காவியத்தின் விதிகளை குறிப்பது, மொழியின் விதிகளை குறிப்பதல்ல என்பது நோக்கற்பாலது.

இராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள். இவை சமஸ்கிருத மொழியிலுள்ளன. பாரதம் இயற்றிய கிருஷ்ண த்வைபாயன வேதவியாசர், பதினென் புராணங்களையும் தொகுத்ததாக மரபு. வேதம், வேதாங்கம், சாத்திரம், இதிகாசம், புராணம், இவை தனி வகைகள், காப்பியம் வேறு வகை என்பது சம்ஸ்கிருத மரபு. அதன்படி, காளிதாசன், பாரவி, மாகன், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய காப்பியங்கள், ஐம்பெருங் காப்பியங்களாய் வழங்கிவருகின்றன. காளிதாசன் கிமு இரண்டாம் நூற்றாண்டு, பாரவி மாகன் ஏழாம் நூற்றாண்டு, ஸ்ரீஹர்ஷன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு.  
காலம் சம்ஸ்கிருத மொழியின் பெருங்காப்பியத்திற்கும் ஒரு அளவுகோல் அல்ல, என்பது தெளிவு.

அப்படியா? இந்தக் கட்டுரைக்கு விவரம் தேடியபோது விக்கிப்பீடியா தந்தது ஓர் அதிர்ச்சி. இருபதாம் நூற்றாண்டில் இருநூற்று பெருங்காப்பியங்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் சுந்திர போராட்டாம், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, பால கங்காதர் திலகரின் வாழ்க்கை வரலாறு, கேரளத்தின் எழுச்சி என்று பல்வேறு நவீன நிகழ்ச்சிகளும் மனிதர்களும் இந்தக்காவியங்களின் கருப்பொருள், நாயகர்கள். பல நூல்களின் கவித்திறன் காளிதாசனை மிஞ்சும் என்று ஒரு பண்டிதர் கருதுகிறார்.
சம்ஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று பலரும் கருத இந்த நாடறியா ரகசியத்தை எப்படி பார்க்கலாம்?

(ச) நீள அளவுகோல்
காளிதாசன் இயற்றிய ரகுவம்சமும் குமாரசம்பவமும் பெருங்காப்பியங்கள். ஆனால், மேகதூதம், சாகுந்தலம், விக்ரமோர்வசி லகுகாப்பியங்கள். அதாவது குறுங்காப்பியங்கள். இதிகாசங்களும் புராணங்களும் சம்ஸ்கிருத காப்பியங்களை விட பல மடங்கு நீளம். பரதர் இயற்றிய நாட்டிய சாத்திரம், வராஹமிகிர் இயற்றிய பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களும் இக்காப்பியங்கோளோடு நீளமானவையே. ஐம்பெரும் சாத்திரம், ஐம்பெரும் ஜோதிடம் என்றெல்லாம் வகைமுறை இல்லை.
கதாசரித்சாகரம் என்ற தொகை நூலும் மிகப்பெரியது. ஆனால் அது காப்பியமாக கருதப்படவில்லை போலும்.

நான் சம்ஸ்கிருத மொழி அறியேன்; அதன் இலக்கியம் மேலோட்டமாகவே தெரியும்; சாராம்சத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ சுருக்கமாகவே படித்துள்ளேன். ஆய்வு கட்டுரைகளை, உரைகளை படித்ததில்லை. அதனால் என் தகவல்களும் கருத்துக்களும் மிகவும் மேலோட்டமானவை; ஆழமில்லாதவை.

(ட) இட அளவுகோல்
தமிழ் இலக்கியங்களை போலவே சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களும் இடம் முக்கிய அளவுகோல் அல்ல. கோசலை நாட்டில் ரகுவம்சம், விதர்ப நாட்டில் நைஷத சரிதம், சேடி நாட்டில் சிசுபால வதம், இமயமலையில் குமாரசம்பவம், கிராதார்ஜுனீயம். நாடு, நகரம், நதி, காடு, மலை, புண்ணிய தலங்கள் என்று பல இடங்களில் கதைகள்.

மேலே செல்வோம்.

() மரபு அளவுகோல்
தமிழைப்போலவே சம்ஸ்கிருதத்திலும் கவிதையே இலக்கியமாக கருதப்பட்டுளது. ஆனால சம்பு என்னும் உரைநடை மரபும் இருந்தது. குறிப்பாக, ஏழாம் நூற்றாண்டில் பாணர் இயற்றிய காதம்பரி என்னும் இலக்கியம் உரைநடையே. பெருங்காப்பிய புலவர்கள் பாரவிக்கும் மாகனுக்கும் ஏறத்தாழ சமகாலத்தவர் பாணர். காதம்பரி, உலகின் முதல் நாவல் என்பது சிலரின் கருத்து. ஆனால் பாணர் வழியில் மற்ற இயல்நடையில் புலவர்கள் தொடரவில்லை. உரைகளில் இயலும் காவியத்தில் கவிதையும் என்பதே மரபு. விக்ரமோர்வசீயம், மத்தவிலாசம், போன்ற நாடகங்களில் வசனங்களுக்கு நடுநடுவே கவிதைகள் வரும்.

தெய்வத்தையோ மிகச்சிறந்த மன்னனையோ நாயகனாய் வடிக்கப்பட்ட கதைகளே காவியமாக கருதப்படும் மரபு சம்ஸ்கிருதத்தில் உண்டு. ராமனின் முன்னொற்களின் கதை ரகுவம்சம்; சிவ பார்வதி திருமணமும், முருகனின் பிறப்பும் குமாரசம்பவம். கிராதார்ஜுனியம், சிசுபாலவதம், நைஷத சரிதம் மகாபாரதத்தின் வழித்தோன்றல்கள். சாகுந்தலம், ரத்னாவலி, விக்ரமோர்வசீயம் போன்றவை துஷ்யந்தன், உதயணன், விக்ரமன் போன்ற புராணகால மன்னர்களை நாயகராய் கொண்ட கதைகள். பத்தாம் நூற்றாண்டிற்கு பின் தோன்றிய மற்ற மொழி இலக்கியங்களும் இந்த சம்ஸ்கிருத மரபையே பெரும்பாலும் பின்பற்றின.

சூத்ரகன் இயற்றிய ம்ருச்சகடிகம் என்ற ஒரு மிக அபூர்வ நூல் இதற்கு ஒரு விதிவிலக்கு. மகேந்திர வர்ம பல்லவன் இயற்றிய இரண்டு பிரஹஸனங்களாம் மத்தவிலாசமும், பகவதஜ்ஜுகமும் அவ்வாறே. இதை பற்றி மைக்கேல் லாக்வுட் சிறப்பான ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
செல்வந்தரான வணிகர், சாதனை படைத்த பாமரர், படைத்தலைவர் ஜோதிடம், கணிதம், இலக்கணம், தர்க்கம், மருத்துவம், நாட்டியம் என்று கலையோ அறிவியலோ சாலப்படைத்த புலவர், பண்டிதர் எவரும் காவிய நாயகர்களல்ல. குறிப்பாக உலகமே வியக்கும் வானளாவிய கோவில்களையும், அணைகளையும், நகரங்களையும் வகுத்த ஸ்தபதிகளோ, அஜந்தா, தஞ்சை போன்ற அற்புத ஓவியத்தொடர்களை வடித்த் கலைஞர்களோ காப்பிய நாயகர்களாக கொண்டாடப்படவில்லை. 

காளிதாசனை பற்றிய செவிவழிச் செய்திகளை மட்டுமே நாமறிவோம்; மூன்று வேறு காலத்தில் மூன்று காளிதாசர்கள் இருந்துள்ளனர்; இதுவே பலருக்கும் புதிதாக இருக்கலாம்; பராமார குல மன்னன் போஜன் காலத்து காளிதாசனை பற்றியவையே இந்த செவிவழிச் செய்திகள்; பெரும்புலவனாக கொண்டாடப்படும் காளிதாசனோ, போஜனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுங்க வம்ச காலத்தில் வாழ்ந்தவன்.
வைதீக மரபில் நிலமை இப்படி. நாட்டிய பெண்களை நாயகியாய் கொண்ட பௌத்த கதைகள் அமரபாலி, குண்டலகேசி போன்றவை. நாகாநந்தி என்ற பௌத்த முனிவரை பற்றிய நூலை மன்னன் ஹர்ஷவர்த்தன் இயற்றினான்; லலிதவிஸ்தாரம் கௌதம புத்தரின் வாழ்க்கை சரித்திரம். பிராகிருத மூலக்கதைகளை சம்ஸ்கிருதத்தில் படைத்த காலத்தில் இவை உருவாகின. சம்ஸ்கிருதத்தில் சமண ஆசிவக சார்வாக இலக்கியமேதும் நான் அறியேன்.

(ப) ரச அளவுகோல்
குறுங்காப்பியமான சாகுந்தலம் காளிதாசனின் மற்ற படைப்புகளை விட சிறப்பாக பேசப்படுகின்றன. காளிதாசனுக்கு ஒரு படி கீழாகவே மற்ற வடமொழி புலவர்களை ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு பழமொழி மட்டும், “உவமைக்கு காளிதாசன், ஆழ்ந்த பொருளுக்கு (அர்த்த கௌரவம்) பாரவி, சொல் இனிமைக்கு (பத லாலித்யம்) தண்டி, இந்த மூன்றும் கொண்டவை மாகன்” என்று பறைச்சாற்றுக்கிறது.

குமாரசம்பவத்தில் சில செய்யுட்களில், ஒரு பிரமாணத்திற்கு தலா மூன்று உவமைகளை கூறியுள்ளான் காளிதாசன். சில உவமைகள் இயற்கை சார்ந்தும், சில உவமைகள் தத்துவம் சார்ந்தும், சில உவமைகள் இலக்கணம் சார்ந்தும், சில உவமைகள் வரலாற்றை சார்ந்தும் உள்ளன. ஒரு சர்கம் (காண்டம்) முழுதும் ஒற்றை சந்த பிரயோகம், பாத்திரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற சொல்நயம், போன்றவை அவன் திறனை காட்டுகின்றன. இமய மலையை வர்ணிக்கும் போது அதன் தாவரங்கள், விலங்குகள், பருவகால மாற்றங்களும் சிறப்பும், வானிலையின் பன்மை, மூலிகைகளின் மகிமை, வந்து போகும் பாத்திரங்களின் நடத்தை பண்பு குணம் பண்பாடு என்று பல்வேறு தகவல்கள், காளிதாசனின் கள ஞானத்தை தெரிவிக்கின்றன. சிலப்ப்திகாரத்து நகர, நதி வர்ணனைக்கும் இசை நாட்டிய வணிக குறிப்புகளுக்கும் சமமாக இவற்றை கூறலாம். கதை சம்பவங்களுக்கு  ஏற்ப சிங்காரம், வீரம், ரௌத்திரம், சோகம், பயம் என்று ரசங்களை வெளிகாட்டும் மாட்சியை உரையாசிரியர்கள் சிலாகித்தும் ரசித்தும் எழுதியுள்ளனர். இதை போன்றே மற்ற காப்பியங்களிலும் பலவித ரச வெளிபாடு, இயற்கை வர்ணனை, நகர வர்ணனை போன்றவற்றை நாம் அறியலாம், அனுபவிக்கலாம்.
குப்த மன்னன் விக்கிரமாதித்யனின் அரசவையில் நவரத்தினங்களென ஒன்பது புலவர்கள் புகழ்பெற்றனர்; ஆனால் அவர்கள் இயற்றிய நூல்களுக்கு இந்த புகழில்லை.

பல ரசங்களும் உள்ள நூலே காப்பியம் என்று கருதவேண்டும்; ஒரு காப்பியம் மற்றொரு காப்பியத்தை விட சிறப்பாக சிலரும், நேரெதிராக சிலரும் கருதுவது மனித இயல்பு. மிகச்சிறந்த நூல்களே பெருங்காப்பியங்களாக நிலவுகின்றன என்பதில் ஐயமில்லை.

() கருப்பொருள் அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தின் கால அளவுகோலையும் மரபு அளவுகோலையும் சுட்டிக்காட்டுகையில் கருப்பொருள் வேற்றுமைகளையும் சுட்டிக்காட்டிவிட்டேன். மிக முக்கிய வேற்றுமை, வடமொழி ஐம்பெருங்காப்பியங்கள் வைதீக மரபு கதைகள்; பௌத்த சமண கதைகளல்ல.

ஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தைப்போலவே, சம்ஸ்கிருத இலக்கியத்திலும் மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறிய தரவுகள் காட்டுகின்றன.

அடுத்த கட்டுரையில் இசை தொகுப்புகளை காண்போம்.


No comments:

Post a Comment